மே மாதம் என்றாலே இன்றளவில் உலகம் பூராவும் வாழும் தமிழ்மக்களின் நினைவுக்கு வருவது எமது சகோதரர்கள் சிந்திய இரத்தமும் சிதறிய சதைத்துண்டங்களும், பிணங்களும்தான். உலக வரலாற்றில் எங்குமே நடந்தேறாத கோர நிகழ்வுகள் எம்மண்ணில் அரங்கேறிய மாதம் சென்ற ஆண்டு மே மாதம். அன்று உயிர்ப்பலியான 54,000 அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூரும்வகையில் இம்மாதம் 18ஆம் நாள் துயர்படிந்த நாளாக தமிழர்களால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் உலக நாடுகள் சிறீலங்கா அரசினைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களால் விழிப்புணர்வுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அன்று செல்வாய்க்கிழமை. பணி நாள். அதிகமான தமிழர்கள் தத்தமது பணிகளை முடித்துவிட்டு குயின்சு பார்க் திடலுக்கு வரக்கொஞ்சம் தாமதமானதால் நிகழ்வும் தாமதமாகவே தொடங்கியது. இருந்தும் நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் பத்து ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள், ஒரு கையில் தமிழீழ தேசியக்கொடியோடும், மறு கையில் மெழுகுவர்த்தியோடும் திரண்டு வந்தனர். நாம் யார் என்பதைக் காட்ட 'கொடி'. எதற்காய் வந்துள்ளோம் என்பதைத் தெரிவிக்க 'மெழுகுவர்த்தி'. மக்கள் சரியாகத்தான் சிந்தித்து வந்திருந்தார்கள். இழப்பின் வலி இன்று மட்டுமல்ல...என்றும் மறையவிடமாட்டோம் என்பதனை மக்களின் ஒன்று திரண்ட வருகையும், உணர்வும் வெளிப்படுத்தியிருந்தது.
சாவு வீட்டுக்கு வந்த உணர்வோடு கலக்கத்தோடும், கண்ணீரோடும், இழந்த உறவுகள் குறித்த நீங்காத நினைவுகளோடும், ஆயிரக்கணக்கில் திரண்டுவந்திருந்த மக்களைப் பார்த்தபோது நானும் ஒரு தமிழன், இவர்கள் என் மக்கள், என் இனம் என்று உண்மையாய்ப் பெருமைப்பட்டேன். திரளாய் வந்த என் மக்களைப் பார்த்ததும், புதிதாய்க் குருதி பாய்நது நாளங்களை நிறைத்தது போன்றே உணர்ந்தேன். என்றோ ஒரு நாள் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கை என்னையறியாமல் இழையோடியது உண்மை. இருப்பினும், நினைவு நிகழ்வு நடந்தேறியவிதம் என்னால் எதையும் மாற்ற இயலாது உள்ளதே என்ற என் இயலாமையை நினைந்து வேதனையே படவைத்தது.
அன்றைய நாள் அங்கு திரண்டிருந்த மக்களுக்குத் தேவைப்பட்டது கடந்த மே மாதத்தின் சம்பவங்களை மீட்கும் நினைவுகள், காட்சிகள், மெல்லிய இசை, மெழுகுவர்த்தி ஒளி, இனி என்ன செய்யப்போகிறோம்? என்பதற்கான விடை. அத்தோடு கொஞ்சம் ஆறுதல். அவ்வளவும்தான். ஆனால் அங்கு நடந்ததென்னவோ வீராவசனப்பேச்சுக்கள், கலைநிகழ்வுகள், அரசியல் முன்னோட்டங்கள். அதற்கான 'முக' அறிமுகங்கள். தொடக்கத்தில் இருந்து முடிவுவரை அரங்கேறிய பேச்சுக்களும், கலைநிகழ்வுகளும் சலிப்பையே ஏற்படுத்தின.. இழந்த உறவுகளையும், மண்ணுக்காய் வீழ்ந்த செல்வங்களையும் நினைத்துக் கண்ணீர் சிந்த சாவுவீட்டுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வை இந்நிகழ்வு ஏற்படுத்தியதைவிட மாதந்தோறும் நடக்கும் கலைவிழாக்கள்போன்ற மற்றொன்றுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வையே ஏற்படுத்தியது. வானைப்பிளந்த பேச்சுக்களும் நிகழ்வுகளும் சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்த மக்கள் சிறு சிறு குழுக்களாய்ப் பிரிந்து நண்பர்கள், உறவுகள் வட்டம் அமைத்து, பலநாட்கள் சந்தித்திராதவர்கள் சந்தித்த மகிழ்வில் தமக்குள்ளேயே பேசிச்சிரிக்க ஆரம்பித்தனர்.
ஓராண்டு கழிந்தும், இழப்பால் ஏற்பட்ட வலியையும், வேதனையும் மறக்க இயலாமல் அதனை அப்படியே நெஞ்சில் தக்கவைத்தபடி ஒன்றுதிரண்டு கதறி அழ வந்த அவர்களை, இனி என்ன செய்யலாம் என்று சிந்திக்க வைத்திருந்தால் அந்த நிகழ்வு வெற்றி எனலாம். அல்லது துயர்படிந்த அந்நாட்களை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தி, அந்த நினைவுகளோடு அவர்களை வீடுசெல்ல வைத்திருந்தால் நாளை வளரும் சமூகாவது ஏதோ ஒரு மாற்றத்தைக் கொண்டுவர அது வழிகோலும் எனலாம்.
ஆனால், இது எதுவும் நடக்கவில்லை. நடந்ததென்னவோ நாளைய, இன்றைய தமிழ் அரசியல்முகங்களின் அறிமுகங்கள், எமக்காய் வீழ்ந்த செல்வங்களின் தியாக வேள்வி தெரியாத, புரியாத வீராவசனப்பேச்சுக்கள், யதார்த்த நிலை உணராமல், மக்களை மாயைக்குள் இழுத்துச்செல்லும் நிகழ்ச்சி நிரல். அவ்வளவே. வருகை தந்திருந்த இளையவர்களும் குழந்தைகளும் எதற்கு இங்கே திரண்டு வந்திருக்கிறோம் என்பதை உணர்வதற்கான வாய்ப்பு அந்த நிகழ்வில் இருக்கவில்லை. அன்று உரைகளுக்கான தேவையே இருக்கவில்லை. தேவைப்பட்டது சென்ற மே மாத கொடூரங்களின் தொகுப்பு. வளரும் குழந்தைகளுக்கு வரலாறாய், ஆவணமாய் துயர்படிந்த அந்தக் கொடிய நாட்களின் சம்பவங்களின் நினைவுமீட்டல். கலங்கிய கண்களோடு வந்த மக்கள் கதறி அழுதிருப்பார்கள். அழுதது போதும்.. இனி எழுவோம் என்ற வெறியோடு சென்றிருப்பார்கள் இளையவர்கள். எம் பெற்றோர் ஏன் இந்த மண்ணுக்குப் புலம்பெயர்ந்தார்கள் என்ற தெளிவோடு திரும்பியிருப்பார்கள் குழந்தைகள். இது எதுவும் அன்றிருக்கவில்லை. இற்றைநாள்வரை நடக்கும் எழுச்சிக் கலைவிழாக்கள் போன்ற மற்றொரு நாளாகவே அது உணரப்பட்டது. இழப்பின் வலியையோ, அந்த வலியின் சுவடுகளையோ உணர்வதற்கான இடமாய், நிகழ்வாய் அது அமையவில்லை என்பதே வருகைதந்த பலரினதும் உள்ளக்கிடக்கையாய் அவதானிக்கப்பட்டது.
சென்ற ஆண்டின் வலி காலங்காலமாய் தமிழர் மனங்களில் தக்கவைக்கவேண்டியது. தக்க வைப்பதற்காய் நாம் எதுவும் செய்யாவிடினும் பரவாயில்லை. மறக்க வைப்பதாய் எந்நிகழ்வும் அமையக்கூடாது. அந்த வகையில் கனடாவில் நடந்தேறிய மே நினைவு நிகழ்வு, வலியினை அழித்தது, மறக்கவைத்தது என்று சொல்லமுடியாது எனினும் உறுதியாய் அந்த வலியின் நினைவுகளை மீட்கவில்லை என்பதே கசப்பினும் உண்மை. இவ்வுண்மையை உணர்ந்து இனிவரும் காலங்களில் நிகழ்வினை சரிவர மாற்றியமைக்க ஏற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும்...முன்வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
- பாலகணேஷ்

