எனக்கு கடவுள் மேல அவ்வுளவா நம்பிக்கை கிடையாது. வெறும் சிலை தானேன்னு. ஆனா கோயிலுக்கு போனா பயப்புடுவேன். எல்லாரும் சாமிய பாத்து கும்பிடும் போது நானும் கும்பிடுவேன். ”என்ன மன்னிச்சிடு, இனிமேல் உன்ன நான் கும்புடுறேன், நம்புறேன்னு” சாமியை சமாதனப்படுத்தறமாதிரி. சுத்தி இருக்கவங்க எல்லாம் என்ன பாத்து சந்தோசப் படுவாங்க, ”சின்னப் பையன் இப்பையே இவ்ளோ பக்தியான்னு?”அப்ப எனக்கு 6 வயசு இருக்கும். என் தாத்தாதான் என்ன எல்லா சாமிட்டேயும் கூட்டிட்டு போவார். எந்த சாமிய பார்த்தாலும் எனக்கு பயம் வந்துடும். சிவனப் பாத்தா போதும், கையுல சூழாயுதம், கழுத்துல பாம்பு, ரொம்ப பயமா இருக்கும், கோயிலுக்குள்ள ஒரு எலி ஓடுனாலும் அவ்ளோதான். எல்லாரும் எனக்கு சாமி வந்துடுச்சுன்னு ஒரு நிமிசம் யோசிச்சுருவாங்க. முருகன பாத்தாலும் பயம். அப்பா கழுத்துல பாம்பு போட்டிருக்காரு, மகன் கால்ல பாம்பு வச்சிருக்காரு, என்ன குடும்பம் தாத்தா இவுங்கன்னு கேட்டேன்?. அதுக்கு ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு என்ன தூக்கி இடுப்புல வச்சிகிட்டாரு. இவுங்க அம்மா எங்க தாத்தான்னு கேட்டேன்?. கீழ இறக்கி விட்டு, அந்தப்பக்கம் போய் பாருன்னு சொன்னாரு.
அம்மா சாமிய பாத்து யாருக்கும் தெரியாம எனக்கு அந்த சாமியெல்லாம் பாத்தா பயமா இருக்கு, என்ன மன்னிச்சிடுன்னு சொல்லிடலாம்னு தேடி பாத்தேன். ஒரு சன்னதியில ஒரே குங்குமமா கொட்டி கிடந்துச்ச்சு, இது தான் அம்மா சாமியா இருக்கனும்னு நினச்சுட்டு உள்ள எட்டி பாத்தேன். 12 கையு, எங்கப்பா வண்டி சரி பண்றதுக்கு வீட்ல வச்சிருக்கிற டூல்ஸ்லாம் அத்தன கையுலையும் இருந்துச்சு. இதுவா அம்மா சாமின்னு நினைச்சுகிட்டேன். நாம மனசுல நினச்சது அம்மா சாமிக்கு தெரிஞ்சிருக்குமோன்னு பயந்து போய் தாத்தாட்ட ஓடி வந்தேன். காதடச்சு போயிருந்துச்சு. அம்மா சாமியோட பேரு என்னனு தாத்தாட்ட கேக்குறதுக்கு முன்னாடி ஒருத்தர் காளியாத்தா, என்ன காப்பாத்துனு சொல்லி ஏதோ பாட ஆரம்பிச்சாரு. காளியாத்தாவா? இவுங்க தான் அம்மா சாமியா?னு நினைக்கும் போதே அழுக ஆரம்பிச்சுட்டேன்.
”அடுத்த நாள் காலையில காய்ச்சல். எல்லா பிள்ளைகளுக்கும் கோயில்ல போய் மந்திருச்சா நோய் நொடியெல்லாம் தீரும்னு சொல்வாங்க, இவனுக்கு என்னான்னா கோயிலுக்கு போன பிறகு தான் காய்ச்சலே வந்துருக்குன்னு” எங்க பாட்டி ரொம்பவே சலிச்சுகிட்டாங்க. பத்தாதுக்கு இவன முனியாண்டி கோயிலுக்கு கூட்டிட்டு போய் மந்திருக்கனும்னு சொன்னாங்க.
முனியாண்டின்ற பேர் மட்டும் காத்து வாக்குல என் காதுல வந்து விழுந்துச்சு. இருக்கற சாமியெல்லாம் பத்தாதுன்னு புதுசா ஒரு சாமியா? ன்னு திருப்பி அழுக ஆரம்பிச்சுட்டேன். எங்க தாத்தாவும் , எங்கப்பாவும் வேலைக்கு போயிருந்தாங்க. அதுக்குள்ள எங்கம்மாவும், பாட்டியும், பரிதவிச்சுகிட்டு முனியாண்டி கோயில்ல போய் மந்திருச்சடலாம்னு முடிவு பண்ணிட்டு உச்சி வெயில்ல என்னைய தூக்கிட்டு கிளம்பிட்டாங்க. எனக்கு அங்க தான் போறோம்னு சொல்லவேயில்ல. அரசு ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல அந்த கோயில். நிறைய கூட்டம்.வெள்ளிக்கிழமை வேற. எல்லாரும் கைக்குழந்தைகளா நிறைய வச்சிருந்தாங்க. பூசாரிய பாத்த உடனே எனக்கு பயம் தொத்திக்கிச்சு. பூசாரிக்கு பக்கத்துல கறுப்பா, ஒரு கையில பெரிய அருவாளு. அதான் முணியாண்டி சாமி. எனக்கு இப்ப அழுகையெல்லாம் வரலை. மூச்சு மேலும் கீழும் வாங்க ஆரம்பிச்சுருச்சு. அழுகுறதுக்கு கூட மூச்சு இழுக்க முடியாத அளவுக்கு பயம் தொண்டைய அடச்சிருச்சு. 12 மணிக்கு பூஜைய ஆரம்பிச்சாங்க. பூசாரி எல்லாபக்கமும் தவ்வுனாரு. எங்கம்மா சேலைக்குள்ள புதஞ்சுகிட்டேன்.
”உனக்கு என்னடி சிவகாமி வேணும்”னு கடுமையா பூசாரியோட குரல். நம்ம பாட்டி பேர சொல்ற மாதிரி இருக்கேன்னு யோசிச்சுகிட்டு லேசா திரும்பி பாத்தேன். பூசாரி கையில அருவாளு. பக்கத்துல எங்க பாட்டி. இப்ப அழுகை வந்திடுச்சு. நல்ல கத்தி அழுதேன். ”என் பேரனுக்கு உடம்பு சரியில்ல சாமி, காத்து கருப்பு அண்டிருக்குமோன்னு பயமா இருக்கு, எனக்கு இருக்குறது ஒரே பேரன், நீதான் காப்பாத்தனும்னு” பாட்டி சொல்லுச்சு.
பாட்டி மேல இருந்த பாசமெல்லாம் கொஞ்ச நேரத்துல பறந்துருச்சு. எங்கம்மாவ தள்ளிவிட்டு கீழ இறங்கி ஓடலாம்னு நினைக்குறதுக்கு முன்னாடி, எங்கம்மா என்ன புடிச்சு கொண்டு போய் பூசாரி முன்னாடி நிப்பாட்டுனாங்க. முதல்ல என்ன பாத்து ஒரு மாதிரி சிரிச்சாரு. அதுக்கப்புறம் ஒரு முர முரச்சாரு. அவ்வுளவு தான், எங்கம்மா கூட போய் ஒட்டிகிட்டேன். நாக்க மடிச்சுகிட்டு, அருவாள தூக்கி தங்கு தங்குன்னு ஒரு ஆட்டம் ஆடினாரு. அப்புறம் மயிலிறகெல்லாம் சேத்து வச்சு மந்திரம் சொல்லிகிட்டு மண்டையில அடிச்சுகிட்டே இருந்தாரு. விபூதி எடுத்து நான் எதிர் பாக்காத நேரத்துல முகத்துல எறிஞ்சாரு. 3 மணி இருக்கும், வீட்டுக்கு வந்தோம். அன்னைக்கு நைட்டே 102* காய்ச்சல்.
எங்கம்மா எப்பவும் போல மாத்திரைய எடுத்துட்டு வந்தாங்க. ”டேய், மாத்திர சாப்புடு, சாப்டாத்தான் காய்ச்சல் போகும், மாத்திரை சாப்பிடுறதுக்கெல்லாம் அழுக கூடாது டா” .”அதுக்கு அழுகல மா”. மாத்திர சாப்புடுறேன் மா, முனியாண்டி வேணாம்மா ன்னு அழுதுட்டே சொன்னேன். எங்க தாத்தா டாக்டர வீட்டுக்கே கூட்டிட்டு வந்தாரு. எங்கப்பா என் பக்கத்துல உக்காந்துட்டு ஊசி போடனுமா? பையன புடிச்சுக்கனுமா? னு கேக்கத் தொடங்கிட்டாரு. உடனே எங்கம்மா கடைக்கு பொயிட்டாங்க. எதுக்கு போனாங்க? என்னத்துக்கு போனாங்கன்னு தெரியாம என்னமோ நடக்கப் போகுதுன்னு திருப்பி அழ ஆரம்பிச்சுட்டேன். எங்கம்மா வேகமா வீட்டுக்குள்ள வந்தவங்க எங்கப்பாவ பாத்து ‘ வாங்கிட்டேங்கனு சொன்னாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ஹால்ல உக்காந்து காப்பி குடிச்சிட்டிருந்தாரு டாக்டர்.
பேரன் அழுதுகிட்டே இருக்கான், என்னான்னு வந்து பாருங்களேன்ன்னு எங்க பாட்டி கூப்பிட்டிட்டு வந்தாங்க. டாக்டரும் கண், மூக்கு, வாய் எல்லாம் பாத்துட்டு பையன் பயந்துருக்கான், கோயில்ல போய் மந்திருச்சு தாயத்து ஏதாவது கட்டி விடுங்கன்னு சொன்னாரு. எதுக்கும் இந்த மருந்த கொடுங்க, ஊசி வேண்டாம், சரி ஆகிடும்னு சொன்னாரு. எனக்கு ஊசி இல்லைங்கறது பெரிய ஆறுதலா இருந்துச்சு. டாக்டர் சொல்லி முடிச்ச உடனே எங்க அப்பா, அம்மா எல்லாரும் எதுக்கோ தயார் ஆகிட்டாங்க. எல்லார் முகத்துலையும் ஒரு பரபரப்பு. அவுங்கள பாத்து எனக்கு ஒரே பரபரப்பு. எங்கப்பா என்னைய திருப்பி போட்டு என் கை ரெண்டையும் பிடிச்சுகிட்டாரு. என் காது பக்கத்துல “நம்ம வண்டியில ஒரு பெரிய ரெளண்டு போவோம், சரியா? ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி எங்கம்மா என் அரைகால் சட்டைய சரட்டுன்னு கழட்டுனாங்க. எங்க பாட்டி, “மெதுவா மா, பட்டன் மாட்டிக்க போகுது”. எங்கப்பா “ஏண்டி,அறிவுகட்டவளே, எல்லாத்துலையும் உனக்கு அவசரம் தானா” . எங்கம்மா எதையும் கவனிக்காம, ”பையன புடிச்சுக்கோங்க” ன்னாங்க. டாக்டர் கூட பொய் சொல்லுவாருன்னு அன்னைக்குதான் தெரிஞ்சுச்சு.
டாக்டர் ஊசி போடுறதுக்கு முன்னாடி ஒரு டிஞ்சர் வச்சாரு. அந்த வாடை என்ன என்னவோ பண்ணுச்சு. என்ன நடக்கப் போகுதுன்னு திரும்பி பாக்குறப்ப, எங்க பாட்டி ஏதோ ஒரு கடவுள வேண்டிகிட்டிருந்தாங்க. தாத்தா பொறுமையா என்ன பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சாரு. எங்கம்மா மலையில இருந்து குதிக்கப் போறப்ப என்ன பயத்துல இருப்பாங்காளோ, அத மாதிரி முகம் வெளுவெளுத்து போய் இருந்துச்சு. அத பாத்து எனக்கு ரொம்ப பயமா போச்சு. எங்கப்பாவ பாக்கலாம்னா, அவரு தன் முட்டிகைய வச்சு கண்ண மூடிக்கிட்டாரு. எங்க தாத்தா மட்டும் பக்கத்துல வந்து ஏதோ பேச்சு கொடுக்க முற்பட்டார். அதுக்குள்ள டாக்டர் ஊசி போட்டுட்டார். எனக்கு அந்த வலிய உணர்றதுக்கு முன்னாடியே எல்லாரும் அழுகாத, அழுகாதனு தட்டி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் எனக்கு உண்மையாகவே அழுகை வந்துடுச்சு. ”அத எடுத்து குடுடி”ன்னு எங்கப்பா எங்கம்மாட்ட சொன்னாரு. என்னனு அழுகையோட எட்டிப் பார்த்தேன். ”ஹாட் வீல்ஸ்” காரும் ஒரு சாக்லட் கேண்டியும் கொடுத்தாங்க. எங்க பாட்டி இதெல்லாம் சாப்ட்டா, இன்னும் காய்ச்சல் அதிகமாத்தான் ஆகும்னு சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க. என் அழுகையும் நின்னுச்சு. எங்க தாத்தா விபூதி பூசி விட்டாரு. எங்கப்பா என்னைய எங்க வேன்ல ஏத்திட்டு ஒரு ரெளண்ட் போனரு. வீட்டுக்கு திரும்புன உடனே எல்லாத்தையும் ஏத்திகிட்டு பெரிய ரெளண்ட் போனோம். வீட்டுக்கு வர்றப்ப தூங்கிட்டேன்.
இப்ப எனக்கு வயசு 26. இப்பவும் காய்ச்சல் வந்துட்டு தான் இருக்குது. டாக்டர்ட்ட தனியா போய் ஊசி போட்டுகிட்டு இருக்கேன். அந்த முனியாண்டி சாமியும் இல்லை. ஹைவேஸ்காரனுங்க சாமிய கொன்னுட்டாங்க. மிச்சம் இருக்கிறது காளியாத்தா மட்டும் தான்.
- சக்தி செல்லையா
