பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 12, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் -19 - யமுனாராகவன்


யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்


பகுதி 19

வாழ்க்கை ஒரு விதத்தில் வெகுவும் வேடிக்கையாக தான் இருக்கிறது. Life, Fate and destiny, appears to be a bundle of cosmic joke. சில நேரங்களில் நாம் சந்திக்கும் நபர்கள் தான் எத்தனை வித்தியாசமான சம்பவங்களை காட்டி, இதுவும் நடக்கிறது உலகில் என்று உணர்த்துகிறார்கள். ஜெப்பை பார்த்து இத்தனை நாள் பயந்தவளுக்கு, இன்று இந்த நிலவொளியில் அவனுடைய கலங்கின முகத்தை பார்த்து பாவமாக இருந்தது. ஆனாலும் எப்படி இவனை சமாதானம் செய்வது என்று தெரியாது இருட்டில் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு, அங்கிருந்து விலகி செல்ல யோசித்தாள். விலகியும் வெகு தூரம் வந்துவிட்டாள்.

      
திருமண விருந்து நடந்து கொண்டிருந்த அரங்கை நோக்கி நடந்தவள் சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்க்க, ஜெப் அந்த இடத்தில் இருந்து நகராது அமர்ந்திருந்தான். இருட்டில் அவனை அப்படி தனியே விட கடினமாக இருந்தது. சில வேலைகளில் தெருவில் பிச்சையெடுத்து கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்து, என்ன செய்வது என்று தெரியாது குழம்பி போய், கையாலாகாதனத்தின் மொத்த குத்தகையை கையில் தாங்கி, எதை குறை சொல்வது என்று தெரியாது விதியை நொந்து மனமில்லாது அந்த இடத்தை விட்டு நகர்வாள் அஞ்சனா. இரவில் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் மத்தியில் நிற்கும் அந்த நிமிடத்தின் விளிம்பில், அவள் பார்த்த பிள்ளைகளின் முகமோ, கை காலில் ஈ மொய்த்தப்படி இருந்த சிரங்கோ, நீ மட்டும் என்ன செய்துவிடபோகிறாய், மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு ரூபாய் எனக்கு கொடுத்துவிட்டு, உலகின் உத்தமத்தனத்தை தாங்கிய பெருமிதத்தோடு போக போகிறாய் என்று பார்க்கும் பார்வை அவள் நெஞ்சை பிராண்டிக்கொண்டே இருக்கும். இன்று ஜெப் சொன்ன விஷயம் அப்படி தான் அவளை தாக்கியது.
       
குழந்தை பருவம் என்பது எத்தனை நுட்பமான விஷயம். ஒரே மரத்தின் விதையானாலும் அது போய் விழும் நிலம், சூழல், நீரின் தன்மை பொறுத்து மரம் மாறுபடுமாம். அஞ்சனாவின் தந்தை வளர்ந்த சூழல் மிக கடினமான ஒன்று தான். கோபமே வராத அப்பாவிற்கு சாப்பாட்டை வீணாக்கினால் மட்டும் அப்படி கோபம் வரும். பிடித்த அளவு மட்டும் போட்டு சாப்பிட சொல்லுவார். தட்டில் சாப்பாடு மிகுதியாக போட்டு மிச்சம் வைத்துவிட்டால், `` என்னடா! இப்படி செய்யாதே சொன்னேன்ல!`` என்று முகம் கன்றிப்போவார். அப்பாவின் நிலை இப்படி என்றால், பாட்டி சின்னம்மா வளர்ந்த சூழல் இன்னும் மோசம். அதைப் பற்றி சொல்லும்போதே கண் கலங்குவார்கள்.

பாட்டியின் அம்மா ஆங்கிலேயர்கள் காலத்தில் முதன்முதலில் கிருத்துவ மதம் மாறிய குடும்பத்தை சேர்ந்தவர். அஞ்சனாவிற்கு அவர்கள் பெரிய பாட்டியின் பெயர் தெரியாது. அந்த பாட்டி அஞ்சனாவிற்கு ஐந்தாறு வயது இருக்கும் போது, 90 வயதை நெருங்கிய சமயம் இறந்தார்கள். அந்த பாட்டியோடு பிறந்தவர்கள் கிட்டத்தட்ட 4 சகோதரர்கள். கேரளாவில் திருச்சூரை அடுத்த குன்னங்குளத்தில் முதன்முதலில் 1900களில் ஆங்கிலேயர்களோடு வணிகம், திருச்சபை என்று பல விஷயங்களில் ஒட்டியிருந்தபடி, ஊரில் பணக்கார குடும்பமாக இருந்தவர்களாம். வீட்டின் கடைக்குட்டி, ஒரே மகள் ஆதலால் வெகு சிறப்பாக வளர்ந்தவராம், பெரிய பாட்டி. கிருத்துவத்தை அங்கீகரித்தாலும், அந்த கால பழக்கப்படி 7 வயதான பெரிய பாட்டியை 32 வயதான பெரிய குடும்பத்தை சேர்ந்த ஒருத்தருக்கு பகட்டாய் திருமணம் செய்துவைத்தார்களாம். பொம்மைகளோடு விளையாடிக்கொண்டே திருமணம் முடிந்து சிறிது நாள் அப்பா அம்மா வீட்டிலேயே இருந்துவிட்டு, கணவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்களாம்.

கணவர் வீட்டிற்கு போன சில மாதங்களில், பிள்ளை அங்கு எப்படி வாழ்கிறது என்று பார்க்கவேண்டி, பலகாரம், துணிமணி, பொம்மைகள், நகை எல்லாம் வாங்கி சென்றார்களாம். காரில் ஏறி, பெரிய குடும்பமாக அப்பா, அம்மா, அண்ணன்மார்கள் எல்லோரும் போய் பார்க்க, அந்த ஏழு வயது சிறுமி, அடுப்பங்கரையில் 20 பேருக்கான சாப்பாட்டை கரிஅடுப்பில் சமைத்துக்கொண்டு இருப்பதை பார்த்ததுமே மனம் கலங்கியதாம். அங்கங்கே அடித்த வடு கோடு கோடாய் இருந்ததும், கந்தல் துணியை போட்டபடி இங்கேயும் அங்கேயும் பயந்தபடி நடந்துக்கொண்டிருந்ததும், சாப்பிட சரியாக இல்லாததால் இளைத்து போய் இருந்ததும், அந்த மாமியார் இவர்களை எல்லாம் சீ என்பது போல நடத்தியதும், எல்லோரும் பாயில் அமர்ந்திருந்த போதும், இவர்கள் முன்னாலேயே பெரிய பாட்டியை துடைப்பத்தின் மேல் அமர வைத்ததும் பார்த்து துடித்துப்போனார்களாம்.

ஆனால் பாட்டியின் அந்த 32 வயது புருஷன் இவர்களை பார்க்க வந்து, வெகு மிதப்பாய் வணக்கம் வைத்துவிட்டு போனதும், அந்தாளை பார்த்து நடுங்கியபடி, அப்பாவை கட்டிப்பிடித்து ஓவென்று அழுதாராம். மகள் அழுவதை பார்த்து தாங்கமுடியாத தந்தை, நெஞ்சோடு சேர்த்தனைத்து தானும் அழுதபடி, ஏன் அழுவதாய் கேட்டாராம். அதற்கு பாட்டி அவர்கள் அப்பாவிடம் விம்மியபடி, ``இருட்டானால் பயமாக இருக்கு, அப்பா! அந்த அத்தை எது சொன்னாலும் அடிக்குது. பசிக்குதுன்னு சொன்னா சூடுவைப்பேன் சொல்லுது. ஆனா இந்த அண்ணாவை பார்த்தா தான்பா எனக்கு பிடிக்கவே இல்லை. ராத்திரி தூங்குனா, தொடைல அடிச்சு, துணியெல்லாம் கழட்டுது. என்னன்னமோ செய்யுது. ரொம்ப வலிக்குதுப்பா. என்னால முன்ன போல ஓடமுடியலை. இங்க பாருங்க என் உடுப்பெல்லாம் ரத்தமாக இருக்கு. ஏன்பா, என்னை இங்கே விட்டுட்டு போயிட்டீங்க. நான் அழுதுட்டே இருக்கேன்பா, இந்த வீட்டுல. நான் இனி குறும்பே பண்ணமாட்டேன், அப்பா. என்னை விட்டுட்டு போயிடாதீங்க`` என்று கதறியதை கேட்டு, அப்படியே இடிந்துப்போய் அப்பா உட்கார்ந்து விட்டாராம். மனைவியும், மகன்களும் தேத்தியபடி இருக்க, சிறிது நேரம் ஒன்றுமே பேசாது, பிறகு மகளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு, மாமியாரிடம் போய், மகளின் கழுத்தில் இருந்த தாலியை பிய்த்து மூஞ்சில் விசிறியெறிந்துவிட்டு வந்தாராம்.

மகள் அதன்பின் ஏனோ பழைய கலகலப்பில்லாது, ஏதோ தொலைந்த பார்வையோடு இருந்ததை பார்க்க சகிக்காது, சிறிது காலத்திலேயே காலாமாகி போனாராம். வாழாவெட்டியாக வந்த பெரிய பாட்டி அம்மா வீட்டிலேயே வளர்ந்திருக்கிறார். இவர் பருவமாகி இளம்பெண்ணாக வளைய வந்த போதும், அண்ணன்கள் குடும்பத்திற்கு சமைத்துப்போடும் வேலைக்காரியாக மாறிப்போய் இருக்கிறார். அம்மா, அப்பா இறந்தபிறகு, வாழ்க்கையே முடித்துவிட்டதாக எண்ணி இருந்தவர், தேவாலயம் செல்லும் வழியில் ஒருவரை சந்தித்திருக்கிறார். ஜடாமுடி வளர்ந்து, கருப்பு நிறமாய் கண்ணில் வீரியத்தோடு, நடுநெற்றியில் பெரிய மைப்பொட்டுவைத்து வெற்று உடம்பாய், கீழே காவி வேட்டியும், தோளில் துண்டும் போட்டு இருந்த அந்த இளைஞரை பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

விசாரித்ததில் ஆறுவயதில் காணாமல் போன நம்பூதிரி தரவாட்டின் இளைய மகன் என்று சொன்னார்களாம். ஒரு பெரிய மாந்திரீகர் இவரை கூப்பிட்டு போனதாகவும், மாந்திரீகம் கற்று இப்போது நாடு திரும்பியிருக்கிறார் என்றும் பலர் ஏவல் வேலை, பில்லி சூன்யம் இவற்றை முறியடிக்க அவரிடம் சென்றுவந்ததை பார்த்தாராம் பாட்டி. பெரியபாட்டி நல்ல நிறம், கூர்மையான மூக்கு, வாளிப்பாய் இருப்பாராம் சிறு வயதில். அவரை அந்த நம்பூதிரி இளைஞரும் விரும்ப, இரு வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லாயாம். ஒத்துவராது என்று ஊர் கூடி சண்டையிட, எல்லோர் முன்னிலையிலும் வைத்து பெரிய பாட்டியின் கழுத்தில் தாத்தா தாலி கட்டி, ஊரை விட்டு, பிழைப்பிற்காக குன்னூர் வந்து சேர்ந்தார்களாம்.

கிறுத்துவரான பெரியபாட்டிக்கும், நம்பூதிரி பெரியதாத்தாவிற்கும் பிறந்தது மூன்று மகள். அதில் முதல் இருவரும் அச்சு அம்மாவை போலவே நல்ல நிறம், வனப்பு, ஆனால் அஞ்சனாவின் பாட்டி சின்னம்மா நல்ல அழகானாலும் தந்தையை போலவே மாநிறம். நல்லபடியாக குடும்பம் போய்க்கொண்டிருந்த சமயம், பாட்டி சின்னம்மா பிறந்து ஆறுமாத குழந்தையாக இருக்கும் போது, நெஞ்சில் குழந்தையை அணைத்தப்படியே மாரடைப்பால் காலமாகி போனாராம் 35 வயதான பெரிய தாத்தா. சிறு பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது, திரும்ப ஊருக்கு சென்று உதவி கேட்க இரு குடும்பமும் உதவாது மறுத்துவிட்டதாம்.
பெரிய பாட்டி விதவையாகி இருக்க இடம் இல்லாது, குன்னூரில் ஓடாது உளுத்துப்போன பழைய டிரெயின் கோச்சின் சக்கரம் கழட்டி, தரையில் புதைந்து இருக்க, அதில் தான் வசித்து வந்தார்களாம் எல்லோரும் பெரிதாக வளரும்வரை. முதல் பெண் செவிலியாக படிக்க பக்கத்து ஊரில் இருக்க, இரண்டாவது பெண் எட்டாவது வகுப்பு, இவர்கள் வசித்த இடத்தில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு ரயில் தண்டவாளம் ஒட்டியே நடந்து போய் வருவாராம். பெரிய பாட்டி தாத்தாவிடம் கற்றுக்கொண்ட சித்தவைத்தியம் தொடர்பாக அங்கு இருந்தவர்கள் நோய்க்கு மருந்து தந்து ஜீவனம் நடத்திவந்திருக்கிறார். தன்னை தேடி வந்தவர்க்கு கொடுக்க வேண்டி, ஏதோ மூலிகை இருக்கும் இடத்தை சொல்லி, சட்டென போய் பறித்து வர சின்னம்மாவை அனுப்பினார்களாம். இரண்டாவது அக்கா திரும்பவரும் நேரமும் ஆனதால், சந்தோஷமாக பெரிய பையை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார். அந்த மூலிகை கீரை இருக்கும் தோட்டத்து தாத்தா இவளை இஷ்டப்படி பேரிக்காய் பறித்துக்கொள்ள விடுவாராம்.

பேரிக்காய், அந்த தோட்டத்தில் இருக்கும் பழங்கள் எல்லாம் பறித்தால் அன்று இரவு சாப்பாட்டிற்கு பட்டினி இருக்கவேண்டாம் என்று துள்ளியபடி பாதி தூரம் போனதும், எங்கேயோ அலறல் சப்தம் கேட்டதாம். சின்னம்மா பதறிப்போய் காலில் கல்லும் முள்ளும் குத்த ஓடிப்போய் பார்க்க, அக்காவை அந்த தாத்தா......... அலறியப்படி இருந்த அக்காவை பார்த்து அழுதபடி, கீழே ரயில் தண்டவாளத்தில் இருந்த பெரிய ஜல்லி கல் கைக்கொள்ள பொறுக்கி, அந்த தாத்தாவை பார்த்து ஓங்கி ஓங்கி அடித்திருக்கிறார். துணி அங்கங்கே கிழிந்திருந்த அக்காவும் அங்கிருந்து எழுந்து அந்த தாத்தாவை கல்லால் அடித்து துரத்தினார்களாம். ரத்தம் ஒழுக மயங்கி விழுந்த அந்த கிழவரை விட்டு விட்டு, இரண்டு சிறுமிகளும் வீட்டிற்கு ஓடிவந்திருக்கிறார்கள்.

பெரிய பாட்டி அந்த சம்பவத்திற்கு பிறகு, வளர்ந்த பெண்களை வைத்துக்கொண்டு அங்கு இருப்பது ஆபத்து என்று எண்ணி சொந்த ஊருக்கே சென்று குடிசையில் வாழ்ந்தார்களாம். பெரிய அக்காவிற்கு அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்ததில் கொஞ்சம் குடும்பம் அமைதியாகி இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, இரண்டாவது பெண் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அப்போதும் பெரிய பாட்டி தொந்திரவு செய்ய, பாலக்காட்டில் இருந்த தேவாலயமும் அதனை ஒட்டிய அனாதை ஆசிரமத்தில் கன்னியாஸ்திரியாக சென்று சேர்ந்து விட்டார்கள். பாட்டி சின்னம்மா இறக்கும் சில வருடங்களுக்கு முன்பு தான் அந்த பாட்டி இறந்து போய்விட்டார் என்று ஒரு நீல கலர் கடிதம் வந்து சேர்ந்தது. அங்கேயே கல்லறையில் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்தை அவர்களால் மறக்கவே முடியாது போனது என்று சொல்லுவார்கள்.

பாட்டி சின்னம்மா, அஞ்சனாவிற்கு எண்ணை வைத்து தலைவாரும்போது, அந்த நாளை பற்றி சொல்லுவார், அவர்கள் அம்மா அனுபவித்த வேதனைகள் பற்றி சொல்லுவார். எப்படி அஞ்சனாவின் வாழ்க்கை எளிமையாக இருக்கிறது. இப்படி குழந்தைப்பருவம் பெறவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லுவார். குழந்தை பருவத்தில் ஏற்படும் இது போன்ற காயங்கள் மனநிலையை வெகுவாய் பாதிக்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவம் படித்ததில் புரிந்துக்கொண்டாள் அஞ்சனா.

திருமண விருந்து முடிந்து எல்லோரும் ஒவ்வொருவராக கலைந்து சென்றார்கள். திரும்ப வீட்டிற்கு செல்ல வண்டி ஏதும் இருக்குமா என்று சுற்றி முற்றி பார்க்க, பெரியவரையோ அவர் குடும்பத்து முக்கிய ஆட்களையோ காணவில்லை. யாரிடம் லிப்ட் கேட்டு வண்டியில் செல்வது, அல்லது டாக்ஸி ஏதும் இந்த சமயத்தில் இருக்குமா என்று பார்த்தாள். அசதியாக இருந்தது. சுற்றி முற்றி பார்த்து நிற்கும் போது, ஜெப் வந்தான். கண்கள் சிவந்து, முகம் லேசாக கறுத்து இருந்தது. வந்தவன் இவள் முகத்தை பார்க்காது, அங்கிருந்து கிளம்ப யத்தனித்தான். அஞ்சனா திரும்ப எப்படி வீட்டிற்கு செல்வது என்று யோசித்துக்கொண்டு நிற்க, வண்டி எடுத்தவன் இவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தி, ``அஞ்சனா! வீட்டில் இறக்கிவிடவா?`` என்று கேட்டான். அவளும் ஒன்றும் பதில் சொல்லாது, சுற்றி முற்றி பார்த்துவிட்டு ம்ம் என்று சொல்லி ஏறினாள்.

வண்டியில் ஏறிய பின்னர், இருவரும் ஒன்றுமே பேசவில்லை, வெகு தூரத்திற்கு. இரவு 2 மணி ஆகியிருந்தது. சேய்ஷல்ஸ் இந்தியாவை போல அல்ல. பொதுவாக கடம்பத்தூரில் நடக்கையில், தெருக்களில் கூட்டம் குறைய, நிச்சயமாக நள்ளிரவு ஆகிவிடும். விடியற்காலை 3 அல்லது 4 மணிக்கெல்லாம், திரும்ப சப்தமும், ஜன நடமாட்டமும் கேட்க தொடங்கும். இங்கேயோ 7 மணிக்கு மேல் ஆள் அரவமே இருக்காது. ஆனால் இந்த இருட்டில், காரில் பயணம் செய்ய, காரை ஒட்டியே வந்த கடலும், நிலவொளியும் பார்க்க ரம்மியமாக இருந்தது.

திடீரென ஜெப், `` நன்றி அஞ்சனா! என சொல்லியது, அவளை திடுக்கிட வைத்தது. திரும்ப அவனை பார்த்து, வெறுமே புன்னகைத்துவிட்டு, திரும்பிக்கொண்டாள். அவன்`` I want to purge myself by telling everything to you’’. என்றான். எதை பற்றி கூறுகிறான் என்று புரிந்தது, ஆனால் கேட்கும் மனநிலையில் இல்லாது போனாலும், அஞ்சனா ஒன்றும் சொல்லாது போகவே, `` காரை இங்கு நிறுத்தவா!`` என்றான். இன்னமும் அவன்மேல் பயம் முழுமையாக போகவில்லை என்பதை அந்த நொடி சொன்னது. பெரிய கற்பாறைகள் இருக்கும் கடற்கரை பக்கம் காரை திருப்பினான். ரோட்டில் இருந்து தனியே திரும்பியது சாலை. அவளுக்கு ஏனோ நெஞ்சு படபடப்பு அதிகமானது. ஏதாவது சம்பவித்தால் எப்படி ஓடுவது என்று கூட தெரியாதே`` என்று விழித்தப்படி, காரின் வெளிப்புறம் பார்த்துக்கொண்டுவந்தாள். அவன் லேசாக சிரித்த சப்தம் கேட்டது. திரும்பி பார்க்க அச்சமாக இருந்ததால், அவன் பக்கம் முகத்தையே திருப்பவில்லை. ஜெப் சொன்னான், `` என்னை பார்க்க பயமாக இருக்கிறதா, அஞ்சனா. I won’t harm you, I give you my word’’ என்று.

காரை பெரிய பாறையின் பக்கம் ஒட்டி நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினான். அஞ்சனாவும் காரை விட்டு இறங்க, கால் மணலில் புதைவதை ரசித்தாள். சென்னை மெரினாவிற்கு போனால் தண்ணீரில் அரைமணி நேரமாவது நிற்காது வரமாட்டாள். ஆனால் சென்னையில் கடற்கரை மணல், கொரகொரப்பாக இருக்கும். சேய்ஷல்ஸில் மணல் soft ஆக இருந்தது. சேரில் கால் புதைத்தால் எப்படி இருக்குமோ, அதே உணர்வு தான் கொடுக்கும். வெள்ளை வெளேரென, மிருதுவான மணலில், நடப்பது கடினமானதும் கூட. ஜெப் சென்ற வழி நோக்கி நடந்தாள் அஞ்சனா.

காற்று ம்ம்ம்ம் என்ற சப்தத்தோடே வீசிக்கொண்டிருந்தது. அரையிருட்டு, கண்களுக்கு பழக தொடங்கியது. ஜெப் திடீரென, `` இரு அஞ்சனா வருகிறேன்`` என்று சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தான். இவன் சாதாரண செயல் செய்தால் கூட, ஏனோ தடக் தடக் என்றே தோன்றியது. அம்மாவின் புருவம் உயர்த்தி, இது தேவையா என்பது போன்ற பார்வை, மனக்கண்ணின் முன் வந்து போனது. பாறைகளின் ஊடே, எங்கு கூப்பிட்டு செல்கிறான் இவன், என்று யோசித்தப்படி நிற்க, ஜெப் வந்து சேர்ந்தான். ஒரு தோளில் back pack மாட்டிக்கொண்டு, இன்னொரு தோளில் guitar, கையில் இரண்டு பெரிய beach towel எடுத்துக்கொண்டு வந்தான். ``இந்த பக்கம்’’ என்று சொல்லி அழைத்து சென்றான். அங்கங்கே மின்மினிப்பூச்சிகள் மின்னிக்கொண்டு இருந்தது, சிறு பூச்சிகளின் ரீங்காரம், காற்றின் ஓசை, கடலலை சப்தம் தவிர ஒன்றும் கேட்கவில்லை.

ஜெப் சொன்னான், `` This is my secret hide out. இது வரை யாரையும் கூப்பிட்டு வந்ததில்லை. நிறைய பேருக்கு தெரியாது ‘’ என்று. பாறைகளின் ஊடே ஐந்து நிமிடம் நடந்தப்பின், கடலை நோக்கி நடந்தார்கள். கால் பாதம் மூழ்கும் அளவு தண்ணீர். செருப்பை கையில் தூக்கிக்கொண்டு, புடவை நனையாது இருக்க, தூக்கிப்பிடித்து நடந்தாள். தண்ணீரை தாண்டியதும், கடலுக்குள் ஒரு சிறிய திட்டு தென்பட்டது. அதில் முழுக்க பாறைகள் மட்டுமே இருக்க, ``இவன் என்ன பாறையின் மேல் ஏற சொல்ல போகிறானா, புடவையை கட்டிக்கொண்டு தான் நடப்பதே அழகு. இதில் என்ன செய்யவேண்டுமோ`` என்ற யோசித்தப்படி நடந்துக்கொண்டிருந்தாள் அஞ்சனா.

திட்டின் அருகே வந்ததும், சுற்றி முற்றி அமர கூட இடம் இல்லை, இங்கு ஏன் கூப்பிட்டு வந்தான் என பார்த்தாள் அவனை. அவன் சிரித்து, அவளை பார்த்து கையை நீட்டினான். லேசாக தயங்கியபடி, கையை பற்றினாள் அஞ்சனா. நிமிர்ந்து பார்த்தால், ஒரு மாடி கட்டிடம் அளவிற்கு உயரமான பாறைகள் தாங்கி இருந்தது அந்த மணல் திட்டு. பாறைகளின் ஊடே சிறிய பாதை மறைவாய் இருந்தது. அதன் வழியே போக, ஒரு நிமிடத்தில் அந்த பாறையின் உச்சியில் இருந்தார்கள் இருவரும். அங்கு நின்று பார்க்கையில் சாலை தெரிந்தது ஒருபக்கத்தில், வந்த கார் தெரிந்தது. இன்னொரு பக்கத்தில் தூரத்தில் ஹோட்டல் தெரிந்தது, இன்னொரு பக்கத்தில் ப்ராலினின் ஏதோ ஒரு வளைவு தெரிந்தது, கண்முன்னே முழுக்க கடல் விரிந்து கிடந்தது. அஞ்சனா பார்த்து கொண்டே நின்றாள், நேரம் போவது தெரியாது. ஜெப் இங்கே வா என்றான். திரும்பி பார்க்க, இரண்டு டவலையும் இருவர் அமர்வதற்கு தோதுவாய் தரையில் விரித்திருந்தான். கிடார் பாறையில் சாய்ந்தபடி நின்றது.

`` இந்த இடத்தை நானே அமர வாட்டமாய் செதுக்கினேன் தெரியுமா `` என்று கேட்டவனை பார்த்து சிரித்தாள் அஞ்சனா. ஜெப் அதற்கு, `` நிஜமா தான் சொல்லுறேன் `` என்றவன், `` இந்த இடத்தை கண்டுப்பிடிக்கும் போது எனக்கு வயது 9. யாருக்கும் தெரியாது, இங்கு வந்து ஒளிஞ்சுக்குவேன். நாளெல்லாம் இங்கேயே இருப்பேன் தெரியுமா`` என்றான். ``யாரையுமே பார்க்க பிடிக்காது, எல்லோரையும் வெறுத்தேன், வெறுத்துக்கொண்டே இருக்கிறேன். எனக்கு என் அப்பா யாரென தெரியாதலால், பள்ளியில் நினைவு தெரிந்து, என்னை மற்ற பிள்ளைகள் விளையாட்டில் கூட யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. வீட்டிற்கு போக பயமாக இருக்கும். அதனால் தனியாக இங்கு வரத்தொடங்கினேன். மழை, வெயில் பாராது, இங்கேயே அமர்ந்திருப்பேன், அஞ்சனா. தனி்மை பிடித்துப்போய்விட்டது `` என்றான்.

ஜெப்பை பத்து வயது சிறுவனாக கற்பனை செய்துக்கொண்டிருந்தாள் அஞ்சனா. பாவமாக இருந்தது, அவனுடைய lonely childhood பற்றி நினைக்கையில். எப்போதும் போன்றே எதுவும் செய்ய இயலாது கையாலாகாதனம் தனக்குள் எட்டிப்பார்ப்பதை எண்ணினாள். ஜெப் கேட்டான், `` Cinderella effect பற்றி தெரியுமா? `` என்று. எங்கேயோ படித்திருக்கிறாள், அஞ்சனா. கதையில் எப்படி சிண்டெரல்லாவை மாற்றாந்தாய் கொடுமை படுத்துகிறாளோ அது போலவே, மனவியல் நிபுணர்கள் மாற்றான்பிள்ளைகளுக்கு physical abuse, sexual abuse, neglect போன்ற கொடுமைகள் கிட்டதட்ட 30 சதவிகிதம் கூடுதலாக நிகழ்கிறது என்கிறார்கள்.

ஜெப் எப்படி உணர்ச்சி இல்லாத கண்களோடு இருந்தானோ, இப்போது அவன் குரல் உணர்ச்சி இல்லாது இருந்தது. பேசிக்கொண்டே இருந்தான், என்ன நிகழ்ந்தது என்று. அவனுடைய தாய் போதை மருந்து பழகத்தொடங்கிய பின் வாழ்வதற்கு தேவைகள் என்ற நிலை மாறி, போதை பொருள் வாங்க காசு இருந்தால் போதும் என்று மாறிவிட்டதாம். உணவு, உடை, குழந்தை பராமரிப்பு போன்ற முக்கியமானவைகள் எல்லாமே காற்றில் போனதாம். சிறிய வீட்டில் இருந்ததால், வேறு ஒருவரும் பேண இல்லாத நிலையில், குழந்தையான ஜெப், அம்மாவோடே இருந்தானாம். ஜெப் சொன்னான், ``எனக்கு விவரம் தெரிய தொடங்கிய வயது என்றால் மூன்று என்று சொல்லலாம். இன்னமும் நினைவில் இருக்கிறது. வீட்டு கதவு தாள் போட்டு இருக்கும், ஆனால் அறைகளில் திரைச்சீலை மட்டும் தான் இருக்கும். பசியோடு அழுதுக்கொண்டே இருப்பேன். வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி அலைவேன். அம்மா படுக்கையறையில் இருக்கும் சப்தம் கேட்டு, உள்ளே சென்றால், அம்மா நிர்வாணமாக இருப்பாள், கூட இன்னொரு ஆணோடு. பசிக்குது என்று கேட்டால், அம்மா நினைவில் இருந்தாள், எழுந்து வந்து சாப்பிட ஏதாவது தருவாள். இதற்கு பின்னே, பசித்து அழுதால், அந்த ஆள் அறைக்கு வெளியே வந்து, முதுகில் பளீரென வைத்து, சப்தம் கேட்டால், இன்னமும் பலமாக அடிப்பேன். வா என்னோடு! என்று சொல்லி தரதரவென வீட்டின் ஏதாவது ஒரு இருட்டு மூலைக்கு கூப்பிட்டு சென்று சுவரில் சாய்த்து நிறுத்திவிட்டு, அந்த இடத்தில் இருந்து அசைந்தால், பூச்சியை விட்டு கடிக்கவிடுவேன் என்று மிரட்டுவான். பல நாட்கள், சுவற்றில் ஒட்டியே நிற்பேன், எத்தனை நேரம் என்ற கணக்கே தெரியாது. அவன் இருந்தால், நான் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருப்பேன். போகையில் வருகையில், சும்மாவே கன்னத்தில் அறைவான்.`` என்று சொல்லி நிறுத்தினான்.

மேலும் `` என்னுடைய பிறப்புறுப்பை அவன் பிடித்ததும், அவன் என்னை பயமுறுத்தி அவன் தேவைகளை தீர்க்க வேண்டி என்னை கேவலமான செய்கைகளை செய்யவைத்தது, இன்று போல நினைவிருக்கு, அஞ்சனா. எனக்கு யாருமே இல்லை அந்த சமயங்களில். என் வாழ்க்கை வேறு யாருக்கும் வேண்டாம். என்னால் தாங்கமுடியாது, கஞ்சா பிடிக்கத்தொடங்கினேன். என் கோபம் எனக்கு தைரியமாக மாறியது. வளர வளர, என்னுடைய போக்கு மாறியது. எனக்கு ஈவு இரக்கம் காட்டாத உலகிற்கு நானும் திருப்பி தர ஒன்றும் வைத்திருக்கவில்லை `` என்றான். ஜெப் சொன்னான், நான் எந்த பெண்ணையும் மானபங்கப்படுத்தவில்லை. என்னை சுற்றி இருந்தவர் செய்தவைகளை பற்றி என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. இப்படி இருக்கையில் ஏன் உன்னிடம் மட்டும் பேசுகிறேன் என்று பார்க்கிறாயா? சேய்ஷல்ஸ் பெண்கள் போல இல்லை நீ. பொதுவாக பார்க்கும் மல்பா பெண்களை போலவும் நீ இல்லை. லா டிக்கில் நடந்த சம்பவத்தில், உன் முகமும் பயம் அப்பிய கண்ணும், எனக்கு என்னையே நினைவு படுத்தியது. என்னால் என் வாழ்க்கை முறையை மாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், உன்னிடம் பேசுவது இதமாக இருக்கிறது. பல நாளாய் கேட்க ஆள் அற்று இருந்த குப்பைகள் எல்லாம் கிளறி மேலெழும்புகிறது. மனம் லேசாகவும் கனமாகவும் இருக்கிறது அஞ்சனா. என்று பேசிக்கொண்டே இருந்தான்.

இன்னும் இன்னும் இது போன்ற சம்பவங்களை பற்றி பேச பேச, அவன் குரலும் முகமும், இவையெல்லாம் வேறு யாருக்கோ நிகழ்ந்தது போல மாறியது. மனநிலை மருத்துவத்தில், உள்மனதால் தாங்க முடியாத வலியேற்படுத்தக்கூடிய சம்பவங்களை தாங்கும் பொருட்டு, மனது இவை வேறு யாருக்கோ நிகழ்வது போல பிரித்துப்பார்க்க தொடங்கும். அதை Dissociative disorder என்று சொல்கிறார்கள். ஆழ்மனது தாங்கொணாத துயரால் இரண்டாக பிளக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி பிளவுப்பட்ட மனதால் சமுதாயத்தின் சரி தவறுகளை நிர்ணயிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.

ஜெப் குரல் லேசானது, கம்ம தொடங்கியது, அவன் பேசுவதை நிறுத்தினான். சிறிது நேரம் அமைதியானவன் கிடார் கையில் எடுத்து பாடத்தொடங்கினான். நிலவொளியில், மலைமுகட்டில் அமர்ந்து, காற்று லேசாக வீச, ஜெப்பின் கிடார் இசை ரம்மியமாக இருந்தது. ‘’ Wizard of Oz ‘’ என்ற பழைய ஆங்கில படத்தில் ‘’Judy Garland’’ பாடும் வரிகளை, கண்களில் நீர் தளும்ப பாடத் தொடங்கினான்.

Somewhere over the rainbow, Way up high
There's a land that I heard of, Once in a lullaby

Somewhere over the rainbow, Skies are blue
And the dreams that you dare to dream
Really do come true

Some day I'll wish upon a star
And wake up where the clouds are far behind me
Where troubles melt like lemon drops
Away above the chimney tops
That's where you'll find me

Somewhere over the rainbow
Bluebirds fly
Birds fly over the rainbow
Why then, oh why can't I?    
       
அஞ்சனாவால் அந்த நொடியின் தாக்கம் சொல்ல இயலாததாக இருந்தது. வாய் வார்த்தைகள் மறந்து போய், கண்கள் பனிக்க நிலவை பார்த்து அமர்ந்திருந்தார்கள் இருவரும். 

- யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com