பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 13, 2010

அற்றவைகளால் நிரம்பியவள்-17- யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது அனைத்துப்பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்


பகுதி 17 

 படகு நோக்கி நடந்த கால்களும், கண்களும் தன்வழியே சென்றபடி இருக்க, மனது இங்கும் அங்குமாய் அலைந்து கொண்டிருந்தது அஞ்சனாவிற்கு. கனன்று கொண்டிருந்த எண்ணவோட்டத்தை ஒரு நிலை படுத்தமுடியாதபடிக்கு அப்படி ஒரு கோபம், கையாலாகா தன்மை, வெறுப்பு, அவமானம் கலந்து இன்னமும் குழப்பிக்கொண்டிருந்தது அவளை. ஏனோ இந்த நொடி, அம்மாவை கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல இருந்தது அஞ்சனாவிற்கு. 

அப்பாவின் அரவணைப்பு, சித்தப்பாவின் வாஞ்சை, அம்மாவின் நேசம், அண்ணாவின் சண்டை, தம்பியின் பாசம், பாட்டியின் கண்டிப்பு எல்லாம் தேவைப்பட்டது இந்த நொடி அஞ்சனாவிற்கு. தனியாக இருப்பது பெரிதாக தோன்றாத அவளுக்கு, இந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் தனியாக இருப்பது உணரமுடிந்தது. கடம்பத்தூரில் இருந்து சென்னை செல்லவேண்டுமானால் கூட இரண்டு பேர் துணைக்கு வருவார்கள். சித்தப்பா பெரும்பாலும் காரில் வந்து சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கூட்டி செல்வார்கள். நொடிக்கொரு முறை யாராவது ஒருத்தர் எங்கு இருக்கிறோம், என்ன நடக்கிறது என்று விசாரித்தபடியே இருப்பார்கள். நன்கு வளர்ந்த பின்னர் கூட அஞ்சனாவை யாராவது ஒருவரின் கரம்பற்றி தான் சாலையை கடக்கவைப்பார்கள். சுதந்திரமாக ஒன்றுமே செய்யவிடமாட்டார்கள் என்று அங்கலாய்த்து கொண்ட காலம் போய், யாராவது நம்மை பார்த்துக்கொள்ளமாட்டார்களா என்று தோன்றியது. Why is that, the grass always seems greener on the other side of the fence?



 அவளை சுற்றி இருந்த ஒருவரும் பேசவில்லை. எல்லோரும் தனியாக ஒதுங்கி நடக்க, the silence was welcoming now. எல்லோரும் படகுக்கு வந்ததும், லூயிஸும் மார்வினும், டேமியனும் சேர்ந்து பேசி, அந்த இரவே ப்ராலின் போகலாம் என்று சொல்லி படகை திருப்பினார்கள். ப்ராலின் வந்து சேர முக்கால் மணி நேரம் பிடித்தது. இரவில் கடலில் படகில் பயணிப்பது அத்தனை அழகாக இருந்தது. நிலவின் ஒளியும், கடலில் தெறிக்கும் பிம்பமும் தவிர ஒன்றும் தென்படவில்லை. படகில் கைப்பிடியில் தாங்கியபடி, இருட்டை வெறித்து பார்த்து நின்ற அஞ்சனாவின் அருகே வந்த டேமியன் அவள் தோளை அணைத்தபடி, `` Are you ok, kid’’ என்றான். ``ம்ம்ம்`` என்று மட்டுமே சொல்லமுடிந்தது அஞ்சனாவால். தொண்டைக்குள் பெரிய உருண்டை சிக்கி பேச முடியாதது போல இருந்தது அவளுக்கு.

 அந்த நிமிடம் டேமியன் லேசாக அவனோடு சேர்த்து, அவள் தோளை அழுந்த பிடித்து, பின் சட்டென விட்டு போனான். மனது வெகுவாக குழம்பியிருந்தது, இந்த நிமிட சிந்தனைகளை பற்றி. ஏன் அவளுக்கு இத்தனை அவமானமாக இருந்தது என்றே புரியவில்லை. தான் ஏதும் செய்யாத தவறுக்காக ஏன் அவள் வருந்தவேண்டும் என்று யோசித்தாள் அஞ்சனா. ஆனாலும் தன்னுடைய விருப்பமில்லாது ஒரு ஆண், அவனால் முடிந்ததை செய்தபோது, அதை எதிர்க்கும் அளவு அவளுக்கு சக்தியில்லை என்ற கையாலாகாதனமும், எரிச்சலும், கோபமும் வரவழைத்த இந்த mixed emotion அஞ்சனாவால் handle செய்யமுடியவில்லை.

வீட்டிற்கு வந்து விட்டு, இரு பெண்களில் யாராவது அவளோடு தங்க வேண்டுமா என்று கேட்டதிற்கு, அஞ்சனா வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டாள். எல்லோரும் கிளம்பி சென்றபின், தன் வீட்டின் அறைக்கதவை அழுந்த சாத்திவிட்டு, அங்கேயே இருந்த நாற்காலியில் அமர்ந்து நேரம் பார்த்தாள். மணி இரவு ஒன்று ஆகியிருந்தது. எழுந்து சென்று முகம் அலம்பி, உடை மாற்றி வந்து, அவளுடைய படுக்கையில் சாய்ந்தவளுக்கு, தூக்கம் வருவதற்கான அறிகுறியே இல்லை. மனம் எப்போதும் போல யோசனைகளில் மிதந்தது. எப்போதாவது கனவில் எல்லோரின் முன்னிலையிலும் தான் அணிந்திருக்கும் உடைகள் காணாமல் போய், எதையாவது எடுத்து தன்னை மறைக்க வேண்டுமே என்று தோன்றி இங்கும் அங்கும் அலைந்து தேடுவாள். பாதி கனவில் வியர்த்து விறுவிறுக்க, எல்லோரும் தன்னை பார்த்து சிரிப்பது போல தோன்றி எழுந்து, சுற்றிமுற்றி பார்த்து, உடம்பில் உடை இருக்கிறதை ஊர்ஜிதப்படுத்திய பின் தான் மனம் சமாதானம் ஆவாள். இன்றும் அப்படி தான் இருந்தது அவளுக்கு. எல்லோரின் முன்னிலையிலும் அவளின் உடையை அவன் களைந்து நிர்வாணமாக்கியது போல தோன்றியது அஞ்சனாவிற்கு. அவள் படித்த படிப்பு, குடும்பம், வளர்ந்த விதம், விருப்பு, வெறுப்பு, கோபம் இதை அத்தனையும் துச்சமென மதித்து ஒருவன் அவளை தொட்டது, அஞ்சனாவால் ஏற்று கொள்ளமுடியவே இல்லை.

 ஆழ்ந்த துக்கத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும், மனது எப்படி பொதுவாக react செய்யும் என்பதை ஆராய்ந்து, சுவிட்சர்லாந்து மனநல பெண் மருத்துவர் எலிசபெத் குப்லர்-ரோஸ் (Elisabeth Kubler-Ross) என்பவர் சொல்லியிருப்பார். ``5 stages of loss`` என்று அவர், 1969ம் ஆண்டு எழுதிய புத்தகமான ‘’ On death and dying ‘’ ( சாவும், சாவது பற்றியும் ) அதில் எழுதிய கருத்தை தான் இன்னமும் எல்லாரும் அங்கீகரிக்கிறார்கள். எந்த வருத்தமானாலும், மனது முதலில் மறுக்குமாம் (Denial), பிறகு கோபிக்குமாம் (Anger), பின்னர் இப்படி மட்டும் நடந்திராவிட்டால் என்று பேரம் செய்யுமாம் (Bargaining), அதன் பின் துக்கப்படுமாம் (Depression), கடைசியில் தான் மனதால் நடந்ததை ஒப்புக்கொள்ளமுடியுமாம் (Acceptance). இந்த stages of progression of loss நிலைகளை ``Kubler-Ross Model`` என்று சொல்லி அழைக்கிறார்கள்.

அஞ்சனாவும் அந்த பாதையில் தான் நடந்துக்கொண்டிருந்தாள். அப்பா அம்மா மருத்துவர்கள் ஆதலால், பெரும்பாலும் வேலைக்காரர்கள் மத்தியில் தான் வளர்ந்தாள் அஞ்சனா. அதிலும் சிறு வயதில் பாட்டி தாத்தாவிற்கு stroke (பக்கவாதம்) வந்து வெகு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால், சில வருடங்கள் வீட்டில் வேலையாட்களும், அஞ்சனாவும், அண்ணாவும் தம்பியும் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். பள்ளி நாட்களில் பரவாயில்லை ஒன்றும் தெரியாது. ஆனால் விடுமுறை நாட்களில், இப்போது போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ, கணினியோ இல்லாது, ஒன்று ஏதாவது படிக்கவேண்டும் இல்லாது போனால் விளையாடவேண்டும், இவை தவிர entertain செய்ய பள்ளிக்கு செல்லும் சிறுவர்களான இவர்களுக்கு ஒன்றும் இருக்காது.

அஞ்சனாவின் வீட்டில் பாலு மாமாவும், சீதா ஆண்டியும் இருப்பார்கள். பாலு மாமா அப்பாவோடு பள்ளியில் இருக்கும்போது ஐந்தாவது ஆறாவது படித்தவர். எப்போதும் குடித்து கண்கள் நிரந்தரமாக சிவப்பேறி இருக்கும். சீதா ஆண்டி பற்றி சொல்ல ஒன்றுமில்லை. வழக்கம் போல கணவனாகி போய்விட்டதால் பொறுத்துக்கொண்டு இருந்தார்கள் போல. இது தவிர சாரதாம்மா வீட்டில் துணி துவைப்பவர், மேலும் வீடு பெறுக்க, துடைக்க, வாசலில் கோலம் போட சரஸ்வதி ஆயா, வீட்டில் இருந்து வெளியே கடைக்கு போகவோ, பள்ளிக்கு போகவோ ரிக்‌ஷாவில் அழைத்து போகும் ஆறுமுகம் அண்ணா என்று வீட்டில் எப்போதும் ஒரு பெரிய படையே இருக்கும். அண்ணாவுக்கும் தம்பிக்கும் அஞ்சனாவுக்கும் விடுமுறை நாட்கள் என்றாலே பிடிக்காது.

ஆறுமுகம் அண்ணா அட்டை கருப்பாக, ஒல்லியாக குள்ளமாக அரை டிரௌஸர் போட்டு இருப்பார். உதட்டை ஒட்டி இருக்கும் பென்சில் கோடு போன்ற மீசையும், கடுகடு முகமும் பார்த்து அஞ்சனாவிற்கு பயமாக இருக்கும். பாட்டி சொல்வார்கள், இவனுக்கு மட்டும் வயசே ஆகாது அப்படின்னு. அப்பா சிறு பிள்ளையாக மூன்றாவது நான்காவது படிக்கையில், அப்பா, அத்தைகள், பெரியப்பா, சித்தப்பாவை பள்ளிக்கு கூப்பிட்டு போவது, சாப்பாடு எடுத்துப் போனதும் அவர் தான். அப்போதே ஆறுமுகம் அண்ணாவிற்கு எப்படியும் வயது 18 இருக்கும் என்றார் பாட்டி. ஆனாலும் 30 வயதிற்கு மீறி சொல்லமுடியாத படிக்கு தான் இருப்பார் அவர். அஞ்சனாவும் அண்ணா தம்பி சத்தமாக விளையாடினால், கண்ணை உருட்டி, திட்டி, வீட்டில் இருக்கும் படிக்கட்டில் வரிசையாக கைக்கட்டி உட்கார வைத்துவிடுவார். அது எத்தனை மணி நேரம் என்றே தெரியாது இவர்களும் ஒன்றும் பேசாது, கையை கட்டி, உதட்டில் விரல் வைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு நாள் வீட்டிற்கு அம்மா ஏதோ வேளையாக மருத்துவமனையில் இருந்து சட்டென வர, படிக்கட்டில் சத்தம் போடாது பயந்து போய் கை கட்டி, வாய் பொத்தி அமர்ந்து இருந்த பிள்ளைகளை பார்த்து, ``எப்போது இருந்து இப்படி உட்கார்ந்து இருக்கீங்க`` என்று கேட்க, அண்ணா ’’ காலையில் நீங்க போனதில இருந்து, mummy’’ என்று சொல்ல, அதற்குள் பின்னால் ஏதோ வேளையாக இருந்த ஆறுமுகம் அண்ணா வர, அம்மா குரல் எழுப்பி சத்தமிட்டு, அஞ்சனா முதன்முதல் கேட்டாள்.

அந்த நிகழ்வுக்கு பிறகு, சிறிது நாள் ஆறுமுகம் அண்ணா வீட்டுக்கு வரவில்லை. அஞ்சனா 7ம் வகுப்பு போக தொடங்கிய பிறகு, ஆறுமுகம் அண்ணா வந்து ரிக்‌ஷா ஓட்டி, பள்ளிக்கு கூட்டிப்போனார். அவளும் அண்ணாவும் காலை அவரோடு ரிக்‌ஷாவில் இவர்கள் தெருவில் இருந்து கிளம்பி, underbridge தாண்டி தான் பள்ளிக்கு செல்வார்கள். ஒரு நாள் பாலம் தாண்டி ரிக்‌ஷாவில் செல்லும் போது, எதிரே வந்த இன்னொரு வண்டி மோதி, ஓரத்தில் அமர்ந்திருந்த அஞ்சனா, அருகே இருந்த ஒரு சாக்கடையில் விழ, மேலெல்லாம் சகதியாகி, சட்டையும் ஸ்கிர்டும் அங்கங்கே கிழிந்து, வெள்ளை சாக்ஸ் எல்லாம் கருப்பாக, முடியெல்லாம் சேறு பூசி, சகிக்கமுடியாத நாற்றத்தோடு எழ, அந்த வழியே போன எல்லா பள்ளி மாணவர்களும் பார்த்து சிரித்ததும், அதன் பின் பல நாள் கிண்டல் செய்ததும் அஞ்சனாவால் மறக்கவே முடியவில்லை.

இன்றும் ஜெஃப் அவளை அத்தனை பேர் மத்தியில் கட்டிப்பிடித்ததும், காதின் அருகே கூசும் படி பேசியதும், அவன் கை அவள் மேலெங்கும் மேய்ந்ததும் திரும்ப நினைவிற்கு வந்ததும், மீண்டும் சாக்கைடையில் விழுந்து எழுந்தது போல, ஏனோ தலை வலித்து குமட்டியது அஞ்சனாவிற்கு. அவள் மேலெங்கும் கஞ்சா வாசம் அடிப்பது போல தோன்றியது. திரும்பி வரும்போது, கோப்பையோடு கையை உயர்த்தி, காற்றில் முத்தமிட்டு அனுப்பியவனின், உணர்வே காட்டாத கண்கள் நினைவிற்கு வந்து பயமுறுத்தியது. அவள் வீட்டில் சில மாதங்களுக்கு முன் உடம்பெங்கும் காயமாகி படுத்திருந்த ஃபெமினாவின் முகம் நினைவுக்கு வந்தது. அதே சமயம் நினைவில் இன்னொருத்தியின் முகமும் வந்து, இன்று நடந்த நிகழ்ச்சியை இன்னும் வலியுடையதாக ஆக்கியது.

என்றோ ஒரு ஆங்கில கவிதை படித்திருக்கிறாள் அஞ்சனா, `` The leaves of memories seemed to make the most mournful rustling in the night ‘’ என்று. எத்தனை அழகான வரிகள். ``மனதின் ஓரத்தில் குவிந்திருக்கும் உதிர்ந்த நினைவு சருகுகள் தான் தனிமை இருட்டில், மிகுந்த சோகமான சலசலப்பை தருகிறது`` என்று சொல்லலாம் அதன் தமிழாக்கம். இந்த இருளும், இதற்கு முன் கடந்த ஒவ்வொரு இருளும் ஏதாவது ஒரு கதையை யோசிக்கத்தான் வைக்கிறது அஞ்சனாவை.

அஞ்சனாவின் பள்ளி நாட்களை மீண்டும் நினைவு கூர்ந்தாள். பள்ளியில் இவளோடு எப்போதும் இருந்தவர்கள் பாரதியும், அனுராதாவும். ஒரே பெஞ்சில் அமர்ந்து சிரித்து படித்து ரசித்து, வாசலில் இருந்த ஆயாவிடம், உப்பு நெல்லிகாயும், இலந்தை பழமும், காரம் தடவிய கொய்யா வாங்கி சாப்பிட்ட நாட்கள். இவள் படித்தது கிருத்துவ பள்ளியில் ஆதலால் அங்கு வேலை பார்க்கும் 98% ஆசிரியர்களும் அதே மதத்தை சார்ந்தவராக தான் இருந்தார்கள். பொதுவாக எல்லா ஆசிரியருடைய பிள்ளைகளும் ஆறாம் வகுப்பிற்கு மேல் அங்கு தான் வந்து சேர்ந்து படிப்பார்கள். அஞ்சனா அமரும் பெஞ்சின் முன்னால் பெரும்பாலும் ரேவதி, எஸ் ஜெயந்தி, சித்ரா, கோகிலா தான் அமர்வார்கள். எல்லோரும் சரியான அரட்டை நண்பர்கள் தான்.

எப்போதாவது free period இருந்தால், வகுப்பில் எல்லோரும் ஏதாவது பேசியபடி, பாட்டோ, ஆட்டமோ ஆடுவார்கள். Class pupil boys leader ஜாய்ஸனும், girls leader பூங்குழலியும் தான். வேண்டும் என்றே இவர்கள் அதிகம் பேசி, அவர்கள் இருவரையும் வெறுப்பேற்றுவார்கள். இந்த கூட்டத்தில் அதிகம் பேசி கலாய்ப்பது எஸ்.ஜே தான். பார்க்க கருப்பாக இருப்பாள், மிக களையான முகவெட்டும், சிறிது கூட சுருள் இல்லாது நேராக இருக்கும் கூந்தலும், அழகான உடலமைப்பும் இருக்கும் அவள், ஏழாம் வகுப்பு வரலாறு தமிழாசிரியை ஜூலியின் மகள். விதவையான அவர்கள் பார்க்க எப்போதும் பாதி தூக்கத்தில் இருப்பது போன்ற சோர்ந்த முகத்தோடு இருப்பார்கள். எஸ்ஜேவிற்கு ஒரு தம்பி இருந்தான், அவளை விட 2 வயது சிறியவன்.

பள்ளியில் எஸ்ஜேவின் உடை அலங்காரத்திற்கு ஒரு சாரார் பலத்த எதிர்ப்பும், ஒரு சாரார் பலத்த அங்கீகாரமும் கொடுத்தார்கள். அவள் போடும் பள்ளி சீருடையில் கூட பார்க்க வித்தியாசமாக இருப்பாள். அது மட்டும் அல்லாது, தினம் ஒரு கம்மலும், வளையலும் அதற்கு ஏற்ப கழுத்தில் செயினும் அணிவாள். Very bubbly and enthusiastic girl. படிப்பில் கொஞ்சம் சுமார் என்றாலும், அவளுக்கு அத்தனைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்பாள். ஒரு Bsc, BA முடித்து B.Ed முடித்தால் இதே பள்ளியில் dioceseல் சொல்லி அவர்கள் அம்மா வேலை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். வாழ்க்கை settled என்றது போன்ற attitude உடன் சுற்றுபவள். வாழ்க்கையில் எல்லாமே அவளுக்கு மிகவும் சுலபமாக தான் தெரியும். சிரித்துக் கொண்டே சுற்றி இருப்பவர்களையும் சிரிக்கவைப்பாள். +2 வகுப்பில் இவள் pure science group எடுக்க, எஸ்ஜே bio maths எடுக்க, சில பாடங்களை தவிர மிச்ச பாடங்களுக்கு தனித்து இருந்ததில், சிறிது இடைவேளை வந்தது தான்.

அதன் பின் பரிட்சைகள், டூயுஷன், பாடம் என்று நாளோட, அது முடித்ததும் கல்லூரி வேறு பக்கங்களுக்கு அழைத்து சென்றது எல்லோரையும். பாரதியை தவிர யாரும் தொடர்பில் இல்லாது போனார்கள். மருத்துவ கல்லூரியும் புது நட்புகளும் கலந்து, வாழ்க்கை வேறு திசையில் போனது அஞ்சனாவிற்கு. சில மாதங்களுக்கு முன், சேய்ஷல்ஸ் வரவேண்டி, தேவையான ஆயுத்தங்கள் செய்ய சென்னை சென்ற போது, ரயில் நிலையத்தில், அஞ்சனா ஓடி வந்து சென்னைக்கு கிளம்ப தொடங்கிய ரயிலில் ஏற முற்பட, எப்போதும் போல பெண்கள் பெட்டியில் ஏறமுடியாது, முதலில் தென்பட்ட பொது வகுப்பில் ஏறிவிட்டாள். பொதுவாக சென்னை செல்ல, ஒரு மணி நேரத்திற்கு ஒரு வண்டி இருப்பினும், எல்லா வண்டிகளும் அத்தனை கூட்டமாக செல்லும். இன்றும் அப்படி தான் கூட்டமாக இருக்க, ஒரு ஓரத்தில் நின்று, பிறகு வேறு ஸ்டேஷனில் இறங்கி பெண்கள் வகுப்பில் மாறலாம் என்று நின்றாள் அவள்.

ரயில் பெட்டியின் இன்னொரு மூலையில் திரும்பி நின்ற பெண் தெரிந்தவள் போலிருக்கவே, சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சனா. மெல்லிய புடவை, லோ கட் ஜாக்கெட், சிறிது பூசியது போல் இருந்த உருவம், பெரிய ஹீல்ஸ் போட்டு லேசாக திரும்ப, அஞ்சனா கூட்டத்தை லேசாக விலக்கி அந்த பெண் அருகே சென்று தோளை தொட, அவள் திரும்பினாள். எஸ்ஜே தான்... அஞ்சனாவிற்கு பயங்கர சந்தோஷம் அவளை பார்த்ததில். அஞ்சனா, `` ஏய்! எஸ்ஜே! எப்படிடீ இருக்கே?`` என்று கேட்டபடி கையை நீட்ட, அவளும் சிரித்து அதே போல குசலம் விசாரித்தாள். பள்ளி தோழி, பக்கத்தில் அமர்ந்து படித்தவள், இவளை பலவாறு சிரிக்கவைத்தவள், என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாய் இருந்தாள் அஞ்சனா.

பக்கம் பக்கம் நின்று பேசுகையில், ஏனோ எல்லோரும் தாங்கள் இருவரையும் மிக உற்று பார்ப்பது போல தோன்றியது அஞ்சனாவிற்கு. ஆனால் general compartmentல் பெரும்பாலும் பெண்களை பார்க்கமுடியாது. இந்த கூட்டத்தில் இரு பெண்கள் சிரித்து பேசுவதால் இருக்கும் என்று அதை அதிகம் சட்டை செய்யவில்லை அஞ்சனா. சாயந்திரம் கிளம்பி சென்று சித்தி வீட்டில் தங்கி, காலை வேலையெல்லாம் முடித்து திரும்புவதற்காக அஞ்சனா ஒரு சிறு பையை எடுத்திருந்தாள். சென்னை சென்று சேரும்போது எப்படியும் இருட்டத்தொடங்கிவிடும். இருப்பினும் சித்தி வீடு வெகு அருகில் தான், அதனால் ஒன்றும் தொந்திரவு இல்லை என்று சென்றுக்கொண்டிருந்தாள் அஞ்சனா.

எஸ்ஜேயை பற்றி கேட்க, அவள் சிரிப்பு குறைந்து, ``அம்மா காலமாயிட்டாங்கடீ. ஆறு வருஷம் ஆகுது!`` என்றாள். அஞ்சனாவிற்கு மிகவும் வேதனையாகி போனது. தம்பி பம்பாய் பக்கம் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும், கல்லூரி படிப்பு பாதியிலேயே நிறுத்திவிட்டதாகவும், இவள் தனியாக இருப்பதாகவும் சொன்னாள். திருமணம் பற்றி அஞ்சனா கேட்க, ஏதோ ஒரு பதில் மழுப்பலாக சொல்லி, இரண்டு குழந்தைகள் இருப்பதாக சொன்னாள். கைப்பையில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்ட, ஒரு ஆண்குழந்தை 4 வயதிலும் பெண் குழந்தை 5 வயதிலும் இருந்தார்கள். நல்ல சிவப்பாய் பார்க்க, கொழு கொழுவென வட இந்தியப்பிள்ளைகள் போல இருந்தார்கள். ``வேலையா போறியாடீ, சென்னைக்கு?`` என்ற கேட்ட கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் வந்தது.

அஞ்சனாவோடு பேசிக்கொண்டே எஸ்ஜேயின் கண்கள் அப்படியும் இப்படியுமாக சுற்றியபடியே இருந்தது. ஏதோ ஒரு விஷயம் நெருடலாக பட்டப்போதும், அஞ்சனா வெகு நாள் கழித்து சந்தித்த தோழியிடம், பள்ளி நினைவுகளில் மூழ்கிப்போனாள். நினைவில் இருந்தவர்கள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்டாள் அஞ்சனா. அவளுடன் படித்து எல்லோருக்கும் திருமணம் ஆகி, ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் இருந்தார்கள். இப்படியே கதைகள் பேசியபடி இருக்க, நன்கு வானம் இருட்டி விட்டு இருந்தது. இருட்டில் ரயிலில் செல்ல அஞ்சனாவிற்கு பிடிக்கும். கண்களை லேசாக சுருக்கி, ஓடும் வண்டியின் வெளியே பார்க்க, வெளியே இருட்டில் தாண்டி செல்லும் கடைகள், வீடுகளின் வெளிச்சம் கோடு போட்டாற் போல தொடர்ந்தது.

சென்னை மெதுவாக வந்து சேர, எஸ்ஜே ஏனோ பரபரப்பாக தோன்றினாள். மணி ஏழரை ஆகியிருந்தது. அஞ்சனா ஒரு வெளிர் நீல சல்வார் அணிந்திருந்தாள், தோழி சிகப்பில் கருப்பு பூக்கள் போட்ட ஒரு சேலை அணிந்திருந்தாள். சென்னை செண்ட்ரல் வந்து இறங்கி மெதுவாக நடக்க தொடங்கினார்கள். எஸ்ஜே வண்டியை விட்டு இறங்கியதும், `` நான் கிளம்புறேண்டி. அப்புறமா சந்திக்கலாம்`` என்றாள். அஞ்சனா அதற்கு, `` ஏண்டி பறக்கிற! இரு.. என் கூட வந்து டிபனாவது சாப்பிட்டு போ, please’’ என்றாள். ஆனால் அவள் மறுக்க, அஞ்சனா தொல்லை செய்ய அங்கு ஒரு tug of war நடந்தது.

இரு பெண்களும் ரயிலை விட்டு இறங்கி நடக்க, அந்த நேரத்தில் ஸ்டேஷனில் நிறைய கூட்டம் இருந்தது. மெல்ல கூட்டத்தை விலக்கியபடி, அஞ்சனா பேசிக்கொண்டே நடக்க, எஸ்ஜே ஒன்றுமே பேசவில்லை. அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அஞ்சனா. ஏதோ சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலையில் இருப்பது போல தோன்றியது எஸ்ஜேயின் முகம். அஞ்சனா ஒன்றும் சொல்லாது இப்போது நடக்க, இவர்களை சில பேர் உற்று பார்ப்பதும், இவர்களை ஒட்டி நடப்பதாகவும் தோன்றியது அஞ்சனாவிற்கு. நிறைய ஆண்கள் தங்களை பார்த்து அவர்களுக்குள் சிரித்துக்கொள்வதும், இவர்களை காட்டி ஏதோ பேசுவதுமாக பட்டது. பக்கத்தில் எஸ்ஜே ஒன்றுமே பேசாது, தலையை குனிந்து நடந்துக்கொண்டிருந்தாள்.

ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து, செண்டரலின் எதிரே இருக்கும் கார் பார்க் வழியே நடந்தார்கள் இரு பெண்களும். அஞ்சனா கேட்டாள், `` எஸ்ஜே, நீ ஏதோ கஷ்டத்தில இருக்கே போல இருக்கு. எங்க drop செய்யணும் சொல்லு, சாப்பிட்டு விட்டு, நானே கொண்டு வந்து விடறேன்`` என்றாள். கொஞ்சம் கூட்டம் குறைவாக, லேசாக இருட்டாக இருக்கும் இடத்தை அடைந்தபோது தான், மூன்று ஆண்கள் அவர்களை பின் தொடர்ந்து வருவது தெரிந்தது. அஞ்சனா திரும்பி பார்த்து, ``வா எஸ்ஜே! யாரோ நம்மை follow செய்றாங்க. வேகமா போகலாம்`` என்று சொல்லி முடிப்பதற்குள், அந்த மூன்று பேரும் இவர்கள் நடப்பதை தடுத்தாற் போல நின்றார்கள். அஞ்சனாவிற்கு பயங்கர கோபம், இப்படி ஒரு public placeல், வரைமுறை, நாகரிகம் இல்லாது இப்படி நடந்துக்கொள்கிறார்களே என்று. பார்ப்பதற்கு decent ஆக உடையுடுத்தி, படித்தவர்கள் போல தான் தெரிந்தார்கள் மூன்று பேர்களும். அஞ்சனா என்ன வேண்டும் என்று கேட்பதற்குள், அவர்கள் பேச தொடங்கினார்கள்.

அந்த கூட்டத்தில் ஒல்லியாக இருந்த ஒருவன் எஸ்ஜேவை தொட்டு, `` என்னடி இன்னைக்கு இத்தனை நேரம் வர உனக்கு`` என்றான். அஞ்சனா எஸ்ஜேவின் முகத்தை, இவர்களை தெரியுமா என்று கேட்பது போல பார்த்துக் கொண்டு நிற்க, அவள் தலை குனிந்து நின்றுக்கொண்டிருந்தாள். தாடி லேசாக வளர்த்து, பல்லில் கறை படிந்திருந்த இன்னொருத்தன் கேட்டான், ``வேற ஏதாவது customer இருந்திருப்பாங்கடா. முடிச்சுட்டு வரணும்ல. பாவம்!`` என்றான் இளித்தப்படி. அதுவரை பேசாது நின்ற தடிமனான மீசை வைத்திருந்த இருந்தவன், அஞ்சனாவை பார்த்து, `` இல்லடா! நம்ம மூணு பேர் இல்ல, அது தான் கூட இன்னொருத்தியையும் ready பண்ணிக்கூப்பிட்டு வந்திருக்கா! ஏற்கனவே கேட்டு இருந்தோம்ல!`` என்று சொல்லிக்கொண்டே மேலும் கீழும் பார்த்தான். அஞ்சனா தன்னை சுற்றி நடப்பதை கிரகிப்பதற்குள், ஒருவன் மிக அருகில் வந்து, பின்னால் ஒட்டியபடி நிற்க, அஞ்சனா பதறி விலக, எஸ்ஜே, `` அவ அப்படிப்பட்டவ இல்லடா. நாம் கிளம்பலாம்`` என்றாள்.

அவர்களுள் ஒருத்தன் சொன்னான், `` இவளுங்களுக்கு இதே வேலைடா. இப்படி சொல்லியே rate ஏத்துவாளுங்க. ஏண்டி செய்யுறது தேவடியா தொழில். அப்புறம் என்ன, ஏதோ புதுசா சமைஞ்ச பொண்ணு மாதிரி scene போடுறீங்க. இவ நல்லா வாட்டசாட்டமா கிண்ணுன்னு தான் இருக்கா.. சொல்லுடீ, சீக்கிரம். வழக்கமான room போட்டு இருக்கேன். சரக்கும் ரெடியா இருக்கு. போவோம்`` என்றதை கேட்டு, அஞ்சனா அசந்து போய் நின்றாள். அவள் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கு முன் நின்றதே இல்லை. மருத்துவ படிப்பு தொடங்கியதில் இருந்தே எங்கு சென்றாலும், தன் குடும்பம் பற்றி தெரியாதவர்கள் கூட, என்ன படிப்பு என்ற கேட்டவுடன் ஒரு தனி மரியாதையும் மதிப்பும் கொடுத்தே எல்லோரும் பேசுவார்கள், இன்று முதன்முதல் இப்படி ஒருவன் கேவலமாக பேசி கொண்டிருப்பதை கேட்டு, உறைந்து போய் நின்றாள். அதை விடவும் அதிர்ச்சி, அவளுக்கு எஸ்ஜேயை பற்றி யோசிக்கையில். இவள் இப்படி ஒரு தொழில் செய்பவளாகி விட்டாளா அல்லது இந்த ஆண்கள் வேறு யாரோ என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார்களா என்று புரியாது நின்றாள்.

எஸ்ஜே அவர்கள் மூவரிடமும், `` நம்ம கிளம்பலாம்`` என்றாள், அஞ்சனாவின் பக்கமே திரும்பாது. அவர்களில் ஒருவன் இன்னமும் அஞ்சனாவை ஒட்டியபடி நின்று ஏதோ வெகு கேவலமாக சொல்ல, அது வரை அமைதியாக இருந்த எஸ்ஜே, கோபம் விரக்தி எரிச்சல் ஏமாற்றம் அவமானம் கலந்த தொணியில், அந்த மூவரை பார்த்து இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் பேசினாள். பேச்சின் சாராம்சம், உங்க மூணு பேருக்கு company கொடுக்க, நான் தான் வரேன்ல. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு சொல்லுறேன். வாங்க இங்கு இருந்து கிளம்பலாம் என்பது தான். அஞ்சனாவை எது உலுக்கியது என்றே தெரியவில்லை, இந்த ஐந்து நிமிடங்கள் கனவா என்பது போல பார்த்துக்கொண்டு நிற்க, அந்த மூன்று பேரும் எஸ்ஜேவும் அங்கு இருந்து நகர தொடங்கினார்கள். ஒருவன் அஞ்சனாவின் பக்கமாக திரும்ப வந்து, `` நீ புதுசு போல இருக்கே. வேணும்னா நான் மட்டும் வரேன். போலாம். என்ன rate சொல்லு, பயப்படாதே டீ. உன் பேரென்ன`` என்று கேட்க, கன்னம் சட்டென எரிந்தது அவளுக்கு. அவனுடைய தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து, எப்போது கூப்பிட்டாலும் சரி என்று சொல்லி, இடுப்பை யாரும் பார்க்கா வண்ணம் தடவி விட்டுப்போனான்.

கொஞ்சம் நேரம் நின்ற இடத்தில் இருந்து காலே எடுக்க முடியவில்லை, அஞ்சனாவால். எஸ்ஜே ஒன்றுமே பேசாது, சிறிது தூரம் சென்று பின் திரும்பி பார்த்து, ``நான் வரேண்டீ. Sorry ‘’ என்று சொல்லிவிட்டு சென்றேவிட்டாள், ஒரு ஆட்டோவில் ஏறி, அந்த மூவருடனும். இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த சம்பவம் மனதை வதைத்தது. எது கடினமாக இருந்தது என்று தெரியவில்லை, தன் வயதொத்த நல்ல குடும்பத்தை சேர்ந்த தன்னுடைய தோழி, இப்படி உலகின் பழைய தொழில் செய்யத்தொடங்கியதா, அல்லது பிள்ளைகளை காப்பாற்ற வேறு வழியே இல்லாது இப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு தாயின் நிலையா, அத்தோடு முதன்முறை தன்னை பார்த்து ஒருவன் தன் விலை என்ன என்று கேட்டு கொச்சைப்படுத்தியதா என்று புரியாது, வெகுவாக மனம் நொந்தாள்.

அதன்பின் பலமுறை எஸ்ஜே எங்கு இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்க, அவளால் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதற்குள் சேய்ஷல்ஸ் கிளம்பி வந்தும் ஆகிவிட்டது. இங்கு இன்று இப்படி ஒரு நிகழ்வு மீண்டும் அவளை எஸ்ஜேயை நினைக்க வைத்தது. இதெல்லாம் யோசித்தப்படியே உறங்கி போனாள் அஞ்சனா, இன்னும் ஒரு கனவில் மீண்டும் மேலிருந்து கீழே விழுவது போல எண்ணியபடி. 

- யமுனா ராகவன்

     




தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com