மாநகரம் ஒன்றில்
தனித்து வசிக்க
விதிக்கப்பட்ட ஒரு அப்பா,
நேற்றிரவில்
எப்பொழுதும் போல்
கைப்பேசியில்
தொல்லை செய்தார்
தன் குடும்பத்தை.
மகளிடம் பேசியே
ஆக வேண்டும் என்றார்.
என்னிடம் பேசக்கூடாது
என்பதற்காய்
அவளை சீக்கிரம்
உறங்க வைக்கிறாய்
என மனைவியிடம்
ரொம்ப கோபித்தார்.
நேரம் அப்போது 12:57.
பார்பி பொம்மை
அருகில் கிடக்க
குப்புறப்படுத்து
கால்களை குவித்து
சிரித்தாவாறே உறங்குகிறாள்
தலையணையில்
கொஞ்சம் எச்சில்
பட்டிருக்கிறது.
முன்நெற்றி வேர்த்து இருக்கிறது
போன்ற குழந்தையின்
நல் உறக்கக்குறிப்புகள்
வழக்கம் போல்
அன்றைய அப்பாவின்
இரவை பூர்த்தியாக்கியது.
2.இரண்டாம் குழந்தை
இரண்டாவது குழந்தை
இல்லாத வீட்டில்
முதல் குழந்தை
தனக்காக வாங்கப்பட்ட
நாய்க்குட்டியை
தன் போட்டியாளராகவே
நினைத்துக் கொள்கிறது.
அல்லது
நாய்க்குட்டிகள்
குழந்தைகளை விட
அதிக செல்லம்
கொஞ்சுகின்றன
கோருகின்றன
அல்லது
குழந்தைகளை விட
நாய்க்குட்டிகளை
பெற்றோருக்குப்
பிடிக்கிறது.
- சுமதி
சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.
