பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 16, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக - 5 - சுமதி

சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  


இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. 
இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது. 

பகுதி 5 



முதல்வர் பேச்சைத் தொடங்கும்போதே “எல்லா சர்டிபிகேட்ஸயும் கொண்டு வந்திருக்கீங்களா? யுனிவர்சிட்டியிலிருந்து பெர்மிசன் கிடைச்சு ரெண்டுநாள் ஆச்சு. உங்களுக்கு போன்பண்ணலாம்னு நினைச்சிருந்தேன் நீங்களே வந்திட்டீங்க” என்றார்.

“சர்டிபிகேட்ஸைக் கைலதான் வச்சிருக்கேன் மேம்”

“அம்புஜம்” என்று அவர் அழைத்ததும் வேகமாக உள்ளே வந்த பெண்ணிடம்,
“இவங்க சர்டிபிகேட்ஸை வாங்கிட்டு, அப்பாயிண்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணுங்க” என்றார்.

அம்புஜம் போனதும் சாந்தியிடம்
”டே காலேஜ் தமிழ் டிபார்ட்மெண்ட்ல என்னையும் சேர்த்து மூணு பேரு இருந்தோம். நான் இந்த (பிரின்ஸிபால்) போஸ்ட்டு வந்துட்டதால அங்க ஒரு வேக்கண்ட் இருக்கு. அதுக்கு இப்பக்குள்ள ஆள் போடுறதா இல்ல. வேற ஒருத்தங்களைப் போடுற வரைக்கும் நீங்க கிளாஸ் எடுக்க வேண்டியதா இருக்கும். அதோட எனக்கு இங்க நிறைய வேலை இருக்கிறதால நான் போக வேண்டிய வகுப்புகளுக்கும் நீங்கதான் போகனும் செய்ய முடியுமா?” என்றார்.


“கண்டிப்பா செய்யுறேன் மேம்”

”அடுத்த வாரத்திலிருந்துதான் ஈவினிங் காலேஜ் வகுப்புகள் ஆரம்பிக்கும், நீங்க டே காலேஜ்ல எடுக்கிறதுக்கு நாளையிலிருந்து வந்திடுங்க. தமிழ் டிபார்ட்மெண்ட்ல புளோரா, பாலின் ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இருப்பாங்க. நான் சொன்னதா சொல்லி நீங்கப் போக வேண்டிய வகுப்புகளுக்குரிய டைம் டேபிளை வாங்கிக்கோங்க” என்றார்.

மீண்டும் ஒரு முறை அம்புஜத்தை அழைத்து சாந்தியை ஈவினிங்க் காலேஜ் ஸ்டாப்கிட்ட காட்டிடுங்கம்மா” என்றார். நன்றி சொல்லிவிட்டு அம்புஜத்துடன் சாந்தி நடந்தாள்.

ஒரு கட்டிடத்தைக் காட்டி இதுக்குள்ள போய் ரைட்டுல திரும்புனீங்கனா தமிழ் டிபார்ட்மெண்ட்” சொல்லிவிட்டு அடுத்தக் கட்டிடத்தை நோக்கி அம்புஜம் நடக்க, சாந்தி பின் தொடர்ந்தாள். இரண்டாவது கட்டிடத்துக்குள் நுழைந்து வரிசையாக இருந்த சில அறைகளைத் தாண்டி, வெளியே செருப்புகள் கழற்றிவைக்கப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்றார்.

செருப்புகளை வெளியே விட்டுவிட்டு உள்ளே நுழைந்தபோது ஆங்காங்கே கணிப்பொறிகளுக்கு முன்னால் சிலர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அறையின் குளிர் உடலெங்கும் பரவி அவள் மேலிருந்து வேர்வைத்துளிகளை விழுங்கிவிட்டு நின்றது. ஒரு மூலையில் இருந்த அலமாரிக்குள் கோப்புகளை  வைப்பதும் எடுப்பதுமாக இருந்த மூன்று பேரின் பக்கத்தில் சென்று

“ஈவினிங் காலேஜ் தமிழ் லெக்சரருக்காக வந்திருக்காங்க உஙக்கூட இருக்கச்சொல்லி மேம் அனுப்பி வச்சாங்க. நான் வர்றேன்”  சாந்தியை விட்டுவிட்டு உடனே கிளம்பினார் அம்புஜம்.

இரண்டடி தூரம் போய்விட்டவரை அழைத்து “தேங்க்ஸ் மேம்” என்றாள். சாந்தி சொல்லிவிட்டுத் திரும்பியபோது, மாலை நேரக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மூன்று பேரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் சிரிப்புடன். முதலில் அவள் பெயரை எம்ஃபில் முடித்த கல்லூரியைப் பற்றி விசாரித்துவிட்டுத் தங்களை ஜுலி, ரீட்டா, பியூலா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

“ஜுலியும் ரீட்டாவும் முப்பத்தைந்து வயதைக் கடந்திருக்க வேண்டும். பியூலா மட்டும் சாந்தியைவிட இரண்டு மூன்று வயது வித்தியாசத்தில் பெரியவராக இருந்தார். பொட்டு இல்லாத நெற்றியுடனும் தூக்கிப்போட்டுக் கொண்ட கொண்டையும் கழுத்துச் செயினில் டாலராக சிலுவையுடனும் இருந்தார்கள்.
மாணவிகளின் சேர்க்கை விசயமாக அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சாந்தி அவர்கள் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தாள். உணவு இடைவேளையின்போது கல்லூரியின் சிற்றுண்டி சாலைக்குத் தங்களுடன் வரச்சொன்னார்கள். சாப்பிட்டு முடிந்ததும் மற்றவர்கள் ஏதேதோ குடிப்பதற்கு சொல்லிக் கொண்டிருக்க, சாந்தி எதுவுமே வேண்டாமென்று சொன்னாள்.

ரீட்டாமேம்தான் “சாந்திக்குக் காப்பி பிடிக்குமா?” என்று கேட்டுவிட்டு “வேண்டாம்” என்றதையும் பொருட்படுத்தாமல் “பரவாயில்லை குடிங்க” என்று சாந்தியின் முன்னால் காப்பி கோப்பையைக் கொண்டு வந்து வைத்தார் ரீட்டா. புது இடம், புதிய மனிதர்கள் சங்கோஜமாக இருந்தது சாந்திக்கு.

உடனே அங்கிருந்து கிளம்பாமல், சாந்தியைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக, மூன்று பேரும் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்டார்கள்.

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“இல்லை”

“வீட்டிலிருந்து வர்றீங்களா? ஹாஸ்டல்ல இருந்தா?”

“ஹாஸ்டல்”

“எங்க இருக்கு?”

“பல்லாவரம்”

“நேட்டிவ் எது?”

“சிவகாசி பக்கம்”

“ரீட்டா மேம் உங்க ஊருக்குப் (திருநெல்வேலிக்கு) பக்கம்தானே” என்றார் ஜுலி.

“ஆமா இங்கிருந்து திருநெல்வேலிக்குப் போற வழியில்தான் சிவகாசி” என்றார் ரீட்டா.

வேறு எதையும் யோசிக்கவிடாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது சீக்கிரத்தில் அவர்களுடன் ஒட்டுதலை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்கள் ஒரு கட்டத்திற்குமேல் பேசாமல் மௌனமான போதுதான், சாந்தி சொன்னாள்,

“தமிழ் டிபார்ட்மெண்ட்ல கொஞ்சம் வேலை இருக்கு. பிரின்ஸிபால் மேம் டைம் டேபிலை வாங்கிக்க சொன்னாங்க”

ரீட்டா கேட்டார் “டே காலேஜ்லயும் கிளாஸ் எடுக்கப் போறீங்களா?”

“ஆமாம் மேம்”

“பியூலா, கொஞ்சம் இவங்களுக்கு தமிழ் டிபார்ட்மெண்ட்டைக் காட்டிவிட்டு வாயேன் இவுங்களுக்கு ” என்ற ஜூலியிடம்.

“வர்றப்பதான் டிபார்ட்மெண்டைப் பார்த்தேன். நானே போய்க்குவேன் மேம் தேங்க்ஸ்” என்று தோளில் பையைமாட்டிக் கொண்டு கிளம்பினாள் சாந்தி.

“நாங்க பிரின்ஸிபால் ஆபிசுக்குப் பின்னால் இருக்கிற ரெஸ்ட் ரூம்லதான் உட்கார்ந்துட்டு இருப்போம். நீங்க பாத்துட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

தன் வாழ்க்கையில் பல சமயங்களில் புது இடங்களையோ, புதிய நபர்களையோ பார்க்கப் போகும்போதெல்லாம் யாரோ ஒருவர் தனக்கு வழிகாட்டிக் கொண்டே வருகிறார்கள். அதோடு எதிர்பாராத பிரியத்தைக் காட்டுகிறார்கள் என்று சாந்தி நினைத்தாள். அத்தகையவர்களை நினைத்துப் பார்க்கும்போது பேராசிரியர் சிவசுப்புவும் பேராசிரியர் நாச்சிமுத்துவும்தான் முதலில் வந்து நின்றார்கள்.

கலையியல் ஆய்வு நிறைஞர் (எம்ஃபில்) படிக்கும்படி சாந்தியை வற்புறுத்தியதும், சென்னைக்கு அவளை வரவழைத்ததும் சிவசுப்பிரமணியம் சார்தான்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அவள் முதுகலை படித்துக்கொண்டிருந்த பொழுது அவளுக்கு வகுப்பு எடுக்கும் வேலு பிரபாகரன் சாருக்கு நண்பராகத்தான் சிவசுப்புசார் அவளுக்கு அறிமுகமானார்.

வாழ்க்கையே மாற்றிவிட்ட நிகழ்ச்சிகள் அமெரிக்கன் கல்லூரியில்தான் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அனுபவத்தை வண்ணங்களாக வாரி இறைத்துக் காட்டியது அமெரிக்கன் கல்லூரிதான்.

நவீன சினிமா, நாடகம், தெருக்கூத்தைப்பற்றிப் பேசுவதற்கு வேலு பிரபாகர் இருந்தார். புதுமைப்பித்தனை, சுந்தர ராமசாமியை, நவீன இலக்கியப்போக்குகளைப் பற்றி விவாதிக்க சதாசிவம் ஒருவர் போதும். அதுவரை ஜனரஞ்சகமான எழுத்துக்களைப் படிப்பதற்கு போதுமானதாக இருந்த சாந்தியின் வசிப்பு அறை இடிக்கப்பட்டு, மூளைக்குள்ளாக புதிய அறைகள் கட்டப்பட்டு வந்தன.

எப்பொழுதும் தன்னைத் தன் மனதைக் குழந்தையின் மனோபாவத்துடன் வைத்திருந்தவள், மதுரை வந்ததும் மாறிப்போனாள். இருபாலர் படிக்கும் கல்லூரி என்பதால் முதலில் இருந்த ஆண், பெண் கூச்சமெல்லாம் பின்னாளில் கரைந்து போனது.

புத்தகங்கள் வாழ்வின் அனுபவித்தறியாத வாழ்வையும் புதுமனிதர்களையும் காட்டி நின்றன. மனிதர்களைவிட புத்தகங்களுடனான நெருக்கம் அதிகமானது. கல்லூரி விடுதியின் எட்டாம் அறையும், பதினொன்றாம் எண் அறையும் ஓய்வெடுக்கும் அறைகளாகவே இருந்தன. பாடப்புத்தகங்களை விட வாசிக்க வேண்டிய, வாசித்த புத்தகங்கள் அதிகமாகவே இருந்தன அவற்றில். ரஷ்ய ஜெர்மன் சிறுகதைகளைத் தேடி வாசிக்க ஆரம்பித்தாள். 

தமிழில் ஆதவனின், வண்ணதாசனின் சிறுகதைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. வாழ்வின் ஆழமான விசயங்கள் புரிபடலாயிற்று. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் ஆழ்ந்தத் துயரங்களை வாரி இறைத்தன. அதன் காரணமாய் யதார்த்தமாய் பார்க்க நேரிடும் பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் பற்றி யாரிடமாவது கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தன.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அமெரிக்கன் கல்லூரியிலிருந்த சிவப்புக் கட்டிடங்கள் எழுபது வருடங்களைத் தாண்டி நின்றன. அடர்த்தியான, வளர்ந்த மரப்பச்சைகளும், கொன்றை மலர்களின் மயக்கும் ஒரு வித வாசமும், மழை விழுந்த நாட்களும் நின்று போயிருக்கின்றன ஞாபகப் புள்ளிகளில். இரண்டு வருடம் எம்.ஏ படிக்க வருபவர்களுக்கு சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புறக் கலைகள், மலையாளம், அயல்நாடுகளில் தமிழ், இலக்கணம் ஒவ்வொரு பருவத்திற்கும்(செமஸ்டர்) பாடமாக இருந்தன. படிப்பவருக்கு, இலக்கியம் பற்றிய பன்முக அறிவை ஏற்படுத்துவதற்கான நோக்கம் அதில் வெளிப்பட்டது. திருஷ்டிப் பொட்டாய் இருந்த ஒரே விசயம் நான்கு பருவத்திற்கும் இலக்கணம் வைத்திருந்தது தான். இலக்கணம் மட்டும் வேப்பங்காயாகக் கசந்தது. எதற்கு முன்னால் எது வரும், எந்த சொல்லோடு எது சேரும், உருபுகள், மயக்கங்கள், புணரியல் எல்லாம் நூற்பாவாகப் படிக்க வைத்தார்கள், மாண்புமிகு ஆசிரிய பெருமக்கள். 

ஓரிரு சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் இலக்கணத்தில் தோற்றுப் போனாள் சாந்தி. இலக்கணம் எடுத்தவர்களைப் பயத்துடன் பார்த்தாள். இலக்கணம் தனக்கு வராது என்றக் குறையை நிவர்த்தி செய்ய ஆழமான விசயங்களைத் தாங்கி வருகிற சிற்றிதழ்களின் பக்கம் அவளுடைய கவனம் போனது. கல்குதிரை, காலச்சுவடு, கணையாழியை வேலு பிரபாகரிடமிருந்து வாங்கிப் பார்த்தாள். இரண்டு முறை அல்ல பல முறை படித்தும் தொடக்கத்தில் புரிந்த பாடில்லை. பேராசியர்களுக்கெல்லாம் நீண்ட நாள் வாசிப்பு பழக்கம் இருந்தது என்பதால் புரிந்துதான் படித்தார்கள் அடிக்கடி அதைப்பற்றி  தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டார்கள். அப்படி பேசுகின்றவர்களை புத்திசாலிகளென்றும் அதிக மதிப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்றும் வகுப்பறையில் வைத்து சக மாணவ மாணவிகள் பேசிக் கொண்டதை சாந்தி கேட்டாள். நூலகத்திற்குச் சிற்றிதழ்கள் வருவதைத் தெரிந்து கொண்டு எடுத்து படிக்கத்தொடங்கினாள். 

மூன்று, நான்கு முறை ஒரே இதழைத் தொடர்ந்து வாசித்ததும், நிறைய விசயங்கள் புரியத் தொடங்கின. ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற வார்த்தைகள் அறிமுகமாயின. முதுகலையில் நான்காம் பருவத்துக்கு ஆய்வேடு தயார் செய்ய வேண்டியிருந்தது. காலச்சுவடு சிறுகதைகளை எடுத்திருந்தாள், அப்பொழுதான், நவீன இலக்கியத்தில் ஈடுபாடு உடையரான வேலுபிரபாகர் சாரின் சென்னை நண்பரான சிவசுப்புசாரின் அறிமுகம் கிடைத்தது.

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com