அப்பாத்துரை மாமாவை உங்களுக்கு தெரியுமா, அவரை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? எனக்காய் கொஞ்சம் சிரமப்படாமல் நினைவுக்கு கொண்டுவந்து யோசிச்சு பாருங்க கண்டிப்பா நீங்க அவரை பார்த்திருப்பீங்க……..அவர் இல்லாத கிராமமே இருக்கமுடியாது. இப்பக்கூட எதாவது கோவில் திண்ணைகளிலோ டீ கடை பெஞ்சுகளிலோ, சட்னிக்கு தேங்காய் வாங்க வந்த மளிகை கடைக்கு பக்கத்திலோ அல்லது உங்கள் ஊர் விவசாய சங்கங்களுக்கு முன்போ அமர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி தீவிரமாக அவர் விவாதித்து கொண்டிருக்கக்கூடும்.
ஒருவேளை இவர்களுக்கு பெயர்கள் மாறியிருக்ககூடும் ஆனால் அந்த முட்டுகை வரை மடித்துவிடப்பட்ட முழு கை சட்டையும் ஏதோ கட்சியின் கரை போட்ட வேஷ்டியோ அல்லது எதாவது இயக்கத்தின் கரை போட்ட வேஷ்டியும், நல்ல வகுடு எடுத்து சீவப்பட்ட கர்லிங் முடியும், கர்சீப் போன்ற நீளமுள்ள தோளில் போடக்கூடிய டவல் துண்டும், கொஞ்சம் லூசாக கையில் தொங்கும் செயின் சில்வர் வாட்சும், சட்டை பையில் சொருகப்பட்ட பழைய இங் பென்னும், பென்சிலால் வரையபட்டது போல இருக்கும் சின்ன கம்பி போன்ற மீசையும் வெள்ளை கலர் கத்திரி சிகரெட்டும் இவர்களுக்கு பொதுவானதாக இருக்கும்.
அப்படிப்பட்ட மாமாக்களில் பெரியப்பாக்களில் தாத்தாக்களில் ஒருவராக எங்கள் கிராமத்தில் இருந்தவர் தான் அப்பாத்துரை எனக்கு மாமா முறை ஆகவே இனி நமக்கு அவர் அப்பாத்துரை மாமா.
மனுசனுக்கு எல்லாம் தெரியும், எங்க ஊர்ல இருந்து நாட்டுக்காக மிலிட்டிரிக்கு போன முதல் மரக்கட்டை அப்பாத்துரை மாமா தான். எப்படியோ சீனாக்காரனாலும் பாகிஸ்தான்காரனாலும் கொல்லப்படாமல் பத்திரமா எங்ககிட்டையே திரும்பி வந்துட்டார். அதுக்கு அப்புறம் ஊருக்கு எல்லாமே அப்பாத்துரை மாமா தான். அப்பாத்துரை மாமாவுக்கு இரண்டு குழந்தைகள் இருவரும் ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். மனைவி சகாயமேரி காதல் மனைவி. பணிக்கநாடார் குடியிருப்பிலிருந்து மத பிரசங்கத்துக்கு வாரம் ஒரு முறை வந்து வீடு வீடாய் நோட்டிஸ் கொடுத்த சகாயமேரியை ”கடவுள் இல்லை கடவுளை மற மனிதனை நினை” என்று வீட்டு கதவில் எழுதி வைத்திருக்கும் அப்பாத்துரை மாமா எப்படித்தான் காதலித்து திருமணம் செய்தாரோ இன்றும் காதலிக்கும் இளைஞர்களுக்கு அவரது காதல் கதை தான் பெரும் நம்பிக்கை.
அப்பாத்துரை மாமா எங்கள் கிராமத்தின் முதல் திராவிட இயக்கத்தின் வழி தோன்றல். பகுத்தறிவாளர். சகாயமேரி அத்தை ஞாயிற்றுகிழமை குழந்தைகளுக்கு Sunday class எடுத்தால் அப்பாத்துரை மாமா எங்களுக்கு வீட்டிற்கு பின்னாடி உள்ள தென்னை கொட்டகையில் வைத்து பகுத்தறிவு வகுப்பு எடுப்பார். “அம்பேத்கர் சிறுவர் இலக்கிய பேரவை” மாமா எங்களுக்காய் தொடங்கிய இலக்கிய மன்றம் அதன் மூலம் எங்களுக்கு சொற்பொழிவு வகுப்புகளும் எடுத்தார். இதோடு மட்டுமல்லாமல் அவர் மிலிட்டரியில் இருந்து திரும்பியவர் என்பதால் எங்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளும் எடுத்திருக்கிறார் அதற்காக நாங்கள் அவர் வீட்டிற்காக விறகு வெட்ட எல்லாம் போயிருக்கோம். விறகு வெட்டுவது நல்ல திட பயிற்சி என்று சொல்லுவார்.
ஊரில் என்ன விழா எப்படி நடந்தாலும் அப்பாத்துரை மாமா தான் தலைமை..அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்பதற்கென்றே கூட்டம் கூடிவிடும். உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை எமக்கு நல்ல புரியும்படி பேசுவதில் அப்பாத்துரை மாமாவை மிஞ்ச எங்க ஏரியாவில் ஆளில்லை என்பது நாங்கள் அறிந்த உண்மை. ”இந்தியா என்பது நமக்கு பொண்டாட்டி மாதிரி வந்த இணைப்பு தமிழ்நாடு என்கிறது நம்ம அம்மா மாதிரி. பொண்டாட்டிகூட வாழத்தான் எல்லாவனும் ஆசைபடுவான் ஆனால் அந்த பொண்டாட்டி தனக்கு துரோகம் பண்ணினா எதுக்கு அவ கழட்டிவிட்டுட்டு தனியா வாழுறதுல தப்பே இல்லை” என்று கிராமத்தில் எஞ்சியிருக்கும் தேசியவாதிகளை ஒரு பிடிபிடிப்பார்.
திராவிட இயக்க செயல்பாடுகளையும் அவர் சில நேரங்களில் விமர்சிக்க தவறியதில்லை தாமிரபரணி படுகொலைக்காய் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த கண்டன கூட்டத்தில் திராவிட இயக்கங்களை ஆவேசமாய் கண்டித்து தனது திராவிட இயக்க கரை போட்ட வேஷ்டியை மேடையிலே அவிழ்த்து எறிந்து அரை நிர்வாணமாய் அவர் இறங்கிபோனதை பார்த்து மொத்த ஊருமே ஆடிப்போய்விட்டோம்.
எனவே இந்த வருட அம்பேத்கர் பிறந்த தின விழாவிற்கு அவரை தலைமை தாங்க நாங்கள் வற்புறுத்தி அழைத்தது மிக சரியானதே…….கடந்த நான்கு வருடம் நடந்த எல்லா விழாக்களுக்கும் அவர்தான் தலைமை என்றாலும் இந்த வருடம் நாங்கள் மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தோம். ஊரில் நாங்கள் புதியதாய் நிறுவியிருக்கும் அம்பேத்கர் சிலையை அப்பாத்துரை மாமாவை வைத்து திறக்க வேண்டும் என்று எங்கள் இளைஞர் நற்பணி இயக்கம் எடுத்த முடிவு ஊரில் பல பெரியவர்களுக்கும் ஆச்சர்யம் தான்.
முழு ஊரையும் விழாக்கோலமாக்கியிருந்தோம் தோரணங்களின் மூலமும் அலங்காரங்களின் மூலமும் எங்களின் நீண்ட நாள் சந்தோசத்தை சரியாக வெளிப்படுத்தியிருந்தோம். முதன்முறையாக அப்பாத்துரை மாமாவின் சிரித்த புகைப்படம் போட்ட போஸ்டர்களை எங்கள் ஊர் முழுக்க நிரப்பியிருந்தோம்.
விழா தொடங்கிவிட்டது. மேடையில் சில பெரியவர்களோடு அப்பாத்துரை மாமா கம்பீரமாய் வீற்றிருக்கிறார் அவருக்கு கூட இந்த விழா தன் வாழ்வின் பெரும் கனவு என்று எங்களிடம் சொல்லியிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைமை உரை ஆற்றி அண்ணல் சிலையை அப்பாத்துரை மாமா திறந்து வைக்கபோகிறார் என்பதை நினைத்து பார்க்கவே அவ்வளவு சந்தோசமாய் இருந்தது.
குழந்தைகள் நடனமாடி கொண்டிருந்தார்கள். நான் மாலை வாங்க சென்றிருந்தவனை அழைப்பதற்காய் எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் ஊருக்கான பேருந்து நிறுத்தத்திற்கு இரு சக்கர வாகனம் ஒன்றில் கிளம்பினேன். அந்த குண்டும் குழியுமான ஆள் அரவமற்ற எங்கள் ஊர் சாலையில் என் வாகண வெளிச்சத்தில் சிக்கினான் ஐந்துகனி.
ஐந்துகனிக்கு நாற்பது வயது இருக்கும். மூன்று பெண் குழந்தைகள் மனைவி பேச்சியம்மாள் இந்த ஒரு குடும்பம் தான் எங்கள் ஊரில் இருக்கும் ஊர் துணி வெளுக்கும் வண்ணார் குடும்பம்.
“அண்ணே அதுல போறது யாரு”
”நான் தான் சாமி ஐந்துகணி”
அவர் என்னை பார்க்கும்போது அவர் முகத்தில் பரிதாபமும் இயலாமையும் அந்த வெளிச்சம் எனக்காய் அப்பட்டமாய் காட்டிகொடுத்தது.
“இந்த நேரத்தில தனியா எங்க போறீய”
“ஆஸ்பத்திரிக்கு சாமி”
“எதுக்கு யார்க்கு என்னாச்சு”
“எம் பொண்டாட்டி பேச்சிக்கு உடம்புசரியில்லை அங்க வைச்சிருக்கோம் அதுதான் கஞ்சி கொண்டு போறேன்”
“சரி வாங்க நான் பஸ் ஸ்டாப்பிற்கு தான் போறேன் விட்டுறேன் ஏறுங்க”
தயங்கி தயங்கி தான் ஏறினார் ஐந்துகனி என் மீது அவர் உடல் தொட்டுவிடாதவாறு மிக கவனமாக உட்கார்ந்தார்.
“உடம்புக்கு என்னாச்சு”
”ம்ம் அது அது,,,ம்”
“என்னாச்சு உங்ககிட்டதான் கேக்குறேன்”
“ம்ம்ம் கீழ விழுந்துட்டா”
“கீழ விழுந்துட்டாங்களா எப்படி எங்கிருந்து”
அவ்வளவு தான் அவர் கதறி அழத்தொடங்கிவிட்டார். அந்த ஆளில்லாத இருள் நிறைந்த சாலையில் அவர் கதறி அழுததும் நான் வண்டியை ஜெபமனி ஆலமரத்தில் நிறுத்தினேன்.
“இப்ப எதுக்கு அழுறீங்க சொல்லுங்க உண்மையிலே என்னாச்சு” இப்போது நான் அவரை முழு வன்மத்தோடு உலுக்கினேன்.
“எப்பா சாமி யார்கிட்டயாவது சொல்லனும்னு தோனுது ஒருவேளை எம்மேலே தான் தப்போன்னு மனசு கிடந்து அல்லாடுது ஒரு வாய் கஞ்சியகூட எறக்க மாட்டேங்குது’
“ம் சொல்லுங்க என்னாச்சு”
“எப்பா முந்தா நாள் காலையில நம்ம அப்பாத்துரை சாமி வந்து மூனு நாள்ல மீட்டிங் வருது முகசவரம் பண்ணனும் சாயந்தரம் வீட்டிற்கு வான்னு சொல்லிட்டு போனார். நான் அன்னைக்கு இருந்த எதோ வேலையில மறந்து தொலைச்சிட்டேன் மறுநாள் காலயிலே அதுதான் நேத்து ராமசாமி புள்ளகிட்ட சொல்லி கூட்டிட்டு வர சொல்லிருக்கார் நான் கிளாக்குளம் முத்தையா நாடார் வீட்ல மாடு செத்துபோச்சுன்னு போய் தொலைச்சிட்டேன். இன்னைக்கு காலையிலே எனக்கு அந்த ஞாபகமும் இல்லாம பாவி நான் பொண்டாட்டிய கூட்டிகிட்டு பொட்டைகுளத்துக்கு வெளுப்புக்கு போய்ட்டேன். சைக்கிள எடுத்துகிட்டு அப்பாத்துரை சாமி அங்க வந்தப்ப தான் எனக்கு என் புத்தியிலே உரைச்சிச்சு நான் ஓடி போய் சவரகத்திய எடுக்கப்போனேன் அதுக்குள்ள அவர் என்னை குளத்துக்குள்ள மிதிச்சி தள்ளிட்டார்பா. நான் அவர் கால் விழுந்து மன்னிப்புகேட்டேன் அவர் என்னை அடிச்சு தள்ளிட்டார். நீயே சொல்லுசாமி எந்த பொண்டாட்டி தான் கட்டின புருசன் அடிபடும்போது வேடிக்கை பார்ப்பா அவா புடிக்கதான் செஞ்சிருக்கா அதுக்கு அவர்
“என் பொண்டாட்டி தூம துணிய துவைச்சி கொடுக்கிற வண்ணாப் பய பொண்டாட்டி நீ என் கையவா புடிக்கிறன்னு” சொல்லி மிதிக்க கூடாத இடத்தில் எல்லாம் மிதிச்சு போட்டுட்டு போய்ட்டார்பா. வலி தாங்காம துடிச்சி போய்ட்டா அந்த செருக்கி மவ. அவள தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரில போட்டுருக்கோம். நான் கும்பிடுற முனியசாமி மேல சத்தியமா சொல்றேன் நான் வேணும்னு எதுவும் செய்யல சாமி , ஊரே மதிக்கிற அந்த மனுச சாமியை நான் மதிக்காம இருப்பனாப்பா”
இப்போது அவர் அழவில்லை அவர் கண்கள் காய்ந்துவிட்டது. ஆனால் உடல் நடுங்கி கொண்டிருந்தது. நானும் எதுவும் பேசவில்லை என்னால் எதுவும் பேசவும் முடியவில்லை அவரை ஏற்றி கொண்டு போய் பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு வந்தவனை கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.
இப்போது அப்பாத்துரை மாமா பலத்த கரகோசத்துடன் பேச தொடங்கியிருந்தார். “மகாத்மா காந்தியே செத்தாலும் சாவேனோ தவிர தாழ்த்தபட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை திட்டத்தை கொண்டுவர அனுமதிக்க மாட்டேன்னு சொன்னதை அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்சரானதும் கொண்டுவந்தார். எப்படா அண்ணல் சாவார்னு காத்துகிட்டுகிடந்து அவர் செத்ததும் அந்த சட்டத்தையே கேன்சல் செய்துபுட்டானுவ அதை பண்ண முடிஞ்ச இவனுவலால இன்னும் இந்த இரட்டை தம்ளரை ஒழிக்க முடியுதா. எம் சனமே நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல நம்மை இனி எவனும் அடிமைபடுத்தவும் முடியாது” இன்னும் என்னன்னமோ பேசிகொண்டிருந்தார். எனக்கு ஒன்னுக்கு போகவேண்டும் போலிருந்தது. தொடக்கபள்ளி சுவர் ஓரம் ஒதுங்கினேன் அங்கே ஒட்டபட்டிருந்த போஸ்டரில் சிரித்தபடி இருந்த அப்பாத்துரை மாமா படத்தின் மீது ஒன்னுக்கு இருந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
- மாரிசெல்வராஜ்

