பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 20, 2010

பாரதி என் தோழன் - முனைவர் இரா.இராமன்


கட்டுரை ஆசிரியர்:
முனைவர் இரா. இராமன்
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, அரசு ஆடவர் கலைக் கல்லூரி(தன்னாட்சி),
நந்தனம், சென்னை - 600 035

 பாரதி 39 ஆண்டுகள்கூட இங்கு வாழாத இந்த மனிதன் இறந்துபோய் இன்றைக்கு 89 ஆண்டுகள் முடியப் போகின்றன. ஆனால் இன்னமும் இவன், பூமிப்பந்தெங்கும் தமிழர் நடத்தும் விவாதங்களில் ஒரு நிகழ்காலப் பொருளாய்க் கொண்டாடப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வியக்கப்பட்டும் வருவது எவ்விதம் சாத்தியமாயிற்று?

பேசித் தீராத புதுமையாக, எழுதி அலுக்காத சிலிர்ப்பாக, படித்து முடியாத புதிராக, விளக்க இயலாத பெருவெளியாகப் பாரதி நாளும் நாளும் வளர்ந்து கொண்டே போகிறான். புனைவியம், மார்க்சியம், நவீனத்துவம், காந்தியம், பெரியாரியம், பின்-நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சூழலியம் எனப் படைபடையாய்ப் புறப்பட்டு வரும் பல்வேறு கோட்பாடுகளையும் நேருக்குநேர் எதிர்கொண்டு தன் ஆளுமையைச் சிறிதும் இழக்காமல் தடம் பதித்து நிற்கும் பாரதியை எவ்வாறு புரிந்துகொள்வது?
       அவன் ஆரியனா? பிராமணனா? தமிழனா? திராவிடனா? இந்துவா? சைவனா? ஆணா? கவிஞனா? கதைஞனா? பத்திரிகையாளனா? புத்தி ஜீவியா? பூர்ஷ்வாவா? பக்தனா? சித்தனா? யோகியா? போகியா? மோகியா?காவியா? பண்பாடு காக்கும் பழைய எருமையா? புதியனவற்றைக் காமுறும் புத்துலக வெறியனா? இரண்டுங்கெட்டானா? பிழைக்கத் தெரியாத பைத்தியமா? தெளிவு பெற்ற தீர்க்கதரிசியா? குழம்பித் தவிக்கும் அரைவேக்காடா? ஆன்று அவிந்து அடங்கிய சான்றோனா? ஒட்டி உறவாடும் சமுசாரியா? விட்டு விலகும் சந்நியாசியா? இருந்தும் இல்லாத அந்நியனா, வறட்டு ஆஷாடபூதியா? சமரசவாதியா? சன்மார்க்கவாதியா? பாரமரனா? பண்டிதனா? மிதவாதியா? தீவரவாதியா? உண்டு என்பவனா? அறிய இயலாத்து என்பவனா? பெண்ணை விதம் விதமாய் வர்ணித்தவனா? விழுந்து விழுந்து வணங்கியவனா? சக்தி உபாசகனா? கஞ்சா போதையில் மிதந்தவனா? இடையறாது இயங்கத் துடித்தவனா? இயக்கம் கூடாமல் முடங்கியவனா? பங்கேற்பவனா? பார்வையாளனா? அவன் யார்? இவ்வளவுமா? இதற்கும் மேலுமா?
       அவனவன் அளவில் அவனவன் மகிழ்க என்றொரு சித்தாந்தத் தொடர் உண்டு. பாரதியைப் பற்றி ஆராய்வதும் அப்படித்தான். ஒருமுறை அவனை நீங்கள் தற்செயலாக வாசித்துப் பார்த்துவிட்டால்கூட, எங்கோ எப்படியோ அவனது சில கவிதை வரிகளைக் கேட்டுவிட்டால்கூட போதும்; அனிச்சையாக அவன் உங்களுக்குள் புகுந்துவிடுவான். ஆராய்கிறவர்கள் அனைவரும், பாரதியை ஆராய்கிறபோது தங்களைத் தாங்களேதான் ஆராய்ந்துகொள்கிறார்கள்! தங்களுக்குப் பிடித்தமானதைப் பாரதியில் கண்டு பூரித்துப்போகிறார்கள். அல்லது தாங்கள் வெறுப்பனவற்றைப் பாரதியின் மேலேற்றிக் கசந்துகொள்கிறார்கள். அது எப்படி என்று என்னைக் கேட்காதீர்கள் ஆனால் ஒன்றை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் பாரதி பாலமாய் நிற்கிறான். அவனைக் கடக்காமல் அக்கரையை யாரும் காண்பதில்லை. மனிதனாக வாழ்ந்தவனை மானுடர் நினையாமல் இருக்க முடியுமா? மனிதனாக வாழ்வது என்பதேகூட செயற்கரிய செயல்தானே !
       நன்று கருது; நாளெல்லாம் வினை செய் என்பது பாரதி வாக்கு. இதற்கேற்ப இன்றளவிலும் தன் எழுத்துகளால் தொடர்ந்து பாரதி வினையாற்றி வருகிறான். இந்நிகழ்காலப் பொருண்மையைத் தற்காலத்தன்மையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால்தான் பாரதியின் நிலமிசை நீடுவாழும்புகழ் வாழ்க்கை அணையாத தணலாய் இன்னும் கனல்கிறது. மெல்லத் தெரிந்ததைச் சொல்வது தெளிந்து சொன்னவன் அவன்; புதியன வரும்பிச் செய்வதைத் துணிந்து செய்தவன்.; பேசாப் பொருளைப் பேசியவன் அவன். உள்ளும் புறமும் ஒருமையைத் தரிசிக்கத் துடித்தவன்; உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கனும் ஓட்டிச் சிறுமையும் பொய்மையும் பெசுக்கியவன்; வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைக்காத உச்சநிலை நம்பிக்கைவாதி அவன்; ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயையைக் கவிதையாக்க முனைந்தவன்; எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில் மனத்தை நிலைநிறுத்தப் பாடியவன்; மனமார உண்மையினைப் புரட்டாதவன்; நொடிக்கு நொடி இருதயத்தில் விடுதலையை இசைத்த மனிதன் அவன்.
       நண்பர்களே! பாரதி என்பது இடி மின்னல் மழை புயல் வெள்ளம் போன்ற வாழ்வனுபவம். அங்கே ஆழிப் பேரலைகளும், எரிமலைகளும் அவ்வப்போது குமுறுவதுண்டு. புன்மை இருட்கணம் அழிந்து பரவும் புலரியும், நெட்டை மரங்கள் நின்று புலம்பும் பட்டப் பகலும், சோலை மலரொளியில் சுந்தரப் புன்னகையைக் காணும் அந்தி மாலையும், ஆசை முகம் மறந்துபோகும் நள்ளென் யாமங்களும் பாரதியிடம் உண்டு. நெஞ்சில் கனல் மணக்கும் பூக்களைத் தேடிக் கற்பனையின் சூழ்ச்சியை விரித்தவன் அவன். காளிக்குச் சூட்டிய பூவைக் கழுதை தின்ன வந்ததாக எழுதியவன் அவன். அவனது ஆக்கங்களுடன் உரையாடுவது என்பது, நம்முடன் நாமே உரையாடிக்கொள்வதுதான். நம்மை நாம் விசாரணை செய்துகொள்ள, நம்மை நாம் தேடித் தேடித் தொலைந்துபோக, நம் வாழ்வை ஏதோ ஒரு வகையில் நாம் அர்த்தப்படுத்தப் பாரதி தூண்டுதலாகிறான்.
       பாரதியை நான் வழிபடவில்லை. ஏனெனில், பாத பூஜை கேட்கும் பரமாத்மாக்களை நான் வெறுக்கிறேன். பாரதியை நான் வாசிக்கிறேன்; புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்; புரிந்ததையும் புரியாததையும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். அவ்வளவுதான். அவ்வளவுதானா? அப்படியும் சொல்லிவிட முடியாது. பகிர்ந்துகொள்ள வேண்டிய சமூகத்தேவை ஒன்று இருக்கிறது. திருவள்ளுவனுக்குப் பிறகு, வேறு எந்தத் தமிழ்க் கவிஞனைப் பற்றியும் பாரதி அளவுக்கு ஆயிரக்கணக்கில் நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இவை மேலும் கூடப்போகின்றனவே அல்லாது குறையப் போவதில்லை என்பது என் நிலைப்பாடு. இருபதாம் நூற்றாண்டு தமிழ் மனத்தின் உச்சமாகக் கொண்டாடப் படுவதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் கொண்ட மகா கலைஞனாகப் பாரதி திகழ்வதை, அவனது ஆக்கங்கள் காட்டுகின்றன. பாரதியின் இருப்பு நம்மைச் சலனப்படுத்துகிறது; உறுத்துகிறது; அவனை நோக்கி நம்மை உந்துகிறது; கண்கட்டு வித்தையாய் ஈர்க்கிறது; வியக்க வைக்கிறது; தேடத் தூண்டுகிறது; எண்ணற்ற வினாக்களை ஓயாது எழுப்புகிறது; பிடிபட்டும் படாமலும் நழுவும் ஏதோ சில அவனிடம் இருப்பதைத்தானே இவை குறிப்புணர்த்துகின்றன?
       பாரதியை வகைப்படுத்துவது கடினம். வாழ்ந்து பார்த்து வாழ்ந்து பார்த்து, வாழ்வின் ருசியையும் கசப்பையும் பதிவு செய்ய முனைகிறான் அவன். திரும்பத் திரும்ப மனத்தை அடித்துத் துவைக்கிறான். பொய்யின் அருகில் அவனால் நிற்க முடிவதில்லை. உண்மை நெருப்பில் தன்னைப் போட்டுப் பொசுக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே பேசிக் கொள்கிறான். அந்தப் பேச்சை நாம் கேட்கும்போது, அது நமக்காகவே பேசப்பட்டதுபோலத் தோன்றுவதுதான் பாரதியின் படைப்பாளுமை.
அச்சமில்லை அமுங்குதலில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
ஏது நேரினுமு இடர்ப்பட மாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
(விநாயகர் நான்மணிமாலை; பாடல்:24)
       இப்பாடலடிகளை வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள். சொல்லி முடித்தபின் மனதுக்குள் எவ்வளவு வலிமையும் புத்துணர்வும் திரள்கிறது என்பதை உற்று நோக்குங்கள். வாழ்வின் மிக மோசமான தருணங்களை யாருமற்ற வெறுமையில் எதிர்கொள்ள நேரும் மனித ஆன்மாக்களுக்கு, இப்பாடலடிகள் எவ்வளவு உத்வேகத்தைத் தரக்கூடும்! மனம் சரியில்லாமல் அவதிப்படும் மனிதர்களுக்கான மனநல சிகிச்சைக்குப் பாரதியிடம் ஏராளமான மந்திரச்சொல் மூலிகைகள் உண்டு. நமது மனச்சோர்வைத் துருவித் துருவிப் பிடித்துப் பாரதி அவற்றை நையப் புடைத்து விரட்டியடிக்கிறான்.
சென்றது இனி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணம் அதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா.
(ஞானப்பாடல்கள்; ‘சென்றது மீளாது’; பாடல்:20)
வறட்டு அறிவுரைகளைப் பாரதி கூறுவதில்லை. தன்னை வெளியே நிறுத்தி, ஊருக்கு மட்டும் அவன் உபதேசிப்பதில்லை. சென்றது இனி மீளாது மூடரே!’ என்று நம்மைப் பார்த்து அவன் சொல்வதுபோல் தோன்றினாலும், அவன் நெஞ்சுக்கும் சேர்த்துத்தான் அதை அவன் சொல்கிறான் என்பது வெளிப்படை. இக்கணத்தில் வாழ்வது என்பது அரிய கலை. அதைக் கற்று வாழச் சொல்கிறான் பாரதி. கவலை என்பது மனிதனை வீழ்த்தும் படுகுழி. நேற்றைய நினைவுகள் என்பவை, படுகுழியை விட்டு மேலேற விடாமல் நம்மைப் பிணிக்கும் தடைகள். இன்று புதிதாய்ப் பிறத்தல் எவ்வளவு இனிமையானது? அது நமக்கு இயலுமா? அன்றன்று கணத்துக்குக் கணம் நாம் புதிதாய்ப் பிறந்துவிட்டால், அந்த வாழ்க்கை எவ்வளவு அற்புதமாய் இருக்கும்! ஏக்கப் பெருமூச்சை நம்முள் கிளறி விடுகிற பாடலடிகள் இவை.
       பாரதிக்கு வாழ்க்கை மறுப்பு உடன்பாடன்று. வாழ்வின் ஜீவரசத்தைச் சொட்டுச் சொட்டாய்ப் பருகி மகிழ்ந்தவன் அவன். வாழ்வை அதன் அத்தனை அழகுகளோடும் அழுக்குகளோடும் கொண்டடியவன் பாரதி. கண்ணில் தெரியும் பொருளினைக் கைகளால் கவர்ந்திடத் துடித்தவன் அவன். நோக்க நோக்கக் களியாட்டம் கண்டு, நீண்ட மகிழ்ச்சியில் மனம் துள்ள, நினைத்திடும் இன்பமெல்லாம் தன்னை வந்துசேர வேண்டுமென்று விரும்பி வாழ்ந்தவன் பாரதி. மனம் மேன்மைப்பட்டு, வஞ்சகக் கவலைக்கு இடம் கொடாமல், பயம் சிறிதும் அறியாமல், நேர்மையுடன் வாழ்வதே நிறைவான வாழ்வு என்பது அவன் கொள்கை.
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா!
(விநாயகர் நான்மணி மாலை, பாடல்:32)
       சுயநல இன்பத்தையும், தனது மன அமைதியையும் பாரதி கோரவில்லை. இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களும், அனைத்து மனிதர்களும் இன்பமுற்று இணக்கமுடன் வாழ்ந்தால் மட்டுமே, இங்குள்ள ஒவ்வொரு தனிமனிதனும் - தான் உட்பட - இன்பமாக வாழ முடியும் என்ற பேருண்மை, அவனுக்குப் புரிந்திருந்தது. மனிதர் உணவை மனிதர் பறிக்கும் கீழ்மையையும், மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையையும் பாரதி வெறுத்தான். உலகமும், இங்குள்ள இன்பங்களும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியவை என்பதை முழுமனத்துடன் அவன் நம்பினான். ஆகவேதான், வாழ்வில் இல்லாமையாருக்கும் இருக்கக்கூடாது என்பதையும், அனைவருக்கும் இன்பமும் அமைதியும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தினான்.
செல்வம் எட்டும் எய்தி - நின்னால்
செம்மையேறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லையாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோகவாதை நீக்கி
எல்லையற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்
(பக்திப் பாடல்கள், திருவேட்கை’, பாடல்;57)
எல்லையற்ற சுவையமுதாய்ப் பாரதி வாழ்வைக் கண்டான். பசியிலும் பட்டினியிலும் ஆளுவோர் அச்சுறுத்தலிலும் உற்றார் உறவினர் அலட்சியத்திலும் அரசியல் இயக்கத்தின் பின்னடைவிலும் எனப் பல்வேறு அகப்புற நெருக்கடிகளால் அவன் வாழ்க்கை சூழப்பட்டிருந்தபோதிலும், பிறர்மீதான அன்பையும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும் சிறிதும் பாரதி இழக்கவில்லை. தொடர்ந்து வாழ்வுடன் அவன் போராடிக்கொண்டேயிருந்தான். போராட்டம் அவனுக்கு வாழ்க்கையாகவே இருந்தது. ஆனாலும் அவ்வாறு போராடுவதும், அதில் தோற்றாலும் வென்றாலும் மீள மீளப் போராடிக் கொண்டேயிருப்பதும் அவனுக்குப் பிடித்திருந்தன என்றுதான் சொல்லவேண்டும்.ஓய்வெடுப்பதை அவன் விரும்பவில்லை. இயக்கம்தான் அவன் உயிர் மூச்சு.
 - முனைவர் இரா.இராமன்


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com