பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 24, 2010

குழந்தைகளின் ஜன்னல் - மாரிசெல்வராஜ்


நேற்று இரவு தாஸ்தொவெஸ்கியின் சூதாடியை படித்து முடித்து பலீனாவை திட்டவா அவள் மீது கோபம் கொள்ளவா அவள் மீது பரிதாபப்படவா என்று தெரியாமல் வாழ்வின் மீதான ஒரு பெரும் பயம் என்னை சுற்றிகொண்ட பின் அதையும் மீறி தூக்கம் என்னை தொற்றிக்கொள்ள இரவு 3 மணி ஆகியது என்றைக்கும் போல அந்த பள்ளி குழந்தைகளின் சத்தம் என்னை எழுப்பிவிடும் என்ற நம்பிக்கையில் தூங்கிப்போனேன்.

எங்கள் வீட்டிற்கு வலது பக்கம் இருக்கும் நாரயானா பாபு வித்யாலயா என்ற ஒரு தனியார் மழைலையர் பள்ளி மற்றும் தொடக்கபள்ளி இருக்கிறது. அந்த குழந்தைகளின் காலைய உற்சாகமான சத்தத்தில் எரிச்சலோடு தினமும் எழுந்திரிக்கும் சோம்பேறி தான் நான். ஆனால் எவ்வளவு நேரம் கழித்து எழுந்தாலும் என்ன வேலைகள் இருந்தாலும் எங்கள் சமயலறையில் இருக்கும் ஜன்னலில் நான் 30 நிமிடங்கள் தினமும் செலவழிப்பதை மறப்பதில்லை. அந்த ஜன்னலின் வழியே பார்த்தால் அந்த பள்ளி தெரியும் அதன் மைதானம் தெரியும். அந்த குழந்தைகள் தெரிவார்கள். சிரிப்பில் முறைப்பில் நடையில் அவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளில் ஒரு புது உலகை  என் முன் கட்டியெழுப்பி நேற்றைய என் தனிமையின் தவறுகளையெல்லாம் பொசுக்குவார்கள்.

இன்று (23.07.2010) அந்த ஜன்னலில் ஒரு பறவையை போல காத்திருந்தேன். அவர்கள் முதல் வகுப்பு படிக்கிற குழந்தைகளாக இருக்கவேண்டும் பச்சை உடையில் சிரித்து கொண்டு சிகப்பு பூக்கள் எங்கும் பரவியிருந்த அந்த மைதானத்திற்கு ஓடி வந்தார்கள். அவர்களின் உற்சாகத்திலே  தெரிந்தது அது விளையாட்டு பாடவேலையாக இருக்கவேண்டும் என்று. ஒரு 30 வயது மதிக்கதக்க ஆசிரியர் குழந்தைகள் முன்னால் நின்று கொண்டு கை கால்களை நீட்டி மடக்க சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார். குழந்தைகள் ஆசிரியரை கவனிப்பதை விட தன் முன்னால் பின்னால் நின்ற தன் நண்பர்களான சக குழந்தைகளை கவனித்து அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என பார்த்து சிரித்து சந்தோசமாய் செய்து கொண்டிருந்தார்கள் ஆசிரியர் அவர் பணியை செய்து கொண்டிருந்தார்.

இப்போது என் கையில் இருந்த தேநீரில் சந்தோசமும் உற்சாகமும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எல்லா குழந்தைகளின் முகத்தையும் அவர்களுக்கு தெரியாமல் மேலிருந்து கடவுள் போல பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. எவ்வளவு பெரிய சந்தோசம் என்பதை உங்களால் உணர முடியும் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் முதல் வரிசையில் நான்காவது ஆளாக நின்ற ஒரு பையன் தன் முன்னாடி நின்ற பையனின் முதுகை சொரிந்துகொண்டு சிரித்தான். முன்னாடி நின்ற அந்த சுருள் முடி தலை கொண்ட அந்த பையனும் அதற்கு சிரித்தான். ஆனால் அதை அந்த ஆசிரியர் பார்த்துவிட்டார் போல முதலில் பின்னால் இருந்து முதுகை சொரிந்த அந்த பையனை அவர் கூப்பிட்டார். அவன் தயங்கி தயங்கி வந்தான்.

பளார் என்று கண்ணத்தில் ஒரு அறை. அவன் கொஞ்சம் தள்ளி மண்ணில் போய் விழுந்தான். சில குழந்தைகள் சிரித்தது சில குழந்தைகள் மிரண்டு நின்றது. மறுபடி அவன் தலைமுடியை பிடித்து அவனை தூக்கி அவன் வயிற்றில் கிள்ளி அவனை அனுப்பிவைத்தார். எனக்கு இப்போது இதயம் வேகமாக அடிக்க தொடங்கியிருந்தது. என் ஜன்னல் கம்பிகள் அந்த குழந்தைகளின் சிறை கம்பிகளாய் உருமாறியிருந்தன. பதட்டமாய் ஓடி அப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்த என் இயக்குநரை அழைத்துவந்து காண்பித்தேன்.

இப்போது இரண்டாவது பையன் ஆனால் இவனுக்கு கன்னத்தில் அறை இல்லை குனியவைத்து முதுகில் கொடுக்கப்பட்டது. அவன் நிமிர்ந்து முதுகை தடவும்போது முடியை பிடித்து ஆட்டினார். பின் வேகமாய் தள்ளிவிட்டார் அவன் அவனுக்குரிய வரிசையில் போய் ஒதுங்கினான். என்னைவிட என் இயக்குனரை அதிகமாய் பாதித்துவிட்டது உண்மை.

“டேய் போடா..அந்த ஸ்கூல் பிரின்ஸ்பலை பார்த்து பேசிட்டு வா அவனை அந்த முட்டாளை எச்சரித்து தலையில் இரண்டு கொட்டு வைத்துவிட்டு வா உன்னால் முடிந்தால் அவனுடய அந்த பெரிய மூக்கை கடித்து கையில் எடுத்து வந்து விடு” என்றார். நான் ஏதோ ஒரு வித பதட்டத்தோடு சொல்கிறார் என்றுதான் நினைத்தேன் ஆனால் அவர் என்னை கண்டிப்பாய் கிளம்பி போக சொன்னார். உடனே கிளம்ப சொன்னார்.

காலை கடன் எதுவும் செய்யாத நிலையில் சட்டையை அணிந்து கொண்டு இறங்கி பள்ளியை நோக்கிப் போனேன். கேட் மூடியிருந்தது ஜன்னலின் வழியே என் இயக்குனர் பார்த்து கொண்டிருந்தார். கேட்டை நான் வேகமாய் ஆட்டினேன் அந்த கேட்டிற்கு அடுத்தாற்போல் தான் அந்த குழந்தைகளும் அந்த ஆசிரியரும் இருந்தார்கள். ஒரு குழந்தை வேகமாய் வந்து கேட்டை திறந்தது. நான் அந்த குழந்தையை பார்த்து சிரித்தேன் அது என்னை பார்த்து சிரிக்கவில்லை.


“யார் நீங்க என்ன வேணும் (யாரை பார்க்கனும் என்று அவர் கேட்கவில்லை)

“பிரின்ஸ்பலை பாக்கனும் இருக்காங்களா”

“எதுக்கு யார் நீங்க” (என் உடையை பார்த்து கொஞ்சம் அதிகார மிரட்டல் தோரணையில் அவர் கேட்பதாய் அது இருந்தது)

”உங்கள பத்தி கம்ப்ளெய்ண்ட் பண்ணனும்”

“என்னைபத்தியா யார் நீங்க” (சத்தமாய்)

“குழந்தைகளை இப்படி மூர்க்கமா அடிக்க்கிறீங்களே அதுக்கு”

“யார் அடிச்சா நீங்க எப்ப பாத்தீங்க”

“இப்பதான் அதோ அந்த ஜன்னல் வழியா பாத்தே.ன் அந்த பையனை கண்ணத்துல அடிச்சு கீழ தள்ளினதை என் கண்ணால பார்த்துட்டு தான் ஓடி வர்றேன்”

“அவன் தப்பு செஞ்சான் அதனால அடிச்சேன். உங்களுக்கென்ன நான் தான் அவனை திருத்தனும் நல்ல பையனா மாத்தனும் “

“அதுக்காக இப்படித்தான் காட்டுதனமா 5 வயசு பையனை அடிப்பீங்களா”

“அவனை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் ஒரு அரை மணி நேரம் இங்க உட்காந்து பாருங்க தெரியும் அவன் என்ன பண்ணினான்னு அடுத்தவன் முதுகை சொரண்டுறது தன் மூக்கை தானே குடையிறது அவன் கையும் காலும் சும்மாவே இருக்காது அது அதட்டினாலும் கேட்காது அடிச்சா தான் கேட்கும்”

“ஓ முதுகை சொறிஞ்சு ஒரு குழந்தை விளையாண்டதுக்கு இப்படிதான் தண்டனை கொடுப்பீங்களா சரி நான் நிர்வாகத்துகிட்ட பேசிக்கிறேன்” (இப்போது நான் கொஞ்சம் சத்தமாகவே சொன்னதால் அவருக்கு கொஞ்சம் மூக்கு வேர்த்துவிட்டது. குழந்தைகள் எங்கள் உரையாடலை ஆர்வமுடன் கவனிப்பது வேறு அவருக்கு என்னவோ போலிருந்தது.)

“சார் யாரவது வேணும்னு குழந்தைகளை அடிப்பாங்களா அதுவும் நான் ஏன் சார் அடிக்க போறேன் BA படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டு இருக்கேன் அதுவரைக்கும் 2000 ரூபாய் சம்பளத்துல வேலை பார்த்துகிட்டு இருக்கேன் நான் ஏன் சார் அவங்கள அடிக்கனும்”  (இப்போது அவரின் பேச்சும் உடம்பும் கொஞ்சம் தடுமாற தொடங்கியிருந்தது கண் கூட கலங்க தொடங்கிவிட்டது)

“சார் நீங்களே சொல்லுங்க அடிக்காம யார் சார் திருந்துவா இப்ப இரண்டு பிள்ளைங்க இருக்காங்க அவங்களில் ஒருத்தனை அடிச்சும் இன்னொருத்தனை அடிக்காமலும் வளர்த்து பாருங்க அடிச்சு வளர்க்கப்பட்டவன் நல்ல ஒழுக்கமான நேர்மையான பையனா வந்து நிற்பான். அடிக்காம வளர்க்கப்பட்டவன் வெறும் மனுசனா இருப்பான் அவன்கிட்ட நாட்டு பற்றோ தேச பற்றோ எதுவும் இருக்காது (உண்மையில் அவர் இப்படி தான் சொன்னார்) எதுக்கென்று தெரியவில்லை எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிகொண்டு

“குழந்தைகளை அடிக்கும் போது உங்க மனசுக்கு ஒன்னும் செய்யாதா”

“ஒரு மாதிரிதான் இருக்கும் BUT அவங்க வாழ்க்கை தானே நமக்கு முக்கியம் அதை நாம தான நம்ம நாட்டுக்கு ஏத்த மாதிரி அடிச்சு திருத்தனும் இனிமேல் அப்படி நடக்காம பாத்துக்கிறேன் சார் மன்னிச்சுருங்க. இதுக்கு மேலயும் நீங்க கம்ளெய்ண்ட் பண்ணனுமனா பண்ணிக்கோங்க. என்ன 2000 ரூபாய் சம்பளத்துக்கு வந்த தினக்கூலி தானேன்னு அனுப்புவாங்க”

அந்த சிறுவன் இப்போது மூக்கை குடைந்தவாறு எங்களை பார்த்து கொண்டிருந்தான். ஆசிரியர் கண்கள் என்னை பார்த்து கெஞ்சுவது போல இருந்தது. எல்லா குழந்தைகளையும் அந்த பள்ளியையும் ஒரு முறை பார்த்துவிட்டு நான் அவரிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறினேன்.

இப்போது நானும் இயக்குனரும் அந்த ஜன்னலின் வழியே வந்து மறுபடியும் பார்த்தோம் அந்த ஆசிரியர் ஒரு பெருத்த மரத்திற்கு பின்னால் எங்களுக்கு தெரியாத அளவில் நின்று சொல்லிக்கொடுக்க தொடங்கியிருந்தார்.

குழந்தைகள் இப்போது எங்கள் ஜன்னலை கவனிக்க தொடங்கியிருந்தார்கள்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com