வடபழனி சிக்னலில் வைத்து
சந்தித்த பாலியல் தொழிலாளி
“நாந்தான் பார்க்க நல்லாயிருக்க மாட்டேன்
போனிலிலேயே சொன்னேனே”
என அலுத்துக் கொண்டாள்
வைத்து பிச்சையெடுப்பவள்
சரியான நேரத்தில் சோறூட்டுகிறாள்
தன்னுடையதல்லாத குழந்தைக்கு
குடித்துவிட்டு கண்கள் சிவக்க
புரோட்டா கடையில் நிதானமில்லாமல்
சாப்பிடும் லோடுமேன்
ஞாபகமாய் வாங்கிக் கொள்கிறான்
தான் வீட்டிற்கான பார்சலை
எரிந்து கிடக்கும்
இளம் பெண்ணிண்
உடல் மீது கவனமாய்
வாழை இலை கொண்டு மூடுகிறான்
மார்ச்சுவரி காவலாளி
”கருணையற்றவர்கள்”
என நம்பப்படுகிறவர்களின்
உலகத்திலும் கசியவே
செய்கிறது கருணை.
- சாம்ராஜ்
