பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 20, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் 6 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்  

பகுதி 6

          அஞ்சனா இருட்டில் மனம் வெகுவாய் வலிக்க, ஜெனிஸின் தோட்டத்தில் இருக்கும் வாழை, மாமரத்திற்கு தினம் இரவானால் வந்து விஜயம் புரியும் செய்ஷல்ஸில் தென்படும் பெரிய காது வைத்து, சிகப்பு கண்கள் கொண்ட பழ வவ்வால்களின் க்ரீச் குரல், லேசாக தூறத்தொடங்கிய மழையின் சத்தம், காதுக்கு பக்கத்தில் இருந்து கத்துவது போலவே ஒலிக்க தொடங்கிய தவளைகளின் ஓசை, இவள் படுக்கையின் காலருகே இருந்த அந்த மின்விசிறியின் சத்தம், தூரத்தே போகும் ஏதோ ஒரு வண்டியின் சத்தம், இவைகள் எல்லாவற்றோடும் கலந்து எப்போதும் இரவுகளில் இன்னும் தெளிவாய் கேட்கும் கடலின் அலைச்சத்தம் கேட்டப்படி தனித்து கிடந்தாள்...
 
         அஞ்சனாவிற்கு ஒரு பழக்கம். யோசனைகளின் ஊடே சட்டென நிறுத்தி எதனால் இந்த நிமிடம் இதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்று பின்னோக்கி நகர்வாள். Thought process எப்போதும் ஒன்றில் இருந்து தாவி இன்னொரு விஷயத்திற்கு வருவது அவளுக்கு கொஞ்சம் விந்தையான விஷயம். டேமியன் எறிந்த கல், பள்ளியில் தொடங்கி, கல்லூரிக்கு வந்து இப்போது இழந்த அன்பு முகங்களை நினைக்கவைத்தது. Skipping stones in water... ஒரு தட்டையான கல்லை சரியான angle கொண்டு வீசினால், அந்த கல் தண்ணீரில் தவ்வி தவ்வி முடிந்த அளவு சென்று ஒரு அளவுக்கு மேல் மூழ்கும். இதில் தொடங்கும் பல வட்டங்கள் intersect ஆகும். இந்த நிமிடம் அவளின் எண்ணவோட்டத்தை யோசிக்கையில் அப்படிதான் தோன்றியது.

          எப்போதும் அவளுக்கு எழும்பும் கேள்வி இப்போதும் வந்தது. தன்னை சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்த இறப்பை பற்றி யோசித்தாள். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உயிர்கள் பிரிவதை அவள் கண்முன் பார்த்தப்போதும், வெகு அருகில் வெகு நேரம் பார்த்தது சிலரை தான். அவள் யோசித்தாள், ``எப்படி இருக்கும் இறக்கும் கணம்? உயிர் பிரியும் நேரம் என்ன உணர்வோம்... மரண அவஸ்தைப் படுவதை எத்தனை பேரிடம் பார்த்திருப்போம்... கடைசி மூச்சு விடும் அந்த நொடி எப்படிப்பட்டது...`` என்று. இருதயம் துடிப்பதை நிறுத்தினால் ரத்தவோட்டம் நிற்கும் என்றும்... இத்தனை நிமிடம் பிராணவாயு இல்லாது போனால், திசுக்களில் நிகழும் மாற்றங்கள் பற்றியும், reversible and irreversible damage, cell death, இதில் தொடங்கி ஒரு முழு பிரேதத்தில் நிகழக்கூடிய stages of decomposition, rigor mortis, putrefaction, mummification, saponification என்று பல இத்தியாதிகள் பற்றி படித்தும் பார்த்தும், அவளுக்குள் இன்னமும் விளங்காத விஷயங்கள் பல இருந்தது. இதற்கு பதில் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று தான் தோன்றியது.


       அஞ்சனா அவளையே கேட்டுக்கொண்டாள், எது என் உயிர்? எது என் மனம்? எது என் ஆத்மா? உடல் முழுக்க நடக்கும் ரசாயன நிகழ்வு தான் உயிரா..... எங்கு நடக்கும் ரசாயன கலவை நிர்ணயிக்கிறது நாம் எத்தனை காலம் உயிர் வாழுவோம் என்று.. சுற்றி சுற்றி ஓடும் ரத்தமும் இருதயமும் தான் காரணம் என்றால் எத்தனையோ cardiac arrest case பார்த்திருக்கிறாள். பல்வேறு காரணங்களால் துடிப்பதை நிறுத்திய இதயத்தை, உடனுக்குடன் நெஞ்சுக்கூட்டின் மத்தியில் கைவைத்து 2 inch அமுங்கும்படிக்கு, ஒரு நிமிடத்திற்கு 60 70 அழுத்தினால், இதயம் automatic ஆக உடல் முழுக்க அதே அளவு இரத்தத்தை pump செய்யும். அத்தோடு கொடுக்கப்படும் adrenaline and atropine போன்ற மருந்துகளும், விடாது தரப்படும் பிராணவாயுவும், intravenous fluid இத்யாதிகளும் உடலில் நிகழும் circulation முடிந்தவரை maintain செய்து,  உடலின் biochemical and physiological வேலைகளை செய்யும். கிட்டதட்ட 30 அல்லது 45 நிமிடம் தொடர்ந்து Resuscitate செய்தாலும் இதில் பிழைப்பவர் வெகு சிலர். ஆக இன்னமும் அவளுக்கு விளங்கவே இல்லை எது உயிர் என்று.

        முற்றும் இறந்து சில பல நிமிடங்கள் போன பின்பு முயற்சி செய்து பிழைத்துக்கொண்ட அந்த வெகு சிலரை எப்போதும் அஞ்சனா கேட்பது, ``என்ன நினைவு இருக்கிறது உங்களுக்கு?``, ``என்ன தெரிந்தது?``, ``என்ன பார்த்தீர்கள்?`` என்பது தான்... After death experience is an interesting subject. நினைவு (Memory), மனம் (Mind), எண்ணம் (Thought) எல்லாம் ஏதோ ஒரே இடத்தில் இருந்து தான் தோன்றுகிறதா... தெரியவில்லை.... அஞ்சனாவிற்கு இது பற்றி விளங்கவில்லை... இறந்து விழித்த சிலர் கூறினார்கள், அவர்கள் அங்கேயே இருந்து அவர்களின் உடலை பார்த்ததாக. சிலர் விட்டத்தில் அமர்ந்து இருந்தோம் என்றார்கள். சிலர் கனவில்லா தூக்கம் போல இருந்தது என்றார்கள். சிலர் ‘’I just switched off. Went blank’’ என்றார்கள். சிலர் நீண்ட ஒரு tunnel of lightல் நடந்ததாய் சொன்னார்கள்... ஒரு 85 வயது பாட்டி அவளிடம், ``என் வீட்டு hallல் என் சோபாவில் இருந்தேன். மடியில் இருந்த என் பூனைக்குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டு ஜன்னலின் வழி வந்த சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்`` என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

         அஞ்சனாவிற்கு அறிவியலால் பதில் சொல்லமுடியாத Paranormal science மிக பிடிக்கும். ஆங்கிலத்தில் Robin williams நடித்த WHAT DREAMS MAY COME என்ற படம் அவளை மிகவும் பாதித்த ஒன்று. Surrealistic படமான அதில் அவர் ஒரு மருத்துவராக வருவார். அவர் மனைவியை வெகுவாய் காதலித்து மணம் புரிந்து, அழகான ஆண், பெண் குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பார். 15, 16 வயதான அவர் குழந்தைகள் ஒரு விபத்தில் இறந்து போக, மனைவி மனநிலை லேசாக பாதிப்படைவார். இது நடந்த சில ஆண்டுகளில் Robin ஒரு கார் விபத்தில் இறக்க, படம் அதில் இருந்து தான் தொடங்கும். அவர் பயணம் செய்யும் அந்த உலகம் முழுக்க அத்தனை அழகான நிறங்கள். அவருடைய நண்பராக வரும் Cuba gooding jr இடம் கேட்பார் ``Is this heaven`` என்று. அதற்கு அவர் சொல்வார், ``This is your Heaven`` என்று. அவரவரின் சொர்க்கம் அவரவர் வரைவது தான் என்று அன்று முதல் ஏனோ உறுதியாக அவளுக்கு தோன்றியது.

         அஞ்சனாவின் தந்தை பெரிய நாத்திகவாதி. அஞ்சனா ஒரு நாளும் அவர் சாமி கும்பிட்டோ, நெற்றியில் திருநீறு அணிந்தோ பார்த்ததே இல்லை. அவர் செயின் மோதிரம் கைக்கடிகாரம் அணிந்ததில்லை. 20 ரூபாய் பணமோ, பர்ஸ்ஸோ வைத்திருந்ததே இல்லை. அவருக்காக அவர் விரும்பி வாங்கும் ஒரே பொருள், புத்தகம். படித்துக்கொண்டே இருப்பார். எதை பற்றி கேட்டாலும் அதை பற்றி அதன் ஆழம் வரை விவாதிக்கும் அளவு படித்திருப்பார்.  பொதுநடப்பு, அரசியல், உலக நிகழ்வுகள், அறிவியல், விளையாட்டு, இசை, புத்தகம் எதுவாக இருப்பினும் பேசிக்கொண்டே இருப்பார். அஞ்சனாவிற்கு அவர் பேசும்போது வாய்திறந்து கேட்டுக்கொண்டே இருக்க பிடிக்கும். இரவு தினமும் படித்துவிட்டு தூங்க 12 அல்லது 1 மணி ஆகும். அம்மா தூங்கிவிடுவார்கள். அப்பாவின் அறையிலேயே ஒரு மூலையில் அவளும் படித்துவிட்டு, இருவரும் வந்து ஒன்றாக உணவு உண்பார்கள். சப்பாத்தியை சூடு செய்த பாலில் சக்கரையோடு சேர்த்து மூழ்க வைத்து அவர் படித்ததை சொல்லிக்கொண்டே அவரும் சாப்பிட்டு, அஞ்சனாவிற்கும் ஊட்டுவார். அவர் நாத்திகவாதி ஆயினும் எந்த மதத்தை குறித்து பேசினாலும் அதை பற்றி பேசுவார். பைபிள், குரான், திருவாசகம், கீதை எல்லாவற்றை பற்றியும் எந்த மூலையில் இருந்து கேட்டாலும் சொல்வார். எப்போதும் அஞ்சனாவிற்கு வியப்பாக இருக்கும் எத்தனை தீவிரம், எத்தனை focus, Daddy செய்யும் அத்தனை காரியத்திலும் என்று. விடியல் போதே எழுந்து தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார். வீட்டின் முன்னே வெகு அழகாய் டேலியா, பட்டன் ரோஸ், சூரியகாந்தி, பால்சம் பூச்செடிகள் பாத்தி அமைத்து பராமரித்து, வீட்டின் பின்னே இருந்த இடத்தில் பீர்க்கங்காய், அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் நட்டு வந்தார். நடுநடுவே இருந்த தென்னை, சீதாப்பழ மரம், கொய்யா மரமும், வாழைமரமும், மாதுளையும் கூட அவரால் பசுமையாக இருந்தது. அவரோடு அந்த தோட்டத்தில் இருப்பது அஞ்சனாவிற்கு மட்டும் இல்லை, அவளுடைய அண்ணா ஸ்ரீராம், தம்பி பிரபு, சிட்டி அத்தையின் மகள்கள் ப்ரீதி, ப்ரேமி, ஜானுவிற்கும் பிடிக்கும்.

         அஞ்சனாவின் தந்தையை பார்த்தாலே போதும் நோய்தீர்ந்துப் போகும் என்று சொல்லுவார்கள். அன்பும் கரிசனமும் வழிய சிரிப்போடு வளைய வரும் அவருடைய காலை sessionல் மட்டும் 200 நோயாளிகள் காத்து இருப்பார்கள். ‘’எப்படி இத்தனையும் செய்யமுடிகிறது daddy’’ என்றால் ‘’ Life is too shortடா மோளே`` என்பார். ஒன்றுமே தெரியாது பேசப்பிடிக்காது அவருக்கு, நுனிப்புல் மேய்வதும் பிடிக்காது. தெரியாத விஷயத்தை தாழ்மையோடு ஒத்துக்கொண்டு கேட்டு தெரிந்துக்கொள்வார், மேலும் அதைப் பற்றி படிப்பார். அவரோடு தினமும் பேசி கருத்துப்பறிமாறி கொள்ளவே ஒரு பெரிய நண்பர்க்கூட்டம் வரும். அவர்களில் யாராவது ஒன்றும் தெரியாது கருத்து தெரிவித்தால், எப்போதும் சொல்லும் பதில் `` பாரதி, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி தான் சிறந்ததுன்னு சொன்னார். அவருக்கு 20க்கும் மேலே மொழி, இலக்கண சுத்தமா தெரியும். அந்த language history, cultural background, எல்லாம் தெரியும். அவர் தமிழ் சிறந்ததுன்னு சொன்னார். அவருக்கு அந்த தகுதி இருக்குப்பா. நம்ம ஒரு விஷயத்தை பற்றி comment செய்யணும்னா அதை பத்தி முழுசா தெரிஞ்சு, படிச்சவங்க எல்லாருடைய பார்வையும் தீர பார்த்து அதுக்கு பின்னாலே தான் ``You have the liberty to coin your opinion or judgement`` என்று முகத்தில் அடித்தாற் போலே சொல்வார்.

         யாரோ இது எல்லாம் உங்களுக்கு வராது என்று சொன்னதற்காகவே karate முழுசாக படித்து black belt வாங்கினார். யோகாசனம் படித்தார். Meditation செய்தார். Alternative medicine ( homeopathy, sidha, naturopathy, gem therapy, magnetotherapy ) பற்றி முழுக்கப் படித்தார். வாழ்க்கையில் எல்லாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அவரிடத்தில் பார்த்து எப்போதும் அஞ்சனா வியந்து இருக்கிறாள். அஞ்சனாவிற்கு அவள் அப்பா அவளுடைய hero. அவரோடு paranormal activity பற்றி நிறைய பேசுவாள்.  அவருடைய இரண்டாவது வயதில் பாகாலாவில் தங்கி இருந்ததாகவும், ஒரு ஓடையில் யாரோ இறந்து மிதந்ததை கூட்டத்தில் நின்று பார்த்தது நினைவில் இருந்ததை சொன்னார்.

         அஞ்சனாவிற்கு அப்படி லேசாய் நினைவில் இருந்தது சின்னி அத்தையின் மறைவு. அப்பாவின் இரண்டாவது தங்கை. அவளின் 3, 4வது வயதில், 26 வயதில் இறந்த சின்னி அத்தையின் முகம் லேசாக நினைவில் இருந்தது. அது ஏன் எத்தனையோ நினைவிருந்தும் சட்டென நினைவிற்கு வருவது எப்போதும் சடலமாய் படுத்திருக்கும் முகம் மட்டுமென்று என்று புரிந்ததே இல்லை அவளுக்கு. பிரசவ சமயத்தில் அவர்களையும், சில நாட்களில் பிறந்த பெண் குழந்தையையும் இழந்தது பற்றி இன்னமும் பேசுவார்கள் வீட்டில். நடிகை சரிதாவிற்கு இன்னும் கூறான மூக்கு வைத்தது போல, இன்னும் அழகான பெரிய நீண்ட கண்களும், அழகான பல் வரிசையும், இடுப்புக்கும் கீழே கைக்குள் அடங்காத அடர்ந்த கூந்தலும், நல்ல உயரமும் வாளிப்பும், எப்பவும் சிரிப்போடேயே வளைய வந்த கறுத்த வனதேவதை போன்ற அவர்களின் இறப்பு, வளர்ந்து வந்துக்கொண்டிருந்த அந்த குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் துயரமான சம்பவம். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம்தான் கேட்கும் என்று சொல்லுவார்கள். ஊரில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் இவரோடு தான் விளையாடிக்கொண்டு இருக்கும் என்பார்கள். 

           சில சமயங்களில் வெறுமையாய் பார்த்தபடி கண்ணீர் வழிய இருந்த பாட்டியை பற்றி அவள் பெரிதாய் நினைத்ததில்லை. பெற்ற பிள்ளையை இழப்பது எத்தனை ஒரு கொடுமையான நிகழ்வு. அழுகையின் ஊடே ஒரு நாள் பாட்டி சின்னம்மா, ``புள்ளயை குழில போட்டுட்டு நெஞ்சு எறிய உக்காந்து இருந்தா, துக்கம் விசாரிக்க வந்த ஒருத்தி சொன்னா... அச்சோ! அத்தனை முடியோடவா அடக்கம் செஞ்சீங்க. முடியை கொஞ்சம் வெட்டி இருக்கலாம்ல, சவுரி எத்தனை அழகா வந்து இருக்கும் னா,  திரும்ப திட்டக்கூட மனசுல தெம்பு இல்லைமா.`` என்று குரல் உடைய சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது 
.
         ஒரு நாள் இரவு மிக silly ஆன ஒரு விஷயத்திற்கு கண்விழி பிதுங்கும் அளவு அழுதுக் கொண்டே இருந்த அஞ்சனாவை தன் கையில் படுக்கவைத்து, பேசிய தந்தையை பார்த்து அவர் மனதில் இத்தனை சோகம் இருக்கா என்று முதன்முதல் வியந்தாள். அத்தையை அடக்கம் செய்துபின், வீட்டின் சுமங்கலி பெண், குழந்தை பெற்றவள், குழந்தையும் தாயுமாய் இறந்ததால் நிறைய சடங்குகள் செய்யவேண்டும் என்று சொன்னார்களாம். சடங்குகளில் வைக்க அவருடைய தாலியை கேட்கவும், அப்போது தான் தெரிந்ததாம், அத்தனை சோகத்தில் மூழ்கி, அதை எல்லாம் யோசிக்கும் அளவு தெளிவான நிலையில் யாரும் இல்லாததால், அதை எடுக்க மறந்தது பற்றி. குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய நண்பரும், அப்பாவின் மதிப்பை பெற்று இருந்த அந்த மாமா, தாலி பூஜையில் வைக்காவிடில் வீட்டிற்கு நல்லதில்லை என்று சொன்னதால், இவரும் வெட்டியானும் இரவு ஒரு 8 மணிக்கு போய், திரும்ப அத்தையை அடக்கம் செய்த இடத்தை தோண்டி அவர் தாலியை எடுத்துவந்ததாக சொல்லி நிறுத்தினார். அஞ்சனா அவள் தந்தை கண்கலங்கி பார்த்ததே இல்லை. மணவாளன் தாத்தா இறந்தபோது கூட வெகு உறுதியாய் நின்று இருந்தவர் அவர். அத்தனை அழகாய் வளைய வந்த அத்தையின் உடல் வெகுவாய் ஊதி முகம் மாறிபோய் இருந்ததை பார்த்து நெஞ்செ அறுந்து போனதை, கண்ணில் நீர்மல்க சொல்லிய அப்பாவை பார்த்தபடி இவளும் அழுதாள். அவளுடைய தந்தையை முதலும் கடைசியுமாய் அப்படி பார்த்தது இன்னமும் அவள் கண்ணில் நிழலாடும்.

         அதன்பின் அவள் வெகு அருகில் பார்த்தது அவள் இரண்டு தாத்தாக்களின் இறப்பு. அப்பாவின் அப்பா மணவாளன் தாத்தாவும், அம்மாவின் அப்பா ராஜு தாத்தாவும் சில வருட வித்தியாசத்தில் இறந்துப்போனார்கள். இருவருமே stroke வந்து அவர்களின் செயல்திறன் வெகுவாய் இழந்து, Severe Expressive Dysphasiaவோடு குழந்தைகள் போல மாறியிருந்தார்கள். மூளையின் முக்கியமான speech centre Broca’s area எனப்படுவது. இது மிகவும் ஒரு கொடுமையான விஷயம். எண்ணவோட்டம் சரியாக இருப்பினும் சொல்ல வார்த்தைகள் இல்லாது, ஒரு சாதாரண செயலுக்குக்கூட மீண்டும் மீண்டும் முயன்று frustrate ஆகி போவதை பார்த்திருக்கிறாள். இரு வீட்டிலும் முதல் பேத்தி என்ற காரணத்தால் வந்த சந்தோஷம் எல்லாம் இப்போது அவளை தொடர்வதும் இல்லை, தொடுவதும் இல்லை.


         அப்பாவிடம் இறப்பை பற்றி கேட்டப்போது, இறக்கும் முன் one would loss control over his/her sphincters...and they leave the last breath அப்படின்னு சொன்னார். யாராவது இறப்பை பற்றி சொல்லியிருக்கிறாரா என்றபோது அவர் பாடிய பாடல்:

நிறங்கள் ஒர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்ந்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய..
.

இறப்பை ஒருவேளை இப்படி தான் விளக்கமுடியுமோ...

          இப்படி invinsible மனிதரான அப்பா, அஞ்சனாவின் கல்லூரியின் இரண்டாம் வருடத்தில் மறைந்தார். இறக்கும்போது அவருடைய வயது 43. அன்றுமுதல் அஞ்சனாவிற்கு ஊதுபத்தி மணம் பிடிக்காது போனது. எப்போதும் இறந்தவர்களின் முகம் இறுதி சடங்கு முகமாகவே நினைவில் வந்ததால், அப்பாவை கட்டிப்பிடித்து எல்லோரும் அழுதுக் கொண்டிருக்க, வெளியே அவர் பாத்தி அமைத்து நட்டு வைத்திருந்த செடிகளும், தென்னைமரமும் இருந்த முன்வீட்டு தோட்டத்தில் இருந்த நடக்கும் பாதையில், இறுக்கைப் போட்டு அமர்ந்திருந்தாள் அந்த இரண்டு நாளும். அழவே இல்லை. அழுகை வரவில்லை, இன்று வரை. இது வரையும் அவர் இழப்புக்கு எப்போதாவது கண்ணில் குளமாகும் ஒரிரண்டு துளிகளை தவிர பெரிதாய் அழுததே இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தான் உலகம் தெரிந்தது. அது வரை அவரின் கண்வழியே எல்லா நடப்புகளையும் பார்த்துக்கொண்டு இருந்த சந்தோஷம் இல்லாமல் போனது. இறுதியில் இது வரையும் அவள் யார்... உடல் அவளா.. மனம் அவளா... இல்லை ஆத்மா அவளா.... இல்லை எதுவுமே இல்லாத insignificant speck of dust particle அவளா என்ற விடைதெரியா கேள்விகள் அவள் அறை முழுக்க....

         அழுகையின் ஊடே, பதில் தேடி தேடி பார்த்து, கலங்கிபோன அவளுக்கு, அப்பாவின் சிகரெட் புகையின் ஊடே ஒலிக்கும், பாசம் தோய்ந்த குரல் எப்போதும் போல கேட்டது, ``மோளே! கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்...``.       அதன் பின் பாட்டி சின்னம்மாவின் கனத்த கோபம் தோய்ந்த குரல் அடங்கிபோனது. இரண்டு பிள்ளைகளையும், கணவனையும் இழந்த பாட்டியை அஞ்சனா கடைசிவரை சரியாக புரிந்துக்கொள்ளவே இல்லை, அவளுடைய நிறைய செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்கவே முடியவில்லை. பாட்டியும் இப்போது இறந்து நாட்கள் ஆனது. சொல்லாது விட்டுப்போன மன்னிப்பு மூட்டையை சுமந்துக்கொண்டே திரிகிறாள். ஈரத்தில் கனக்க தொடங்கிய தலையணையை கட்டிப்பிடித்து எப்போது உறங்கினாளோ தெரியாது, அஞ்சனா. வீட்டின் ஜன்னல் வழியே வெயில் நன்கு காயத்தொடங்க, கதவை யாரோ விடாது தட்டிக்கொண்டே இருந்த சத்தம் கேட்டு, தலை விண்ணென்று தெறிக்க கையால் அழுத்தியபடி கண் சிவந்து, வீங்கி, கண் சுருங்க, மெதுவாய் சென்று கதவை திறக்க, அங்கே டேமியன்.

தொடரும்

- யமுனா ராகவன்
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்  

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com