பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 26, 2010

தனிமையை கவ்வித் தின்னும் பன்றிகள் - மாரிசெல்வராஜ்

அவன் உங்களுக்கு சினேகிதனாக இருக்கலாம், அவனுக்கு நீங்கள் நலம்விரும்பியாகவும் இருக்கலாம் சிலநேரம் அவனை நீங்கள் நேசிப்பவராகவோ அவன் உங்களின் நம்பிக்கைக்கு உரியவானாகவோ இருக்கலாம். ஆனால் உங்களை விட அவனை எனக்கு நன்றாக தெரியும். இன்னும் சொல்லப்போனால் அரசாங்க ஆஸ்பிட்டலில் அவனது அம்மாவின் அடிவயிறை கிழித்து அவனை வெளியே எடுத்ததிலிருந்து எனக்கு அவனை தெரியும்.
அப்போது அவனுக்கு மொழி கிடையாது நான் அவனோடே இருப்பேன். அவன் கை கால்களை அசைத்து அவனை அழவைத்து அவனின் பசியை அவன் அம்மாவுக்கு தெரியவைப்பேன். நான் வேறு யாருமில்லை அவனுடனே இருக்கும் அவனுடைய மனத்தவளை என்று நினைத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் அவனின் தனிமை நானென்று எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் ஒரே உருவம் தான், எங்கள் அழுகையும் சிரிப்பும் ஒரே மாதிரியானவைதான்.

உங்களைப்போல நான் அவனை ஒருபோதும் நேசித்தது கிடையாது.அவன் மீது சிறு இரக்கம் காட்டக்கூட நான் விரும்பியதில்லை. சிலநேரம் அவனை ஒரு குருட்டுப்பூனையாய் அலையவைத்து அறையின் நான்கு சுவர்களிலும் முட்டிகொள்ளச்செய்து அவனை குற்றவாளியாக்கி யாருமற்ற அவன் அறையில் தொங்கும் நிலைக்கண்ணாடி அவனை நிறுத்தி அதைப்பார்த்து கொடூரமாய் நான் சிரித்திருக்கிறேன்.

அவனுடைய எதிரிகளிடமும் அவனை துரோகியாய் நினைக்கும் அவன் நண்பர்களிடமும் அவனை காட்டிக்கொடுப்பதில் சிறிதும் நான் தயங்கியதில்லை. அவர்களை தேடிப்பிடித்து யாருமற்று அவன் அறையில் தனியாய் இருக்கும்போது அவன் அறைக்குள் அழைத்து வந்து அவனை துன்புறுத்துவதில் நான் சுகம் கண்டு பழகிவிட்டேன். அவனுக்கு பிடித்தமானவர்களையும் அவர்களின் புகைப்படங்களையும் தொலைபேசி எண்களையும் அவனுக்கு பிடித்த இசையையும் புத்தகங்களையும் கூட எங்கோ ஒளித்து வைத்து அவனை நிராயுதபானியாக நிறுத்தி சில நேரம் அவனை தற்கொலைக்கு தூண்டக்கூடிய கொடுமையான செயலையும் அவனிடத்தில் நான் செய்ததற்காய் நான் ஒருபோதும் வருந்தியதில்லை.

என்னை பொறுத்தவரை அவன் தூக்கிலடப்படவேண்டிய குற்றவாளி. நான் அந்த கொடிய சரியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவ்வளவுதான். நேற்று அவன் அறை முழுவதும் அவனுக்கு கொஞ்சமும் பழக்கிமில்லாத அந்த சிகரெட் புகைகளை பரவவிட்டு அவன் தனது கையாளாகாததனத்தால் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் அநாதையாய் விட்டுவிட்டு வந்த அவனின் காதலியை கூட்டிவந்து அவனை சித்ரவதை செய்த நான் இன்று அவன் அறை முழுவதும் அந்த பன்றிகுட்டிகளை அழைத்து வந்து நிரப்பியுள்ளேன். அந்த கருத்த பன்றிகுட்டிகள் அவன் படுக்கை, அவன் கழிவறை, அவன் மேஜை, அவன் புத்தகங்கள் எல்லாவற்றையும் தனதாக்கிகொண்டு அவனையும் எப்படி தின்ன தொடங்கிவிட்டது பாருங்கள்.

இதற்காய் நான் செய்யும் இந்த கொடும்செயலுக்காய் சிலர் என்னை துரோகி, எட்டப்பன் என்று சொல்லக்கூடும் அவனின் சரிதத்திலிருந்து என்னை விலகி போகசொல்லி கூச்சலிடக்கூடும் அதை சொல்கிறவர்கள் அந்த பன்றிகுட்டிகளை பார்த்திருக்கிறீர்களா?

நான் கேட்டது சில தமிழ் சினிமா கதாநாயகர்களை போல இருக்கும் நகரத்து வெள்ளை பன்றிகளை அல்ல…… திசைகொரு சின்ன கண்களோடும் நீளமான அந்த மூக்கோடும் குட்டி குட்டி கால்களோடும் அரை ஜான் வாலோடும் சேரை அப்பிக்கொண்டு சேரி முழுவதையுமே சொந்தமாக்கி கொண்டு திரியும் அந்த கருத்த பன்றிகளை பார்த்திருக்கிறீர்களா? பார்த்து இருப்பீர்கள் பார்த்து மூக்கை பொத்திகொண்டு வேகமாய் கடந்து போயிருப்பீர்.

உங்களுக்கு அருவருப்பாய் தெரியும் அந்த கருத்த பன்றிகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் திருட்டுபூனைகளை போல அவன் தெருவில் சாதரணமாய் உலவும். அவன் வயல் பரப்பில் விதைகளை தன் நீள மூக்கால் தோண்டி திங்கும். நடு இரவில் அவன் பனைகிழங்கு குழியை பறித்து கிழங்குகளை சாப்பிட்டுவிட்டு போகும். அவனுடைய அம்மாக்களை சண்டைக்கு இழுக்கும் அவனுடைய சிறுவர்கள் அதை காண்டாமிருகமாக நினைத்து முள்மரக்காட்டிற்குள் நுழைந்து விரட்டுவார்கள். கர்ப்பினி பெண்களின் கனவில் சுடலைமாடனாவோ இல்லை முனியசாமியாவோ வந்து பிறக்கும் குழந்தைக்கு பெயர் சூட்டிவிட்டுப்போகும். அவனின் மலத்தை அது தின்னாலும் அதை திங்க ஒருபோதும் அவன் தயங்கியதில்லை.

அன்று மதியம் வேலை வெட்டி இல்லாமல் அம்மன் கோவில் தின்னையில் அமர்ந்து பாட்டுபாடி நேரம் போக்கிகொண்டிருந்த போது கனேசன் தான் சொன்னான்.
“தம்பிகளா எப்பவும் போல இன்னைக்கும் ஒரு பன்னிய போட்டுருவமா கள்ளாண்டன் முருகன்கிட்ட சரக்கும் இருக்கு”
”மஞ்ச மசாலாவுக்கு எவன் காசு கொடுப்பான் நீ கொடுப்பியா” இது அவன். அப்புறம் என்ன ஒரு கட்டு செய்துபீடி வாங்கவே அக்காக்களுக்கும் அம்மாக்களுக்கு மாவாட்டிக்கொடுத்து தங்கச்சிகளுக்கு பாட்டு புத்தகம் வாங்கிகொடுக்கனும் எவ்வளவு பெரிய பன்னி அதுக்கு மஞ்ச மசாலா வாங்க எவன்கிட்ட காசு இருக்கு.

மறுபடியும் கனேசன் “நான் கொடுக்கேண்டா ஆனால் பன்னியை கொன்னு தூக்கிட்டு வர்றது உங்க பொறுப்பு”
அவனும் சதீஸும் சைக்கிளில் கிளம்பி போனார்கள் பாண்டியன் தெருவிற்கு அடுத்துள்ள முண்டன்சாமி கோவிலுக்கு அங்க இருக்க அடர்த்தியான முள் மரங்களுக்கு கீழதான் அவை கிடக்கும். சதிஸ் ஏற்கனவே எப்போதும் செய்வதுபோல வாழைப்பழத்தில் விஷம் கொண்ட குருனா மருந்தை தினித்து எடுத்து வந்திருந்தான். அந்த சின்ன நடைபாதையில் ரெண்டு வாழைப்பழங்களை போட்டுவிட்டு ஆலமரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டார்கள்.

அரைமணி நேரத்திற்கு எந்த பன்றியும் வரவில்லை.அவர்கள் ஒரு பீடியை பற்றவைக்கும்போது இரண்டு பன்றிகள் சண்டைபோட்டுக்கொண்டே வந்து பழத்தை சாப்பிடாமல் மிதித்து நசிக்கிவிட்டுப் போனது. அவர்கள் வேறு பழம் வீட்டுக்கு போய் எடுத்து வரலாம் என்று நினைத்தபோதுதான் அந்த பெரிய பன்றி முள் புதருக்குள் இருந்து மெதுமெதுவாய் வந்தது. அதன் உடல் நல்ல பருத்து இருந்தது. நல்ல பசிபோல அதுக்கு வேகவேகமாய் சாப்பிட்டு முடிப்பதற்குள் அது சுருண்டு விழுந்தது.

அவனும் சதீஸும் அதை வேகமாக போய் இழுத்து பக்கத்தில் உள்ள முள் புதருக்குள் போட்டார்கள். அதன் வயிற்றில் மட்டும் லேசாக உயிர் இருந்தது. சதீஸ் கனேசனையும்  கள்ளாண்டனையும் கூப்பிடப்போனான் அவன் அதை சுடுவதற்கு தேவையான வாழைதடைகளையும் காய்ந்த ஓலைகளையும் சேகரிக்கப்போனான்.

எல்லாரும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். கனேசனும் கள்ளாண்டனும் பன்றியின் முடியை வளிக்கும்  அந்த சிறிய கத்தியோடும் அதன் உடம்பை அறுக்க பெரிய கத்தியோடும் வந்திருந்தார்கள். பன்றியை ஒரு பெரிய பாராங்கல்லில் தூக்கிவைத்து வாழைதடைகளையும் காய்ந்த ஓலைகளையும் போட்டு தீ மூட்டினார்கள். தீ எரிய எரிய பன்றி முடி கருகி பன்றி நன்கு சுடப்பட்டது, இனி அதன் முடியை முகசவர கத்தியால் வளித்து மஞ்சள் பூசி பன்றியை கழுவி அதன் செப்புகளை அறுத்தெடுக்க வேண்டியதுதான் பாக்கி.

கள்ளாண்டனுக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கிறது. அவனால் அரைமணி நேரத்தில் ஒரு பன்றியை செப்பு செப்பாய் அறுத்தெரிய முடியும். ஆனால் அவனுக்கு பன்றியின் ஈரலை கொடுத்துவிடவேண்டும் என்பது ஊர் ஒப்பந்தம். கள்ளபாண்டியன் தன் கத்தியை கூர்மையாக்கி கொண்டிருந்தான், கனேசனும் அவனும் தீயை அனைத்து கொண்டிருந்தார்கள். சதீஸ் மஞ்சள் வாங்க போயிருந்தான். திடீரென்று பக்கத்து முள் புதரில் இருந்து கொஞ்சம் பதற வைக்கும் சத்தத்துடன் ஏழு எட்டு பால் குடி மறவாத பன்றிகுட்டிகள் அவர்கள் நிற்கும் பயம் கூட இல்லாமல் அவர்களின் கால்களின் ஊடாக புகுந்து வந்து தோல் கருகி போய்கிடந்த அந்த பன்றியின் அடி மார்புகாம்புகளில் முட்டி முட்டி மோதின. கருகிப்போன காம்பை கவ்வுவதில் சண்டைக்கூட போட்டுக்கொண்டன.

அவனும் கனேசனும் விலகி வந்து செய்வதறியாது நின்றபோது கள்ளாண்டன் ஓடி வந்து பார்த்துவிட்டு சொன்னான்.
“அட பாவிகளா! ஈனின பன்னியவாடா கொன்னு தூக்கிட்டு வந்தீங்க இந்த கறிய எவன் தின்பான் சவக்கு சவக்குன்னுலா இருக்கும் பொட்ட பன்னி ஈரல தின்னா குடும்பத்துக்கு ஆகாதடா தூக்கி தூரப்போட்டுட்டு வாங்கடா” என்று வேகமாய் கிளம்பிப்போனான்.

கனேசனும் சொன்னான் “ ஆமாம் மாப்ள கறி நல்லவே இருக்காது பபூல்கம் மாதிரி சவ்வா இழுத்துகிட்டு கிடக்கும் அப்புறம் இதோட நாட்டு சரக்கையும் சேர்த்து அடிச்சோம் வாயால வயித்தால கூட போனாலும் போயிடும்பா வேணாம் வா போவோம் நாளைக்கு நல்ல பன்னியா ரெடி பன்னாலாம்” என்று அவன் தோள் மீது கைப்போட்டு அவனை அழைத்துப் போனான்.

கொஞ்ச தூரம் தள்ளி போய் அவன் திரும்பிபார்த்தான் இன்னும் அந்த குட்டிகள் அந்த கருகிய காம்போடு மல்லுகட்டி கொண்டிருந்தது மல்லுகட்டிக்கொண்டிருக்கிறது அவனையும் அவனோடு சேர்த்து என்னையையும் அந்த பன்றிகுட்டிகள் அந்த கருகிய காம்புகளைப்போல கவ்வி தின்னுகொண்டுதான் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் அவனுக்குள் இருக்கும் நான் அவனுக்கு துரோகியா? என்னை ஏமாற்றும் அவன் எனக்கு துரோகியா?




                             

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com