பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 10, 2010

அஞ்சல்தலை-7 - 26/08/05 அன்று சாருக்கு எழுதியது- சாம்ராஜ்






அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு,

ஜன்னல் திரையை விலக்கினால் இன்னும் விடிந்தும் விடியாமலும் தூரத்தே எங்குப் பார்த்தாலும் கருமையாய் இருமையாய் மலைகள் ”வாழ்வின் திரைச் சீலைகளும் இப்படித் திறக்காதா என்ன”

முதல் முறையாக கோர்ட் கூண்டிலேறி சாட்சி கூறினேன். சம்பத் மாமா கொலை வழக்கு. மதுரை 2 வது நீதிமன்றம்.
கொலையாளி, கொலையாளியின் குடும்பம், கொலை செய்யப்பட்ட குடும்பமான நாங்கள் ஒரே வாயிலில் காத்திருக்க…….
போலிஸ்காரர்கள் என்னை பொய் சாட்சிக்கு தயார்படுத்த……
நான் கூண்டிலேறி எதுவும் பார்க்கவில்லை என்று கூறினேன்.நீதிபதி ”எதையும் பார்க்கவில்லையா” எனக் கேட்டார். ஸ்டெனோவிடம் இடை இடையே ஏதோ கேட்கிறார். போலிஸ்காரர்களுக்கு தாங்கவொன்னாத கோபம். அவர்கள் சொன்னதற்கு மாற்றிச் சொல்லியதற்காக.. ஒரு ஏட்டையா மட்டும் “சார் கிளம்புங்க” என்று காப்பாற்றி விட்டார். அவர் கொலையாளிக்கு ஆதரவானவர். சம்பத் மாமாவின் ஆவி என்னை மன்னிக்காது.

மலையாள நடிகர் முரளியை அவர் வீட்டில் சந்தித்தேன். தொலைபேசியில் விளித்தபோது வாருங்கள் என்றார். திருவனந்தபுரம் கெளடியார் சரிவில் பண்டிட் காலனியிலிருக்கிறது அவர் வீடு. வீட்டிற்குள் தயங்கியபடி நுழைந்தபோது ”இங்கோட்டு…….” என்று நான் பல காலம் பரிச்சயப்பட்ட குரல். ஒரு ரெண்டு மணி நேரம். ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பாதித்த நடிகர். என் கண் முன்னே……. அவருடைய புத்தகங்களைப் பற்றிப் பேசினார். மலையாளத்திலிருப்பதை வாசித்துக் காட்டினார்.. விடை பெறும் பொழுது கட்டியணைத்துக் கொண்டார். “சந்தோசம் தானே…….” என்றார்.

12 மணி வெயில் சுட்டெரிக்க திருவனந்தபுரத்தில் எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. கே எஸ் ஆர் டி சி பிடித்து ஆற்றிங்கள்ளில் இறங்கிய பொழுது லேசாகத் தூறியது. முத்துமணி ஒடி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். இருவரும் நன்றாகச் சாப்பிட்டோம்.

முத்துமணி தான் படித்த பள்ளி, பழைய வீடு, மருத்துவமனை, கல்லூரி என ஒவ்வொன்றாய்க் காண்பித்தார். எல்லாவற்றையும் இடித்துக் கட்டுகின்றார்கள் என்றார். அவருக்குத் தெரிந்த ஒருவரிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.”நாட்டிலிருந்து என்னைக் காண வேண்டி…..” ஆற்றிங்கள்ளை ஒரு பழைய சித்திரம் போல முத்துமணி விவரித்துக் கொண்டிருந்தார். கொஞ்சநேரம் அவர் வீட்டிலிருந்தோம். தூசிகள் அடர்ந்திருக்கும் அந்த வீட்டில் தான் முத்துமணியின் ஜீவிதம்.

திருவனந்தபுரம் சாலைத் தெருவில் எழுத்தாளர் ஆ.மாதவனைத் தேடினோம். யாரோ ஒரு வியாபாரி இறந்து போய் விட்டதால் நேரமே போய்விட்டதாகச் சொன்னார்கள்.. சாலை தெருவில் ஆ.மாதவனை ’அண்ணாச்சியாக’ எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

முத்து மணி என்னை 10.30 வண்டியில் ஏற்றி விட்டுத்தான் கிளம்பினார். இனி முத்து மணி கொல்லம் போகிற வண்டியில் ஏறி நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கும் கே எஸ் ஆர் டி சி பஸ் ஸ்டாண்ட் வழியே தனித்து, தன் இரண்டடுக்கு வசிப்பிடத்திற்குத் திரும்ப வேண்டும். சக மலையாள செக்கன்கள் உறங்கியிருக்கக் கூடும்.முத்துமணிக்கு பெரிய பெரிய பெரிய சோறும் மீனற்ற அற்ற மீன் குழம்பும் காத்திருக்கும்.

நாகர்கோவில் பற்றிய எனது சித்திரங்களை உருவாக்கியவர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுந்தர ராமசாமிதான். இப்பொழுதும் கோட்டாறு, திருவட்டாறு, கனகமூலம் சந்தை என்று கேட்கும் பொழுது சந்தோசமாய் இருக்கிறது. ஒழுகினசேரி பாலத்தைப் பற்றிச் சொன்னால் என்னை ஆச்சரியமாகப் பார்க்கின்றார்கள். எல்லாம் நாஞ்சில் நாடன் கொடை.

நிஷாவின் அலுவலகத்திற்கு எதிரே வடசேரி பேருந்து நிலையம் என்பதும், திரைச்சீலை விலக்கினால் பிரம்மாண்டமான கரு மலைகளும் நடக்கின்ற தூரத்தில்தான் வீடு என்பதும், நல்லதொரு நிருவன உரிமையாளர் என்பதும்தான் ஆறுதல்.

கூப்பிடு தூரத்தில் கன்யாகுமரியும் சுசீந்திரமும். சுசீந்திரம் கோயிலுக்கு நடை அடைக்கும் நேரத்திற்குப் போனோம்.. திருவெம்பாவையோ ஏதோ பாடியபடி அடைத்துக் கொண்டே போக, சாமிநாதன் எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு எளிய வேலையை நாகர்கோவிலைப் பார்த்துக் கொண்டு, சுசீந்திரம் கோவிலருகே ஒரு வீடு பிடித்து பழைய வடசேரியிலிருந்து பேருந்து பிடித்து கோயில் அடைக்கும் நேரத்தில் தெப்பக்குளத்தை கடந்து, கோபுர விளக்கு குளத்தில் பட்டு உடைந்து கொண்டிருக்க ஒரு மஞ்சள் பையோடு அதைக் கடந்து போனால் எப்படியிருக்கும். சுசீந்திரம் என்னை வசீகரித்துக் கொண்டேயிருக்கிறது.

எனது நாகர்கோவில் நகர்வுக்குப் பின் இவையெல்லாம் இருக்கக்கூடும்.நிச்சயமாக உங்களைக் கடந்து போகிறேன் என்பதே எனக்குச் சந்தோசம்.திருநெல்வேலி தாண்டித்தான் நாகர்கோவில் என்பதுதான் ஈர்ப்பு. எப்பொழுதும் அகால வேளைகளில் பாளை பேருந்து நிலையத்தைக் கடந்தால் கூட கவனமாய்ப் பார்ப்பேன். எங்கேயும் நீங்கள் தென்படுகிறீர்களா என்று.. ஒரு ஹீரோ ஹோண்டா கடக்கிறதா என்று.

அவர்கள் கொடுத்தது நாகர்கோவில் பற்றிய சித்திரமெனில் நீங்கள் கொடுத்தது வாழ்வின் சித்திரம். திங்கள் காலை நிஷாவிடம் சொல்லிவிட்டு மதுரை வரும் பொழுது எனது பேருந்து அம்பை போகாது என்று எவர் சொன்னது.

இந்தச் சோற்றுக்கலையும் வாழ்க்கையை இப்படித்தானே சமப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. வறண்டு கொண்டிருக்கும் வாழ்வை புதுப்பிப்பதற்கு என்னிடம் எத்தனையோ இருக்கின்றன.. ஒரு பொழுதும் வெறுமையில்லை. வீடு முழுக்க புத்தகங்களும், உலக சினிமாக்களும், சங்கீதமுமாய் இருப்பவனுக்கு எதற்கு வெறுமை.

என்ன…… கூடிய விரைவில் பெருமாள் கோவில் ஒன்பது மணி பூசை மணியும் மதுரையையும் விட்டு விடை பெறுவதுதான் வேதனை.
நாகர்கோவில் வீட்டு உரிமையாளர் புன்னகையில் இருக்கிறது வாழ்வின் நம்பிக்கை.

ஹரிஸ் ரெசிடென்சி என்ற உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்திருந்தார்கள் அத்தனை சுத்தம் அறை. காலை ரயிலைப் பிடிக்க 5 மணிக்கு அலாரம். ஜன்னல் திரையை விலக்கினால் இன்னும் விடிந்தும் விடியாமலும் தூரத்தே எங்குப் பார்த்தாலும் கருமையாய் இருமையாய் மலைகள்

”வாழ்வின் திரைச் சீலைகளும் இப்படித் திறக்காதா என்ன”   
ஜெயமோகனின் ’எதிர்முகம்’ படித்தேன். வலைமனை விவாதங்கள் நன்றாக இருக்கிறது. சென்னையில் ஜெயமோகனைப் பார்த்தேன். பார்த்தேன் எனில் பார்த்தேன். ‘காதல்’ திரைக்கதை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலாவோடு நெருக்கமாக இருந்தார்

நாகர்கோவில் தொடங்கி சென்னையில் முடிகிறது இக்கடிதம்.
பிறந்த தின வாழ்த்துகள் சார்.

உங்களுக்கான கடிதமும்’ புத்தகமும் நாகர்கோவில் நாகர்விற்கான பொருள்களுக்கு அடியில் கிடக்கிறது சார்.
மறுபடியும் எழுதுவேன் சார்.
,
அன்புடன்
சாம்ராஜ்
26.08.05
கிருஷ்ண ஜெயந்தி- மதியம்


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com