அவன் வீடு ஆரப்பாளையம் க்ராஸ்க்கு அருகில். அவனுடைய ஏரியாவில் பலரும் அவனைத் தோழர் என்று அழைத்தனர். எதோ ஒரு இடது சாரிக் கட்சியின் தீவிர தோழனாய் அவனிருந்தான். பேச்சில் இடதுசாரிக் காரர்களின் பாவனை இருக்கும். பெரும் பாலும் தோழர்கள் அந்த காலங்களில்(93-95) பா.கிருஷ்ணக்குமாரைப் பின்பற்றி அவருடைய பாணியில் பேச முயன்று கொண்டிருந்தார்கள். ஒரு கிறித்துவ போதகரின் பேச்சுத் தொனியைப் போன்று இருக்கும். கலை இலக்கிய இரவுகளில் நிகழ்வுகளில் நிகழ்த்தப்பட்ட தோழர்களின் பேச்சின் முறையும் தமுக்கம் மைதானத்தில் நடைப் பெற்ற கிறித்துவப் போதர்களின் பேச்சின் முறையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போலிருக்கும். இதைச் சொல்லப் போய் தோழர் முருகேசு என்னிடம் சிறிது காலம் பேசாமல் இருந்தான். அப்புறம் எப்படி பேசத்தொடங்கினோம் என நினைவில்லை. மூளை எப்போதும் முரண் பட்டதை தான் நினைவில் வைத்துக் கொள்ளும் போலும்.
முருகேசு நிறைய இடது சாரித் தோழர்கள் மறைமுகமாய் செய்து வந்த வட்டிக்கு விடுகிறத் தொழிலை பார்ட் டைம்மாக செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கப் போகையில் எல்லாம் முழுதுமாக ஒரு பாக்கெட் கோல்ட்பில்டரும் ஒல்ட் மங் இரண்டு கட்டிங்கும் வாங்கித்தருவான் ஆதலால் அதை குறித்து எந்த விமர்சனமும் வைக்கவில்லை நான். மார்க்ஸ் என்ன சொன்னால் என்ன நமக்கு வசீகரிக்கிற அந்த ரம்மின் நிறமும் நெடியும் தானே முக்கியம். அவன் தோழன் என்பதனால் வோட்காதான் குடிக்கவேண்டும் என்று சிற்சில சமயங்களில் ரஷ்யத்தொல்லைத் தருவான். பாப்ளார் மரமும் ஸ்தெப்பிப் புல்வெளியும் இல்லாததால் வோட்காக் குடித்துப் பயனில்லை என்று அவனை அடக்கிவிடலாம்.
ஆக தோழர் முருகேசு என்னைப் பார்க்க சென்னைக்குத் திடீரென்று வந்திருந்தான். அவனை வெளியே அழைத்துச் செல்ல அந்த மாதம் மெஸ் பில் பணம் தோதாக அமைந்திருந்தது. அப்போதெல்லாம் என் தந்தையிடம் என் செலவாளித்தனத்தினால் ஏதேதோ கணக்குச் சொல்லி பணம் கரந்து கொண்டிருந்தேன். அவரைச் சுலபமாக ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில வருடங்களுக்குப் பிறகு என் பொய்கள் அத்தனையும் தெரிந்திருந்தும் பணம் அனுப்பினார் என அம்மா சொன்ன போது மனதிற்கு கஷ்டமாய் இருந்தது. நல்ல அப்பாவிற்கு மோசமான பிள்ளைகள் கிடைப்பார்கள் என்பது என் விசயத்தில் உண்மை. மோசமான அப்பாவிற்கு நல்ல பிள்ளைகள் கிடைப்பார்கள் என்பதும் என் விசயத்தில் என் மகள் பிறந்ததும் உண்மையானது.
ஆக அந்த மாத மெஸ் பணத்தில் நானும் முருகேசும் மதியத்தில் மகாபலிபுரம் போனோம். ஒல்ட் மங் ஹாவ்வில் பாதி காலியானது. கடலில் குளித்து கடலை எட்டி உதைத்து கடலை காரிஉமிழ்ந்து, வீசிய அலையை தாங்கவொண்ணா வார்த்தைகளால் ஏசி பொழுது போனது. மிச்சத்தையும் குடித்துத் தீர்த்தோம். ( அன்றைய பொழுது நமக்குத் திரும்ப கிடைக்குமா தாத்தா?). ஏதேதோ பேசினோம். நிலவு விழுந்தது. நீர் முழுக்க நிலவு. நான் நிலவுப்பால் என்றேன் அதை. முருகேசு அதை வாயிலிட்டு கொதப்பியவாறே சொன்னான் நிலவுப்பால் உப்புக் கரிக்கும் என்று. காரணம்மின்றி இருவரும் சிரித்தோம். ரம் தந்த சிரிப்பா, கடல் கண்ட உவப்பா, குளிர் தந்த வெடவெடப்பா.
நான் அங்கிருந்த கோவிலும் பாறையும் கடலில் இருந்து வந்தது என்றேன். கடைத்தெருவில் உழிகளின் சப்தம். நச்சு தெரிக்கிறது என்றான் அவன். உலகம் வரலாறு பனிக்காலம் கடல் விஞ்ஞானம் கலை சிற்பம் ஓவியம் காமம் பால்யம் என்று ஏதேதோ பேசினோம். (எப்போது உறங்கினோம் முருகேசு? எப்போது அங்கிருந்து திரும்பினோம் முருகேசு? எனக்கு நினைவில்லை)
மறுநாள் கிளம்பிப் போனான் வெறுமையைத் தந்து விட்டு. சென்னையில் மதுரைக்கார நண்பர்களைப் போல் அமைவதில்லை. எல்லா பெரு நகரமும் நட்பிற்கு அப்பாற்ப் பட்டதுதான் போலும்.
அவன் சென்ற மறுநாள் இரவு “பச்சைப் பாறையின் மஞ்சள் குமிழிகள்” என்ற இந்த கதையை எழுதினேன். இக்கதை தோன்றிய இடம் மகாபலிபுரம். எனவே இக்கதை நடக்கும் இடத்தையும் அதுவாகவே வைத்துக் கொள்ளலாம் இல்லை உங்களுக்குப் பிரியப்பட்ட கடற்கரையையும் வைத்துக் கொள்ளலாம்,. இக்கதை 97ன் எதோ ஒரு மாதத்தில் தாமரையில் வெளிவந்தது.
இப்போது முருகேசு வருவதில்லை.
அப்பாவிடம் சொல்லும் பொய்கள் குறைந்திருக்கின்றன.
குடிப்பதில்லை.
சிகரெட் மட்டும்தான்.
அப்புறம் எழுதுவதும் எப்போதாவது என்றாகிவிட்டது.
பச்சைப் பாறையின் மஞ்சள் குமிழிகள்
இருள் தடவிய கடலின் அடியில் வழிந்து வருகிற குளிரில் மீன்கள் குமிழிகள் செய்து கொண்டிருந்தன.
“நமக்கான பரம்பரை கதையோட்டத்தின்படி நீராகிய சொர்க்கம் வாய்க்கப் பெற்றுள்ளோம். அழிவில்லாதவராகவும் கூர்மையான உடலை உடையவர்களாகவும் நம்மை ஆக்கியதோடு கூட பச்சை ஆடையையும் தரித்து விட்டுள்ளான். நம் தேவைக்கென நிலவுப் பாலை நெடுக கொட்டிவிடுகின்றான். அவன் வாக்கின்படி நமக்கு கீழேயும் மேலேயும் நரகம் நிறுவப்பட்டுள்ளது. அந்நரகத்தின் கொடுமையான பானங்களிடம் இருந்து நம்மைக் காப்பதற்காய் வெண்பாறைத் தெய்வத்தையும் தந்துள்ளான். இவ்வாறு சகல சௌபாக்யத்தோடு அருளப்பட்ட வாழ்வை நீங்கி மேல் நரகம் புகுவது கடைந்தெடுத்த அசட்டுத்தனம்”.
“இல்லை நிலவுப்பாலைக் குடித்தவாறே நான் மேலே போகிறேன்”, பாசிப் பூசப்பட்ட பாறை தன் கூர்மையான தேகத்தை ஒத்த கூர்மையுடன் கூவியதில் திமிங்கலம் ஒன்று குத்தப்பட்டு இறந்தது. செத்ததின் உடலை நீரின் கரங்கள் இழுத்து வந்து வீசியதில் குத்தப்பட்ட பகுதி பாறையில் சொருகி அடைக்கப்பட்டது. அதன் வாய் வழியே இறுதிக் குமிழி வெளிச்சேர்ந்த சமயத்தில் நிலவுப்பால் முழுதும் அதனுள் சென்று மாயமானது. “நான் அடுத்து வரும் நிலவுப்பாலுக்காய் காத்திருக்கிறேன்” என்று மிக மெலிதாகக் கூவியவாறே திமிங்கலத்தை குரோதத்துடன் நோக்கிய அப்பாறை அதீத சப்தத்துடன் சம்பாஷனையைத் தொடங்கியது.
“மேல் நரகத்தில் நீங்கள் கதைத்து வருகிற ராட்சதர்களின் தேகப்பலத்தை காணுதல் என்ற அவா என் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட மீனைப் போல் சதா துடிக்கிறது. பரம்பரைக் கதையோட்டத்தின் வரிகள் பாசிகளால் அரிக்கப்பட்டு சின்னச்சின்ன சொற்களாய் நீந்துகிறது. நீங்கள் பொறுப்பீரோ, நான் கூற விளைவதை?, என் மீது மஞ்சள் பால் மேலிருந்து நேற்றைக்கு ஊர்ந்து வந்த போது ஒரு சொல்லின் குரல்வளையை மீனொன்று கவ்வித் திரிந்தது. அச்சொல்லின் இறப்பதற்கு முந்தைய செய்திகளைக் கேட்கும் பாக்யம் எனக்கு உண்டாயிற்று. அச்சொல்லின் இறுதிச் செய்திக் குமிழின்படி, ‘நாம் இருப்பது ஓர் நீர்க்குண்டா, இது நரகத்தின் சகிக்கவொண்ணா உறுப்பு. இதில் நம்மைக் கடாசி பாவம் புரிந்த ஜீவன்களை மீனாய் நம்மிடை அனுப்பி அதன் முதுகுகளையும் செதில்களையும் கண்களையும் நம்மால் கிழித்து எறிகிறான் அவன். இன்னமும் என் கூர்மையான நாசியின் நுனியில் குத்தப்பட்டுத் தொங்குகிற சுறாவின் கண்களைப் பாருங்கள், அது நிலவுப்பால் சிந்தும் வழியை நோக்கிய வண்ணம் இருக்கிறது. அவன் அதை அழைத்துச் செல்ல வருவான் என்றும் அதனுடைய பாவத்தைப் நம்மேல் பச்சையாய்ப் படர விடுவான் என்றும் அது நினைக்கிறது.”,
“மேலும் எத்தனைச் சொற்கள் மீனின் வயிற்றுக்குள் மாயமாகிவிட்டன என்றோ, அதன் கழிவோடு மண் அடியில் புதைந்து விட்டன என்றோ நமக்குப் புலப்படாததால் அச்சமும் ஆச்சரியமும் கலந்த உணர்வானது நம்மில் இருந்து துகள்களாய் உதிர்ந்த வண்ணம் இருக்கிறது. சன்ன நூலாய் உதிர்கிற அத்துகளின் கனம் சிப்பிகளின் முதுகைச் சேர்ந்த கணத்தில் சிப்பியினின்று தீராத நீர்க்குமிழிகள் வெளியேறுவதை கவனித்தீரா? அக்குமிழிகள் சொற்களின் ஆவி உருவமாய் என்னை அண்டி கதைத் தேடி அவிழ்ந்து போகுமாறு கட்டளை இடுகின்றன. மாசு மருவற்ற பச்சைப் படராது காட்சி தந்தருளும் வெண்பாறைத் தெய்வத்தின் மீது என் சொற்கள் கட்டப்படுவதால் சந்தேகிக்காமல் இருப்பீராக. நான் அவிழ்ந்து போகிறேன் கதையைத்தேடி. அடுத்த நிலவுப்பாலில் நம்முலகத்திற்காக மேலும் கதைக்குமிழிகளை மேல் நரகத்தில் திரட்டுவதற்காக நான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.” பச்சைப் பாறையின் இக்குரலானது பாறைகளின் குழிகள் முழுதும் தேங்கத் தொடங்கியது.
இச்சம்பாஷனைக்கு முன்பு இறந்துபட்ட திமிங்கலத்தை பல லட்ச மீன்கள் கடிக்கத் தொடங்கிய போது மீன்களின் வாய் முழுதும் பால் துணுக்குகள் ஓளிரத் தொடங்கியது. முடிவாக திமிங்கலத்தின் பெருவயிறு திறக்கப்பட்டு நிலவுப்பால் தன் முழுபலத்துடன் மேல் நோக்கிப் பாய்ந்த்து. பச்சைப் பாறை ‘இதோ அந்த நிலவுப்பால்’ என்று தன் தேகத்தை மேல் நோக்கி அவிழ்த்துக் கொண்டது. ஓளித்துணுக்குகளைச் சுமந்த மீனகள் இதன் நகங்களில் சிக்கிக் கொண்டதால், நீலநீரில் பச்சை உடைக் கொண்டு வெண்முத்துக்கள் பதிய மேலே செல்வதை கடலடிப் பாறைகள் நோக்கியவாறு தங்கள் குழிகளில் சேர்ந்த அப்பாறையின் குரலோடு இக்காட்சியையும் பதிய விட்டு, புதிய கதைக்குமிழிக்காய்க் காத்துக் கிடக்கத் தொடங்கின.
லட்சம் லட்சம்மான ஆண்டுகள் பச்சைப் பாறையின் அவிழ்விற்குப் பின் வந்து போனது. கடலடியில் நிலவுப் பால் வருவதும் மாயம்மாவதுமாகிய தன் ஆட்டத்தை முடிக்காமல் பாறைகளின் கதையோட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தது. பாறைகளின் குழிகளில் மண்டிக் கிடந்த பச்சைப் பாறையின் பதிவும் குரலும் கதைஓட்டத்துடன் கலந்து பாசிகளால் அரிக்கப்பட்டு உடைந்த சொற்களாய் நீந்த தொடங்கின.அச்சொற்களை வழக்கத்தின் படி மீன்கள் கவ்வித் திரிய பின்பு மாயமானது.ஆனால் நட்சத்திர மீனின் வாய்தள்ளுகிற குமிழிகளில் அச்சொல்லின் செய்தி துல்லியமாக இருந்தது.அவ்வாறு தோன்றுகிற செய்தி குமிழானது புராதான பச்சை வண்ணத்துடன் நீலப் பாலில் பச்சைப் பாறையின் சம்பாஷனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டிற்று. வெண்பாறைத் தெய்வத்தின் மீது கட்டப்பட்ட சொற்கள் ஆனதால் அதனுடைய நம்பகத்தன்மையைச் சந்தேகித்த பாறைகள் சுக்குநூறாக வெடித்துச் சிதறிய செய்தியும் அக்குமிழியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடலின் அடி மிகுந்த உக்கரத்துடன் மணலை பாறைகளின் கண்களில் வீசி குருடக்கிக் கொண்டிருந்த இரவில் பஞ்சையொத்த மென்மையுடன் மஞ்சள் தோல் போர்த்தி யாவரும் அறியாத வண்ணம் அளவில் சிறிய ஒரு கல் வெண்பாறைத் தெய்வத்தின் மேலுதட்டில் வந்தமர்ந்தது. அக்கல் எழுப்பிய அதன் ஒலியானது நீரின் தொப்புள்குழிக்குள் சுருண்டு காணாமல் போனது. தான் பச்சைப் பாறையாய் இருந்த காலத்தில் வாய்க்கப்பெற்றிருந்த கூர்மையான குரலையும் தேகத்தையும் நினைத்து வருந்திய அது, தன் பாறை இனத்தின் நெஞ்சுரத்தையும் நினைவுக்கு வரப் பெற்றதனால் தன் முழுப்பலத்தையும் கூட்டி வெண்பாறைத் தெய்வத்தின் இதழில் மஞ்சல் வண்ணத்தை தேய்க்கத் தொடங்கியது. இவ்வாறு மேலிதழையும் கீழிதழையும் தேய்த்து முடித்த தருணத்தில் அத்தெய்வத்தின் எட்டு இதழ்களும் அசையத் தொடங்க கடும் சத்தம் ஏற்பட்டு கடல் அடியின் உக்ரத்தை கொன்று போடவே பாறைகளின் கண்கள் குருடாகாமல் தப்பின.
“மேல்நரகம் சென்று வந்த பச்சைப் பாறையின் மஞ்சள் வண்ணத்தில் தீட்டப்பட்ட வரிகளில் உள்ள கதையை கடலஅடி முழுதும் வீசப்போகிறேன். நான் கதைப்பதற்கு முன்னதாக பாறைகள் தங்கள் மேனியில் ஆடிக்கொண்டிருக்கும் கவிச்சிகளை அரவே கழுவி தூய்மை நோன்பு பூண்டவராக வேண்டும். இவ்வாக்கினை மீறுபவர்களின் இதயத்தில் தாங்கத்தகாத துடர் அரக்கன் தன் மகிழ் கூத்தை பதினெட்டுக் கால்களால் புரிவானாக”, என்ற செய்தியை கூறிவந்த வெண்பாறையின் நான்கு வாய்க்குள்ளாகவும் ஒரு மஞ்சள் கல் உருண்டோடிக் கொண்டிருப்பதையும் அக்கல்லின் அசைவுக்கேற்பவே இதழ்கள் திறக்கவும் மூடவும் செய்கிறது என்பதையும் பாறைக் கூட்டங்கள் கண்டு, ‘வெண்பாறை மஞ்சள் கல்’ தெய்வம் தம் குலத்திற்கு அணுக்கிரகம் புரியத் தோன்றியதாய் பக்தி மிகுந்து எண்பெரும் திசைக்கும் உரத்துக் கூவின.
பாறைகள் தூய்மை நோன்பு கொண்டதால் கொண்ட ஒளியை உரத்துப் பாடியதும் வெண்பாறைத் தெய்வத்தினின்று கதை மஞ்சள் வண்ணத்தில் வீசப்பட்டது, “மேல் நரகத்தில் தரைப்படுகை முழுதும் நம்முலகில் பாவம் செய்த துகள்கள் ஈரம் மடிந்து ராட்சதர்களின் காலடியில் மிதிக்கப்பட்டு நிறைந்து கிடக்கின்றன. ராட்சதர்கள் சின்ன மீனின் உடல் அளவைப் பெற்றவர்களாக மிருதுவான தோல் போர்த்தித் திரிகிறார்கள். ஆனால் அவர்களிடம் வினோதமான சண்டித்தனம் செய்கிற சாத்தான்கள் சேவகம் புரிகின்றன. அவ்வீணர்களின் விரலசைவுக்குக் கட்டுப்படுகிற அச்சாத்தான்கள்தான் என்னைக் குடைந்து தள்ளின. அவை என் மேனி முழுதும் சட் சட் என்று உமிழ் நீரைத் தெளித்து என் சதைத்துணுக்குகளை எரித்துச் சாம்பல் செய்தன. என்னுடைய இருதயம் உடலில் இருந்து அறுத்து எறியப்பட்டது. சாத்தான்களின் நச்சு உமிழில் இருந்து எனக்கு அரண் செய்தது சுறாமீனின் கண் தான். நீங்கள் உங்கள் குழ்ந்தைகளின் மேல் கொண்ட அக்கறையை ஒத்த அக்கறையுடன் எனை செவிமடுப்பீராக. நிலவுப்பால் சுறாமீனுடைய கண்களின் தடத்தில் தான் வெளிவருகிறது. நம் உலகினின்று அதனின் விழிகள் மேல் நரகத்திற்கும் மேல் சென்று தினமும் ஒளி தருகின்றன. ஏனெனில் சுறாமீனின் கண்களையொத்த வடிவத்தில் நிலவுப்பால் கொட்டும் வாயும் இருக்கிறது. அவ்வாயானது இங்கு நம் கூறான பற்களில் அகப்படுகிற சுறாமீனின் அளவைப் பொருத்து மாறவும் செய்கிறது. எனவே இனிவரும் காலத்தில் வெண்பாறைத் தெய்வத்திற்கு அதிகமான சுறாமீனைப் பலியிடுவதன் வழி அதிகமான நிலவுப்பாலை நீங்கள் பெறலாம். அச்சாத்தான் என் இருதயத்தின் மீது உமிழ்நீரைச் சிந்த இருந்த வேளையில் சுறாமீனின் கண் தன் இமையை மூடி இருட்டைத் திறந்து விட்டதனால் தடம்மாறி என் உடலோடு இருதயம் இணைக்கப்பட்ட பகுதியில் எரிப்பை உண்டாக்கியது அவ்வுமிழ் நீர். என் இருதயம் என் உடலில் இருந்து கழண்டு, கொடுமைமிக்க உஷ்ணம் கக்கும் மஞ்சள் பாலில், பாவம் செய்த நம்முலகத்து துகள்களின் மீது விழுந்தது. நான் அந்த ராட்சதர்களைப் பார்த்தவாறூ இருந்தேன்.
அவர்கள் என் காலால் செய்யப்பட்ட வேலைப்பாட்டை தூண் என்றும் தலையை விதானம் என்றும் வயிற்றை பீடம் என்றும் பெயர் மாற்றம் செய்து பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டனர். அவர்கள் என் குறியாலும் யோனியாலும் செய்யப்பட்ட ஒன்றைத் துதித்து மனம்முருகி அது அனுப்பிய பிரசாதமே என்னால் செய்யப்பட்ட எல்லாம் என்று கொண்டாடி மகிழ்வு கொண்டனர். அம்மகிழ்வு அத்தனையையும் வாயில் சுருட்டிப் போட்டுக் கொண்ட ராட்சதர்களின் குட்டிப் பிசாசுகள், துகள்களில் வெம்மைப் பொருக்காமல் பொசுங்கிப் போய் மஞ்சள் நிறமாய்ப்போன என் இருதயத்தைக் காற்றில் எறிந்து பிடிக்கலாயினர். அப்பிசாசுகளின் கையில் அழியவே முடியாது என்று நான் எண்ணி வந்த என் உயிரானது ஊசலாடத் தொடங்கியது. வெண்பாறைத் தெய்வத்தின் உருவக்கட்டை என் மனதில் நிறுத்தி நெஞ்சுருக யான் பாடத் தலைப்பட்ட போது ஒரு கரும் குட்டிப்பிசாசு என்னை நம்முலகக் கடலுக்குள் விட்டெறிந்தது. பற்பல யுகமாய் மஞ்சள் பாலில் குளித்து உஷ்னம் கொதித்த எண்ணில் இருந்து ‘ஷ்’ என்ற சப்தத்துடன் வெப்பப் பேய் நீரைத் தொட்டதும் வெலவெலத்து ஓடிப் போனது. இதோ நான் கொண்டு வந்துள்ள கதை முற்றப் போகிறது. இதற்குமேல் இந்நீர் உலகத்திற்கு யாரும் கதை கொண்டுவருதல் என்பது இயலாததாகவே இருக்கும்”.
வெண்பாறைத் தெய்வத்தின் உடல் முழுதும் மஞ்சளாகிப் போக அதனின்னின்று ஒரு சிறு வெண்கல் தரையினைத் தொட்டுப் பொடியான விசையில் எண்ணற்ற மஞ்சள் வார்த்தைகள் அந்நீர் உலகின் கதையோட்டத்தில் கலந்தன. பின்பு பாசிகளால் அரிக்கப்பட்டு உடைந்த மஞ்சள் சொற்களாய் அவை நீந்தத் தொடங்கின. அச்சொற்களை வழக்கத்தின் படி மீன்கள் கவ்வித் திரிய பின்பு மாயமானது. ஏதாவது ஒரு மீனின் வாய் எப்போதாவது விஷேசமான காலத்தில் வெளித்தள்ளுகிற குமிழிகள் புரதான மஞ்சள் நிறத்தில் தோன்றி ஒரு பெறும் பச்சைப் பாறை சிறு மஞ்சள் கல்லாய் மாறி வந்து சொன்ன கதையை மீன்டும் கூறும்.
அந்நீர் உலகத்தின் கதைகளில் கடைசியாக உலாவி வருகிற கதைக்குமிழியாய் புரதான மஞ்சள் குமிழி இருந்து வரும்படியானது, ஒரு நீலப்பாறை கீழ் நரகத்திற்கு தான் கிளம்புவதற்கான உரையாடலைத் தொடங்கும் வரை.
- இயக்குநர் ராம்
