பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 19, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் 11 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்  
 
பகுதி 11

   

அஞ்சனா படித்த `` Tears of pearl `` கதையில் வரும் அந்த அனாதை பெண்ணிற்கு சிரித்தால் உதட்டில் இருந்து சிகப்பு ரோஜாக்களும், தண்ணீரில் கை வைத்தால் வரும் தங்கமீன்குட்டிகளும், அழுதால் ஒவ்வொரு துளியில் இருந்தும் நிறைய முத்துக்களும்  வரும்படிக்கு வரம் தந்த அந்த மூன்று வெள்ளை அங்கி தேவதூதர்கள் தனக்கும் வந்து வரம் தந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தவள், பிறகு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாள். அந்த பெண் நல்ல பெண், சொல்பேச்சு கேட்டு நடப்பவள், எப்போதும் அமைதியாக இருப்பவள். ஆனால் அஞ்சனா குறும்பு நிறைய செய்பவள், நிறைய வம்பு சண்டை செய்பவள், பொய் பேசுவாள். அதனால் அவளுக்கு அந்த மூன்று பேரும் கட்டாயம், அழுதால் அழுகை தவளையாக மாறவும், சிரித்தால் பல்லிகள் வரவும், தண்ணீரில் பாம்பு வரும்படிக்கு தான் செய்யவைப்பார்கள் என்று யோசித்து அந்த எண்ணத்தை கைவிட்டாள் சிறுவயதில்.

ஆனால் அதை விட முக்கியமாக அஞ்சனாவிற்கு அழுகை பிடிக்காது போனதிற்கு காரணம், பாட்டி அண்ணாவிடமும் தம்பியிடமும் எதற்காகவாவது முகத்தை தூக்கிவைத்திருந்தால், `` ஏண்டா! பொம்பளைப்பிள்ளை மாதிரி அழறே `` என்று எப்போதும் சொல்லி கேட்டதால் தான். அழமட்டும் தான் பெண்பிள்ளைகளுக்கு தெரியும் என்பது போலவே எல்லோரும் பேசுவது தவறு என்று நிருபிக்கவே அழமறுத்தாள் அவள். அழுகை ஒரு கோழைத்தனமான செயல் என்றும் பலகீனமான விஷயம் என்றும் நம்பினாள். எந்த காரணமானாலும் ஒரு போதும் மற்றவர் முன் அழுகையை வெளிக்காட்டக்கூடாது என்று திடமான முடிவுடன் இருந்தாள்.  She wanted to break the concept of boys don’t cry... atleast wanted to put forth that girls don’t cry unnecessarily.
    
அஞ்சனாவின் பாட்டி இப்படி சொல்லி திட்டினாலும், அவள் சிறிது வளர்ந்து அவள் வீட்டு பெண்கள் எல்லோரையும் பார்க்க பார்க்க ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. பாட்டி சின்னம்மா 17 வயதில் திருமணமாகி 23 வயதிற்குள் 5 பிள்ளைகளோடும், அதற்குள் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி இருந்த தாத்தாவோடும் குடும்பம் நடத்தி எல்லோரையும் தனியாளாக ஒரு நல்ல வழிக்கு கொண்டு வந்தார். அம்மா 43 வயதில் விதவையானார் என்பதை மறந்து குடும்பத்திற்காக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். சின்னி அத்தை அஞ்சனாவிற்கு நினைவு தெரியும் முன்னரே இறந்து போய் இருந்தாலும், அவரும் ஒரு வித்தியாசமான பெண்ணாக தான் இருந்திருப்பார் என்று தோன்றியது.

சிட்டி அத்தை அஞ்சனாவின் மனதில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர். அஞ்சனா நாம் வளர்ந்தால் அத்தை போல தான் இருக்கணும் என்று எத்தனை முறை யோசித்து இருப்பாள் என்று கணக்கே இல்லை. Kinetic Honda ஓட்டிக்கொண்டு பறக்கும் அத்தை ஒரு மருத்துவர், சமூக சிந்தனை நிறைய உள்ளவர். மீசைவைக்காத பாரதியார் போல தோன்றும் அவளுக்கு. சட்டென மூக்கின் மேல் கோபம் வரும். அவர் கண்ணிற்கு எதாவது தவறாக பட்டால் உடனே கேள்வி கேட்பார். அது எங்கே என்றாலும் சரி. மற்றவர்கள் நமக்கென்ன என்று போகும் இடங்களில் இவர் நிமிர்ந்து நிற்பதை பார்க்கையில்,`` நம்மாலும் இப்படி இருக்க முடியுமா`` என்று தோன்றியது உண்டு. சரியான ஜாலி பட்டாசு. கோடை விடுமுறைகளில் கோவை செல்ல காத்திருப்பார்கள் அஞ்சனாவும், அண்ணாவும் தம்பியும். அப்போது ரேஸ் கோர்ஸ் காலணியில் தங்கியிருந்தார்கள் அத்தை.
 
அஞ்சனாவிற்கு கோவை பிடிக்க அவள் போகும் சமயம் எங்கு பார்த்தாலும் பூத்து இருந்த ஆரஞ்சு வண்ண மே மரங்களும், குளு குளு என்று கொஞ்சம் ஈரத்தோடு இருக்கும் தட்பவெப்ப சூழலும், சாயங்காலத்தில் ரேஸ் கோர்ஸ் முழுக்க நடந்து போகும் வழியெல்லாம் சிரித்து கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு இவர்கள் ஆறு பேரும் நடந்தது, வெள்ளை பளிங்கால் ஆன சாரதாம்பாள் கோயில், வெறுமே சுத்தி வர இருந்த சேரன் டவர்ஸ் போன்ற பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மட்டும் அல்லாது, அத்தையோடு இருக்கும் நேரங்களும் தான். ஒரு முறை ரேஸ் கோர்ஸ் அருகே இருந்த ஆண்கள் கல்லூரி விடுதியின் ஜன்னலில் இருந்து இவரை கிண்டல் செய்ய, அத்தை நேராக வண்டியை உள்ளே ஓட்டிக்கொண்டு சென்று, போட்ட சத்தத்தில் அந்த விடலைகள் எல்லாம் அலறிவிட்டார்களாம். சொந்த வாழ்வில் எத்தனை சோகம் இருப்பினும் குடும்பத்திற்காக எல்லாம் மறந்து வாழும் ஒருவர்.
 
நிம்மி சித்தியும், ஹேமா சித்தியும் வாழ்க்கையில் கடந்து வந்த நிகழ்வுகள் பல துயரமானதுதான். ஏதோ ஒருவிதத்தில் குடும்பத்தை தனியாக தான் ஏந்தி நடத்திவருகிறார்கள். இப்படி அவள் பார்த்த எல்லா பெண்களும் வாழ்க்கை கஷ்டத்தை கொடுக்கும்போதும் இன்னும் உறுதியாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆக ஏன் இன்னும் பெண்கள் அழமட்டும் இருப்பதாக நினைத்துக்கொள்கிறது உலகம் என்று புரியவில்லை அஞ்சனாவிற்கு.
 
எது எப்படியோ, எப்போதும் நம்முடைய மனநிலை ஒரு ரப்பர்பேண்ட் போல தான். There is only so much you can stretch... மனதின் கட்டமைப்புகள், நியாயங்கள், எதிர்மறைகள் எல்லாம் ஒரு சில மிதமிஞ்சிய கணத்தில் மறைந்து போகிறது. இது இயற்கையின் வழி. அப்படிப்பட்ட நேரங்களில் நம்மிடம் இருக்கும் மனவுறுதி, திடம், கோட்பாடுகள் எல்லாம் பரிட்சைக்குள்ளாகிறது காலம். அந்த சமயத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் ஒருவேளை பின்னொரு சமயம் நினைக்கையில் சிரிப்பாகவும் இருக்கலாம், வெறுப்பாகவும் இருக்கலாம். இந்த நொடியை breaking point, crumbling moment, succumbing second என்று எல்லாம் சொல்லலாம். எதற்காக, எந்த நேரம், யாரிடம் இதெல்லாம், யாரிடமோ நிலைமறக்கும் நிமிடங்கள் எல்லாரும் தாண்டி வந்தே ஆகவேண்டும் வாழ்க்கையில்.
 
அஞ்சனா வெகு நாள் கழித்து அழுகிறாள். அழுகையை பற்றி பலர் பலது சொன்னாலும், மனதிற்குள் பொதித்து வைத்து இருக்கும் கோபம், வெறுப்பு, ஆற்றாமை இது போன்றவற்றை கண்ணீர் கழுவி தான் விடுகிறது. Soul cleansing tears. மனசஞ்சலங்கள் கொஞ்சம் தெளிவானதும் புத்தி வேலை செய்யத் தொடங்கியது. நம்மை பைத்தியம் என்று நினைத்துக்கொள்ளப்போகிறான் என்று தோன்றி, அழுகையை நிறுத்தினாள், அஞ்சனா. டேமியன் கேட்டது ஒரே ஒன்று தான், அது, `` Feeling better ’’ என்பது. ம்ம்ம் என்று சொல்வதை தவிர வேறு ஏதுவும் சொல்ல தெரியவில்லை அவளுக்கு. அதன்பின் டேமியன் இப்படி ஒன்று நடந்ததே தெரியாதது போல பேசியது அஞ்சனாவிற்கு ஆறுதலாகவும், சங்கடமாகவும் இருந்தது. அந்த கணத்திற்கு பிறகு அவளிற்கும் டேமியனிற்கும் இடையே ஒரு அழகான நட்பும், நிறைய கருத்து பரிமாறிக் கொள்ள ஒரு ஆரோக்கியமான பாலம் அமைந்ததை இருவரும் உணர்ந்தாலும் அதை பற்றி ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.
 
அதன் பின் வந்த வாரங்களில் பல சாயங்கால வேளைகளில் இருவரும் தொலைப்பேசியில் பேசி பேசி இரவு நீண்டது இவர்கள் விவாதங்களால். அவனால் நேரம் போவது தெரியவில்லை. சந்தோஷமாக இருந்தது அஞ்சனாவிற்கு. டேமியனுடைய வாழ்க்கையை பற்றி கூறினான். அவனுடைய வீட்டிற்கு ஒரு முறை அழைத்துக்கொண்டு போனான், இவள் மாஹே சென்று இருந்த ஒரு வாரம். அவனுடைய தாயார் ரூத் ( Ruth ) மிகவும் அன்பானவள். வயது ஒரு 62 இருக்கும். அவளுடைய பாய்ஃப்ரெண்ட் டோனியோ ( Tonio ) அவளோடு வசித்துக்கொண்டிருந்தார். டேமியன் அந்த நிலத்திலேயே அவனுக்கொரு வீடு தானே கட்டிக்கொண்டு வசித்துக்கொண்டு வந்தான். ரூத், தோன் தோன் ( அப்படி தான் டோனியோவை டேமியன் அழைத்தான். அதற்கு sir அல்லது uncle என்று அர்த்தம் என்றான் ) இவர்களோடு ஒரு மதியவேளை உணவு உண்டு பிறகு ப்ராலின் திரும்பினாள் அஞ்சனா. டேமியன் சொன்னது அவளுக்கு அத்தனை வித்தியாசமாக இருந்தது.
 
டேமியனின் கூடப்பிறந்த 5 பேரில் முதலில் பிறந்த 3 பெண்களுக்கு ஒரு தந்தை, பிறகு பிறந்த இரண்டு ஆண்களுக்கு வேறு ஒரு தந்தை என்றும் இவனுடைய தந்தை வேறு ஒருவர் என்றும் தந்தை இறந்தபிறகு இப்போது வரை டோனியோவோடு இருப்பதாக சொன்னான். அஞ்சனாவால் இதை ஒரு சாதாரண நிகழ்வாய் யோசிக்கமுடியவில்லை. அஞ்சனா இந்தியாவின் பழக்கவழக்கங்கள் பற்றி சொல்லி, இப்படி யாரும் வாழ்வதில்லை. அப்படியே வாழ்ந்தாலும் அவர்கள் சமுதாயத்தில் நல்ல ரீதியில் பார்க்கப்படுவதில்லை என்றாள்.
 
டேமியன் சட்டென கேட்டான், `` who is your mom living with? `` என்று. அஞ்சனாவிற்கு இந்த கேள்வி குழப்பமாக இருந்தது. அவள் சொன்னாள், `` என் தந்தை இறந்தப்போது அம்மாவிற்கு 43 வயது. அதில் இருந்து தனியாக தான் இருக்கிறார். அவர்களோடு அண்ணாவும் தம்பியும் குடும்பத்தோடு இருக்கிறார்கள் `` என்று. அதற்கு அவன் கேட்டான், `` நீ ஒரு முற்போக்குவாதி போல வாழ்க்கையை பார்க்கிறாய். எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்கிறாய். உன் கண்ணோட்டத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் தேவையாக இருக்கிறது என்று பேசுகிறாய். உன் தாயை ஒரு பெண்ணாக நீ பார்த்திருக்கிறாயா? உன் தாயின் உடல் தேவைகள், மனத்தேவைகள், companionship இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி நினைத்திருக்கிறாயா? உன் வீட்டில் உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை வெளியே உள்ள பெண்கள் செய்யவில்லை என்று ஏங்குகிறாய். அதுவும் அப்படி செய்யாத பெண்கள் மனநிலை மாற்றவேண்டும் என்று வாய்கிழியப்பேசுகிறாய். ஆனால் என் தாயாரின் தேவைகளை உன்னால் நியாயமானதாக நினைக்க முடியவில்லை. உன்னாலேயே ஒத்துக்கொள்ளமுடியாதவைகளை பற்றி மணிக்கணக்கில் யோசிக்கிறாய். Don’t you realize that you are heights of Hypocrisy? ‘’ என்று கூறி கேலி செய்து சிரித்தான்.
 
யாரோ ஒருவர் நட்ட நடுவீதியில் நிற்கவைத்து செவிட்டில் பளார் என்று அறைந்தது போல இருந்தது. இந்த நொடி சுனிதா கிருஷ்ணன் சொல்லும் சில வார்த்தைகள் நினைவிற்கு வந்தது. 15 வயது இருந்தப்போது அவர் 8 ஆண்களால் வன்புணர்ச்சிக்கு ஆளானவர். இப்போது 40களில் இருக்கும் அவர் பெண்கள் குழந்தைகள் நலனிற்காக போராடி, பல இயக்கங்கள் நடத்திக்கொண்டு இருப்பவர். அவர் சொல்வார், ``நம்முடைய முற்போக்குவாதங்கள் எல்லாம் நம் வாசலோடேயே நிற்கும். வாசல் தாண்டி வரவிடாது கட்டுக்குள் வைத்து இருக்க நாம் செய்யும் செய்கைகளை பார்க்கும் போது, புரட்டாய் நடந்துக்கொள்வது எப்படி என்பதில் PhD படித்திருக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. We, as civil society, have Master Degree in victimising the victims. Biggest challenges, we have are the blocks we have as civilised society to accept, atleast acknowledge these changes. வெத்துப்பேச்சாய் பெண்ணுரிமை, சமுதாயம், சீர்திருத்தம் என்று பெரிய ஏசி வைத்த மேடையில் பேசுவது பகட்டாய் இருக்கும் நமக்கு, நம் வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கையில் ஏற்றுக்கொள்ள முடியுமா`` என்று கேட்பார்.
 
அஞ்சனாவை முதன்முதல் அவளுடைய தாயாரை பெண்ணாக பார்க்க சொல்கிறான் இவன். டேமியனிடம் சொல்ல அவளுக்கு ஒரு பதிலும் இல்லை. முதன்முதல் பேசமுடியாது அடங்கிப் போனாள். இதன்பின் டேமியனிடம் சொல்ல ஒன்றும் இல்லாது விடைப்பெற்று போனவள் அன்று இரவு முழுக்க தூங்க முடியாது தவித்தாள்.
 
அம்மாவை, அப்பா அல்லாத இன்னொரு ஆணோடு கற்பனை செய்து பார்ப்பது கொடுமை ஆக இருந்தது அஞ்சனாவிற்கு. ஆனால் அம்மாக்கள் எல்லோரும் திருமணம் ஆகிவந்த நாளில் இருந்து யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு நடந்தாக வேண்டும் என்ற சூழலில் தான் இருக்கிறார்கள். யோசித்துப்பார்க்கையில் தன்னை யாராவது வந்து இப்படி தான் வாழவேண்டும் என்று வரைமுறைக்குள் வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கையில் மிகவும் கஷ்டமாக இருந்தது. திருமணத்திற்கு முன் அப்பா, திருமணத்திற்கு பின் கணவர், கணவருக்கு பின் பிள்ளைகள், இப்படி அவள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவளை தாண்டி வேறு யாரோ ஒருவர் போட்டு வைத்திருக்கும் பாதையில் தான் அம்மாக்கள் நடக்கிறார்கள். அப்படி அவர்கள் நடக்கவேண்டும் என்று தான் பிள்ளைகள் எதிர்ப்பார்க்கிறார்கள், அஞ்சனாவையும் சேர்த்து. ஆனால் இது நியாயமான விஷயமா என்று தள்ளி நின்று யோசிக்கையில், தீர்வு தெரியாத போதும் அது தவறு என்றே தோன்றியது.
 
கல்லூரி விடுமுறை சமயங்களில் அம்மாவின் அடுத்து படுத்து இருக்கையில், இரவு முழுக்க ஓடும் தொலைக்காட்சி பெட்டியும் விழித்தே இருக்கும் அம்மாவை பார்த்தும் பார்க்காதது போல படுத்திருக்கும்போதும், அசந்து தூங்கியிருந்தாலும் சட்டென எழுந்து சுற்றி முற்றி பதறிய படி அப்பாவை அம்மா தேடுவதை பார்க்கும்போதும், சத்தமே இன்றி சமயத்தில் கண்ணீர் வடிய படுத்திருந்த சமயங்களும், ஏதாவது ஒரு நல்ல காரியம் என்றால் மேடை ஏறாது கீழேயே அமர்ந்திருந்ததும், அம்மா வீட்டில் இருந்து வெளியே வரும் நேரம் எதிரே வர நேர்ந்தால் சட்டென உள்ளே செல்லும் அக்கம் பக்கத்து வீட்டார்களின் பார்வையும் பார்த்து, சிறிது வருத்தம் தவிர வேறொன்றும் தோன்றியதில்லை அஞ்சனாவிற்கு. எத்தனை சுயநலமாய் இருந்திருக்கிறாள் இத்தனை நாள் என்று அவமானமாக இருந்தது. அம்மாவை பாவம், விதி வலிது என்ற அளவே பார்த்திருந்தவளுக்கு, அம்மா ஒரு ரத்தமும் சதையும் ஆன பெண்ணாக அவள் தேவைகள் பற்றி யோசிக்கும் அளவுக்கு புத்தி போகாதது கண்டு இவளை நோவதா, இவள் வளர்ந்த சமுதாய சூழலை நோவதா என்று தெரியாது நின்றாள்.
 
ஒரு சக மனுஷியின் ஆசாபாசங்களுக்கு மதிப்பு அங்கீகாரம் தருவதை பற்றிய பேச்சே இல்லை இங்கே. அவளுக்கு தேவைகள் என்று ஒன்று இருக்கவே இருக்கக்கூடாது  என்று சுற்றி இருப்பவர்கள் ( அவளையும் சேர்த்து ) எதிர்ப்பார்ப்பது அநியாயமான விஷயம் தான். ஆங்கிலத்தில் சொல்வார்கள் `` Burying your head in sand `` என்று. நெருப்புக்கோழிகள் தங்களை யாராவது தாக்கவரும்போது தலையை மணலில் புதைத்துக்கொள்ளுமாம். மனிதனால் தனக்கு பதில் சொல்லமுடியாத சிக்கலான விஷயமாக இருந்தாலும், ஒரு பிரச்சினையை அங்கீகரிக்க தெரியவில்லை, பிடிக்கவில்லை என்றாலும் கண்டும் காணாது போவதை தான் இது குறிக்கிறது. எத்தனை பேரால் அம்மாக்களின் தேவைகளை அங்கீகரிக்க முடியும் என்று கேட்டுப்பார்த்தாள் அஞ்சனா. பதில் தெரியவில்லை. She just continued to bury her head in sand.
 
சேய்ஷல்ஸ் வரும் சில மாதங்களுக்கு முன், குடும்பத்தோடு போயிருந்த ஒரு கல்யாணத்தில் அம்மாவின் நண்பிகள் சிலரை காண நேர்ந்தது. எல்லோரும் குடும்பசகிதமாக வந்திருந்தார்கள். அப்பா இறந்த பின் வெறும் நெற்றியாக பார்க்க முடியவில்லை யாராலும், அதனால் அம்மா எப்போதும் வைக்கும் பெரிய குங்குமப்பொட்டு அல்லாது சிறிய கருப்பு பொட்டு வைக்க தொடங்கியிருந்தார்கள். சிறிது நேரத்தில் அஞ்சனா அவளொத்த தோழிகளோடு பேச தொடங்க, அண்ணாவும் தம்பியும் வெளியே இருந்த நண்பர்களோடு போக, அம்மாவின் தோழியின் மகன் திருமணம் ஆகையால் அம்மாவின் மற்ற தோழிகள் குடும்பத்தோடு மேடையில் நலங்கில் கலந்துக்கொள்ள, அம்மா மட்டும் கீழே தனியே ஒரு நாற்காலியில் வெறுமையாக பார்த்தப்படி அமர்ந்திருந்ததை பார்த்து நெஞ்சு வலித்தது அஞ்சனாவிற்கு. அவள் வந்து அம்மாவின் பக்கம் அமர்ந்து வேறு கதைகள் பேசி சிரிக்கவைக்க முயன்றாள். அந்த நொடி இவளுக்கு ``Douglas adam`` எழுதிய ``Hitchhiker’s guide to galaxy’’ புத்தகத்தில் வேற்று கிரக உயிரினங்களை பற்றி சொல்லியது நினைவிற்கு வந்தது. அதில் `` Traal `` என்ற உலகத்தில் இருக்கும் ‘’ Ravenous Bugblatter Beast’’ பற்றி சொல்லும்போது, ‘’ It’s so incredibly, mind bogglingly stupid that it assumes that if you can’t see it, then it can’t see you’’ என்று விவரிப்பார். அந்த இடத்தில் அம்மாவை சிரிக்கவைக்க முயற்சித்து கொண்டிருந்த போது அஞ்சனாவிற்கு தான் ஒரு Ravenous Bugblatter beast of Traal என்று தோன்றியது.
 
படுக்கையில் படுத்தப்படி வெளியே க்ரீச்சிடும் வவ்வால்களின் சத்ததுடன் 
ப்ரசாத்தின் முகம் நினைவிற்கு வந்தது அஞ்சனாவிற்கு. ப்ரசாத் பள்ளி நண்பன். பயங்கர கருப்பாக இருப்பான். அஞ்சனாவின் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் இருந்தது அவன் வீடு. நல்லவன். சிரிக்கும்போது இன்னும் பளிச்சென தெரியும் பல்வரிசை அவளுக்கு பிடிக்கும். அஞ்சனா ஒரு சமயம் பாரதியோடு அவர்கள் வீடு கடந்து செல்லும்போது, யாரோ ஒரு பெரிய மீசை வைத்த ஆண் Enfield bullet வண்டியில் வந்து இறங்கி, ப்ரசாத்தின் வீட்டின் உள்ளே சென்றதை கண்டாள். ப்ரசாத்தின் தந்தை Railwaysல் வேலை பார்க்கும்போது இறந்து போனதால், ப்ரசாத்தின் அம்மாவிற்கு அந்த வேலை தந்து இருந்தார்கள். இரண்டு மகன்களோடு விதவையான போது அவருக்கு வயது 20களின் கடைசியில் தான் இருந்ததாம். திருமணமாகி இருந்த தினங்களில் எப்போதும் குடித்து விட்டு வந்து சத்தம் போட்டு, அடித்து உதைத்துக்கொண்டிருப்பாராம் ப்ரசாத்தின் அப்பா. அதன் பின் இப்போது நல்ல வேலையில், சொந்தவீடு, நகை பணம் என்று எல்லா வசதியோடும் இருக்கும் அவரை தேடி வருபவர்கள் எல்லோரும் அவருடைய ஆண் நண்பர்கள் என்றும், இந்த தெருவில் அவருக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்று சொல்லி பாரதி முகம் சுளித்தாள். `` 
 
ஒரு விதவையான பெண் எப்போது பார்த்தாலும் லோ கட் ஜாக்கெட் போட்டுக்கொண்டு, முகத்திற்கு மேக் அப் செய்துக்கொண்டு நடப்பதும், எவனை பிடிச்சாலும் அவனோடு போறது எப்படிடீ நியாயம். எங்க வீட்ல கூட தான் எங்க சித்தி 27 வயசில விதவையாகிட்டாங்க. திரும்ப கல்யாணம் செய்துக்க மாட்டேன் சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் வீட்ல வேலையை பார்த்திட்டு இருக்காங்க இந்த 17 வருஷமா. அப்படி தானே பொண்ணுங்க நெருப்பு மாதிரி இருக்கணும்`` என்று கேட்ட பாரதிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது போனது அந்த வயதில்.
 
ப்ராசாத்தில் இருந்து தாவிய சிந்தனை, 2 வயதான மகன் சூர்யாவை நெஞ்சில் சாய்த்து கொண்டு நிலைக்குத்திய கண்களோடு, முன்னும் பின்னுமாக, `` நான் என்னடி பண்ணுவேன், அஞ்சனா? என்னை இப்படிவிட்டுட்டு போயிட்டானே இந்த படுபாவி. நான் என்னடி பண்ணுவேன் `` என்று சில வருடங்களுக்கு முன் கருப்பாய், ஊதி, தோல் பிய்ந்து, ரத்தம் ஒழுக அழுகிப்போய் அந்த ஏசி பிணப்பெட்டியை தாண்டி அறை முழுக்க அடித்த ப்ரகாஷின் பிணவாடையின் ஊடே, அரற்றிய குணா நினைவிற்கு வந்தாள் அஞ்சனாவிற்கு.


- தொடரும்


- யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com