பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 17, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 7 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்









டேவிட் எழுதிய கவிதை என்னை மாற்றத் தொடங்கியது உண்மை. அப்படி ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை. சொந்த வாழ்க்கை வேறு அரசியல் வாழ்க்கை வேறு என்ற பொதுவான நிலைக்கு மாறாக டேவிட் இருந்தார். அவர் மட்டுமல்ல, மன்னர் மன்னன், வெங்கட்ராமன் ஆகியோரும் முழுக்க முழுக்க அரசியல் மனிதர்களாகத் தெரிந்தார்கள். நெருக்கடி நிலை என்பதால், அவர்கள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம், அவர்கள் மீது பரிதாபமும் தோன்றத் தொடங்கியது. எந்நேரமும் போலீசை எதிர்பார்த்து, பசிக்குச் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் ஏதேனும் ஒரு மாறு வேடத்தில் அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு சிக்கல்களிலும் கட்சி வேலைகளைக் குறையில்லாமல் செய்தனர் என்பதுதான் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

டேவிட், ஒரு கலவையான மனிதர். அரசியல் தீவிரம் போலவே மென்மையான உணர்வுகளும் அவரிடம் அதிகம். மிகவும் மென்மையான மனிதர் அவர். பரிவு, பாசம் சக மனிதர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் பண்பு கொண்டவர். அதே வேளை, அரசியல் வேலைகளில் அவர் காட்டும் தீவிரம் இதற்கு நேர் எதிராக இருக்கும். மனித உணர்வுகளை மதிக்காதவரோ என்ற எண்ணம் தான் அவரை அரசியல் வேலைகளை மட்டுமே பார்த்த அக்கால தோழர்களுக்கு ஏற்பட்டது.

நான் அவரை ஓரளவுக்குச் சரியாகப் புரிந்து கொண்டேன் என நினைக்கிறேன்.
டேவிட் எழுதிய கவிதைக்குப் பதிலாக அல்லது அக்கவிதையின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு நான் ஒரு கவிதை எழுதினேன். அது காதல் கவிதை அல்ல. நெருக்கடி நிலைக்கு எதிரான கவிதை.

’திருப்பள்ளி எழுச்சி’ எனப் பெயரிட்டேன்.
 எனக்குக் கவிதை எழுத வரவில்லை. டேவிட் அக்கவிதையைச் சரி செய்தார். சரி செய்தார் என்பதை விட, அவரே புதிய கவிதையாக அதை எழுதிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘பின் தூங்கி முன்னெழும் பெண் வாழ்க்கைத் தத்துவத்தை
மின்னி முடிப்பதற்குள் வெட்டென்று கத்துகிறேன்!

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று அபின் போட்டு
சேவையெல்லாம் அடுப்படிக்கே என்று கருதாதீர்!
...

அதிகாரம் பெண்களை அடைந்துவிட்டால்
சதிகாரி ஆகி சர்வாதிகாரியென
ஆய்விடுவாள் என ஆடவரே அஞ்சாதீர்
பேய் எல்லாப் பெண்ணுக்கும் பிடிக்காது சோதரரே!’

நீளமான கவிதை அது. மேலே உள்ள வரிகளில் வரும் சர்வாதிகாரி, பேய் என்பவை எல்லாம் இந்திராகாந்தியை நினைத்து எழுதப்பட்டவை.

கும்பகோணத்தில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் டேவிட் இக்கவிதையைப் படித்தார். இக்கவியரங்கம் தணிகைச் செல்வன் தலைமையில் நடந்தது.

டேவிட்டுக்கும் எனக்குமான உறவு சிறிது வலுப்பட்டது. திருமகள் என்னிடம் டேவிட்டைத் திருமணம் செய்வதே நல்லது என்றாள். தோழர்கள் அனைவரும் இதே கருத்தில் இருந்தனர்.

இந்த கால இடைவெளியில், என் கட்சி நடவடிக்கைகள் பற்றி யார் மூலமோ என் வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. என் அப்பாவும் அரசியல்வாதிதான். அவரது அரசியல் பார்வையும் கடைந்தெடுத்த சுயநலமாக இருக்கும். ஒருமுறை தி.கவில் இருப்பார். பின்னர் தி.மு.கவில் இருப்பார். வேறோரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்காரராகிவிடுவார். எந்தக் கட்சியில் இருந்தால் தனக்கு நல்லதோ அந்தக் கட்சியில் இருப்பார். கம்யூனிஸ்ட் கட்சியை அவருக்குப் பிடிக்கவா செய்யும்?

பிழைக்கத் தெரியாதவர்களின் கட்சி என்பதைக் காட்டிலும், வெறும்பயல்களின் கட்சி என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய அவர் கருத்து. நான் குறிப்பிடுவது அந்தக் கால கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி!

தோழர்கள் வெங்கட்ராமன், ஜெயபால் இருவரும் தவிர்க்க முடியாத சூழலில் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் நிலைமை மோசமானது. எங்கே தங்குவது என்பதே அவர்களுக்குப் பெரும் பிரச்சினை. போலீஸ் தேடுதலோ தீவிரமாக இருந்தது. இந்த நிலையில் என் வீட்டுக்கு அவர்கள் வந்ததை நான் குறையாக எடுத்துக்கொள்ளவா முடியும்?

அது என் வீடு அல்ல; என் பெற்றோரின் வீடு என்பதுதான் எதார்த்தம். ஆனால், நெருக்கடியில் இருக்கும் தோழர்களிடம் இதைக் கூறி தவிர்க்க முடியாது அல்லவா! அவர்கள் இருவரும் வந்து தங்கிவிட்டார்கள். என் அப்பாவின் கோபம் எல்லை மீறியது. அவர் நடந்து கொண்ட விதத்தை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. அவர் ஏற்படுத்திய அவமானத்தை மறைத்துக் கொண்ட தோழர்கள் அமைதியாகக் கிளம்பி விட்டார்கள்.

என்னால் தடுக்கவும் முடியவில்லை; அப்பாவிடம் சண்டை போடவும் முடியவில்லை. ஒருவேளை நான் அவ்வாறெல்லாம் செய்தால், என் மாட்டுக் கொட்டகையும் பறிபோய்விடும்.

ஆனால், அப்பா எனக்குப் பெரிய நெருக்கடி கொடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் நான் இருப்பது மட்டுமல்லாமல், தலைமறைவாக இருந்த தோழர்களை அவர் வீட்டிலேயே தங்க வைத்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ’உன்னையும் உன் கட்சிக்காரங்களையும் போலீஸில புடிச்சிக் கொடுக்கிறேன் பாரு’ என்றார்.

எனக்கு ஏற்பட்ட அச்ச உணர்வை உங்களால் உணர முடியும் என நம்புகிறேன். அந்த மிரட்டல் என்னை ஒரு முக்கியமான முடிவு எடுக்கத் தூண்டியது.

(தொடரும்)

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com