சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும், முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன.
இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.
பகுதி 4
“கிராமத்திலிருந்து வர்றோம். எங்கக் குடும்பத்துல காலேஜ் வரைக்கும் யாரும் படிச்சதில்ல. இவள எப்படியாவது படிக்க வைக்கணும்னு ஒரு ஆசை. இவளும் நல்லா படிப்பாங்க. தயவு செஞ்சி இவளைச் சேர்த்துக்கணும்” இன்னும் என்னென்னவோ சொல்லி கெஞ்சியிருக்க வேண்டும். அம்மாவின் கை அசைவிலும் முகத் தொனியிலும் அம்மா இப்படித்தான் பேசியிருப்பாள் என்று வெளியிலிருந்தபடியே தெரிந்து கொண்டாள். முன்பின் தெரியாதவர்களிடம் அம்மா போய்க் கெஞ்சிக் கொண்டிருந்தது, சாந்திக்கு வருத்தமாக இருந்தது. முடிவில் அவர்கள் சேர்த்துக்கொள்வதாக அவர்கள் சொன்னவுடன் அம்மா அவளை அழைத்துபோக வெளியே வந்தாள்.
“என்னம்மா ஆச்சு?”
“உன்னை உள்ள வரச்சொல்றாங்க”
உள்ளே போய் குண்டு பேராசிரியை முன் நின்றாள். “இங்க பாரும்மா சயின்ஸ் மேஜர் எதுவும் கிடைக்காது. தமிழ்லயும் ஹிஸ்டரியிலயும் ஒரு சீட் இருக்கு நீ எதுல சேரந்துக்கப்போற?” என்றார்.
யோசிப்பதற்கு சாந்திக்கு ஓரிரு வினாடிகள் தான் கிடைத்தன.
“தமிழ்ல சேர்ந்துக்கிறேன்” என்றதும் பாடப்பிரிவை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு பணம் கட்டச் சொன்னார்கள்.
பணம் கட்டிவிட்டு சந்தோஷமாக வெளியே வந்துப்பேருந்துக்காக காத்திருந்த போது அம்மா கேட்டாள்.
“என்னமோ ஹிஸ்ட்ரினு சொன்னாங்களே அதை எடுத்துக்க வேண்டியதுதானே. தமிழப் படிச்சு என்னாகப்போது?”
ஆரம்பப்பள்ளியில் நான்காம் வகுப்பைக்கூட தாண்டாத அம்மாவுக்கு தமிழ் படித்தால் பிரயோஜனமில்லையென்ற எண்ணம் எப்படி வந்தது என்று பேருந்தில் வீடு திரும்புகையில் யோசித்தபடியே வந்தாள்.
முதல் முறை வந்த, வயதானப் பணியாள் இல்லாத வேறு ஒரு அலுவலகப் பணியாள் மரக்கதவுகளைத் திறந்துகொண்டு
“இங்க சாந்திங்கிறது யாரும்மா?’ என்று எட்டிப்பார்த்தார், அப்பொழுது பிற்பகல் ஒன்றரை தான் ஆகியிருந்தது. அவள் அவசரமாக எழுந்து நின்றதும் “நீங்கதான் சாந்தியா?” பிரின்ஸிபால் உள்ளே கூப்பிடுறாங்க” என்றார்.
அந்த அறையில் முதல்வரைத் தவிர வேறு யாரோ இருவர் உட்கார்ந்திருந்தார்கள். மூன்று பேருக்கும் சேர்த்துப் பொதுவாய், சாந்தி வணக்கம் தெரிவித்ததும் ஒரு நாற்காலியைக் காட்டி உட்காரும்படி சொன்னார்கள். நன்றி சொல்லிவிட்டு அவள் உட்கார்ந்ததும்.
“இவங்கதான் கோ-ஆர்டினேட்டா மிஸஸ் விஜயக்குமார். அவங்க வைஸ் பிரின்ஸிபால் மிஸஸ் சூரியன்” என்று முதல்வர், அவர்களை அறிமுகப்படுத்தியபோது, மீண்டும் ஒருமுறை தனித்தனியாக வணக்கம் தெரிவித்தாள்.
“தெரிஞ்சப் பையனுக்குப் பச்சையப்பா காலேஜ்ல சீட் வாங்கித்தரச் சொல்லி நாச்சிமுத்து சார்கிட்ட கேட்டிருந்தேன் வாங்கித் தந்துட்டாரு. அப்புறம் நாம ஆரம்பிக்கப்போற செல்ப்பைனான்ஸ் கோர்ஸ்க்கு தமிழ் லெக்சரர் போஸ்ட்டுக்கு ஒரு ஆள் வேணும்னு அவர்கிட்ட கேட்டிருந்தேன். தன்னோட எம் ஃபில் ஸ்டூடண்டையே அனுப்பியிருக்காங்க அது இவங்கதான்.” சாந்தியை அறிமுகப்படுத்திவிட்டு மேஜையிலிருந்த கடிதத்தை அவர்களும் படித்துப் பார்ப்பதற்காகக் கொடுத்தார்.
சான்றிதழ்களைத் தரச்சொல்லி மூன்றுபேரும் பார்த்தார்கள். விரிவுரையாளர் தகுதிக்கான தேர்வில் தேர்வான வருடம், இளங்கலை முதுகலை படித்த கல்லூரிகள் என்று எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார்கள். பாடம் தொடர்பான கேள்விகள் எதுவுமில்லை. சாந்திக்கே தெரியாமல் ஒரு நேர்முகத்தேர்வு அவளுக்கு நடந்து முடிந்திருந்தது.
”பயோடேட்டாவும் அப்ளிகேசனும் கொடுத்துட்டுப் போங்க ஈவினிங்காலேஜ் கோர்ஸ் ஆரம்பிக்க, யுனிவர்சிட்டியில இருந்து இன்னும் பெரிமிசன் கிடைக்கல. ஒரு வாரத்துல கிடைச்சுடும். வந்ததும் தான் உங்களை அப்பாயிண்ட்மெண்ட் பண்ண முடியும். எதுக்கும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என்னை வந்து பாருங்க” முதல்வர் சொன்னதும் மூவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சாந்தி வெளியே வந்தாள்.
எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையானது அவளுடைய பசியையும், அதனால் வந்த சோர்வையும் மூட்டைக்கட்டி வைத்திருந்தது. கல்லூரி வளாகத்தைத் தாண்டி வந்ததும், நாச்சிமுத்து சாருக்கு தொலைபேசியில் அழைத்து நடந்த விசயத்தைச் சொன்னாள்.
நாச்சிமுத்து சார் “கிடைச்சுடும் வாழ்த்துக்கள், எதுக்கும் அடிக்கடி போன் பண்ணி விவரம் என்னன்னு கேட்டுக்கோ” என்றார்.
நடுவில் இரண்டு மூன்று வெள்ளிக் கிழமைகள் வந்து போயின. ஒருமுறை அவள் தங்கியிருக்கும் விடுதியின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்ட முதல்வர் முதலில் சொன்ன அதே பதிலைத்தான்
“யுனிவர்சிட்டியிலிருந்து பெர்மிசன் கிடைக்கல” என்று திரும்பும் சொன்னார்.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒரு புதன்கிழமை நாளில் கல்லூரியிலிருந்து அவர்கள் வரச் சொல்லாமலேயே, எதேச்சையாக போய் பார்த்துவிட்டு வரலாம் என்று சாந்தி போயிருந்தாள். முதல்வர் அறைக்கு முன்னால், பெற்றோர்களுடன் பேசியபடி மாணவிகள் நின்றிருந்த இடம் வெறிச்சோடியது. சேர்க்கையெல்லாம் முடிந்து வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
முதல்வர் பேச்சைத் தொடங்கும்போதே “எல்லா சர்டிபிகேட்ஸயும் கொண்டு வந்திருக்கீங்களா? யுனிவர்சிட்டியிலிருந்து பெர்மிசன் கிடைச்சு ரெண்டுநாள் ஆச்சு. உங்களுக்கு போன்பண்ணலாம்னு நினைச்சிருந்தேன் நீங்களே வந்திட்டீங்க” என்றார்.

