பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 10, 2010

வீச்சம் - சிறுகதை - அ.கணேஷ்ராஜ்


என் ப்ராஜக்ட்டிற்காக நான் தயாரித்திருந்த Literature review பேப்பர்களை வாங்கிய இரண்டாவது நிமிடத்தில் கிழித்தெறிந்தார் ஜெகதீசன். ஜெகதீசன் என் ப்ராஜெக்ட் கோ ஆர்டினேட்டர். HOD யை காக்கா பிடித்தே அதிகார மையமாக செயல்படுபவர். எதை தொட்டாலும் அதில் அவருக்கான ஆதாயம் இல்லாமல் இருக்காது. என் ப்ராஜக்ட் பேப்பர்ஸை கிழித்து போட்டதற்காக நான் அவரைப் பற்றி தவறாக சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. நான் அவர பத்தி அப்டி சொன்னதால்தான் என் ப்ராஜக்ட் பேப்பர்ஸ் கிழிபட்டது, அதுவும் நான்காவது முறையாக. என்னால் எதுவும் அவரிடம் சொல்ல முடியவில்லை, இந்த முறை எப்படியும் ஓகேயாகிவிடும் என்ற முழுநம்பிக்கையுடனேதான் சென்றேன். பெருத்த ஏமாற்றம், ஏதோ ஒன்று தொண்டயை அடைத்தது. எதுவும் பேசாமல் வெளியே வந்தேன் கையில் கிழிந்த பேப்பர்களுடன். அடக்க முடியாத கோபம், யாரையாவது அடிக்க வேண்டும் போல இருந்தது. அடி வாங்க வேண்டிய ஆள் உள்ளிருக்க நான் வேறு யாரை அடிக்க.

அன்று நான் மட்டும் HODயிடம்  ஜெகதீசன் கல்சுரல்ஸ் பணத்தில் கையாடல் செய்தது பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் ப்ராஜக்டை முடித்திருக்கலாம். என்னுடன் படிக்கும் மற்ற அனைவரும் கிட்டதட்ட ப்ராஜக்டை முடித்து விட்டார்கள். என் ப்ராஜக்ட் இருக்கும் நிலைமையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது சுத்தமாக மனது விட்டுப்போகிறது. நான் சொன்னதை HOD அத்தனை பொறுப்புணர்வுடன் ஜெகதீசனிடம் சொல்வாரென்றும் எதிர்பார்க்கவில்லை அந்த ஜெகதீசனே என் ப்ராஜக்ட் கோ ஆர்டினேட்டராக வருவார் என்றும் எதிர்பார்க்கவில்லை.
கையில் கிழிந்த பேப்பர்களுடன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு வெளியே வந்தேன். எதிரில் நண்பன் குமார், என் கையிலிருந்த பேப்பரை பார்த்ததும் புரிந்திருக்கும் அவனுக்கு. “அந்தாளுக்கு என்னதாண்டா பிரச்சனையாம்?” என்னைப் பார்த்து சற்று கடுப்புடன் கேட்டான். எனக்கு ஏனோ லேசாக சிரிப்பு வந்தது சிரித்தபடியே சொன்னேன் “அந்தாளுக்கு சூத்துல கட்டி வந்திருச்சாம்”.
இரவு ஹாஸ்டலில் பால்கனியில் உட்கார்ந்திருந்தேன். ஹாஸ்டல் நண்பர்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லிப்போனார்கள். நான் என் அறைக்குச் சென்று தூங்கினேன், கொஞ்ச நேரத்தில் என் தலைக்கு கீழே ஏதோ உறுத்துவது போன்றிருந்தது. சற்று நேரம்  நான் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்த உறுத்தல் அதிகமாகியது. ஏதோ ஒன்று நெளிவது போல் இருந்தது. இது கற்பனையாக இருக்குமோ என்று கூர்ந்து கவனித்தேன். இல்லை இது உண்மைதான் ஏதோ நெளிகிறது. வாரி சுருட்டியபடி தடால் என எழுந்து விளக்கை போட்டு என் தலையனையையே கூர்ந்து கவனித்தேன். அதில் சிறு அசைவு தெரிந்தது. வெளியில் பார்த்தால் நண்பர்களின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் மெதுவாக என் தலையணைக்கு அருகேச் சென்று மெதுவாக தலையனையை தூக்கிப் பார்த்தேன். திடுக்கென்று தூக்கிப்போட்டதுபோல் இருக்கவும் நான் தலையனையை தூக்கி எறிந்துவிட்டேன். அது என்ன…. கண்ணங்கறேல் என்று? பாம்பு…. பாம்புதான் அது. கறுப்பாக அளவுக்கதிகமான மினுமினுப்புடன் மூன்று விரல்களை ஒன்று சேர்த்தால் வரும் தடிமனில் அந்த பாம்பு இருந்தது. தன் உடலை சுருட்டிய நிலையில் படுத்திருந்தது. என் வாயிலிருந்து சத்தமே வரவில்லை கதவை நோக்கி வேகமாக ஓடினேன். சட்டென அந்த பாம்பு சீறியது பயத்தில் பின்பக்கம் தடுமாறி விழுந்தேன். அந்த பாம்பின் தலை மிகக்கூர்மையாக இருந்தது அது தன் தலையை தூக்கி செங்குத்தாக இல்லாமல் நீள்வாக்கிலே தலையை இடமும் வலமுமாக அசைத்து என்னை பார்த்த பார்வை அதைவிடக்கூர்மையாக இருந்தது. நான் கத்த முயற்சிக்கிறேன் சத்தம் எழவில்லை. எனக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டது சற்று நேரம் சுவரோடு சுவராக ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பாம்பு மீண்டும் தன் உடலை சுருட்டிக் கொண்டு அமைதியாக படுத்துவிட்டது.
ரொம்ப நேரம் அந்த பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தேன். செதில் செதிலாக இருந்த அதன் மண்டையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உதரல் எடுத்தது. சிறிது நேரம் கழித்து பாம்பு தூங்கிவிட்டது என்று தோன்றியதும் மெதுவாக நகர ஆரம்பித்தேன். சுவரை ஒட்டியே சுவரை பிடித்தபடி நடக்க ஆரம்பித்தேன். பாம்பு இருந்த இடத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம்தான் இருந்தது. நின்று ஒரு முறை உற்றுப்பார்த்தேன் அது அமைதியாகப் படுத்திருந்தது. எனது இதயத்துடிப்பை வெகுதுள்ளியமாக என்னால் உணர முடிந்தது. தரையோடு தரையாக மெதுமெதுவாக என் கால்களை தேய்த்தபடி நகர ஆரம்பித்தேன். பாம்பின் மீதே என் கண் இருந்தது, சிறு அசைவு கூட பாம்பிடம் இல்லை. அடுத்த அடி சற்று தூரமாக எடுத்து வைக்க முயற்சித்த போது சரேலென சீறியது பாம்பு அதன் தலை என் காலருகே வந்து போனது. நான் மீண்டும் சுவரோடு சுவரானேன். இரவு முழுவதும் அப்படியே உட்கார்ந்திருந்தவன் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் விழித்து பார்த்த போது ஒரு மூலையில் நான் படுத்திருந்தேன் சட்டென எழுந்த உட்கார்ந்து பாம்பு இருந்த இடத்தை பார்த்தபோது அதைக் காணவில்லை.
“மச்சி Second review marks வந்துடுச்சுடா, உனக்கு மார்க்கே போடலை” குமார் வந்து என்னிடம் சொன்னதும் நேராக நான் போய் நின்றது ஜெகதீசன் அறையில். “என்ன விஷயம்?” மிக அலட்சியமாக கேட்டார். நான் தயங்கியபடி “செகண்ட் ரெவ்யூ மார்க்ஸ் போட்டுட்டதா சொன்னாங்க” “சரி” மறுபடியும் அலட்சியம்.
“எனக்கு மார்க்கே போடலை”
“எப்டி போட முடியும்?” சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தவர் இப்போது முன்னால் வந்தார்.
“சொல்லு எப்டி போட முடியும், நீ இன்னும் Literature review வே Submit பண்ணலையேப்பா” எனக்கு கோபம் சுர்ரென்றது. “சார் நான் நாலு தடவை Submit பண்ணிட்டேன்.. நீங்கதான் கிழிச்சு போட்டீங்க”
“ஆமா கிழிச்சு போட்டேன் ஏன்னா நீ ஒரு worthless Literature review பண்ணியிருந்த. ப்ராஜக்ட் பண்றதுன்னா என்னன்னு நீ நெனச்ச? சும்மா பிரிண்ட் அவுட்ஸ் குடுக்குறதா… ம்ஹூம்…Proper research. நாங்க ப்ராஜக்ட் பண்ணும்போதெல்லாம் இவ்வளவு சுலபம் கிடையாது research research research னு ராப்பகலா பண்ணி Thesis submit பண்ணுவோம். என்னோட workக்க பாத்துட்டு review panelல இருந்தவங்களே அசந்து போய்ட்டாங்க தெரியுமா?”
“எனக்கு எப்டி தெரியும்.. அந்த பேனல்ல இருந்தவங்கள கேட்டிருந்தா தெரியும்” எரிச்சலில் என்னையறியாமல் வார்த்தைகள் வெளிவந்துவிட்டன. ஜெகதீசன் என்னை எரிப்பது போல் பார்த்தார். 

நான் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தது HODயின் அறையிலிருந்து. தலைவலி தாங்க முடியாத அளவில் இருந்தது. ‘அந்த ஜெகதீசன் பேச்சுக்கு ஒத்து ஊதி என் ப்ராஜக்டுக்கு சங்கு ஊதப்பாக்குறான் சொட்டத்தலையன் HOD’ மனதிற்குள் திட்டிக்கொண்டே ஹாஸ்டலுக்குச் சென்றேன்.
அறையை நெருங்கும்போதுதான் எனக்கு பாம்பின் ஞாபகம் வந்தது. அறை முழுவதும் ஒரு பார்வை ஓடவிட்டேன் பாம்பைக் காணவில்லை. மனதை தேற்றிக்கொண்டு பாயை விரித்து தலையணையைப் போட்டு படுத்தேன். சற்று நேரம் கழித்து ஏதோ ஞாபகம் வந்தவனாக எழுந்து லைட்டை போட்டு தலையனையை தூக்கிப் பார்த்தேன் ஒன்றுமில்லை. நிம்மதியாக லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் படுத்தேன். சற்று நேரம் தூங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன் தலைக்கு கீழே ஏதோ நெளிகிறது. எழுந்து லைட்டை போட்டு பார்த்தேன், அதே பாம்பு அதே மினுமினுப்புடன். என் தூக்கமெல்லாம் போனது. எப்படியாவது அறையை விட்டு வெளியே சென்று விடவேண்டும் என வேகமாக கதவை நோக்கி போனேன் சரேலென அந்த பாம்பு என் காலில் சுற்றிக் கொண்டு வாயைப் பிளந்து காட்டியது. எனக்கு பயத்தை விட அருவருப்பே அதிகமிருந்தது. என் கையால் அந்த பாம்பை என் காலில் இருந்து உருவி தூக்கிப்போட்டேன். மீண்டும் அது பழைய இடத்திலேயே படுத்துக் கொண்டது. என் கையை பார்த்தேன் அதில் பிசுபிசுப்புடன் ஏதோ கறுப்பாக ஒட்டியிருந்தது. ஒரு மாதிரி நாறவும் செய்தது. அருவருப்பு அதிகரிக்க சொர சொரப்பான தரையில் என் கையை தேய்க்க ஆரம்பித்தேன். கறுப்பு நிறம் போய்விட்டது ஆனால் அந்த பிசுபிசுப்பு மட்டுமே போகவே இல்லை. வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டே இருந்தேன் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை காலையில் பாம்பைக் காணவில்லை.
“HOD என்னதாண்டா சொல்றான்” குமார் கேட்க மற்ற நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்தனர். “இனிமே ஸ்டாஃப் கிட்ட இப்டி பேசுனா நேரா Deanன  மீட் பண்ண வேண்டியிருக்குமாம்”
“சரி ப்ராஜக்ட் மேட்டர் என்னாச்சு” மற்றொரு நண்பன் ஆர்வமாக கேட்டான். “மறுபடியும் பண்ணனும்” எல்லோரிடமும் ஒரு பெருமூச்சு. “ரெண்டு நாள்ல Literature review Submit பண்ணனும்” நான் இரண்டு நாள் என்றதும் அனைவரது முகத்திலும் அதிர்ச்சி. ஆனாலும் என் நண்பர்கள்தான் என் வேலையை பகிர்ந்து கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாம் வேலை செய்வதைப் பார்த்து எனக்கும் உத்வேகம் வந்தது. எப்படியும் இந்த முறை முடித்துவிடலாம் என்று கடுமையாக வேலை செய்தேன். இரவு வெகுநேரம் கழித்துதான் தூங்கச் சென்றேன் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் தலையனையில் உறுத்தல். தலையனையை எடுத்து வேறுபக்கம் போட்டுவிட்டு படுத்தேன் சற்று நேரத்தில் மீண்டும் உறுத்தல் தூக்கம் வராமல் முழித்தபடியே படுத்திருந்தேன். விடிந்ததும் பாம்பைக் காணவில்லை.
நன்றாக படிக்கின்ற பெண் ஒருத்தி என் Literature reviewவை படித்து பார்த்துவிட்டு கடைசி நேர திருத்தங்களைச் சொன்னாள். அதை செய்து முடித்ததும் முழுவதுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “பக்கா.. என்னோட Literature reviewவ விட உன்னோடது நல்லா இருக்கு” என்றாள். எனக்கு நிறைவாக இருந்தது. நாளை கொடுக்க வேண்டும், என்ன சொல்வாரோ ஜெகதீசன் என்று பயமாகவும் இருந்தது. உறங்கினேன்… தலைக்கு கீழே நெளிய ஆரம்பித்தது அந்த பாம்பு. நான் எழுந்திருக்கவே இல்லை அப்படியே படுத்திருந்தேன். பாம்பு நெளிந்து கொண்டே இருந்தது இரவு முழுவதும் தூங்கவில்லை.
டிபார்ட்மெண்ட் வாசலில் போருக்கு போகும் வீரனை வழியனுப்புவது போல் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அறிவுரைகள் பல சொல்லி அனுப்பி வைத்தனர். போகும்போது நண்பன் குமார் சொன்னான் “இதையும் அவன் ஒத்துக்கலேன்னா நாம போவம்டா Dean கிட்ட..” அவனை பார்த்து சிரித்துவிட்டு ஜெகதீசனின் அறைக்குச் சென்றேன். 

சற்று நேரம் கழித்து லேசாக கலங்கிய கண்ணுடன் வேகவேகமாக வெளியே நடந்து வந்தேன். காத்திருந்த நண்பர்கள் என்னிடம் என்னாச்சு என்று கேட்க ஆவலாக நின்றிருந்தனர். நடந்து வரும்போதே குமார் கேட்டான் “ என்னடா ஆச்சு?” உதடுகள் துடிக்க “தே* * * பய” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். குமார் கூப்பிடும் சப்தம் கேட்டது நான் நிற்கவில்லை. கல்லூரியை விட்டு வெளியே சென்று விட்டேன்.
மாலை மனது ஓரளவுக்கு திடமான பின்பு டிபார்ட்மெண்டை நோக்கிச் சென்றேன். ஜெகதீசன் அறையில் மட்டும் விளக்கெரிந்து கொண்டிருந்தது. டிபார்ட்மெண்டில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் பார்க்கிங் பகுதிக்கு நடந்து சென்றேன் அங்கு ஜெகதீசனின் பைக் மட்டும் நின்று கொண்டிருந்தது அந்த ஓரத்தில் ஒரே ஒரு சைக்கிள் நின்று கொண்டிருந்தது. நான் அந்த பார்க்கிங்கை கடந்து சென்ற போது ஜெகதீசனின் பைக் எரிந்து கொண்டிருந்தது. ஓரளவு இருட்டியிருந்ததால் நெருப்பின் வெளிச்சம் அந்த இடத்தையே பிரகாசமாக்கியது.
லேசான படபடப்பு மட்டும் என்னிடம் இருந்தது. நான் ஹாஸ்டலுக்குச் சென்றேன் அங்கு நண்பர்களைக் காணவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்கிற யோசனை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது அதை விரட்ட முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தேன். தனியாக நின்று விரட்ட முடியாது போலும். சரி தூக்கத்தின் துணைகொண்டதை விரட்டிடலாம் என்று படுக்கையை விரித்து படுத்தேன். நேரத்தை தவறவிட்டுக்கொண்டிருந்தது தூக்கம். சற்று நேரத்திற்கெல்லாம் என் தலையனைக்கு கீழே ஏதோ உறுத்தல். சட்டென என் ஞாபகப்புத்திலிருந்து வெளிவந்தது அந்த பாம்பு. உடனே எழுந்து தலையனையை தூக்கி பார்த்தேன் எதுவும் இல்லை.. அப்படியானால்…... கேள்விகள் உறக்கத்தை உணவாய்த் திங்க விடிந்தது மற்றுமொரு பொழுது. எழுந்து பார்த்த போது என்னுடல் கறுத்து பிசுபிசுப்புடன் இருந்தது என் அருகே யாராவது வந்திருந்தால் ஒருவேளை அவர்களுக்கு வீச்சம் அடித்திருக்கலாம்.
- அ.கணேஷ்ராஜ்
  

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com