லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது. முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.
பகுதி 8
கட்சித் தோழர்களைப் போலீசில் காட்டிக் கொடுத்துவிடப் போவதாக என் அப்பா மிரட்டிய பிறகு, ஒரு கணம் கூட அந்த வீட்டில் இருப்பதில் எனக்குப் பிடித்தம் இல்லாமல் போனது. எப்படிப்பட்ட தோழர்களை என் அப்பா காட்டிக் கொடுக்கப் போகிறேன் என்கிறார்!
கி.வெங்கட்ராமன், இவரை நாங்கள் கே.வி என்று அழைப்போம். தஞ்சாவூரின் ஆசாரமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பிராமணர்களுக்கேயுரிய எல்லா பிற்போக்குத்தனங்களும் நிறைந்த குடும்பம்தான். கே.வியின் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார். மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு மகள். கே.வி அம்மா இவர்களை வளர்க்க பட்ட பாடு வார்த்தைகளில் அடங்காது.
கே.வி அம்மாவின் பெயர் அனுசுயா. அவர் எங்களுக்கு மிகவும் விநோதமாகத் தெரிந்த வேலையைச் செய்தார். அந்தக் காலத்தில் தொலைபேசிகள் மிகக் குறைவுதானே!
வீடு வீடாகச் சென்று தொலைபேசிகளைத் துடைக்கும் வேலை. தொலைபேசியை மிக விலையுயர்ந்த பொருளாக மக்கள் மதித்த காலம் அது என்பதால், அதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒரு கடமையாகக் கருதப்பட்டது. அனுசுயா, வாரம் ஒரு முறை தொலைபேசிகளைத் துடைத்துவிட்டு, அவற்றின் மீது ஒரு வகை வாசனை வீசும் வில்லையை மாட்டி வைப்பார். அது ஒரு வாரத்துக்கு மணக்கும். இதற்கு முன்பு, தொலைபேசி துடைப்போர், தொலைபேசியின் மீது வாசனை திரவத்தைப் பூசுவார்கள். அது பிசு பிசுவென்று இருக்கும். அதற்குப் பதிலாக, தஞ்சாவூரில் வில்லையைப் பயன்படுத்தியவர் அனுசுயாதான். இதனால், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
அப்போதெல்லாம் தஞ்சாவூரில் வீடுகள் நெருக்கமாக இல்லை. அதிலும் தொலைபேசி உள்ள வீடு, எங்காவது ஒன்று தான் இருந்தது.
பேருந்துப் போக்குவரத்தும் மிக மிகக் குறைவு. ஏழைகளைப் பொருத்தவரை, மிதிவண்டி மட்டுமே அப்போதைய வாகனம். கே.வி அம்மாவுக்கோ, மிதிவண்டிப் பழக்கமும் இல்லை; அதைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை. அவர் தஞ்சாவூர் மட்டுமல்லாது, திருமானூர், அரியலூர், திட்டக்குடி, தொழுதூர் ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று தொலைபேசிகள் துடைத்தார். இந்த ஊர்கள் எல்லாம், தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவை. பேருந்துப் போக்குவரத்து மிகவும் குறைவான, ஆளரவம் குறைந்த பகுதிகள் இவை.
பேருந்து இல்லாத பகுதிகளுக்கு நடந்தே செல்வார். அவர் மனதில் இருந்த உறுதியும் நம்பிக்கையும் மட்டுமே அவரை இவ்வளவு கடுமையான வாழ்க்கை வாழ வைத்தது. வெங்கட்ராமன் வளர்ந்தது இவ்வளவு கடுமையான வறுமையில்தான். வெங்கட்ராமன் சிறந்த தபேலா இசைக் கலைஞர். கிரிக்கெட் ஆட்டத்தில் திறமைசாலி. தஞ்சை மாவட்ட அணியில் அவர் ஸ்பின் பௌலர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குக் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், கே.வி கிரிக்கெட் ஆட்டத்தில் தேர்ந்தவர் என்பதைப் பலர் சொல்வார்கள். அவர் மிகச் சிறந்த படிப்பாளி. அவரைப் பற்றி அவர் அம்மாவுக்கு ஏராளமான கனவுகள் இருந்தன. அவர் கூடிய விரைவில் நல்ல வேலைக்குப் போய் விடுவார்; தனது வறுமை ஒரே நாளில் தீர்ந்துவிடும் என்று அனுசுயா நம்பி வந்தார். வெங்கட்ராமனை பி.எஸ்சி படிக்க வைத்தார்.
வங்கிப் பணிக்கான நல்ல வாய்ப்பு கே.விக்கு வந்தது. அனுசுயா எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது. ஆனால், வங்கிப் பணி வாய்ப்பைத் தன் மகன் உதாசீனப்படுத்தி விட்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்தப் போகிறான் என அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதுதான் நடந்தது.
கல்லூரி படிக்கும்போதே இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தார் கே.வி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு அது. அப்போதிருந்து இன்று வரை, முழுமையான உண்மையான பொதுவுடைமையாளராக வாழ்ந்து வருகிறார். இப்போது நாங்கள் அவரை கி.வெ என்கிறோம். இப்போதும் அவருக்கென சொந்தமாக ஒரு அடி நிலம் கிடையாது. அவர் வாழ்ந்து வரும் கூரை வீடு, கட்சிக்குச் சொந்தமானது. அவரால் வாடகை கூட தர இயலாத சூழலில் சிதம்பரம் தோழர்கள் செய்த ஏற்பாடுதான் அவர் வாழும் வீடு. இப்போதும், மழைக்காலத்தில் அவர் வீட்டுக்குள் தண்ணீர் சர்வசாதாரணமாகப் புகுந்து விடுகிறது. கடும் மழை பெய்யும்போது, வீட்டுக்குள் புகுந்துவிட்ட வெள்ள நீரை வாளியால் இறைத்து வெளியேற்றும் தோழர் வெங்கட்ராமனை நீங்கள் இன்றும் காணலாம்.
"சொந்தச் சம்பாத்தியத்துக்கென எந்த வேலையும் செய்ய மாட்டேன். கட்சியின் முழு நேர ஊழியன் நான். கட்சி தரும் மாதாந்திர உதவித் தொகையை வைத்து வாழ்வேன்" என்ற உறுதி மொழியை அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தார். அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி அரசியல் கோட்பாடுகளில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கிய பிறகான இன்றைய காலம் வரை, தன் உறுதி மொழியை அவர் காப்பாற்றி வருகிறார். அவர் மனைவி சுகந்தாவைப் பார்க்கும்போதெல்லாம், அனுசுயா அம்மாவைப் பார்ப்பது போல்தான் இருக்கிறது.
அனுசுயா அம்மாவைப் போல் குடும்பப் பொறுப்பைத் தனியாளாகச் சுமந்து வருபவர் சுகந்தா. இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை நான் உங்களுக்கு விளக்கத் தேவை இல்லைதானே!
சுகந்தா வேலை பார்க்கத் தொடங்கிய பின்னர்தான் கி.வெ பிள்ளைகளுக்கு மூன்று வேளை உணவு உத்தரவாதமானது. இப்படிப்பட்ட மனிதர் வெங்கட்ராமன்.
மன்னர் மன்னன், அப்போது திருக்காட்டுப்பள்ளியில் மும்தாஜ் ஸ்டோர் என்ற கடை வைத்திருந்தார். வருமானத்துக்குக் குறைவில்லாத மனிதர். தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என்று இருந்திருந்தால், இந்நேரம் மன்னர் மன்னனுக்கென்று திருக்காட்டுப் பள்ளியில் மிகப் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருந்திருக்கும்.
டேவிட் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் மன்னர் மன்னனை அலைக்கழித்தது. அவரும் கம்யூனிஸ்ட் ஆனார். கடையில் கல்லா நிறைந்தால் போதும், பணத்தை எடுத்து தோழர்களுக்குச் செலவு செய்வது மன்னர் மன்னனின் வழக்கம். இதற்காக அவர் எந்தக் கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை. அதுவும் நெருக்கடி நிலைக்காலத்தில் டேவிட், வெங்கட்ராமன் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பளர்கள் பலரின் செலவுகளை அவரது மும்தாஜ் ஸ்டோர் தாங்கியது.
கடைப் பணம் கரைந்து போன போதும், முகத்தில் எவ்விதப் பதட்டமும் கவலையும் காட்டாத மனிதர் மன்னர் மன்னன். அவர் இயற் பெயர் கமால் பாட்சா. பின்னாளில் இப் பெயருக்கான தமிழ் அர்த்தம் கண்டு மன்னர் மன்னன் என மாற்றிக் கொண்டார். நான் அவரை பாப்பு என்பேன்.
பாப்பு என்றால் அப்பா என்று பொருள். எனக்கு உண்மையில் அவர்தான் அப்பாவாக இருந்தார்; இன்றுவரை இருக்கிறார்.
இவர்களை எல்லாம் காட்டிக் கொடுக்கப் போவதாக என் அப்பா மிரட்டியபோது, எனக்கு அழுகை வந்தது. அன்று இரவு மாட்டுத் தொழுவத்தில் படுத்திருந்த போது வாய் விட்டு அழுதே விட்டேன். என்னுடன் பழகியதால், என் வீட்டுக்கு வந்ததால், அருமையான தோழர்கள் எவ்வளவு மோசமான சிக்கலில் சிக்கப் போகிறார்கள்! உண்மையிலேயே நான் ராசி இல்லாதவள்தானோ, என்று தோன்றியது.
நள்ளிரவு நெருங்கும் வேளை, அம்மாவிடம் எழுந்து போனேன். அவள் திண்ணையில் படுத்திருந்தாள். என் வாழ்வில் முதல் முறையாக, அவளை அம்மா என அழைத்தேன். விழித்துப் பார்த்து, ’என்ன?’ எனக் கேட்டாள். எனக்கு அழுகை முட்டிக் கொண்டு நின்றது. அவளிடம் என்னென்னவோ பேசிக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால், ஏனோ தெரியவில்லை என் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வந்தன.
‘அம்மா...நான் இந்த வீட்ட விட்டுப் போயிடவாம்மா...?’
உண்மையில் என் மனதில் இருந்த ஆசை அல்லது தவிப்பு இதுவாகத்தானிருக்கும். நான் இங்கிருந்து போய்விட்டால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என என் உள் மனம் நம்பியிருக்க வேண்டும். அந்த எண்ணம்தான் வார்த்தைகளில் வந்திருக்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.
என் அம்மா ஒரு கணம் கூட யோசிக்காமல், ‘மொதல்ல அதச் செய்...அப்பத்தான் இந்த வீட்டப் புடிச்ச சனியன் தொலையும்’ என்று கூறிவிட்டு, புரண்டு படுத்தாள்.
(தொடரும்)
- லெட்சுமி அம்மா

