சருகுகளை உதறித் தள்ளும்சில விருட்சங்களின் கீழமர்ந்து
ஆழஞ்சென்ற அதன்
அடிவேர்களை கவனத்துடன்
கீறி பிய்த்துக் கொண்டிருப்பார்கள்
கூரைகள் சிதைந்திருக்கும்
அரவமற்ற பேருந்து நிறுத்தங்களில்
யாருக்காகவும் இல்லாமல்
எதையோ யோசித்தபடி
காத்துக் கொண்டிருப்பார்கள்
விட்டில்கள் வட்டமிடும்
ஒற்றை மின்கம்பங்களை
என்றேனும் கிளைவிட்டுக்
காய்க்குமாவெனஅண்ணாந்து
வெறித்துக் கொண்டிருப்பார்கள்
ஊருக்கு விலக்கான
புதர் மண்டிய இடுகாடுகளில்
புழுக்கள் மொய்த்த
சடலங்களைத் தோண்டி
மண்டையோட்டில் மந்திரங்களைத்
தேடிக் கொண்டிருப்பார்கள்
மலைப் பிரதேசங்களின்
மர்மப் பாறைகளில்
விரல்களை ஒவ்வொன்றாக
மடித்து கூடு திரும்பும்
பறவைகளை கூட்டிக் கூட்டி
எண்ணிக் கொண்டிருப்பார்கள்
நெடுந்தூர பயணத்தின் பாதி வழியில்,
அவசரமாக அவளை நெருங்கிய பேருந்தில்,
இரவை விரட்டி வாகனத்தில் விரைகையில்,
சூடம் கொளுத்திய சுடலைமாடன் கோவிலில்,
கோடையைக் கழித்த குளிர்பனிச் சிகரங்களில்,
எவரேனும் எதேச்சையாக
அவர்களை கவனிக்க நேரிட்டால்
தயவு செய்து பேசிவிடாதீர்கள் நமக்கு அந்த மொழி விளங்காது...!
- அவனி அரவிந்தன்
