1.
அன்று
உனக்கு ஜலதோஷம்
பிடித்த போது
விறலி மஞ்சளைச் சுட்டு
சுவாசிக்க அறிவுறுத்தினேன்.
அதையே
எனக்கொருமுறை
பரிந்துரைத்து
மஞ்சளைத் தந்தாய்
அதைச் சுட்டு
கரியாக்கிவிடாமல்
பத்திரப்படுத்துகிறேன்..
வேறொரு மஞ்சளை
வாங்கி தீயில் சுட்டு
சுவாசித்தேன்.
நீ கொடுக்கும் எதையும்
தீக்கிரையாக்க மாட்டேன்..
அதன் அடையாளங்களை
இழந்து விடாமல்
பாதுகாக்கிறேன்..
அவை உன் அன்பின்
அடையாளமாயிருப்பதால்.
2
சமையல் எரிவாயு
தீர்ந்துவிட்ட நாளொன்றில்
உணவு வேளையில்
பசியாற ஏதுமின்றி
இரு ரொட்டித்துண்டுகளை
கையில் வைத்து
பேசிக் கொண்டிருந்தோம்..
கொஞ்சம் கொஞ்சமாய்
நிறைய ஆரம்பித்தது
மனசு
