பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 23, 2010

துளியாக ஒரு தீவு - அவனிஅரவிந்தன்

மணல் திட்டுகளில் முட்டி நின்றாலும்
கரையேறுவது நிச்சயமில்லை...
வன்மம் கொப்பளிக்கும் வங்கக் கடலில்
மறைந்துலவும் மச்சராசிகள் ஒவ்வொன்றுக்கும்
மடிந்தவர்களின் மலங்களும்
அழுகிப் போன உறுப்புகளுமே
உணவாக இருக்கலாம்...


சூழ் சுற்றிய திட்டுகளுக்கப்பால்
சூரியோதயம் அரங்கேறிக் கொண்டிருந்தது
விடியல் நித்தம் நிகழும் போதிலும்
அது எமக்கானதாக இல்லையென்ற
அறிவிப்பொன்று கூடவே வருகிறது அதிர்வில்லாமல்...
ஆழியின் அற்புத அலைகள்
வெளிச்சத்தை விழுங்கி சிதறிக் கொண்டிருந்தன
வீசியடித்த ரத்தக்கதிர்களை
ஆளுக்குக் கொஞ்சம் கொத்திப் பறந்தன
கண்டம் தேடும் பறவைகள்

எங்கள் பச்சை வயல்களையொட்டி
எருக்கஞ்செடி மறைவில் இறங்கி
ஆற்றில் கால் அலம்பும் போது
ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்
இதே சூரியனை சற்றும் கூர்மையாக...
அன்று ஆறு வழிந்தோடிக் கொண்டிருந்தது
ஆனாலும் ஒரேயிடத்தில் அலைந்த பிம்பத்தில்
எனது கைகள் முழுதாயிருந்தன
இன்றும் கூட என் உதிரம் அங்கேயே மிதக்கக் கூடும்
இன்னும் அடர்சிவப்பு வர்ணத்தில்....

நழுவி ஓடிக் கொண்டிருப்பது
நதிகள் மட்டுமல்ல
பிறப்புருப்பு பிய்த்து எறியப்பட்ட அகதியைப் போல
கதறியோடிக் கொண்டிருக்கிறது கடல்,
துளித் தீவிற்கும்
தீபகற்பத்திற்குமாய்..

- அவனி அரவிந்தன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com