பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 21, 2010

திரும்ப முடியாதவர்கள் - முத்துப்பாண்டி

முருகன் ஸ்டோர் 
மஞ்சள் பையோடு

புதியமுத்து தாத்தாவை 
கடைசியாய்ப் பார்த்தது
மானாமதுரை ஸ்டேஷனில்.
 பூக்கட்டுகிற மாரி
வீட்டை திறந்தே போட்டுவிட்டு
கிளம்பிப் போனது உச்சிக்கால பூஜை
வேளையில்.

பூச்சுகரண்டி கொண்டு
சகட்டுமேனிக்கு எல்லோரையும்
கொத்தித் திரிந்த மஞ்சமலை கொத்தனை
கோபுர வேலைக்கெனச் சொல்லி
ஏமாற்றி விட்டு வந்தது 
ஏர்வாடி தர்காவில்.

வெற்றிலைக்கொடி சம்முகம் மாமா
வடக்குப் பக்கம் ஒரு பெண்ணின் ஆதரவில்
இருப்பதாகச் சொன்ன உடுக்கைக்காரனுக்கு 
முன்னால் பதினோரு ரூபாய் காணிக்கை 
வைத்து அழுகிற குழந்தையை 
அணைத்தவாறு கண்ணீர் பெருக்குகிறாள்
ஜமுனா அத்தை.

ஒருபோதும் திரும்ப முடியாதவர்களின்
கதையை கவிதையில் எழுதிக் கிழிக்கிற
எனக்கு 42 வயதில் சந்நியாச பிராப்தம்
நிச்சயமென ஜோஸ்யக்காரன் சொன்னதாகக்
கலங்கி கோயில் கோயிலாக ஏறி
தீபம் போட்டுக்கொண்டிருக்கிறாள்
இருளாயி அப்பத்தா.

-முத்துப்பாண்டி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com