பகுதி 12
அஞ்சனாவின் பள்ளிக்கூட நாட்களில் நிறைய விஷயங்கள் நினைவு இருந்தாலும், பள்ளி தோழர்கள் தோழிகள் பலர் நினைவில் நின்றாலும், சிலரை ஏனோ மறக்கமுடியவில்லை. அஞ்சனாவின் நினைவுகள் எல்லாம் ஏதோ ஒரு வாசத்தோடு இணைந்தது. அவள் கடக்கும் நிமிடங்களின் வாசம் அவளுக்கு சில நேரம் முகங்களையும், சில நேரம் நிகழ்ச்சிகளையும், சில நேரம் மறக்க முடியா சிலர் வாழ்க்கையையும் நினைவிற்கு கொண்டுவரும் இயல்புடையதாய் இருந்தது. வாசங்கள் ‘’Olfactory nerve’’ வழியாக மூளையில் ``Chemotopic map`` என்று ஒரு வரைப்படத்தை போடுகிறது என்று படித்திருக்கிறாள். அதனால் தான் வாசங்கள் நம்முடைய பழைய நினைவுகளை, உணர்வுகளை திரும்ப கிளர்ந்தெழ செய்கிறது என்று தெரியும் அவளுக்கு.
ஆனால் வாசமே உணரமுடியாது போகும் நோய்க்கு பெயர் ‘’Anosmia’’. சில சமயம் அஞ்சனா தனக்கு இந்த நோய் இருந்தால் ஒரு வேளை சுகமாக இருந்திருக்குமோ என்று யோசித்திருக்கிறாள். இப்போதும் ஊதுபத்தி அதுவும் ரோஜா ஊதுபத்தி வாசம் முகர்ந்தால், அவளுக்கு தலை சுற்றி குமட்டும். அப்பாவின் உணர்ச்சியில்லாத இறந்த முகம் கண்முன் நிறுத்தும் அந்த வாசம் அவளுக்கு பிடிக்காது. வாழைப்பழமும், முட்டையும், பாலும், சக்கரையும், உப்பும் கலந்து பிரட்டில் தோய்த்து தோசை கல்லில் இடும்போது வரும் வாசம் அவளுடைய பள்ளி கோடை விடுமுறையில் இவளும், அண்ணா, தம்பி, அத்தை மகள்கள் எல்லோரும் தட்டை வைத்துக்கொண்டு சாயங்காலங்களில் பசியோடு காத்து இருந்த மாலைகளால் பிடித்தது. ஈரபுல்லின் வாசம் மூன்றாம் வகுப்பு தோழி நிர்மலாவையும், அவளுடைய மயிலிறகையும் நினைக்க வைத்தது. பெரிய இரும்பு கடாயில் வெண்ணையை கறிவேப்பிலையோடு நெய்யாக மாற்றும் வாசம், மஞ்சள் வாயில் சேலையோடு காலையில் இருந்து இரவு வரை ஏதோ ஒரு வேலையோடே இருந்த பாட்டி சின்னம்மாவின் முகம் நினைக்க வைத்தது. இப்படி பல பல வாசனைகள்.. பல பல நியாபகங்கள்...
ஆனால் தினம் கண்முன் இறக்கும் பலரை அஞ்சனாவை பார்த்தாலும், அழுகிய பிணவாடை அவள் முதன்முதல் சுவாசிக்க நேர்ந்தது, கடலூரில் தான். அவளுடைய மூன்றாவது ஆண்டில் எல்லோரையும் Forensic science டிபார்ட்மெண்டில் இருந்து பிரேத பரிசோதனை ( Post mortem ) பற்றி படிக்க வாரா வாரம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள். முதல் முறை கூட்டி சென்றது படு ஜாலியாக இருந்தது. கல்லூரி பஸ்ஸில் கடைசி இரண்டு வரிசையில் இவள், கோம்ஸ், மங்கை, நந்து எல்லோரும் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டு, போகும் வழியெல்லாம் அரட்டை அடித்துக்கொண்டே செல்ல, புவனகிரி வழியே சென்ற அந்த ஒரு மணி நேர பயணம் அத்தனை அழகு.
கடலூர் மருத்துவமனை சென்று சேரும்போது நேரம் காலை 11 மணி இருக்கும். அந்த சிகப்பு ஓடு வேய்ந்த மார்ச்சுவரி ( Mortuary ) வெளியே பஸ் நின்றதும், எல்லோரும் இறங்கி அக்கம்பக்கம் சுற்றி பார்க்க, அங்கங்கே தெரிந்த வளர்ந்த அசோகா மரங்களும், காய்ந்தும் காயாதது போல இருந்த சீரமைக்கப்பட்ட செடிகள் மேல் படிந்திருந்த செம்மண் புழுதியும், அங்கங்கே தெரிந்த கருப்பு ரெக்ஸின் போட்ட இறந்தவர்களை எடுத்து போகும் ஜீப்களும், வெளியே இருந்த டார்பாலின் போட்ட டீக்கடையில் இருந்த சோகமுகம் தாங்கிய மக்களும் எல்லாமே ஏதோ சோகமும், வெயிலும், அழுக்கும் அப்பியிருந்த அந்த மொத்த இடமே sepia tone வைத்து depressing ஆக இருந்தது. பிணகிடங்கு என்று நீல போர்ட்டில் வெள்ளை எழுத்தோடு இருந்த அந்த கூரை ஓட்டு கட்டிடத்தில் துறுவேறிய இரும்பு கம்பி சுற்றிலும் போடப்பட்டிருந்தது.
வெளியே மார்ச்சுவரி நிர்வகிக்கும் வெள்ளை பேண்ட் ஷர்ட், பாட்டா செருப்பு போட்டு, தலையில் எண்ணை டாலடிக்க, கருப்பாய் மீசையும், சிகப்பு குங்குமம், மஞ்சள், வெள்ளை விபூதி என்று நெற்றியில் technicolour பொட்டு வைத்து இருந்த சுடலை சார், இவர்களை பார்த்து சிரித்தார். அங்கே இருக்கும் ரெஜிஸ்டர் புத்தகத்தில் எல்லாருக்கும் Attendance போடும் அவரை எப்போதும் கல்லூரியில் இருந்து போகும் எல்லா பையன்களும் நன்கு கவனித்துக்கொள்வதால், அவர்கள் வந்தாலும் வராது போனாலும் அவர்களுக்கு present விழும். பெண்களால் இது போன்ற விஷயங்களை செய்யமுடிவதில்லை, தெரிவதுமில்லை. கல்லூரியில் அந்தந்த department Lecturer, PG student, தொடங்கி office boy, department clerk வரை கவனித்து attendance முதல் exam viva, specimens வரை தெரிந்துக் கொள்ளும் சமர்த்து, பையன்களுக்கு தான் உண்டு. இப்போதும் சுடலை சார், இவர்களை பார்த்து கூட்டத்தின் மத்தியில் ஏதோ அரசியல் பிரமுகர் மாதிரி பேசி, சத்தமாக சிரிக்க, சில பல விஷயங்கள் கைமாறியது கண்டு அஞ்சனாவும் மற்றவர்களும் சிரித்துக்கொண்டார்கள்.
முருகானந்த் கேட்டான் சுடலை சாரிடம், ``இன்னைக்கு என்ன கேஸ் அண்ணா இருக்கு``. சுடலை சொன்னார் ``இன்னைக்கு ரெண்டு கேஸ்தான்பா. டாக்டர் இப்ப வந்திடுவார், தொடங்கிரலாம் சீக்கிரம் போயிரலாம்`` என்று. அதற்குள் சைக்கிளில் காக்கி சட்டையும், அரை பேண்டும் போட்டு வந்த குமரேசனை அறிமுகம் செய்துவைத்தார். இவர் தான் இங்க அடோப்ஸி ( autopsy ) செய்ய உதவுபவர். என்றும் பையன்களிடம் திரும்பி இவரையும் கவனிக்க சொல்ல அவர்களும் தலையாட்டினார்கள்.
குமரேசன் முகம் உணர்ச்சிகள் மறத்து போய் எப்போதாவது லேசாக சிரிக்கவும், மற்ற சமயம் முகத்தை சலனமின்றி வைக்கமட்டுமே முடியும் என்னால் என்பது போல இருந்தது. அவர் வரும் முன்னரே வந்த சாராய நெடியை கண்டு மூக்கை சுளித்த சில பெண்களை பார்த்து முனுமுனுத்துக் கொண்டே போனார், ``என் பொழப்பை தினமும் பண்ணா தெரியும், என் அவஸ்தை. வந்துட்டாங்க`` என்றபடியே கோபமும் சலிப்புமாக. எப்பேர்ப்பட்ட சலிப்பான சம்பவமானாலும், கூட தன்னொத்த தனக்கு பிடித்த மக்கள் இருந்தால் அதுவும் ஒரு அனுபவமாக மாறுவது தான் நிஜம். குமரேசன் திரும்ப சைக்கிள் எடுத்து போய் பத்து நிமிடத்தில் திரும்ப வந்தார். வரும்போது கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையில் ஊதுபத்தி கட்டுகளும், சாம்பிராணி பொட்டலங்களும், பன்னீர் பாட்டில்களும் இருந்தது. அஞ்சனாவும் மற்றவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அரசு ஜீப்பில் வந்து இறங்கினார் டாக்டர் பிரபாவதி மேடம்.
அஞ்சனாவிட சிறிது உயரம் குறைவு, 45 வயதிருக்கும், நீண்ட ஜடை, சாந்தமான முகம், நேர்த்தியான காட்டன் புடவை, பெரிய பொட்டும் சந்தனமும் வைத்து, கொஞ்சம் அத்தையின் சாயலில் ஆனால் கண்டிப்பான சிரிப்போடு இருந்த அவரை அஞ்சனாவிற்கு மிக பிடித்தது. பேச்சின் ஊடே அது இல்லைமா, அப்படி தான்மா என்று எல்லோரையும் அம்மா போட்டுக்கூப்பிட்டதோடு, லேசாக திருநெல்வேலி dialect உடன் பேசியது அழகாக இருந்தது. எல்லோரையும் இப்போது நடக்க இருந்த பிரேத பரிசோதனை பற்றி விளக்கம் சொல்லி கேள்வி கேட்டார்கள். முதலில் ஒரு தூக்கு மாட்டிக்கொண்ட பெண்ணின் autopsy, பிறகு RTA (road traffic accident) கேஸில் இறந்த இளைஞனின் autopsyம் செய்யப்போவதாக சொல்லி, தூக்கு மாட்டினால் என்ன என்ன மாற்றங்கள் பார்க்கலாம் என்று கேள்வி கேட்டார்கள்.
தூக்குமாட்டி இறப்பது மிகவும் சுலபமான அதே சமயம் 95% effective ஆன இறக்கும் வழி. உடலின் வெளியேவும், உள்ளேயும் நிகழும் மாற்றங்கள் பற்றி எல்லோரும் ஒவ்வொரு பாயிண்ட் சொல்ல, கட்டாயம் போலீஸ் கேஸாக இருக்கும் பட்சத்தில் இறந்தவரை முடிந்தவரை கழுத்தில் இருக்கும் கயிறுடைய முடிச்சுடன் தான் கொண்டுவருவார்கள் என்றும் சுருக்கின் முடிச்சு வைத்து எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுப்பிடிக்கலாம் என்று சொன்னார். தூக்கு மாட்டி தொங்கும்போது எல்லோரும் கழுத்து எலும்போ, தொண்டையும் மூளைக்கு செல்லும் ரத்தவோட்டமும் நிற்பதால் மட்டும் தான் இறப்பார்களா என்று கேட்டார் பிரபாவதி மேடம். இப்படி முறிவு பெறாது கூட இறக்க நேரும். அதற்கு காரணம் கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளம் `` Carotid artery `` என்பது, இதில் உள்ள reflex centre கழுத்தில் போடப்படும் சுருக்கினால் குறையும் ரத்தவோட்டத்தால், இருதயத்திற்கு அனுப்பும் signalகளால் cardiac arrest வந்தும் இறக்க நேரலாம். இப்படியெல்லாம் theory பற்றி பேசிவிட்டு அந்த கூரை வீட்டினுள் அழைத்து சென்றார்.
அங்கங்கே காரை பெயர்ந்த தரையோடு இருந்த அந்த வீடும் sepia toneல் தான் தெரிந்தது. சுவற்றில் கண்ணாடி frameல் நீல நிற backgroundல் நாக்கை தள்ளிக்கொண்டு இருந்த காளி படம் ஒன்று நிறைய ஊதுபத்தியின் துகள், கொஞ்சம் காய்ந்த பூவோடு இருப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சனா. அறையின் உள்ளே ஒரு மர மேஜை, அறையின் ஓரத்தில் தரையில் இரண்டு வெள்ளை காடா துணியால் சுற்றி கட்டப்பட்டிருந்த இறந்தவர்களின் உடலில் ஒன்று கொஞ்சம் குண்டாகவும், ஒன்று ஒல்லியான உருவமாகவும் இருந்தது.
அறையில் உள்ளே இருந்தது கலவையான வாடை. மொத்தமாக ஒரு 20, 30 ஊதுபத்தியின் மூச்சடைக்கும் புகையோடு சேர்ந்து வந்தது அங்கங்கே கொளுத்தின சாம்பிராணி புகையும், தரையின் மூலைகளில் பெரிய பஞ்சு உருண்டைகளில் இருந்த வந்து கொண்டிருந்தது பன்னீரின் வாடையும், இது எல்லாவற்றோடு சேர்ந்து கண்ணை எரிய வைத்தது சில பஞ்சு உருண்டைகளில் தெளிக்கப்பட்டிருந்த யூகலிப்டஸின் ( eucalyptus oil ) காட்டமான மணமும், அங்கங்கே இருந்த உறுப்புகளை பதப்படுத்த இருந்த ஜாடிகளில் இருந்து formaldehyde, glycerol கலவையின் இனிக்கும் மணமும் சேர்ந்து வந்த வாடை ஒருதடவை உணர முடிந்தவர்களால் தான் சொல்லமுடியும் அது மனதிற்கு கொண்டு வரும் நினைவுகளை பற்றி.
குமரேசனும் சுடலையும் அந்த பெரிய உருவத்தை தூக்கி அறையின் நடுவே இருந்த மரபெஞ்சில் தொப்பென்று கிடத்தினார்கள். அஞ்சனாவாலும், கூட இருந்த சில பெண்களாலும் அந்த உடலை கிடத்திய சத்தம் கேட்டு தன்னையறியாது உடல் அதிர, சுடலை ``செத்துபோயிருச்சுமா. வெறும் body தான் இது. வலிக்காது அதுக்கு`` என்று சிரித்தப்படி சொன்னார். மட மட என்று வெள்ளை துணியை கழட்ட, 32 வயதுள்ள கனமான சரீரத்தோடு, நாக்கு துறுத்தியபடி, கண்கள் லேசாக மூடியிருக்கும் பச்சை சேலை கட்டிய பெண்ணின் உடல் இருந்தது. இவர்கள் பார்க்கும் போதே கோணி வெட்டும் கத்தரிக்கோலால் புடவையும், ஜாக்கெட்டும் வெட்டப்பட, அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக்கப்பட்டது. மருத்துவப்படிப்பு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள கத்துக்கொடுக்கும். எந்த அளவு என்றால் பெண்கள் எல்லாம் குழுமி பேசும்போதும், படிக்கும் போது ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு பற்றியும் அதில் வரும் உடலியல் மாற்றங்களும், நோய்களும், அதற்கு உள்ள அறுவை சிகிச்சை பற்றியும், மருந்துகளை பற்றியும் படிக்கும்போது, பொதுவாக கேட்கப்படும் கேள்வி, `` Do you think we will be ever excited to see our future husband’s naked body’’. பார்த்து பார்த்து சலிக்கும் விஷயம் நம்மை கிளர்ச்சியடைய வைக்குமா என்றால் அதற்கு பொதுவான பதில் இல்லை என்பது தான்.
இப்போதும் நிர்வாணம் பெரிய விஷயமாக தெரியவில்லை தான் ஆனாலும் glycerine formaldehyde கலவையில் பதப்படுத்தப்பட்ட ஆளுயர மரப்பாச்சி பொம்மை போன்ற anatomy டிபார்ட்மெண்ட்டில் பார்த்த உடல் போல அல்லாது, ஏதோ விகாரமாய் வாய் திறந்து தூங்கிக்கொண்டு இருப்பதை போன்ற இருந்த பெண்ணின் உடலும், அவளின் வலது கையில் இருந்த வடிவு என்ற பச்சை குத்தியதன் தழும்பும், பிறப்புறுப்பிலும் கை அக்குளிலும் கருப்பு முடியோடு, பருத்த மார்பும், வயிரோடும் இருந்த இந்த பெண்ணின் உடலை பார்க்கும் போது அஞ்சனாவிற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதற்குள் அறை முழுக்க இருந்த அத்தனை பேரின் சூட்டோடு, வெயிலின் சூடும், புகை மண்டலுமும் சேர்ந்து, மூச்சு விடமுடியாது, வியர்த்து கொட்டியது எல்லோருக்கும்.
அங்கு இருந்த ரெஜிஸ்டர் புத்தகத்தில் பிணத்தின் பேர் தேதி எல்லாம் குறித்துக் கொள்ள, குமரேசனும், சுடலையும், கையில் gloves, முகத்திற்கு பெரிய துண்டை கைக்குட்டை போல மூக்கை மறைத்து கட்டிக் கொள்ள உடலை இப்படியும் அப்படியும் புரட்டி பார்த்தார்கள். External examination of corpse இது மிக முக்கியம் என்று சொல்லி stages of death பற்றி விளக்கினார் பிரபாவதி மேடம். இறந்ததும் உடலில் வரிசையாக நடக்கும் மாற்றங்கள் Pallor mortis, Algor mortis, Rigor mortis, Livor mortis, Decomposition, Skeletonization என்பது என்னவென்றால் இறந்த உடலில் ரத்தவோட்டம் நிற்பதால் உடல் வெளிறி போவது pallor mortis, உடலின் சூடு குறைவது algor mortis, இறந்த 3 மணிநேரத்தில் தொடங்கி 12 – 15 மணி நேரத்தில் உடல் முழுக்கப்பரவும் விறைப்புத்தன்மை rigor mortis, உடல் கிடக்கும் பகுதியில் பூமியின் புவியீர்ப்பால் எந்த பாகம் தரையை பார்த்தப்படி இருக்கிறதோ அங்கு தேங்கும் ரத்தம் Livor mortis, பிறகு அழுகி எலும்புகள் மட்டும் தெரிவது decomposition and skeletonizatiion ஆகும்.
தூக்கில் தொங்கும் போது பொதுவாக கைகளிலும் கால்களிலும் ரத்தவோட்டம் தேங்கி இருப்பதும், கழுத்தில் சுறுக்கின் உராய்வும், கழுத்தின் நீளம் எலும்புகள் உடைவதால் நீண்டும், கண்ணில் ரத்த நாளங்கள் வெடித்து சிவந்து இருப்பதும் காட்டியபடியே, உடலை அறுக்க தயாரானார்கள். முதலில் தோளிற்கு கீழே ஒரு பெரிய மர சதுரம் போன்ற ஒன்றை வைக்க தலை கொஞ்சம் கீழேயும் நெஞ்சு மேலேயும் இருந்தது. ஒரு scalpel blade வைத்து இந்த தோள் முனையிலிருந்து அந்த தோள் முனையை ஆங்கில எழுத்து ‘Y’ போல கோடாய் கிழித்து நெஞ்சு நடுவிற்கு இழுத்து எலும்பு தெரியும் வரை அறுத்தார் குமரேசன். பிறகு கொரடா போன்ற bone cutter ஒன்று எடுத்து நெஞ்சு எலும்பின் இரு பகுதியிலும் பட பட என்று உடைத்தார். நெஞ்சை நொடி நிமிடத்தில் பிளந்தார். கைவிட்டு இதயம், நுரையீரல், தமனிகள் எல்லாவற்றையும் எடுத்து மேடத்திடம் காட்டி, தேவையானவைகளை கண்ணாடி குடுவையில் போட்டார்கள் இருவரும்.
பிறகு கழுத்தின் நடுவே ஒரு கோடு இழுக்க தோல் விலக்கி, உடைந்த கழுத்தின் Hyoid எலும்பு எடுத்தார்கள். தலை முடி தொடங்கும் இடத்தில் இந்த காது தொடும் வரை குமரேசன் கோடு போட, சுடலை ஏதோ துணிப்பையை திறப்பது போல தலைமுடியோடு தோலையும் உரிக்க வெள்ளையாய் மண்டை ஓடு தெரிந்தது. சின்ன சுத்தி, உளிவைத்து முழுக்க தட்ட, திருவோடு போல எலும்பு வர, மூளை தெரிந்தது. அதில் இருந்தும் தேவையான specimen எடுத்தார்கள் சாட்சிக்கு. பிறகு கடைசியாக உப்பிக்கொண்டே இருந்த வயிற்றின் தொடக்கத்தில் இருந்து பிறப்புறுப்பு வரை கத்தியால் கிழித்து வயிறை திறக்கபோகும் முன், சுடலையும் குமரேசனும் அங்கங்கு இருந்த பஞ்சு உருண்டைகளில் இன்னும் யூகலிப்டஸ் தெளித்து தயாரானார்கள். வயிற்றை கிழித்ததும் அங்கு இத்தனை நேரம் இருந்த எல்லா மணமும் மறைந்து அழுகிய வாடை குப்பென அடிக்க, பாதிக்கும் மேலே மாணவ மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து நிஜமாகவே தெறித்து ஓடினார்கள். அடுத்த சில நேரங்களுக்கு அஞ்சனாவிற்கு கேட்டது சிலரின் குமட்டல் சத்தமும், ஓடும் காலணிகளின் ஓசையும் தான். நின்று பார்த்தால், பதினைந்து நிமிடத்திற்கு முன் இருந்த உருவமே இல்லை இப்போது.
மண்டை திறந்து தலைமுடி தோலோடு மர டேபிளின் கீழே தொங்க, பாதி திறந்த கண்களும் நாக்கும், உடைந்து திறந்து இருந்த உடலும் சற்று முன் பார்த்த பெண்போலவே இல்லாது தெரிந்தது அஞ்சனாவிற்கு ஒன்று இன்னும் தெளிவாக்கியது. பேரழகு, அறிவு, பணம், மேலே போடும் உடை, தெளிக்கும் வாசனை திரவியங்கள், ஒப்பனை, வாழ்வின் எதிர்ப்பார்ப்பு, ஆசை, காமம், கவலை, இதை தாண்டி அறுத்தால் எல்லோரின் உடலும் இவ்வளவு தான். Beauty is just skin deep என்பதன் அர்த்தமே வேறானது அதன்பின் அவளுக்கு.
எல்லாம் முடிந்ததும், பெரிய கோணி ஊசி கொண்டு, எடுத்த அவயங்களின் மிச்சத்தை திறந்து கிடந்த வயிற்றினுள் போட்டு, சட்டென கோணி தைப்பது போலவே குமரேசன் தைக்க, சுடலை உள்ளே இருக்கும் பாகங்களை ஒரு வடிவத்திற்கு கொண்டு வர வயிற்றை இப்படியும் அப்படியும் ஆட்டி, சமமாக்கி தைத்து முடித்தார்கள். பிறகு வெள்ளை துணியால் முழுக்க உடலை இறுக்கமாக கட்டி, Parcel போல செய்தார்கள்.
பிரபாவதி மேடம் இருந்த அந்த பையனின் பிணம் மிக கோரமாக நசுங்கி இருப்பதாகவும், அதை பார்க்கவேண்டாம் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார்கள். வெளியே இருந்த ஒரு அசோகா மரத்திடம், ஒரு கும்பல் காத்திருக்க, வெளியே வந்த அஞ்சனாவின் பக்கம் இருந்த அனிதாவிடம், அந்த கும்பலில் இருந்த ஒரு பாட்டியும் குழந்தையும் வந்து, ``முடிஞ்சிருச்சா தாயி`` என்றாள். தோளில் ஈனமாய் அழுது கொண்டிருந்த அந்த குழந்தையையும், பக்கத்தில் செருப்பில்லாது அரை பேண்ட் போட்டு நின்ற பொடியனையும் பார்த்தபடி அஞ்சனா நிற்க, அந்த பாட்டி, `` புருசன் சண்டை போடுறான்னு இப்படி இந்த புள்ளைங்க ரெண்டையும் எப்படி வுட்டுட்டு தூக்கு மாட்டினாளோ, பாவி முண்ட `` என்று அழுதபடியே போக, அதன்பின் அவளால் பிணங்களின் அழுகின வாடையை மறக்கமுடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பின் அஞ்சனா அதை உணர நேர்ந்தது குணாவால் தான்.
தொடரும்
யமுனாராகவன்

