(முப்பதுநாள் சுயநினைவு இழந்து, வலிப்புவந்து முதல் மாரடைப்பு, என எல்லாம் முடிந்து ஒரு முழு நேர நோயாளியாக டாக்டரால் முடியாது என்று வீட்டில் இருக்கும்போது, எங்க அப்பாமேல இருந்த பாசத்துல நான் எழுதிய இந்த கடிதம் இன்னும் என் டைரியில் பத்திரமாக இருக்கிறது. இந்த கடிதத்தை நான் எழுதும்போது எங்கப்பா உயிரோடில்லை. நீங்கள் படிக்கும்போது நான் இரண்டாவது மாரடைப்பையும் தாண்டி உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.)
அன்புள்ள அப்பாவுக்கு,
மகேஷ் எழுதும் அன்பின் மடல் இங்கு நான் அம்மா தம்பி தங்கச்சி நலம். நீங்களும் நலமாகயிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்பா நான் எழுதும் இந்த கடிதம் உங்களுக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஒருவேளை நான் சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது நீங்க வந்து பார்த்தா தலையணைக்கு அடியில் இருக்கும் இந்த கடிதத்தை வாசிப்பீங்க என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். அப்பா நீங்க எங்களை விட்டு போன பிறகு பசி, பட்டினி, வறுமைன்னு ரெம்ப காஸ்டமாருக்குப்பா. நான் கேட்டதெல்லாம் நீங்க வாங்கி தந்தீங்க, இப்ப எனக்கு மருந்துவாங்ககூட காசுயில்லப்பா, எனக்கு பிறகு எல்லாமே நீதான்னு அடிக்கடி சொல்லுவீங்க அதற்கு அர்த்தம் எனக்கு இப்பதான் புரியுதுப்பா.
அப்பா நான் உங்ககிட்ட பெருசா எதுவுமே கேக்கலப்பா கொஞ்ச நாளாவது நோய் இல்லாம என்னைய வாழவிடுங்கப்பா, நெஞ்சுவலி என்னால தாங்கமுடியலப்பா. எனக்கு எதாவது நாட்டுமருந்து சொல்லுங்கப்பா, டாக்டர் நான் பொழைக்கிறது கஷ்டம்னு சொல்லுராங்கப்பா. அப்பா தங்கச்சி கல்யாணம் வரைக்குமாவது எனக்கு உயிர் குடுங்கப்பா, தம்பி பாவம் அவன் தனியா ரொம்ப கஷ்டப்படுவான். அம்மாவுக்கும் உடம்புசரியில்ல நீங்கதாம்பா எங்களுக்கு எதாவது பண்ணனும். உங்கள விட்டா நாங்க கேக்குறதுக்கு எங்களுக்கு யாருமில்லப்பா. நான் எவ்வளவு அழுது கதறினாலும் செத்து போயிருவானு எல்லாரும் நம்புராங்கப்பா. சுயநினைவு இல்லாம இருக்கும் போது ஊரே வந்து பாத்திருக்குப்பா. நீங்க மட்டும்தான் வரலப்பா.
நீங்க என்மேல அதிக பாசம் வச்சிருந்ததாலையோ என்னவோ தெரியல நானும் சீக்கிரம உங்ககிட்ட வரப்போறேன்பா. அப்பா தம்பி, தங்கச்சிக்காவது நல்ல நோயில்லாத வாழ்க்கைய கொடுங்கப்பா. எம்மேல கொஞ்சம் இறக்கம் காட்டுங்கப்பா. அம்மா, தம்பி, தங்கச்சிய அனாதையா விட்டுட்டு வந்திருவேனோன்னு ரொம்ப பயமாயிருக்குப்பா. கெஞ்சி கூத்தாடினாலும் என்னால ரெம்பநாளைக்கு உயிர் வாழமுடியாதுன்னு எனக்கு தெரியும்பா. உங்க பதிலுக்காக காத்திருக்கேன்பா. நீங்க வந்து எங்கள கூட்டிட்டு போங்கப்பா..
அப்பா, வழியனுப்ப தம்பி வருவான் வரவேற்க நீங்கள் வருவீங்க என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்...
அன்பு மகன்
அ.மகேஷ்
(21 MAY 2004)
(இந்த கடிதம் எழுதி ஆறுவருடம் முடிந்துவிட்டது இன்னும் உயிர்வாழ்கிறேன். எங்கப்பா இந்த கடிதத்தை கண்டிப்பா படித்திருப்பாங்க. அதான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.)

