தமிழ் அமைப்புகளுக்குள் தனிநபர்களுக்குள் பரிமாற்றம் நிகழ்வதும் காலத்தின் அவசியமாய் கருதுகிறோம். விருப்பம் உடையவர்கள் தங்கள் அமைப்பு குறித்தும் தங்கள் செயல்பாடுகள், இலக்குகள் குறித்தும் காட்சிக்கு கட்டுரையாய் எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொண்டோம். அவ்வேண்டுகோளுக்கிணங்க மும்பையிலிருந்து தோழர் மகிழ்நன் தன்னைக் குறித்தும் விழித்தெழு இளைஞர் இயக்கம் குறித்தும் அறிமுகத்தை நமக்குத் தருகின்றார். அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
நான் மகிழ்நன். தமிழர்களுக்கு பொதுப்படையாகிப்போன அகதி வாழ்க்கை என் பெற்றோர்களையும் போன தலைமுறையிலேயே துரத்தி இருந்தது. தமிழர்களில் பொது பண்பாடாகிப்போன சாதியத்தால் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் மதிப்போடு வாழ வழியில்லாத நிலையில், பிழைக்க வழி தேடி மும்பை நகருக்கு தஞ்சம் புகுந்தனர். 1984 இல் நான் பிறந்தேன்...நான் பிறக்கும் முன்பே ஈழத்தில் ஆயுத போராட்டம் தொடங்கியிருந்தது என்பதை இப்பொழுது வரலாற்றை பின்னோக்கி பார்த்தபோது அறிந்து கொண்டேன். நான் பிறக்கும் முன்பே தொடங்கிய விடுதலைப்போராட்டம் நான் வாலிபனாக வளரும் வரை நீடித்து நின்றிருக்கிறது, இன்று அது பெரும் பின்னடவை சந்தித்திருக்கிறது என்பதை நினைக்கும் போதுதான் உள்ளம் பெரும் ரணத்திற்கு உள்ளாகிறது.
அறியா பருவத்தில் தெருக்களில் விளையாடி திரிந்த நாட்களில் ராஜீவ் காந்தி என்ற நபர் குண்டுவெடிப்பில் இறந்து போனார் என்பதும், மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்பதும் உள்ளத்தில் மங்கலாக பதிந்திருந்தது. ஆனால், அதற்கு பின் நின்ற ஈழமக்களின் துயர் கலந்த வரலாறு 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரிந்ததேயில்லை..ஏன் தமிழே எனக்கு அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது இல்லை. காரணம் எனது மூத்த தலைமுறையினரிடமிருந்த அக்கறையின்மை. வரலாற்றை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டுமென்ற அக்கறையின்மை. இந்த பிழையை நாம் இந்த தலைமுறையிலாவது திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அக்கறையின்மை என்று மட்டும் சில நேரங்களில் சுருக்கவும் முடிவதில்லை ஏனென்றால் வறுமை அதற்கும் மேலான பொது காரணமாக இருந்தது என்பதும் உழைக்கும் மக்களுக்கான ஆதரவுச் செய்தியாக நிற்கும், இதில் பெரும் பணம் படைத்த, அரசியல் அதிகாரம் கொண்ட முதலைகளுக்கு கண்டிப்பாக மன்னிப்பு கிடையாது.
நான் வளர்ந்த மராத்திய சூழலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற உளவியல் படிந்திருந்ததால், மராத்தியர்களின் பண்பாடு,மொழி போன்றவற்றில் இயல்பாக ஆர்வம் தொற்றிக் கொண்டது. மராத்தியர்களோடே திரிந்தேன். மராத்தி மொழி இயல்பாக பேசும் அளவு கற்றுக் கொண்டேன்.என்னை மராத்தியனாகவே கருதிக் கொள்ள தொடங்கியிருந்தேன்.மும்பையில் கொண்டாடப்படும் விழாக்களில் மிக முக்கியமானவை பிள்ளையார் சதுர்த்தியும், தசராவும். அப்படி கொண்டாடப்படும் தசரா பண்டிகையில் கோலாட்டம் விளையாடுவார்கள். நானும் என் மராத்தி நண்பர்களோடு கலந்து கொள்ள சென்றதும், அங்கே நான் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும்...என் உள்ளத்தில் வடுவாக பதிந்தது. நான் கண்டிப்பாக மராத்தியனில்லை, எனக்கான வேர் வேறு? நான் தமிழை தாய்மொழியாக கொண்டவன். எனது அடையாளங்களை நூல்களில் தேடத் தொடங்கினேன். அந்த தேடல் பெரியார் என்னும் தலைவனை எனக்கு அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம் தமிழையும் தன்மதிப்பையும் என்னுள் விதைத்தது.
இதற்கிடையே அன்றாடம் செய்தித்தாள்களில் காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா என்ற சொற்களின் பின்னின்ற செய்திகள் தமிழர்கள் ஏன் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்? என்ற கேள்வியை என்னுள் விதைத்தது.
அதோடு, பெரியாரை குறித்த வாசிப்பு பார்ப்பனிய, பனியா அதிகார வர்க்கத்தின் சுரண்டல் வெறியை அம்பலப்படுத்தியது, இந்திய சுதந்திரத்தின் மீதான பெரியாரின் அணுகுமுறை, நான் இந்தியன் என்று கொண்டிருந்த போலி பெருமிதத்தை தகர்த்தது. ஆனாலும், நான் இந்தியன் என்ற அடையாளத்தை வெறுக்கவில்லை.
என் நாடு என்ற சொல்லப்படும் நிலப்பரப்பில் என் தாய்மொழிக்கான மதிப்பு ஏன் இல்லை? நான் ஏன் இன்னொருவனின் மொழியை வலிந்து கற்றுக்கொள்ள செய்யப்படுகிறேன்.
தமிழர்களை மும்பையிலேயே அடித்தார்களாமே? தமிழர்கள் இந்தியர்கள் என்றுதானே கூறப்படுகிறார்கள் பின் ஏன் அடித்தார்கள். அதோடு அந்த கலவரத்தின் போது தமிழர்களை கேலி செய்ய, ஒடுக்க பயன்படுத்திய இன்றும் சில நேரங்களில் தமிழர்களை கேலி செய்ய பயன்படுத்தப்படுகிறது மராத்தியர்களா. அது "லுங்கி உடாவ், புங்கி பஜாவ்" என்ற வாசகம்தான்.
கர்நாடகத்திலும் அடித்தார்களாமே? தமிழர்களை மட்டும் ஏன் அடிக்கிறார்கள்...............
இப்படி பல கேள்விகள் ஒழுங்குமுறையில்லாமல் எழுந்தது என்றாலும், எழுந்தது என்ற நல்ல செய்திதான் எனக்கு தியாகமே உருவான ஈழப்போராட்டத்தை அறிமுகப்படுத்தியது.
முதலில் நான் ஈழ வரலாற்றை கூர்ந்து கவனிக்க தொடங்கியதற்கான காரணம் திலீபனேயன்றி, பிரபாகரனல்ல. அந்த தியாகச்சுடர் உணவு, உட்கொள்ளாமல் தன் உயிரை தன் மக்களின் உரிமைக்காக நீத்தது பெரும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது. (அதையும் கூட காலம் கடந்து நுண்குறுந்தகட்டில்தான் கண்டேன்.) என் மொழி பேசுகின்ற என் சகோதரன் திலீபனின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் இந்திய அதிகார வர்க்கம் என்றவுடன்...........நான் இந்தியா என்ற பிம்பத்தில் வெகுவாக விலகி வந்து விட்டேன் என்பதை வெகுவிரையில் உணர்ந்தேன். நான் இந்தியனில்லை.......இந்தியா என்ற அரசியல் ரீதியான செயற்கையான நிலப்பரப்பிற்குட்பட்ட பகுதியில் பிறந்த தமிழன் என்பதை கொஞ்சம் அழுத்தமாக புரிந்து கொண்டேன்.
வேறு மாநிலமாக இருந்தாலும் ஆழ்ந்த வாசிப்பு தளத்தை உருவாக்கி கொடுத்த திராவிட கழக இயக்க தோழர்கள்தான் நான் விரும்பும் மாற்று அரசியலுக்கான முன்னோடிகள். ஆனால், ஈழத்தில் போரின் உக்கிரம் வெகுவாக இருந்த காலக்கட்டத்தில் அங்கு இந்திய அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்த வேண்டிய மிக முக்கிய பொறுப்பிருந்தும், திமுகவின் துரோகத்திற்கு துணைபோவது போல், திமுக ஆதரவு தளத்திலேயே திராவிடர் கழக தலைமை தமிழகத்தில் இயங்கி வந்தது மும்பையில் உள்ள திராவிடர் கழக தோழர்களுக்கு உளவியல் ரீதியாக பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது என்றாலும் பார்ப்பனீய எதிர்ப்புக்காக இருக்கும் சிறுபான்மை குழுவாக மும்பையில் இயங்கி வரும் தோழர்களை சிதறுண்டு போக அனுமதிக்க முடியாமல், தலைமையையும் எதிர்த்து முடிவு எடுக்க விரும்பாத சூழலில், வெறுமையான மௌனம் தோழர்களிடம் தொற்றிக் கொண்டது.
ஆனாலும், ஈழத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் திராவிடர் கழக தோழர்களுக்கு என்றும் மாற்றமிருந்ததில்லை வெளியே குமுறல்கள் கொட்டி தீர்ப்போம், ஆனால், அது கையாலாகத்தனத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது. ஈழத்திற்கு ஆதரவாக எதையாவது செய்ய வேண்டும், அரசியல் சார்பு கொஞ்சம் தயக்கம் கொடுத்தது...விடுதலை வேட்கை கனலாக எரிந்து கொண்டிருந்தது..உள்ள வேட்கைக்கு தீனி போடுவதற்காக ஈழத்திற்கு ஆதரவான பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யலாமென்று முடிவு செய்தோம். ஆனால், மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதே நேரத்தில் நடந்ததால் காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர். தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தலாமென்றால், எந்த அமைப்பின் சார்பாக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கினோமோ..அந்த அமைப்பினர் தங்கள் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டு விடக்கூடாது, ,மேற்கொண்டு கூட்டங்களுக்கு அனுமதி வேண்டுமென்று ஏதேதோ காரணங்கள் சொல்லி தவிர்த்துவிட்டனர். சரியான வழி காட்டும் தலைமையில்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம்.
இனி ஏற்கனவே உருவாகி, இறுகி போயிருந்த தலைமைகளை நம்புவதில்லை, நம்மிடமிருந்தே தலைமையை உருவாக்குவோம் என்ற முடிவுக்கு வந்தோம். விழித்தெழு இளைஞர் இயக்கம் என்ற அமைப்பை கட்டினோம். பல்வேறு அமைப்புகளில் குமுறல்கள்களோடு இருந்த இளைஞர்களை ஒன்று திரட்டினோம். முத்துக்குமாரின் தியாகத்தீ மேலும் எங்களுக்குள் புகைந்து கொண்டிருந்த கனலை மேலும் மூட்டியது. பொதுக்கூட்டங்கள், 40,000 தமிழர்களை திரட்டி மனிதச்சங்கிலி, தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் ,உருவப்படங்கள் எரிப்பு, தமிழர்களை தமிழர்களாக சாதி மதம் கடந்து ஒன்று திரட்டுவதற்கு நமது பண்பாட்டை பறைச்சாற்றும் விழாக்கள், பகுத்தறிவையும், விடுதலை வேட்கையையும் எழுப்பும் பொதுக்கூட்டங்கள் என எங்கள் சக்திக்குட்பட்டு மும்பையில் நடத்தி வந்தோம், வருகிறோம்...
இதோ இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதில் கூட மும்பையில் எமது தோழர்கள் சிலர் சல்மான் கான் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து கைதாகியிருக்கின்றனர்.
ஆனால், இவ்வளவு இருந்தும் எனக்கும் எம் தோழர்களுக்கும் நாங்கள் உண்மையிலேயே தமிழர்களா?என்ற ஐயத்தை இன்று வரை ஏற்படுத்தியிருக்கிறது....
அந்த அனுபவம் நள்ளிரவில் இரவு 12 மணிக்கு மேல், என் அமைப்பு தோழன் ஒருவனின் நெஞ்சில் பூட்ஸ் காலால் மிதித்து எழுப்பட்ட கேள்வி?
மும்பை தமிழர்களை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாபெரும் மனிதச்சங்கிலியில் திரட்ட, முன் அனுபவம் ஏதுமில்லாது, தன்னலம் கருதாது இரவு, பகலாக உழைத்தனர் எமது தோழர்கள். அரசியல் கொட்டை தின்று பழம் போட்ட(?) அறிவாளிகளுக்கு இந்த முயற்சியை தங்களது அரசியல் சார்புக்காக பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். மறுநாள் செய்தித்தாள்களிலும் மனிதச்சங்கிலியினை அந்த அரசியல் களவாணிகள் தாங்கள் நடத்தியதாகவே ஊடகத்திலிருக்கும் தங்கள் ஆதிக்கத்தை பயன்படுத்தி செய்தியாக வெளியிட்டுக் கொண்டனர்..எங்கள் பெயர் வரவில்லையே என்பதல்ல........எங்கள் வருத்தம்..நேர்மையான உழைப்பை அரசியல் களவாணிகள் திருடிவிட்டார்களே என்ற கோபத்தில் அந்த பத்திரிக்கை அலுவலகம், அந்த குறிப்பிட்ட ஆதிக்க சாதி பாஜக உறுப்பினர் என அனைவரையும் கண்டிக்க............
சாதிய, அதிகார பின்புலத்தை தேடி, யார் பலவீனமானவர் என்பதை தேடி...எம்மை தாக்க முயற்சித்ததில் தாக்கப்பட்டார் எம் தோழர்.
அந்த சக்திகள் நெஞ்சிலேறி மிதித்ததில் எமக்கு தோன்றிய கேள்வி நாம்தான் தமிழர்களா?
தமிழர்களே, நீங்கள் நம் இனத்திற்காக உயிரையெல்லாம் விட வேண்டாம், முதலில் சாதி, மத கருமத்தை கொஞ்சம் விடுங்கள்..அப்புறம் பார்க்கலாம் நம் இன ஒற்றுமையை.
எம் இயக்க தோழர்களை தொடர்பு கொள்ள:
விழித்தெழு இளைஞர் இயக்கம்:
சிரீதர்:9702481441
பாண்டியன்:9821072848
மகிழ்நன்:9042274184
