பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 11, 2010

கார்த்திக்நேத்தா கவிதைகள் -7


நீரின்றி அமையாது நிலவு

நீரின்றி அமையாது
நிலத்தில் நிலவு .
நிலத்தில் நிலா
முழுதாய்ப் பூக்க வேண்டுமெனில்
நீர் வேண்டும்.
புல்லாங்குழலில் வெட்டிய
ஏழு கிணறுகளில் 
ஏழாய்ப் பூக்கிறது 
ஒற்றை நிலா . 
நிலா பூத்திருப்பது தெரியாமல்
கிணத்தங்கரையில் அமர்ந்து
பீடி ருசிக்கிறான் கிணறுவெட்டி .
புல்லாங்குழலை
திருடிச் செல்லும் சிறுவன்
வழியில் சிந்திக் கொண்டே
ஓடுகிறான்
ஏழு கிணத்து நீரையும்
ஏழு நிலவுகளையும்.


நட்ட சுடர் 

நிற்க வைத்த சுடராக 
எரிந்து கொண்டிருக்கிறது 
சொல் .
ஒற்றைச் சொல்லை 
படிக்க வருகிறது 
ஒவ்வோர் இரவும் 
ஒவ்வோர் இரவு .
அர்த்தம் புரிந்து கொண்ட
இரவின் தலையில்
பௌர்ணமி பூக்கிறது .
நிலவு வராத இரவையும்
இரவெனவே அழைப்போமென
கோபிக்கின்றன
வரிசையில் நிற்கும் இரவுகள் .
அந்தச் சொல்லிலிருந்து பிரியும் புகை
மேகமாய் அலைய ,
சொல்லின் அடிவயிற்றில்
உதிக்கிறது மஞ்சள் சூரியன் .
சொல்லின் கீழே
சிணுங்கிக் கொள்கிறது
அர்த்தம் புரிந்த இரவு .


- கார்த்திக் நேத்தா 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com