பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 22, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 5 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

அவசர நிலையைச் சமாளிக்க தொழிற்சங்கத்தினர் படாதபாடு பட்டார்கள். முன்பெல்லாம் துண்டறிக்கைகள் சிவப்பு நிறத் துண்டறிக்கைகளை வாரி வழங்குவார்கள். அவசரநிலைக் காலமான இப்போதோ, துண்டுச் சீட்டுகளில் குறிப்பாக எழுதி உள்ளங்கையில் மறைத்து வைத்து ஏதோ போதைப் பொருள் கடத்துவது போல், கை மாற்றி விடுகிறார்கள். 

‘மாலை 4 மணி வடமலை வீடு’
என்று அந்தத் துண்டுச் சீட்டில் இருக்கும். வடமலை என்றால், திருப்பதி என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும். தோழர் திருப்பதி வீடு சங்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அல்லது யாரெல்லாம் இரகசிய கூட்டத்துக்கு வரவேண்டுமோ அவர்களுக்கு மட்டும்தான் தோழர் திருப்பதி வீடு தெரிவிக்கப்பட்டிருக்கும். அதேபோல், மாலை 4 மணி என்பது, 7 மணியைத்தான் குறிக்கும். துண்டுச் சீட்டுகள் வழங்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட இடத்தில் 4 மணிக்கு தோழர்கள் இரகசியமாக கண்காணிப்பார்கள். ஒருவேளை போலீசுக்குத் தகவல் தெரிந்திருந்தால், 4 மணிக்கு அந்த இடத்திற்கு வருவார்கள். அதைக்கொண்டு கூட்டத்தைத் தள்ளி வைக்கலாம் அல்லது வேறு இடத்தில் நடத்தலாம் என்பது ஏற்பாடு. ஒவ்வொரு கூட்டம் நடத்தவும் இந்த அளவுக்குத் திட்டமிட வேண்டியிருந்தது.

தோழர்கள் டேவிட், வெங்கட்ராமன் ஆகியோர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு இரகசிய வேலைகள் செய்துகொண்டிருந்தார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். அவர்கள் ஒரு ஊரில் தங்கமாட்டார்கள் என்றும் அதிகமாக யாருடனும் பேசக் கூட மாட்டார்கள் என்றும் கிறிஸ்டி அக்கா சொன்னதுண்டு. திருமகளும் இதைப் பற்றி கமுக்கமான குரலில் பேசுவாள். அவள் சாதாரண சேதிகளைக்கூட பெரிய இரகசியம் மாதிரிப் பேசுவாள்.

கம்பெனியில் பனியன்களை அடுக்கும்போது, திருமகள் சன்னமான குரலில் ஏதோ கிசுகிசுப்பாள்.’என்ன..? புரியல...’ என்று கேட்டால், சட்டென்று சத்தமாக, இன்னிக்கு நம்ம கேண்டீன் வடையில உப்பை அள்ளிக் கொட்டிட்டானுங்களாம்...  எமர்ஜன்சி நேரம்ல...   யூனியன்லேருந்து யாரும் கேக்க மாட்டாங்கங்கற திமிரு...’ என்பாள். பிறகு, நாக்கைக் கடித்துக் கொள்வாள்.

‘ஐயையோ...சத்தமாப் பேசிட்டேனே’ எனப் பதறுவாள். பொதுவாக, எங்களுக்கு இரகசியமாகப் பேசும் அளவுக்கு விஷயம் தெரியாது. ஆனாலும், எங்களுக்கு இரகசியம் காப்பதன் மீது இருந்த திகில் ஆர்வத்தால், சாதாரண விஷயங்கள் கூட இரகசியங்களாகத் தெரிந்தன.

இந்தக் காலகட்டத்தில் எனக்குப் பல புதியவர்கள் அறிமுகமானார்கள். மன்னார்குடி பன்னீர்செல்வம் அண்ணன் அவர்களில் ஒருவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டம் நடந்தபோது, தோழர்கள் பொதியவெற்பன், அறிவுறுவோன், மன்னர்மன்னன் ஆகியோர் கலந்துகொண்டனர். மன்னர்மன்னன் மட்டும் ஜெயபாலிடம் என்னைப் பற்றி அதிகமாக விசாரித்துக் கொண்டிருந்தார். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நானும் திருமகளும் ஜெயபாலிடம் இதைப் பற்றிக் கேட்டோம். அவர் திருதிருவென விழித்தபடி, ‘ம்...ஒண்ணுமில்ல’ என்றுவிட்டு அவசரமாக சைக்கிளை உருட்டியபடி கிளம்பினார். எனக்குக் குழப்பமாக இருந்தது. மன்னர் மன்னன், கம்பீரமான, ஒருவிதத்தில் அச்சுறுத்தும் விதமான தோற்றம் கொண்டவர். அல்லது எனக்கு அப்போது அவர் தோற்றம் அச்சுறுத்தும் விதமாகத் தெரிந்தது என்றும் சொல்லலாம். 

திருமகளும் நானும் வீடு திரும்பும் வழியில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தோம். திருமகள், ‘எனக்கென்னவோ...போலீஸ்ல உன்னைப் பத்தி கேஸ் பதிவான மாதிரித் தெரியுது. அதைத்தான் ரகசியமா பேசிக்கறாங்கன்னு நெனைக்கிறேன்’என்றாள்.

‘மன்னர்மன்னனுக்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டபோது, ‘அவர் போலீஸ் மாதிரி இருக்காருல்ல. போலீஸ்காரங்களோட பழகி ரகசியம் தெரிஞ்சுக்கிற தோழரா இருப்பாருடீ’ என்றாள். எனக்கும் அது சரிதான் எனப்பட்டது. திருமகளின் யூகத்தை நினைத்து எனக்குக் கவலை ஏற்பட்டது.

இந்தக் கவலையை நான் யாரிடமும் வெளிப்படையாகப் பேசவில்லை. நான் பயப்படுவதாக அவர்கள் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலைதான் காரணம். இந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ, மன்னார்குடி பன்னீர் அண்ணன், எனக்கு மக்சீம் கார்க்கி எழுதிய தாய் நாவலைக் கொடுத்தார். அதைப் படித்தேன். ஒரே மூச்சில் படித்தேன். உடம்புக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது போன்ற உணர்வை அந்த நாவல் கொடுத்தது. ஒரு பெண்ணால், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியும், அரசாங்கத்துக்கே சவாலாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை அது தந்தது. தாய் நாவலின் நாயகி, முதியவர். நானோ இளம் பெண்தான். ஆகவே, என்னால் இன்னும் சிறப்பாகவும் பயப்படாமலும் கட்சி வேலை செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றியது.

அரசாங்கத்துக்குச் சவாலாக வாழ்வதைக் காட்டிலும் குடும்பத்தினரைச் சமாளித்து வாழ்வதுதான் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்குச் சவாலாக அமைகின்றது. எனக்கு, தங்குவதற்கே நிலையான இடம் இல்லை. தினமும் பொழுது சாய்ந்தால், இந்த இரவை எப்படிக் கழிப்பது என்ற கவலை வந்துவிடும். வீட்டில் எனக்குத் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருந்தன. 

ஒரு நாள் ஜெயபாலிடம் இதைப் பற்றிப் புலம்பினேன். அவர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, ’உனக்குக் கல்யாணம் செய்ய ஏற்பாடு நடக்குது’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கே தெரியாமல், என்னிடம் கேட்காமல் யார் இந்த ஏற்பாட்டைச் செய்வது எனக் கேட்டேன். 

’கட்சியிலதான் ஏற்பாடு செய்யறாங்க’ என்றார் ஜெயபால்.

‘கட்சியில கல்யாண ஏற்பாடு கூட செய்வாங்களா...?’

’வேற வழி...எல்லாத்தையும் செஞ்சாத்தான் தோழர்களைப் பாத்துக்க முடியும்’

’சரி...எனக்குக் கல்யாணம் வேணும்னு நான் எப்ப சொன்னேன்...?’

’நீ சொல்ல வேணாம் லெட்சுமி...எங்களுக்கே தெரியும் இல்லியா...? உனக்குன்னு ஒரு குடும்பம் இருந்தாத்தான்...உன் பிரச்சினைகள் சரியாகும்’

எனக்கு இந்த ஏற்பாட்டில் விருப்பமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. கல்யாணம் என்றால், பெற்றோர் பார்த்து, சொந்தங்கள் கூடி பலதரப்பட்ட பொருத்தங்கள் பார்த்து, பணம் நகைகள் பேசி நடப்பது. கட்சியே தலைமறைவாக இருக்கிறது. ஒரு தோழரும் வெளிப்படையாக நடமாட முடியவில்லை. இந்த நிலையில் கல்யாணத்தை கட்சி ஏற்பாடு செய்கிறதாம். அதுவும் எனக்குக் கல்யாண ஏற்பாடாம். 

என் வீட்டிலிருந்து மீண்டும் அருள் அண்ணன் வீட்டுக்குப் போனேன். இதற்குள் அருள் அண்ணனுக்குக் கல்யாணமாகிவிட்டிருந்தது. அண்ணியுடன் தங்கினேன். அங்கு நிலைமை முன்புபோல் சீராக இல்லை. நான் கட்சி வேலைகளில் ஈடுபடுவதை அருள் அண்ணன் விரும்பவில்லை. என் அம்மாவின் இடத்திலிருந்து அண்ணன் எனக்கு அறிவுரைகள் சொன்னார். நான் கேட்கவில்லை. கட்சிதான் என் குடும்பம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. உறவுகளை எனக்கு அறிமுகப்படுத்தியது கட்சிதான் அல்லவா!

இப்போதும் கட்சித் தோழர்களைத் தவிர்த்த உறவு என்று எதுவும் பெரிதாக இல்லையே. தோழர்கள்தானே உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் என அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தருகிறார்கள். இந்த எண்ணம் இன்று உள்ள அளவுக்கு இல்லை என்றாலும், கட்சியை விட்டு குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர முடியாது என்ற அளவுக்கு அன்று இருந்தது.

அருள் அண்ணன் என்னை கிறித்துவ கன்னியாஸ்திரி ஒருவரிடம் அழைத்துச் சென்று, இலவச தங்குமிடத்துக்கு உதவி கேட்டார். கன்னியாஸ்திரியோ, மதம் மாறினால் உதவி செய்யலாம் என்றார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. நானோ ஒரு கம்யூனிஸ்ட்! அதுவும் தாய் நாவல் படித்த கம்யூனிஸ்ட்! இரகசிய கூட்டங்களுக்கெல்லாம் போய் வரும் தோழர் நான்! என்னைப் போய் மதம் மாறச் சொன்னால்...!

மீண்டும் வல்லத்துக்கே திரும்பி, எனக்கே ஒதுக்கப்பட்ட மாட்டுக் கொட்டகைக்குள் அடையத் தொடங்கினேன். 

ஜெயபால், தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே காய்கறிக் கடை தொடங்கினார். ஒரு நாள், நானும் சத்தியவதி டீச்சரும் மருத்துவக் கல்லூரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ஜெயபால் சைக்கிளில் அந்தப் பக்கமாக வந்தார். நான் அவரைப் பார்த்துக் கிண்டலாக,

‘எனக்குக் கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி நடக்குது...?’
எனக் கேட்டேன். அவர் சைக்கிளிலிருந்து இறங்கி சோகமாகச் சொன்னார்.

‘உனக்குன்னு ஒரு தோழரைப் பார்த்து வைச்சோம்...ப்ச்...அவரு வெடிகுண்டு வழக்கில் சிக்கி உள்ள போயிட்டாரு...’

நானும் சத்தியவதி டீச்சரும் சிரித்துவிட்டோம். ஜெயபால் உண்மையான வருத்தத்துடன்,

’சிரிக்காத லட்சுமி...நல்ல தோழர் அவரு...பரவாயில்ல...வேற மாப்பிளைக்கும் பேசிக்கிட்டிருக்கோம்...’ என்றார்.
            
 (தொடரும்)

லெட்சுமி அம்மா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com