பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 3, 2010

ரயில் கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்


இது செல்வராஜ் ஜெகதீசன். நான் ஐக்கிய அரபு குடியரசில், அபுதாபியில் எலெக்ட்ரிகல் பொறியாளனாக பணிபுரிந்து வருகிறேன். வயது நாற்பது. வார்ப்பு, கீற்று, திண்ணை, அந்திமழை, வல்லினம், அதிகாலை, சொல்வனம், தடாகம் மற்றும் உயிரோசை போன்ற இணைய தளங்களில் கவிதைகள் எழுதி வருகிறேன்.விகடன், குமுதம், யுகமாயினி, நவீன விருட்சம் மற்றும் சிங்கப்பூர் தமிழ் முரசு போன்ற அச்சு இதழ்களிலும் கவிதைகள் பிரசுரம் ஆகியுள்ளன.

இதுவரை அந்தரங்கம் (2008)  மற்றும் இன்னபிறவும் (2009)” என்ற இரண்டு கவிதைத் தொகுதிகள், அகரம் வெளியீடாக, முறையே விக்ரமாதித்யன் & சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளிவந்துள்ளன.


01
வழித்து உட்கார ஏலாமல்
வழியில் நின்ற ரயிலை
வசைபாடியபடி
நின்று கொண்டிருக்கிறாள்
வயக்காட்டு ஓரம்.

O

02
குடும்பத்தை
ஏற்றிச் சென்றது ரயில்.
கூடவே வருமிந்த
தனிமையை என்ன செய்ய?

O

03
வந்து போகும் ரயில்களையெல்லாம்
வழிமேல் விழி வைத்து
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பிளாட்பார இருக்கைகள்
இன்னொருமுறை வந்தமர்ந்து
நிகழக்கூடிய
பிரிவுப் பேச்சுக்களின்
பிற்பாதியைக்  கேட்க.

O

04
ஒரு ரயில் சிநேகத்தைப்
போலாவது
இருந்திருக்கலாம்
நமதந்த
இறுதிப் பிரிவு.

O

05
நின்ற ரயில்களே
நெடு நாட்கள்
நினைவோடு.

O

06
வந்து விட்டது
ரயில்களிலும்
வசதியானவர்க்கு
மட்டுமே என்றும்.

O

07
இன்னமும் பிரிவதற்கு
ரயில் நிலையங்களே
ஏதுவாய்.



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com