அன்று மாலை பாளையங்கோட்டை ராஜா டவருக்கு முன்னால் கொஞ்சமும் பிடிக்காத நண்பன் ஒருவனுக்காய் காத்திருந்தது மிகவும் அருவருப்பாய் தான் இருந்தது எனக்கு. யாரை பார்ப்பது, எந்த திசை நோக்கி திரும்பி நிற்பது, தெரிந்தவர்கள் யாராவது வந்தால் எப்படி சிரிப்பது, கட்டாயப்படுத்தபட்ட சிறுமிகளோ வேறு வழியில்லாமல் ஊனமுற்றவர்களோ வந்து கைநீட்டி காசு கேட்டால் அவர்களை எப்படி சமாளிப்பது, பாளை பேருந்து நிலையத்தில் எந்தநேரமும் மேலாடை இல்லாமல் அலைந்து திரியும் அந்த பைத்தியகார பெண் எதிரில் வந்தால் அவளை எப்படி எதிர்நோக்குவது, பேசாமல் இன்று மட்டும் ஒரு சிகெரெட் வாங்கி புகைத்துவிடலாமா அல்லது குமுதமோ ஆனந்தவிகடனோ வாங்கி அதன் நடுபக்கங்களில் ஒளிந்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்தபடி ராஜா டவரிலிருந்து கொஞ்சம் நகர்ந்து வினோதினி டி.வி.டி கடைக்கு முன்னால் வந்து நின்றேன்.
s.p முத்துராமன். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், k.s.ரவிக்குமார், இவர்களோடு பேரரசுகள் தாரளமாய் வந்து போகக்கூடிய அந்த டி.வி.டி கடைக்குள் சென்று நேரத்தை செலவிட ஏனோ எனக்கு தோன்றவில்லை. அதன் வலது பக்கத்தில் இருந்த டீக்கடையில் போய் ஒரு டீ வாங்கி குடிக்கலாம் அல்லது அந்த டீயை வாங்கி கீழே ஊத்திவிட்டு காசு மட்டும் கொடுத்துவிட்டு வரலாம் என்று வேகமாய் நான் நகர்ந்த போதுதான் அவளை பார்த்தேன்.
பார்க்கும் யாவரையும் சந்தோசபடுத்தும் முகம் அவளுக்கு அதோடு அவள் உடுத்தியிருந்த அந்த சிகப்பு கலர் பட்டுபுடவையும் எப்போதும் அவள் உதட்டிலிருந்த அந்த சிரிப்பும் அவளை இன்னும் அழகாக்கியது. இதுவரைக்கும் நான் பார்க்காத யாரோ போல் அவள் இருந்தாலும் அவளின் சிரிப்பும் அவள் கையில் இருந்த குழந்தையிடம் அவள் காட்டிய குறும்பும் என் நினைவை எனக்கு கலைத்து போடுவதாக இருந்தது. அந்த கூட்டம் நிறைந்த இடத்திலும் யாருக்கும் தெரியாமல் தன் இடையை கில்லும் கணவனின் கை விரல்களை திருகி தன் மூக்கின் மீது விழுந்து கிடந்த முடிகற்றைகளை அவ்வளவு அழகாக அவள் தூக்கிபோட்ட போதுதான் அவளின் அந்த சின்ன நெற்றியின் வலது புறத்தில் இருந்த தழும்பை பார்த்தேன். அவள் அப்படியே பத்மாவாக என்னுடன் பதினோறாம் வகுப்பில் வெறும் இருபது நாட்கள் மட்டும் படித்த பத்மாவாக மாறியிருந்தாள்.
ஐயோ கடவுளே! அவள் என்னை பார்த்துவிடக்கூடாது, பார்த்து ஒரு சிரிப்போ ஒரு முறைப்போ அல்லது ஒரு புறக்கணிப்போ செய்துவிடக்கூடாது அப்புறம் அவ்வளவுதான் திருச்செந்தூர்-திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் விழுந்த அநாதை பிணமாகத்தான் நான் சாக வேண்டியதிருக்கும். வேகமாக நான் கீழே ஊற்றிய டீக்கான காசை எடுத்து கொடுத்துவிட்டு நடக்க முயலும்போதுதான் என் கைகளை கண்ணாடி வளையல்கள் அணிந்த யாரோ பிடித்து இழுத்தார்கள். அதிர்ச்சியுடன் திரும்பிய போது என்னை பழிவாங்கும் கொடூர சிரிப்புடன் கைகுழந்தையோடும் கணவனோடும் அவள் நின்றிருந்தாள்.
“ஏய் நீ பன்னீர் தான”( மிகுந்த சந்தோசத்தோடு) கேட்டாள். ”இல்லை” என்று சொல்லி தற்கொலை செய்துகொள்ளுவதை விட ”ஆம்” என்று சொல்லி சரணடைந்துவிடலாம் என்று நான் ”ஆம்” என்று சொன்னதும் எங்கும் தப்பி ஓடிவிடாதபடி என் கைகளை இன்னும் நன்கு இறுக்கி பிடித்துக்கொண்டு ஆச்சர்யமாய் கேட்டாள் “எப்படிடா இருக்க” என்று. எவ்வளவு பெரிய சுனாமி வந்தது அதிலுமா இவன் சாகவில்லை என்று அவள் நினைப்பது போலிருந்தது எனக்கு. நான் பதில் சொல்வதற்குள் அவள் கணவனிடம் பள்ளிக்கூட நண்பன் என்றும் குழந்தையிடம் பன்னீர் மாமா என்றும் என்னை அவளே அறிமுகம் செய்துவைத்துக் கொண்டாள். கொஞ்சமும் பதுங்காமல் பயப்படாமல் சிரித்து என்னை மேலும் பயமுறுத்தினாள்.
சரணடைந்த குற்றவாளியான என்னை கொஞ்சமும் இரக்கமில்லாமல் தூக்குமேடைக்கு அழைத்து செல்வதைபோல மிக வலுகட்டாயமாக அரசன் ஐஸ்கிரீம் பாருக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். இப்போது பத்மாவின் ஒரு கை அவள் குழந்தையையும் இன்னோர் கை அவள் கணவனையும் பிடித்தபடி ஐஸ்கிரீம் பாருக்குள் நடந்துபோனாள். திரும்பி நான் வருகிறேனா இல்லை ஓடிவிட்டேனா என்றும் பார்த்துகொண்டாள். அருவருப்பும் அவமானமும் என் இரு கை பிடிக்க அவர்கள் பின்னால் அற்பமான பெயர் தெரியாத ஒரு பிராணி போல நடந்து போனேன்.
நான் பதினோறாம் வகுப்பு படிக்கும்போது தான் பத்மா எங்கள் பள்ளிக்கும் என் வகுப்பிற்கும் வந்தாள். அவள் அப்பாவுக்கு வேலை மாற்றம் டில்லிக்கு கிடைத்ததால் தூத்துக்குடியிலிருந்து அவள் அம்மாவும் அப்பாவும் டில்லிக்கு போனதால் இரண்டு வருட படிப்பிற்காய் மட்டும் கருங்குளத்திலிருக்கும் தாத்தா பாட்டி வீட்டிலிருந்து பதினோறாம் வகுப்பு வந்து சேர்ந்திருக்கிறாள் என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். பத்மாவின் முகமும் அதில் எப்போதும் இருக்கும் சிரிப்பும் பார்த்தவுடன் எல்லாருக்கும் பிடிக்க கூடியதாகவும் அவள் பேசும் பயமில்லாத கூச்சமில்லாத பேச்சும் எல்லாரும் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கும். அவள் வந்த முதல் நாளே பிரேம்குமார் சார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவளை வகுப்பில் பாட சொன்னார். அவளும் புன்னகை மன்னன் படத்திலிருந்து ”ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” பாடலை பாடி எல்லாருக்கும் பிடித்த தேவதையாகிப் போனாள்.
இன்னும் ஒரு நாள் என் நண்பன் ஸ்டாலின் வந்து தாமதமாக அதை சொல்லியிருந் தாள், அவளை நான் காதலித்திருக்ககூடும் அவளுக்காகவே வாழ்ந்திருக்க கூடும். ஆம் அவன் பத்மாவை காதலிப்பதாக அவள் வந்த பத்தாவது நாளில் என்னிடமும் எல்லா நண்பர்களிடமும் சொன்னான். பதினைந்தாவது நாள் அவள் பெயரை தன் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டு வந்து காண்பித்தான்.
ஸ்டாலின் என் பால்ய நண்பன். அவனின் கோபத்திற்கும் அவனின் திருட்டு தனத்திற்கும், அவனின் கபடி விளையாட்டிற்கும் நானும் என் மற்ற நண்பர்களான சுந்தர், கண்ணன், முகேஷ் நான்கு பேருமே அடிமை. வரலாற்று ஆசிரியருக்கும் கம்யூனிஸ்ட்காரரான அவன் அப்பாவிற்கும் தான் அவன் ஜோசப் ஸ்டாலின் எங்களுக்கு அவன் பக்காஸ் ஸ்டாலின்தான் (பக்காஸ் என்பது அவன் பட்டபெயர் பித்தாகரஸ் தேற்றத்தை பக்காஸ் தேற்றம் என்று அவன் சொன்னதால்) எங்கள் பள்ளி தினங்கள் தினமும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை முடிவு செய்வதே அவன் தான்.
சரியாக பத்மா வந்த பதினேழாவது நாள் நாங்கள் நான்குபேர் சேர்ந்து ஸ்டாலினுக்காக பத்மாவுக்கு எழுதிய கடிதத்தை சிவன்கோவில் வாசலில் வைத்துதான் பத்மாவிடம் கொடுத்தான் ஸ்டாலின். அவள் அதை வாங்கி சாக்கடையில் வீசிவிட்டு போனபோது ஸ்டாலின் சிறிதும் கோபப்படாமல் எங்களிடம் வந்து கண்கலங்கியது எங்களுக்கே ஆச்சர்யமாத்தான் இருந்தது மறுநாள் பள்ளி முடிந்துபோகும் போது பெருமாள் கோவில் மலையில் வைத்து அவளை மறித்து நான்கு பேரும் பேசுவதான திட்டம்தான் அவனை கொஞ்சம் சமாதானம் ஆக்கியது.
பெருமாள் கோவில் மலையில் நான்கு பேரும் பள்ளி முடிவதற்கு முன்னரே வந்து காத்திருந்தோம். அவள் ஒரு ஆறாம் வகுப்பு சிறுமியை துணைக்கு அழைத்துகொண்டு வந்தாள். முதலில் சுந்தர்தான் அவளை நிற்க சொன்னான். அவள் திரும்பி பார்த்துவிட்டு வேகமாக நடக்க கண்ணனும் நானும் ஒடிபோய் அவள் முன்னாள் நின்று மறித்தோம். ஸ்டாலின் வந்து அவளிடம் தடுமாறி தடுமாறி என்னமோ பேசினான். அவள் அழுதுவிடுபவளை போல என் கைகளை தட்டிவிட்டு ஓட முயலும்போது தான் ஸ்டாலின் அவள் கழுத்தை பிடித்து “பதில் சொல்லிட்டு போ” என்றதும் அவள் எல்லாரையும் அவமானப்படுத்தும் விதமாக ”உன்னை எனக்கு பிடிக்கலடா” என்று சத்தமாக சொல்லி எங்கள் கைகளை தட்டிவிட்டு அந்த மலை இறக்கத்தில் ஓட்டமும் நடையுமாய் திரும்பி பார்க்காமல் மறைந்தாள்.
ஸ்டாலினை நாங்கள் சமாதானம் செய்யும் அளவிற்கு அவனிடம் எந்த மாற்றமும் எங்களுக்கு தெரியவில்லை. அமைதியாகவே மலையிறங்கியதும் அவன்தான் நாங்கள் கை கால் கழுவ அந்த அடிபம்பில் வெகுநேரம் தண்ணீர் அடித்தான். வீட்டிற்கு போகும்போது எல்லாருக்கும் சிகரெட் வாங்கி கொடுத்தான். காலையில் நேரத்தோடு விளையாட வருமாறு எங்களிடம் சொல்லிவிட்டு தான் போனான்.ஆனால் மறுநாள் காலையில் பொட்டைகுளம் கரையில் அவன் பிணமாக கிடந்தான். அவன் நெஞ்சில் இருந்த பத்மாவின் பெயர் தீயால் முற்றிலுமாய் அழிக்கபட்டிருந்தது.
ஸ்டாலின் இறந்த இரண்டு நாட்கள் நாங்கள் பள்ளிக்கு போகவில்லை மூன்றாவது நாள், பத்மாவிற்கு அது இருபதாவது நாள் நாங்கள் பள்ளிக்கு போனோம். அதே பெருமாள் கோவில் மலையில் காத்திருந்தோம். அவள் அப்படியே அதே அடுக்கு செம்பருத்தியோடுதான் வந்தாள். அவளுக்கு ஸ்டாலின் இறந்தது தெரியுமா என்று எங்களுக்கு தெரியாது ஆனால் அவளை அப்படி அதே சிரிப்புடன் பார்த்தபின் எங்களால் சும்மா இருக்க முடியவில்லை. ஏற்கனவே தீட்டிய திட்டத்தின்படி கண்ணன் அவளின் ரெட்டை ஜடையில் ஒரு ஜடையை பிடித்து நிறுத்தினான். அவள் கத்தி கூச்சலிட அவளின் டிபன்பாக்ஸை திறந்து அந்த சாம்பார் கலந்த சாப்பாட்டை அவளின் உச்சந்தலையில் நான்தான் கொட்டினேன். அவள் ஓடிவிடாதபடி முகேஸ் அவள் கைககளை இறுக்கி பிடித்துகொண்டான். அவள் கத்திகூப்பாடு போடும்போதே கண்ணன் தன் பையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அவளின் ஒரு ஜடையை மட்டும் வெட்டி எடுத்தான் அவள் அலறி துடித்தாள். பேனாவை கழற்றி அதிலிருந்த மையை அவளின் முகத்தில் கொட்டிவிட்டு அந்த ஜடையை தூரமாக வீசிவிட்டு எதோ ஒரு திசையில் தலை தெறிக்க ஓடி மறைந்தோம்.
அதோடு வீட்டில் காசை திருடிகொண்டு கண்ணன் எங்கோ பயந்து ஓடிப்போய்ட்டான். நானும் முகேஷ்யும் ஆத்தங்கரையில் வைத்து மாட்டிக்கொண்டோம். எங்களை தலைமை ஆசிரியர் அறையில் அடைத்துவைத்தார்கள். போலிஸ் வருவதாக சொன்னார்கள். ஆனால் பத்மாவின் தாத்தா மட்டும் தான் வந்தார். பத்மாவின் டீசியை வாங்கிகொண்டு எங்களை அம்மா அப்பாவிடம் சொல்லி கண்டிச்சி வையுங்கள் என்று சொல்லிவிட்டு போனார் அழுதபடி.. அதன்பிறகு இன்றுதான் பத்துவருடம் கழித்து பத்மாவை நான் பார்க்கிறேன்.
அவளுக்கு முன்னாலும் அவளின் சந்தோசங்களுக்கு முன்னாலும் ஒரு ஊனமுற்றவனைபோல அந்த குளிரூட்டபட்ட அறையில் நான் அமர்ந்திருந்ததை அவள் ரசித்திருப்பாள் போல. பள்ளியில் நடந்ததை பற்றி அவள் எதுவும் என்னிடம் பேசவில்லை. ஆனால் நிறைய பேசினாள். அவள் கணவர் கிருஷ்ணாவும் என்னிடம் என்னன்னமோ பேசினார் அவள் இடைஇடையே தன் குழந்தைக்கு முத்தமும் கொடுத்தபடி இருந்தாள். எனது எண்ணெய் தேய்க்காத தலை மயிறையும் தூய்மையில்லாத என் ஆடைகளையும் என் காலின் ரப்பர் செருப்புகளையும் அவள் கவனித்திருப்பாள் போல “எதாவது காசு கீசு வேணும்னா வெட்கபடாம கேளு இந்த நம்பருக்கு எப்ப வேணும்னாலும் போன் பண்ணு” என்று அவள் கூறிய போது தான் தெரிந்தது இது என்னை கழுவ மரத்தில் ஏற்றி கொல்ல திட்டம் தீட்டுகிறாள் என்று. இன்னோரு முறை அவள் என்னைபார்த்து பரிதாபமான பாவமான சிரிப்பை சிரித்தாள். அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடுவேனோ என்கிற பயத்தில் அவர்களிடமிருந்து வேக வேகமாய் விடைபெற முயற்சித்தேன்.
”சரி பிழைத்துப்போ இனிமேல் எங்கள் கண்ணில் படாதே”என்பதை போல எனக்கு அனுமதி கொடுத்தார்கள். திரும்பி பார்க்காமல் நான் நடந்த போதுதான் அவள் தன் இரண்டு வயது மகனிடம் சொன்னாள் “டேய் ஸ்டாலின், பன்னீர் மாமாவுக்கு பாய் சொல்லு” என்று. என்னால் அதை நம்பவே முடியவில்லை வேகமாய் திரும்பி பார்த்தேன் ஆம் அவள் அப்படி தான் சொன்னாள். மறுபடியும் சொன்னாள். “டேய் ஸ்டாலின், பன்னீர் மாமாவுக்கு பாய் சொல்லு” அந்த குழந்தை விருப்பமில்லாமல் கைகாட்ட அவள் எப்போதும் சிரிக்கும் அந்த சிரிப்பை மிக சாதரணமாய் சிரித்தாள். என் முழு உடலையும் நெருப்பு பற்றி கொண்டது. என் வாழ்வும் அதன் வன்மங்களும் அழுகி உதிர்ந்தது. அந்த கண்ணாடி கதவுகளை திறந்து வேகமாய் வெளியேறினேன். பெரும்மழை கொட்டிக் கொண்டிருந்தது முழுவதுமாய் நனைந்து கரைந்து கொஞ்சம் உயிர் பிழைத்தேன்.
- மாரி செல்வராஜ்
