பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 20, 2010

முச்சந்தி நாய்கள் - சக்தி செல்லையா

இரவில் தூக்கம் என்பது முச்சந்தி நாய்கள் அடங்கிய பின்பு தான். மூன்று மணியளவில் அவைகள் காணாமல் போய் விடும். முச்சந்தி நாய்கள் கூட என்னைப் போலவே, அல்ல நான் அவைகளைப் போல.  காலையில் அவைகள் எங்கு போகும் என்று யாருக்கும் தெரியாது. அவைகளின் மொழியை அறிந்து கொள்ள பல இரவுகள் விழித்திருக்கின்றேன். வீட்டிற்குள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பேன், தனியாக. சில நேரங்களில் பாச்சா, பல்லி, பூனைகளும் என்னுடன் சேர்ந்து கொள்ளும் இல்லையெனில் நான் அவைகளுடன் சேர்ந்து கொள்வேன். எனக்கான சூரியன் இரவில் மட்டுமே உதித்து கொண்டிருந்தது. தடையில்லாமல் உதித்தது.

காலையில் எழுந்தால் அதே முகங்கள், அதே வேலை, அதே மொழி. சலிப்புகளுக்கு எல்லையில்லாத வாழ்க்கை. கல்லூரிக்கு சென்று விட்டு டவுன்ஹால் ரோடு இட்லிகடை, செந்தூர் ஹோட்டல் எஸ்.டி.டி பூத் என்று மணிக்கணக்கில் நேரத்தை விரயப்படுத்திவிட்டு பெரியாரில் இருந்து பால் வண்டி மூலம் அதிகாலை மூன்று நான்கு மணியளவில் வீடு திரும்புவேன்.


எப்போது வந்தாலும் காந்தி போன்ற வடிவமைப்பில் ராஜாஜி சிலை வரவேற்கும். இரு தலைவர்கள் சிலைகளுக்கு நடுவில் உள்ள வித்தியாசம் குச்சி ஒன்று தான். குச்சி இருந்தால் காந்தி. இல்லையென்றால் அது ராஜாஜி. சிலைக்கு எதிரே ஒரு ஒத்தடிப் பாதை தாண்டினால் முட்புதர்களுக்கு நடுவில் ரயிலடி. ஆயில் கொட்டி ஒரு விதமான நாற்றம் அடிக்கும். ஆனால் அதுவே எனக்கு பிடித்த வாசனையாக இருந்தது. எங்கு சுற்றித் திரிந்தாலும் அந்த ரயிலடிக்கு வராமல் போக மாட்டேன்.


முட்புதர்கள் சலசலக்கும் அந்த மெல்லிய காற்றில், தூரத்தில், திருப்புறங்குன்றத்து மலைக்கு பின்னிருந்து வரும் அந்த ரயில் வண்டியின் சப்தம் பல நேரங்களில் என் கேள்விக்கான விடைகளாய் அமையும்.


அப்படி ஓர் அதிகாலைக்கு முந்திய இரவில், தூக்க கலக்கத்தில் சுற்றியுள்ள அனைத்தும் இரண்டாகத் தெரிந்து கொண்டிருந்தது. பிம்பங்கள் நீர் அலைகளுக்குள் பிரதிபலிப்பது போல் தோன்றின. என்னை சுற்றி யாரோ இருப்பதாய் உணர்ந்தேன்.  ஒரு உருவம் என் எதிரே நடந்து வருவது தெரிந்தது. உற்று பார்த்துவிட்டு அந்த உருவம் ஒரு பெண் என்று ஊர்ஜிதப் படுத்தினேன். கறுப்பு கலர் சேலை உடுத்தியிருந்தாள். அருகில் வர வர, வள்ளியை போல் இருந்தது. வள்ளியே தான். இவள் எப்படி இங்கே?, இந்நேரத்தில்?, நம்மை நோக்கி எதற்கு வருகிறாள்? என்று நினைத்துக் கொண்டிருக்கையில், ரயிலடியில் இருந்து முட்புதருக்குள் வேகமாக இறங்கிச் சென்றாள். என்னை பார்த்த பிறகே அப்படி செய்தாள் என்று எனக்கு புரிந்தது. நான் ரயிலடியை கடந்து முட்புதருக்குள் வள்ளியை கூப்பிட்டவாறே இறங்கினேன். ஒரு பெண்ணை இரவில் தனியாக துரத்தி செல்வதை யாராவது பார்த்தால் தவறாகி விடும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் ரயிலடிக்கே ஏறிக்கொண்டேன். என் பின்னே ரயில் வண்டி வந்து கொண்டிருந்தது.




| இரவு உணவு இல்லாமல் துவண்டு போய் ஒதுங்க இடமில்லாமல் அசோக் ஹோட்டல் வாசலில் அந்த பெரிய சோடியம் வேப்பர் லாம்புக்கு அடியில் நிர்மூலமாய் நின்று கொண்டிருந்தார்கள். அன்று தான் வள்ளியையும் அழகரையும் முதன் முதலில் பார்த்தேன். கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் வரையறுக்கப்படாத நபர்கள். இருவரையும் பார்த்தால் வெளிஊர் என்பது முகத்தில் பளீர் என்று தெரியும். 


அசோக் ஹோட்டலைப் பற்றி திருமங்கலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். முக்கியமானவர்களால் நடத்தப்படும் இருட்டுத் தொழில். ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களை இங்கே நிற்க வேண்டாம் என்று எச்சரிக்க செல்லும் முன் ஹோட்டலில் இருந்து சஃபாரி சூட் போட்டவன் அழகரை உள்ளே அழைத்தான். இவளிடம் வந்து ஏதோ சொல்லி விட்டு அழகர் உள்ளே சென்றான். நான் வெளியே நின்றவாறு வள்ளியை நோட்டமிட்டேன். ஒரு நீலக் கலர் பையில் இரண்டு வாழைப்பழம் மட்டும் தெரிந்தது. புத்தம் புதிய மஞ்சள் கயிறு கழுத்தில். அங்கிருந்த ஒரு பெட்டி கடையில் பபுல்காமை வாங்கி போட்டுக் கொண்டு அசோக் ஹோட்டலையும் வள்ளியையும் பார்த்தவாறே ஒரு முக்கால் மணி நேரம் கழிந்தது. அதற்குள் எனக்கு பல்லாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.


அப்போதெல்லாம் எங்கள் ஊரில் இரட்டைக் கொலைகள் அதிகம் நடக்கும். அழகரையும் வள்ளியையும் யாரோ கொலை செய்யப்போகிறார்கள் இல்லை  ஒன்றும் தெரியாத இந்த பெண்னை ஏமாற்றப் போகிறார்கள், பைத்தியம் பிடித்து இந்த அழகு தேவதை அலையப்போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அழகர் வெளியே வந்தான்.


அழகரைப் பார்த்ததும் வள்ளி முகத்தில் அப்படியொரு அழகான சிரிப்பு. என்னால் அதை மறக்கவே முடியாது. அந்த சோடியம் மஞ்சள் வெளிச்சத்தில் அப்படியொரு அழகு. உண்மையை சொன்னால் அழகர் மட்டும் இல்லையென்றால் வள்ளியை காதலித்திருப்பேன். சில நிமிடங்கள் அவளது முகபாவனைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று எனக்குள் ஒரு அருவருப்பு தோன்றியது. வள்ளியை பார்ப்பதை நிறுத்திவிட்டு அழகர் எதற்காக உள்ளே சென்றான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அந்த சஃபாரி சூட் போட்டவன் வந்து ஏதோ கொடுத்துவிட்டு போனான். கற்பகம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.  


மறு நாள் இரவிலும் அழகர் அந்த பெரிய சோடியம் வேப்பர் லாம்புக்கு அடியில் நின்று கொண்டிருந்தான். ஆனால் இப்போது வள்ளி இல்லை. திருதிரு என்று முழித்துக் கொண்டு அசோக் ஹோட்டலை திரும்பி பார்த்தவாறே கை விரல்களை கசக்கிக் கொண்டிருந்தான். அதே சஃபாரி சூட் போட்டவன் இவனிடம் வந்து நூறு ரூபாய் நோட்டுகளை குடுத்தான். பணத்திற்காக அந்த பட்டுப்பூச்சியை கொன்றுவிட்டானா? இல்லை ஊர் விட்டு ஊர் கடத்தி விட்டானா?. ஆனால் அழகரைப் பார்த்தால் யூகிக்க முடியவில்லை. அவனுடைய நிலையில்லாத கண்களும் பதற்றமும் பல கேள்விகளை எழுப்பியது. ஏதோ நடந்துள்ளது என்று மட்டும் தெரிந்தது. வள்ளியின் அந்த அழகான சிரிப்பு, குழந்தை முகம் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறாளோ என்று வருத்தப்பட்டேன்.


கொலை வெறியுடன் அழகரை தொடர்ந்தேன். என் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். ரயில்வே ஸ்டேசன் ரோடு வழியாக மாதா காலனிக்குள் சென்றான். ஒரு பேய் இருட்டு சூழ்ந்த இடத்தில் அவன் வாயைப் அடக்கி பிடித்து ஒரு மரத்தடியில் சாய்த்தோம். ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் மேல் போட என் நண்பன் எத்தணித்த போது, அழுகத் தொடங்கினான்.


”என்ன வாழவிடுங்க, உங்க கால்ல விழுந்து கேக்குறேன், வள்ளியில்லாம என்னால வாழ முடியாது, இப்ப தாயாக போறா, எங்கள வாழ வையுங்க” என்று ஒப்புதல் வாக்குமூலம் குடுப்பது போல் கதறினான்.


”அந்தப் பொண்ண எங்க?”


”எந்தப் பொண்ணு சார்?”.


”நேத்து அசோக் ஹோட்டல் முன்னாடி ஒரு பொண்ணோட நைட்டு நின்னுக்கிட்டிருந்தியே”.


”ஆமாம், அவ என் மனைவிங்க “ என்றான்.


”பொய் சொல்லாத பொம்பளைய விக்க தான அங்க போன, இல்ல கூட்டிக்குடுக்க போனியா.”


”வீரபாண்டி மேல சத்தியமா சொல்றேன் சாமி, அவ என் மனைவி.”


”எங்களுக்கு அந்தப் பொண்ண கண்ல காமி, நாங்க ஒன்ன விட்டுறோம்.”


”இது என்னங்க கொடுமை, என்னைய என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. உங்க எல்லாத்தையும் நான் எதுக்கு கூட்டிட்டு போகனும்.”


”இப்ப நான் மட்டும் வற்ரேன். கூட்டிட்டு போ.”


ஒரு வழியாக வள்ளியை அவள் வீட்டில் சென்று பார்த்தேன். அதே குழந்தை முகம். என்னைக் கண்டதும் அவளும் பயந்துவிட்டாள். அழகர் பின்னாடி போய் நின்று கொண்டாள். அழகர் தண்ணி எடுத்து வரச் சொன்னான். என்னை விட நான்கு வயது பெரியவள் என்பதை தெரிந்து கொண்டேன். நான் தயங்கியவாறே மன்னிப்பு கேட்டேன். அசோக் ஹோட்டலை பற்றி எச்சரித்துவிட்டு வீடு திரும்பினேன். சில வாரங்கள் ஓடியது.

| ஆனால் இன்று…


என் பின்னே ரயில் வண்டி வந்து கொண்டிருந்தது. ஒரு பத்தடி தூரத்தில் வள்ளி ரயிலடிக்கு ஏறிக் கொண்டு, தன் கையில் இருந்த ஒரு கடிதாசியை, என் பெயர் சொல்லி கூப்பிட்டு, கசக்கி என்னை நோக்கி எறிந்தாள். ரயில் இன்ஜினின் வேகத்தில் அந்தக் கடிதாசி வீசிய திசை விட்டு தவறி ரயிலின் சக்கரங்களுக்கு ஊடே சென்று பின் வெளியே முட்புதர்களில் வந்து விழுந்தது. அந்த கடிதாசி விழுவதற்கு முன், அவள் ரயிலில் விழுந்தாள். எந்த சத்தமும் இல்லை, ரயில் சத்தத்தை தவிர அல்ல ரயில் சத்தத்தில் எனக்கு எதுவும் கேட்கவில்லை அல்ல என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாம் நடந்தேறிவிட்டது அல்ல பிரம்மிப்பால் காதடைத்துவிட்டது. ஆக என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


மெரூன் கலர் சேலையில் உடல் அடையாளம் காணமுடியாமல் சிதைந்திருந்தது. கறுப்பு கலர் சேலை அல்ல. ஒருவேளை இது பிரம்மையாக இருக்குமோ?. மீண்டும் உடலை அருகில் சென்று பார்த்தேன். ரயிலடியின் சூட்டில் இரத்தம் உரைந்து கொண்டிருந்தது. என்னால் அந்த சிதைந்து கிடந்த உடலை பார்க்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் முட்புதருக்குள் இறங்கி நின்றேன். அவள் உடல் சிதைந்த நிலையிலும் என் அருகே நின்று கொண்டிருப்பதை போல் இருந்தது. ஒரு சிறு அசைவும் அவள் என்னிடம் எதையோ சொல்ல நினைப்பதை உணர்த்தியதாகவே இருந்தது. ஒரு விதமான பயம் என்னை தொற்றிக் கொண்டது.


முதலில் இதை அழகர்சாமியிடம் சொல்லியே ஆக வேண்டும். முட்புதர்களை தாண்டி கூலியாபுரம் கிரவுண்ட். அங்கே தான் வள்ளி வீடு, தென்னந்த் தோப்புகளுக்குள்.


| மீண்டும் ஒரு நாள் இரவு, அதே சோடியம் வேப்பர் லாம்ப் வெளிச்சத்தில் அழகர் ஹோட்டலுக்குள் இருந்து வருவதை பார்த்தேன். குழப்பங்களால் என் மூலை பிசகியது. ஒருவேளை அன்று நான் ஏமாற்றப் பட்டுவிட்டேனா? இல்லை வள்ளிக்கும் இதில் ஏதோ தொடர்பு இருக்குமா?.


அழகர் கற்பகம் ஹோட்டலில் இரவு உணவு வாங்கிவிட்டு வெளியே சென்றான். அவனை பின் தொடர மனமில்லாமல் பின் தொடர்ந்தேன். இந்த ஹோட்டலில் இரவில் மட்டும் என்ன வேலை இருக்கப் போகிறது இவனுக்கு?.
அதே இருட்டில் வைத்து பொருமையாக கூப்பிட்டேன். சற்று பயத்துடன் உற்று பார்த்தான்.


”அன்னைக்கு உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டது தப்பு, மன்ணிச்சுக்கோங்க.”
தயங்கியவாறே, “பரவாயில்ல, இப்ப என்ன வேணும்?”


”அந்த அசோக் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்திருக்கீங்களா”


”இல்லையே,”


”அப்புறம் எதுக்கு அங்க போறீங்க.”


”அது எதுக்குங்க உங்களுக்கு”.

என்னுடைய சந்தேகத்திற்கு அவனுடைய திமிரான பதில் இன்னும் வலு சேர்த்தது. கேட்ட கேள்விக்கு பதில் கூறாவிட்டால் என் பொருமையை இழந்து விடுகிறேன் என்பது அன்று தான் எனக்கு தெரிந்தது.


”இப்படி வாங்க அழகர் சார், என்ன வேலை உங்களுக்கு?, இந்த ஊர்லையே பொறந்து வளந்தவன், ஒரு நிமிசம் போதும், நீங்க அசோக் ஹோட்டல்ல என்ன பன்றீங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு, கேட்டா பதில் சொல்ல வேண்டியது தானே போலீஸ கூட்டிட்டு வந்தா தான் பதில் சொல்லுவீங்களோ”


”நான் ஒண்ணும் பண்ணல சார், என்ன விட்டுருங்க.”


”உங்க ஹோட்டல்ல வந்து காமிங்க, நீங்க என்ன வேலை பார்க்கிறீங்கன்னு…”


”அதெல்லாம் முடியாது சார், தயவு செய்து புரிஞ்சுக்கோங்க


”சட்டையை பிடித்து, உனக்கு போலீஸ் மூலமா வந்தா தான் பதில் சொல்லுவ, இல்ல….” என்றேன்.


”சாமி. எப்ப பாத்தாலும் என் வாழ்க்கையிலேயே குறுக்க வர்றீங்களே, என்ன விட்டுருங்க, அவ என் மனைவி நாங்க காதலிச்சு ஓடி வந்துட்டோம், இப்ப சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கமான… ”என்று நிப்பாட்டினான்.


அழுகத் தொடங்கினான். சொல்லக் கூடாததை சொல்லிட்டோமோ என்று தலையில் அடித்துக் கொண்டு ”என்ன விட்டுருங்க சார்” என்றான்.


”உனக்கு வேலு இன்ஸ கூட்டிட்டு வந்தா தான் சரியா வரும்னு நினைக்கிறேன்.”


சத்தியமாக அந்த வேலு இன்ஸ்பெக்டரை எனக்கு தெரியாது. அதிகப்படியாக அவனைப் பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஒரு முறை அவன் முன் புகையிலை குடித்ததற்கு லத்தியால் அடி வாங்கியுள்ளேன். இவ்வுளவு தான் அவனுக்கும் எனக்குமான உறவு. ஆனால் வேலு இன்ஸ்பெக்டரை பற்றி சொன்ன உடன் கதிகலங்கி விட்டான்.


”சாமி, உங்க கால்ல விழுகுறேன், என்ன விட்டுருங்க, என்ன நடந்ததுன்னு சொல்லிடுறேன். அந்த ஹோட்டல்ல ஒரு வடக்கத்திய மேடம் இருக்காங்க. ஊருக்கு வந்த நாள் அன்னைக்கு நானும் வள்ளியும் அவ கண்ணுல பட்டு தொலஞ்சிட்டோம். அவுங்களுக்கு 50 வயசு இருக்கும். அவுங்களோட சின்ன சின்ன ஆசைகளுக்கெல்லாம் என்ட்ட தீத்துக்குறாங்க”


”சின்ன சின்ன ஆசையா?”


”அவுங்களோட படுக்கைக்கு கூப்பிட்டாங்க. மறுத்தா, என் மனைவிய தொழில்ல வம்படியா இழுத்து விட்டுறுவேன்னு மிரட்டுனாங்க. உங்க இன்ஸ்பெக்டர் வேலு சாரும் இதுக்கு உடந்தை. எனக்கு என்ன ஆனாலும் சரி, அவளுக்கு ஒன்னும் ஆகக் கூடாதுன்னு ஒத்துக்கிட்டேன். இத தவிர வேற என் குலசாமி மேல சத்தியமா ஒன்னுமில்ல….. ”


பைத்தியமா அழகர் சார்,…. ……. உங்களுக்கு


ஆமாம் பைத்தியம் தான். நாளைக்கு சோறு வைக்கிறதுக்கு சல்லி பைசா கையில இல்ல. நான் இருப்பேன். அவள எப்படி என்னால இருக்க சொல்ல முடியும். கால்வயிறு கஞ்சி ஊத்தமுடியலேனா என்ன சார் ஆம்பளை.


கதறி அழுதவாறே

”ஆம்பள ஆம்பளன்னு நிரூபிச்சிட்டே இருக்கேன் சார். நாளையோட ஊருக்கு போயிருவேன் சார்,  இந்த ஊர் பக்கம் தல வச்சு படுக்க மாட்டேன் சார். உங்களையெல்லாம் நான் என் வாழ்க்கையிலிருந்தே மறந்துடுவேன் சார். நீங்க செத்துப்பொயிட்டீங்கன்னா அத விட ரொம்ப சந்தோசம் படுவேன் சார்.”


பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். கிளம்பிச் சென்றான். பஸ் ஸ்டாண்டு வரை குழப்பத்துடனே நடந்து சென்றேன். அடுத்த நாள் காலையில் இருந்தே பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். இரவு வரை ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்தேன். அன்று முழுவதும் அழகரையும் வள்ளியையும் பார்க்க முடியவில்லை. கண்டிப்பாக போயிருப்பார்கள். இத்தனை துன்பங்களையும் எதிர்த்து நின்று போராடத் தெரியாதவன் ஓடித் தானே ஆக வேண்டும் அல்ல மேலும் மேலும் துன்பப்பட்டு துவண்டு விட்டான் போல. தேவையில்லாமல் அவர்களை நானும் சித்ரவதைப்படுத்தி விட்டேன்.அழகரும் வள்ளியும் நன்றாக வாழ்வதைப் பார்த்த பின்பே என் குற்றஉணர்ச்சி நீங்கும் என்று நம்பினேன்.சில வருடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்கள். 



| தென்னந்தோப்புகளுக்குள் நுழைந்தேன். இந்த அதிகாலையில் வள்ளி ரயிலில் விழுந்து செத்துவிட்டாள் என்றாள் யார் நம்புவார்கள், நம்பினாலும் என்னை சந்தேகப்பட்டால் என்ன செய்வது?. வீட்டு நாய்கள் என்னை கவனித்தது. வள்ளி தூக்கியெறிந்த கடிதாசியை அந்த பதற்ற நிலையில் மறந்திருந்தேன். அது ஒன்று தான் இதற்கான பதில். திரும்பி சென்றேன். அவள் அருகேயே உள்ள ஒரு முட்புதருக்குள் சிக்கிக் கிடந்தது. அவள் குழந்தையின் கோடுபோட்ட புத்தகத்தில் இருந்து கிழித்து எழுதியிருந்தாள்.


கடிதாசியை எடுத்துக்கொண்டு அழகர்சாமியை பார்க்க சென்றேன்..


தூரத்தில் இன்னொரு ரயிலின் சத்தம் கேட்டது. வேகமாக அழகர் வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன். கதவு திறந்திருந்தது. வெளியே வந்தவன் என்னைக் கண்டதும் முதலில் பயந்து நடுங்கினான். எதுவும் கூறாமல் லெட்டரை அவன் கையில் கொடுத்தேன். அழகரின் முகத்தை பார்க்க எனக்கு போதிய தைரியம் இல்லை.


”உங்க மனைவி……..”


என்று தயக்கத்துடன் ஆரம்பிக்கும் முன், வீட்டினுள் சென்று வள்ளியை தேடினான். வள்ளி என்று உரக்கமாக கத்தினான். வெளியே வந்து,


”என்ன சார் ஆச்சு, எங்க பார்த்தீங்க சார், எங்க சார், சொல்லுங்க”
என்று அவன் உலுக்கியதில் அவனுடைய பதற்றமும் எனக்கு தொற்றிக்கொண்டது. வார்த்தையை ஆரம்பிக்கும் பொழுது, மீண்டும் ஒரு ரயில் பயணித்தது. ரயிலடி இருக்கும் திசையை பார்த்தேன். திரும்பி, அழகர் வீட்டு 100 வாட்ஸ் மஞ்சள் விளக்கை பார்த்தேன். அந்த வெளிச்சம் என்னை மனநிலை சரியில்லாதவன் போல் மாற்றியது. எனக்கு அழுகை விம்மத் தொடங்கியது. என் முகத்தை வைத்து அழகர் ஓரளவிற்கு புரிந்து கொண்டான்.


”ரயில். ரயி…..
ரயில்லல …………….
விழுந்துட்டாங்க….”


அழகர் மனம் நம்ப மறுத்தது. வார்த்தை வரவில்லை. ரயில் சத்தம் மட்டும் கேட்டது. தலையில் கை வைத்தவாறு அப்படியே உட்கார்ந்தான். வீட்டினுள் ஓடினான். வள்ளியின் பொருட்கள் ஒவ்வொன்றையும் கையில் எடுத்து முகத்தோடு வைத்து கண்களுடன் ஒத்திக் கொண்டான். வீட்டினுள் வந்த என்னை தள்ளிவிட்டு வேகமாக வெளியே ஓடினான்.


பெண் குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. ஊர் கூடியது. இருவேறு காரணங்களுடன் குற்றவாளி என்ற என்னுடைய பிம்பம் பலருடைய கற்பனைகளுக்கு இறையானது. வள்ளியின் குழந்தை பசியில் அழுது கொண்டிருந்தது. அழகரின் கால்தடம் தென்னந்தோப்புகளுக்குள் நன்றாக பதிந்திருந்தது.  

- சக்தி செல்லையா


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com