டி.டி.எஸ் அரங்கத்தில்
பத்து ஆண்டுகளுக்கு
முன் திரையிட்ட பொழுது
நாயகன் மூன்றாம் போர்வீரனை
தேடிக்கொண்டிருக்கையில்
உன் அலைபேசி அழைத்தது
பிறந்த நாளுக்கு பொம்மை
வாங்க வேண்டுமென..
இன்று விட்ட இடத்திலிருந்து
மறுபடி பார்த்தேன் நாயகன்
மூன்றாம் போர்வீரனை
பழைய இடத்திலேயே
தேடிக்கொண்டிருந்தார்.
குழந்தை வளர்ந்திருக்கும்
பொம்மை கிழிந்திருக்கும்
இந்த இடைவெளியில் நமக்குள்
முடிந்திருந்தது ஒரு யுத்தம்
மரித்திருந்தது நம் காதல்.
- சாம்ராஜ்
