பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 15, 2010

காலச்சாமிகோவில் தெருக்குறிப்புகள் - மாரிசெல்வராஜ்

நான் இப்போது உங்களை அழைத்து வந்திருக்கும் இடம் என் கிராமத்தில் உள்ள காலசாமிகோவில் தெருவிற்கு. ஏன் எதற்கு என்று கேட்கிறீர்களா…இன்று எங்கள்  மதிப்பிற்குரிய தோழர் திரு.ராமகிருஸ்ணன்  இறந்துவிட்டார். அவர் சாதாரணமானவர் அல்ல. காலசாமிகொவில் தெருவின் முதல் அடையாளம். எங்கள் கிராமத்தின் முதல் அங்கீகாரம். ஒரு தெரு  வாசியாக அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது என்  கடமை. ஆகையால்தான்  என்னோடு என்  நண்பர்களாகிய உங்களையும் இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

அதோ பாருங்கள்! பத்து வீடு தள்ளி தெரியும் அந்த வேப்பமரத்திற்கு அடுத்த வீடுதான் தோழர் வீடு. பாருங்கள் எவ்வளவு கூட்டம் கேளுங்கள் எவ்வளவு அழுகை. ஆமாம் யாராலும் தாங்கிகொள்ள முடியாது அவரது இறப்பை ஏனென்றால் அவர் வாழ்வு அப்படி. அவரை பற்றி சொல்லுவதற்கு முன் அவர் வாழ்ந்து ஆட்சி செய்த காலசாமிகோவில் தெருவை பற்றி உங்களுக்கு சொல்லிவிடுவது என் அவசியம் என்று நினைக்கிறேன்.

காலசாமிக்கோவில் தெருவில் நான்கு வேப்பமரங்களும் ஒரே ஒரு புளியமரமும் இருக்கிறது அப்புறம் ஆங்காங்கே நீங்கள் பார்த்து முகம் சுழிப்பது போல முள் மரங்களும் வளர்ந்து கிடக்கிறது. எட்டு மின்கம்பங்கள் இருந்தாலும் மூன்று மின்கம்பங்களில் விளக்கு எரியாது. அந்த அலைந்து திரியும் நாய்களை கணக்கிட்டால் ஒன்பது தேறும்.  நான்கு கடிநாய் அதில் ஒன்று கர்ப்பம் தரித்து திரிகிறது. உங்களுக்கு குறுக்கே ஓடும் பூனைகளை கணக்கிடவே முடியாது. ஏனெனில் இங்கு அடுத்த தெரு பூனைகளின் அத்துமீறலும் அடாவடித்தனம் அதிகமாக இருக்கும். எல்லா தெருவைபோல மழை தண்ணீர் கிழக்கு நோக்கிப்பாயாமல் மேற்கு நோக்கி பாயும் வசதி கொண்ட தெரு இது.

கிழக்கிலிருந்து முதல் வீட்டில் வசிப்பவர் சுந்தர்ராஜ். கேம்லாபாத் சாகுல்ஹமீதுவிடம் இருபது வருடங்களுக்கு மேலாக உழவனாக இருந்து வருகிறார். நான்கு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவான இவர் சாகுல்ஹமீதுவின் அத்தனை விவசாய நிலங்கங்களையும் தன் முழு பராமரிப்பில்தான் பார்த்து வருகிறார். என்றாவது ஒருநாள் அது நமது நிலமாகவும் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில்….

இடதுபக்கம் இரண்டாவது வீட்டில் வசிக்கிறாள் கண்ணகிசித்ரா. கண்ணகி என்பது அவளுக்கு தெருவில் வைத்திருக்கும் பட்டப்பெயர். கணவர் மாரடைப்பில் மூன்று வருடங்களுக்கு முன் தான் இறந்தார்.(இவள் தான் கொன்றதாக ஒரு பேச்சும் உண்டு) இரண்டு பெண்பிள்ளைகளோடு சாம்போரையன் ஐயர் வீட்டில் உழவு பார்க்கிறாள். காலையில் குழந்தைகளை எழுப்பும்போது மொத்த தெருவையும் எழுப்பும் சத்தம் அவளுக்கு. கோபம் வந்தால் தன்னை பற்றிய ரகசியங்களை தானே போட்டு உடைக்ககூடியவள். அப்படித்தான் ஒருநாள் அறுப்பு வயலில் “ஏய் என்னிய யாருன்னு நினைச்சீங்கடி நான் மொட்ட பிராமனன் சாம்போரையன் கவட்டையிலே கஞ்சி காய்ச்சி குடிச்சவடி” என்று கத்தி அவளே அம்பலபட்டுப்போனாள்.

அடுத்த மூன்று வீட்டிலும் ஆட்கள் இல்லை. ஒரு குடும்பம் திருப்பூர் பனியன் கடையில் வேலை செய்கிறது மீதி இரண்டு குடும்பங்கள் ஜாதக தோசம் இருப்பதாக மேலகடம்பாவிற்கு ஏனோ குடிபெயர்ந்து போய்விட்டார்கள்.

ஆறாவது வீடு ஊமையன் இளங்கோவன் வீடு. வாழ்நாள் முழுவதும் பொய்யே பேசாதவன். பாவம் பிறவி ஊமை. அம்மா வேறு இல்லை. அப்பாவோட குடி செலவிலிருந்து குண்டியில கட்டுற வேட்டி வரைக்கும் ஊமையனோட சம்பாத்தியம் தான். எல்லா வேலைக்கும் போவான். உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன் கண்ணகிசித்ராவோட இரண்டாவது பொண்ணு எட்டாவது படிக்கிறா அவளதான் ஊமையன் காதலிக்கிறான் ஆனால் அந்த பொண்னு இன்னும் வயசுக்கு வரல…..

அந்த ஏழாவது வீட்டை பாருங்க அங்கத்தான் அதுலத்தான் ராமு அக்கா இருக்கா….ராமு அக்காவுக்கு 34 அல்லது 35 வயது இருக்கும்.இன்னும் கல்யாணம் ஆகல ஆனால் ஏழு வயசுல ஒரு பொம்பள பிள்ளை இருக்கு. அந்த கொடுமையை எப்படி சொல்றது பசுவந்தனையில் இருந்து ஆத்தாவோடு சமஞ்ச குமரியா பொழக்கிறதுக்கு இங்க வந்தாங்களாம். வந்த மூனு வருசத்துல அம்மாக்காரி செத்துப்போக தனியா இருந்து எல்லாருடைய வீடுகளிலும் காடுகளிலும் வேலை பார்த்து வயித்தை கழுவிக்கிட்டு இருந்த அவளுக்கு எவனோ பெரும்கூலியாய் புள்ளைய கொடுத்துட்டானுவ அவளும் தானே பெத்து தானே வளர்த்துகிட்டு இருக்கா. இப்பக்கூட இராத்திரி பத்து மணிக்கு மேல ஆம்பிளைங்க வீட்ல தங்கலனா எல்லா பொம்பளைங்களுக்கும் ராமு அக்காத்தான் பலிகடா. ஆனால் விடிஞ்சா சிரிச்சுகிட்டே கூப்பிட்டு பாத்திரம் தேய்க்கச்சொல்லுவாங்க அவளும் சிரிச்சுகிட்டே தேய்ப்பா தேய்க்கிறா……

எட்டாவது வீட்ல சூதாடி கணேசன் இருக்கான். எப்பவும் சீட்டாட்டம் தான். தோத்தா சண்டை. ஜெயிச்சா சரக்கு. ஏற்கனவே தலைவருக்கு அக்காவும் தங்கச்சியுமாவே இரண்டு பொண்டாட்டி. இது போதாதுன்னு கருங்குளம் ஹைஸ்ஸூகூல்ல பத்தாவது படிக்கிற தங்க ஆசாரி பொண்ணு மாரியம்மாளையும் காதலிக்கிறார், அதுவும். என்னைக்கு அசிங்கப்பட போறாங்களோ……..

ஒன்பதாவது வீடுதான் என் வீடு. கதைசொல்லியின் வீடு என்று வைத்துக்கொள்ளுங்கள். சொல்றதுக்கு பெரிசா ஒன்னுமில்லை அம்மா சமைச்சுகிட்டு இருப்பா, அப்பா என்னை திட்டிக்கிட்டு இருப்பார், ஆச்சி என்னை தேடிகிட்டு இருப்பா அந்த  புது நாய் எப்பவும் போல குலைச்சிகிட்டு கிடக்கும் அவ்வளவுதான்.

அடுத்த வீடு தங்கராஜா மாமா வீடு. தங்கராஜா மாமா நெய்வேலியில் வேலை பார்த்தவர். மாமா கோயம்புத்தூரில் வேலை பார்த்தவர். மாமா திருச்சியில் வேலை பார்த்தவர், மாமா நாமக்கல்லில் வேலை பார்த்தவர், மாமா தஞ்சாவூரிலும் வேலை பார்த்தவர், ஆனால் என்ன வேலை பார்த்தார் என்பது எனக்கு சத்தியமாய் தெரியாது. எனக்கு மட்டுமல்ல அவரோட கடைசி பொண்ணு அந்த முண்டகண்ணி ராஜிக்கு கூட தெரியாது. நீங்கள் நினைப்பது போல ராஜிக்கும் எனக்கும் எதாவது………ம்கூம் அதற்கு வாய்ப்பேயில்லை அவள் ஏற்கனவே பள்ளிகூடத்திற்கு எதிரே பெட்டிக்கடை நடத்தும் முருகனை காதலிக்கிறாள்.

அடுத்த வீடு கோவிலுக்குரிய வீடு. அதற்கு அடுத்தது பூசாரி தாத்தா வீடு அதற்கு அப்புறம் அந்த வேப்பமரம் உள்ள வீடுதான் தோழர் ராமகிருஸ்ணன் வீடு.

தோழர் ராமகிருஸ்ணன் எனக்கு தாத்தா முறை. எங்க ஊரின் முதல் கம்யூனிஸ்ட அவர்தான். அதுவும் எப்படிபட்ட கம்யூனிஸ்ட்னு நினைக்கிறீங்க ஆகஸ்ட 15 இந்திய சுதந்திரதின நாளில் வீட்டின்முன் செங்கொடி ஏற்றி மார்க்ஸ் படத்திற்கு முன் உள்ள சாக்லட் எடுத்து எல்லாருக்கும் கொடுப்பார். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கோவில் கணக்கு வழக்கு எல்லாம் அவர் தான் பார்த்துவந்தார். வயது 55 தாண்டினாலும் இன்னும் மீசை நரைக்கவில்லை. ஊரில் முதன்முதலில் கண்ணாடி அணிந்ததால் அவருக்கு குழந்தைகளிடம் கண்ணாடிதாத்தா என்ற பெயரும் உண்டு. ஊரில் இந்த தெருவில் நடந்த எல்லா நல்ல காரியங்களிலும் அவரது உழைப்புதான் அதிகமிருக்கும். அதோ அந்த வாட்டர் டேங் அதை அவர்தான் நடுரோட்ல எங்கள படுக்கவைச்சு பஸ்ச மறிச்சு கட்டவைச்சார்.அந்த சமுதாயநலக்கூடம், விவசாயசங்கம், பொதுகழிப்பறை எல்லாம் அவரால் அவர் போராட்டத்தால் வந்ததுதான்.

பாண்டியன் தெரு மக்களுக்கு காலணி வீடுகள் கட்டிகொடுக்க சொல்லி திருவைகுண்டம் தாலுகா ஆபிஸ் முன்னாடி மூனு நாள் உண்ணாவிரதம் இருந்திருக்கார். வெள்ளத்தை பார்வையிட வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பார்க்க போகாத ஒரே ஆள் தோழர் ராமகிருஸ்ணன் தானாம். பெட்டைக்குளம் நீர் பாசண மடையை இந்த வருடம் சரியான நேரத்தில் திறந்துவிட்டதில் அவர் நடத்தியப் போராட்டத்தை எப்படி சொல்ல. ஆனால் பாவம் மனுசனுக்கு புள்ளையும் இல்ல பொண்டாட்டியும் பத்து வருசத்துக்கு முன்னாடியே போய்ட்டாங்க.

பங்குனி, சித்திரை மாச கோடையில் மழை பெய்வதே ராமகிருஸ்ணண் இருக்கிறதாலத்தாம்னு கிழவிங்க கூட பேசிக்குவாங்க….நாங்க எல்லாருமே தோழர் ராமகிருஸ்ணன் அய்யாவுக்கு சாவே கிடையாதுன்னுதான் நம்பினோம். ஆனால் இன்னைக்கு தூக்கத்துலயே அவர் உயிர் பிரிஞ்சிபோச்சாம். சிகப்பு துண்டும் மனைவி சிவகாமி படமும் அவர் நெஞ்சு மேல கிடந்ததாம் எல்லாரும் சொன்னாங்க.

பக்கத்து ஊர்காரங்க, கட்சிகாரங்க எல்லாரும் வர்றாங்க. கூட்டம் அதிகமாகும் முன் வாருங்கள் அந்த நல்ல மனுசனுக்கு அஞ்சலி செலுத்திவிடலாம். அங்க பாருங்க ஊமையன் கிடந்து அழுறதை எப்படி அழாமல் இருப்பான். தோழரின் சைக்கிள் சினேகிதனாச்சே. ஒருவேளை பிள்ளையில்லாத தோழர் சடலத்துக்கு ஊமையன் தான் கொள்ளி வைப்பான் போல, பராவாயில்லை கணேசன் இன்று போதை ஏற்றாமல் எல்லா வேலையும் பார்க்கிறான்.ஆனால் தங்கராஜா மாமா எதுக்கு இவ்வளவு தேம்பி தேம்பி அழுகிறார் வாருங்கள் பக்கத்தில் போய் பார்ப்போம்.

“இதுவரைக்கும் பத்து ஊருக்கு என்னை வேலைக்கு அனுப்பி வைச்ச மகாராசா ஊட்டிக்கு அனுப்புறேம்னு சொல்லிட்டு அனுப்பாமலே போய்ட்டீங்களே ஐயா”. ச்சீ ரொம்ப முக்கியம் இவர் ஊட்டிக்கு போறது வாங்க நாம அந்த பக்கமா போகலாம். ஐயோ அங்க பாருங்க கண்ணகிசித்ரா பின்னாடி ராமு அக்கா தன் மகளை கையில் பிடித்தபடி கண்ணீரை தேக்கிவைத்து ஏதோ முனுமுனுக்கிறாள்

“என் மகளே ராசாத்தி அடியேய் சண்டாளி அங்க பார் அதோ சந்தணம் தேய்த்து புது மாப்பிள்ளை மாதிரி படுத்துகிடக்கிறானே அவந்தான் அந்த கிழவந்தான் அந்த ராசந்தான்  உன் அப்பா. அவர் மார்பில் போர்த்தியிருக்கிறார்களே ஒரு செங்கொடி அது ஊருக்கெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டபட்டாலும் நம் வீட்டு திண்ணையில மட்டும் தான் படுத்துறங்கியது என் செல்ல மகளே….ஒருவேளை அந்த கொடி இல்லையென்றால் உனக்கு என்றோ முத்தம் கொடுத்திருப்பார் என் மகளே…….அவரை நன்றாக பார்த்துக்கொள், உனக்கு கட்டிபிடிக்க வேண்டுமென்று தோன்றினாள் கட்டிபிடித்துக்கொள்,அவரும் மனுசந்தான் என்பதற்கு ஒரே சாட்சி நீ தான் மகளே, முத்தம் கொடுக்க நினைத்தால் தாமதிக்காமல் முத்தம் கொடுத்துவிடு, கல்லால் எறிந்து அவரை மண்டையை உடைக்க நினைத்தால் அவர் முகத்தை உன் நகத்தால் கிழிக்க நினைத்தாள் கிழித்துவிடு. இனி ஒருபோதும் உன் அப்பா யாரென்று உனக்கும் இந்த ஊருக்கும் நான் சொல்லபோவதில்லை. ஆம் எம்மவளே இனி நீ நானாகும் வரை உன் அப்பா யாரென்று மட்டும் என்னிடம் கேட்டுவிடாதே என் செல்ல மகளே”

என்னை மன்னித்துவிடுங்கள் மிகை ஒழுக்க யோக்கியவான்களான உங்களை எங்க தெருவுக்கு இந்த எழவு வீட்டிற்கு அழைத்து வந்தது என் தவறுதான். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வாருங்கள் நாம் கிளம்புவோம். நாம் வாழும் நகரத்தில் நமக்காய் நிறைய வாழ்வியல் கருத்தரங்குகள் நடந்துகொண்டிருக்கிறது.

- மாரிசெல்வராஜ்





தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com