பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 11, 2010

ஒரு ஓவியனின் ஒப்புதல் வாக்குமூலம் - மாரிசெல்வராஜ்

நான் ஒரு ஓவியன். ஆம் நான் ஒரு ஓவியன். உங்கள் வீட்டு சுவர்களிலோ அல்லது அந்த கரையான் அரித்த கதவுகளிலோ வேட்பாளர்களின் முகமோ அல்லது கட்சிகளின் சின்னங்களோ வரையப்பட்டிருக்குமெனில் அது நடு ராத்திரி ஒன்றில் உங்களுக்கு தெரியாமல் நான் வரைந்தவையாக இருக்ககூடும் அதற்காக முதலில் என்னை மன்னியுங்கள். என் ஓவியங்கள் நீங்கள் புகழக்கூடியவையாகவோ அல்லது நீங்கள் ரசிக்க கூடியவையாககூட இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் என்னால் வரையப்படுபவை எல்லாமே ஓவியமாகும்போது அதை வரையக்கூடிய நான் ஓவியன் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா….இந்த சுவருக்கு பின்னால் ஆம் இந்த சிறைச்சாலையின் பெரும் சுவருக்கு பின்னால் நிழலுக்காய் ஒதுங்கிய சுதந்திரமானவர்களே, அவசரத்தில் சிறுநீர் கழிக்க வந்தவர்களே, மது பாட்டில்களோடு நண்பனுக்காய் காத்திருக்கும் வாழ்க்கைக்கு பயந்தவர்களே, ஆடு மாடு மேய்ப்பவர்களே,என்ன செய்வதென்று தெரியாமல் விரக்தியாய் திரிபவர்களே, ஒரு சிகரெட் இல்லாததால் சுய இன்பத்தில் ஈடுப்பட்டு கொண்டிருப்பவர்களே….  உங்களுக்கு நான் இந்த சிறைச்சலைக்குள் இருந்து பேசுவது கேட்கிறதா……..நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் பேசுவேன் நான் பேசியே ஆகவேண்டும்.
இங்கு என்னோடு யாரும் பேசுவதில்லை. என்னோடு இந்த அறையில்  தன் சொந்த மகளுக்கு விஷம் வைத்து கொன்றதற்காய் அடைக்கப்பட்டிருக்கும் அந்த ஐம்பது வயது முதியவர் என் முகத்தை பார்க்ககூட விரும்புவதில்லை. சிறையில் மற்ற கைதிகளும் என்னோடு பேசுவதில்லை.  பத்து கொலைகளை செய்த கைதி ஒருவன் நான் தென்படுகையில் முகத்தை திருப்பிகொள்கிறான். சொத்துக்காய் தன் தந்தையை கழுத்தறுத்து கொன்ற ஒருவன் என் சாப்பாட்டில் எச்சில் துப்பிவிட்டு போகிறான். அவர்கள் எல்லாரும் என்னை ஒரு மலக்குழியில் இருந்து வந்த கரப்பான்பூச்சியை போல பார்க்கிறார்கள். கொட்டாவி விட்டாலே வந்து காரணம் கேட்கும் போலிஸ்காரர்களோ நான் விடிய விடிய கத்தி கூப்பாடு போட்டாலும் என்னிடம் எதுவும் பேசுவதில்லை. எதிர் அறையில் இருக்கும் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஒருவன் தனக்கான கம்பிகளின் வழியே எப்போதும் என்னை பார்த்து சிரித்தபடியே இருக்கிறான். என்னோடு இருக்கும் அந்த முதியவரோ போலிஸ்காரர்களின் சட்டையை பிடித்து தினமும் கத்துகிறார் “இவனோடு இந்த அற்ப நாயோடு என்னால் இருக்க முடியாது என்னை அறை மாற்றுங்கள் இல்லை என்னை தூக்கிலிடுங்கள் அல்லது மறுநாள் நான் என் ஆண்குறி அறுத்து தற்கொலை செய்துகொள்வேன்”. என்று.
ஆம் நான் பேசியே ஆக வேண்டும். இந்த சுவரோடோ இல்லை சுவருக்கு பின்னால் சுதந்திரமாய் இருக்கும் உங்களோடோ நான் பேசியே ஆக வேண்டும். நான் சாக தொடங்கிவிட்டேன். இவர்களும் என்னை கொல்ல தொடங்கிவிட்டார்கள். எல்லாரையும்விட அந்த எதிர்த்த அறையில் இருந்து சிரிக்கிறானே அவன்தான் அதிகமாய் என்னை கொல்கிறான். ஒருவேளை இந்த வாக்குமூலம் முடியும்போது நீங்களும் என்னை கொல்ல ஆயுதம் தேடலாம் அதில் எனக்கு கவலையில்லை எந்த பிணமும் எந்த ஆயுதத்திற்கும் பயந்தது கிடையாதுதானே……..
இந்த அற்ப நாய்க்கு அம்மா வைத்த பெயர் க.சுந்தரேசன். ஆம் என் பெயர் சுந்தரேசன் என் அப்பா இறந்து பன்னிரெண்டு மாதம் கழித்து நான் பிறந்ததால் என் அம்மா சீதை( உண்மையாகவே என் அம்மாவின் பெயர் சீதை தான்) சந்தேகத்துக்குரியவள் ஆனாள் .நான் சந்தேகத்தின் அடையாளம் ஆனேன். அண்ணன் கதிரேசன் அப்படியே அப்பாவை போல இருப்பான், அப்பாவின் புகைப்பட சிரிப்பை போலவே இருக்கும் அவனின் சிரிப்பு. நான் அப்படியே யாரைப்போலவோ இருப்பேன். அப்பாவின் புகைபடத்தின் அருகே என் புகைபடத்தை அம்மா ஒருநாளும் வைத்ததில்லை.
நீங்கள் அரசாங்க சுவற்றில் அவசரமாய் ஒருநாள் சிறுநீர் கழித்ததைப் போலவே நான் ஒரு கோவிலின் சுவற்றில் கரி துண்டுகளால் வரைந்தேன் என் முதல் ஓவியமாய் அந்த கறுப்பு பூனையை. அதன்பின் என் பிறப்பை சந்தேகபட்டவர்களை வரையத்தொடங்கினேன் ஓவியன் ஆனேன். கதிரேசன் அப்பாவைப் போலவே ஒரு மாணவர் விடுதிக்கு காப்பாளன் ஆனான்.
நான் இப்போது ஒரு ஓவியன். மனிதர்களோடு பேசவோ சிரிக்கவோ விரும்பாத ஒரு ஓவியன். என் ஓவியங்களோடு நான் பேச தொடங்கி இருந்தேன் அவை என்னை பார்த்து சிரிக்க தொடங்கி இருந்தது என்னோடு சண்டை போட தொடங்கிவிட்டது என்னை புனை பெயரில் அழைக்க தொடங்கிவிட்டது. என்னை கேலி செய்யக்கூட அவை துணிந்துவிட்டன. முதன்முதலாய் என் வயதின் காமம் வெடித்து சிதறிய நாள் ஒன்றில் என் ஓவியம் ஒன்றை அதன் அனுமதியோடு புணர்ந்து திருப்தியுற்றேன்.
கதிரேசன் மிக சரியானவனாக வளந்திருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவன் எனக்கு அண்ணனாக இருந்தாலும் எனக்கும் என் ஓவியங்களுக்கும் பயப்பட தொடங்கியிருந்தான் . என் கண்களில் எதோ தெரிவதாக அம்மாவிடம் அதிசயமாய் சொல்வான். நான் பூமியில் பிறக்க வேண்டியவனே இல்லை என்று அம்மாவிடம் சத்தியம் செய்வான். மனிதர்களுடான என் மொளனத்தால் அவனையும் நான் தூரத்தில்தான் வைத்திருந்தேன். என் சட்டை பையில் இருந்து தெரியாமல் அவன் எடுக்கும் ஒரு சிகரெட்டிலும் சில நூறு ரூபாய் தாள்களிலும் தான் மறைந்து இருந்தது எங்கள் அண்ணன் தம்பி உறவு.
என் ஓவியங்கள் இப்போது மது அருந்த தொடங்கிவிட்டது அவைகளோடு சேர்த்து நானும்தான். நானும் என் ஓவியங்களும் யாருக்கும் பயப்படாமல் யாரையும் தொந்தரவு செய்யாமலும் மது அருந்த தொடங்கினோம் அருந்திகொண்டே இருந்தோம். எனது இருபத்தெட்டாவது வயது வரைக்கும் அண்ணன் கதிரேசனின் முப்பதாம் வயதுவரைக்கும் நாங்கள் இப்படியே இருந்தோம். சரியாக சொல்லவேண்டுமென்றால் மிக சந்தோசமாக இருந்தோம். அவள் எங்கள் வீட்டுக்கு வரும் வரை….
கதிரேசன் தனது முப்பதாவது வயதில் தன் காதலி என்று ஏதோ ஒரு பிள்ளையார் கோவிலில் வைத்து தாலி கட்டி அவளை கூட்டி வந்தான். அவள் பார்ப்பதற்கு ஏதோ ஒரு வன தேவதைக்கு பிறந்தவள் போல எல்லாமே எல்லையற்று இருந்தாள். அவளை பார்ப்பதற்கு எனக்கு எந்த அவசியமும் இல்லை விருப்பமும் இல்லை. கதிரேசன் என்னிடம் அவளை அறிமுகபடுத்தும்போதுதான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். எங்கள் இருவரின் பார்வையும் விருப்பமில்லாத அருவருப்பான பார்வைதான்..ஏனோ முதல் பார்வையிலே அவளை நான் வெறுத்தேன் அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஒரு ஓவியனாக கூட அவளை என்னால் ரசிக்கமுடியவில்லை அவளின் பெருத்த உதடுகளும் அசிங்கமான அந்த பார்வையும் அளவுக்கு மீறிய அவள் வனப்பும் எனக்கு அப்போதே பயமுறுத்த விலகிபோய்விட்டேன்.
இந்த இரண்டு வருடங்களும் நானும் என் ஓவியங்களும் கொஞ்சம் எல்லாரையும் விட்டு விலகியே இருந்தோம். முழு இரவும் நாங்கள் அலைந்து திரிவோம் பகல் நேரத்தில் எங்கள் வீட்டுக்கு பின்னால் உள்ள வேப்ப மரத்தில் முடங்கிகொள்வோம். எனக்கும் என் ஓவியங்களுக்கும் எடுபிடி உதவிகள் செய்யும் அந்த சிறுவன் குமாரை தவிர்த்து எங்களுக்கிடையில் நாங்கள் யாரையும் அனுமதிப்பதோ அங்கிகரீப்பதோ இல்லை. எனக்கு யாரும் எதற்கும் தேவைபடவில்லை எனக்கு என் ஓவியங்களே போதுமானதாக இருந்தது.
இதோ! நீங்கள் ஒரு கொலை செய்துவிட்டு இந்த அறைக்கு வருவீர்கள் எனில் என்னை பார்க்க முடியாவிட்டாலும் என் ஓவியங்களை பார்க்க முடியும் .ஆம் இந்த அறை முழுவதும் ஓவியங்களால் நிரப்பி வைத்துள்ளேன். அந்த மேற்கு சுவரில் பாருங்கள் ஒரு மான் புலியை துரத்திகொண்டு போவதை, அந்த மானின் பற்களில் கசிவது புலியின் ரத்தம் தான்.  இன்னும் சரியாக சொன்னால் அது என் இரத்தம் ஆம் நான் தான் புலி அவள் தான் என்னை துரத்தும் மான்.
ஆளில்லா ஒரு பகல் பொழுதில் என் தூக்கத்தை பிரித்து எனக்கு பிடிக்காத அந்த தடித்த உதடுகளால் அவள் என் பெயர் சொல்லி அலறி துடித்தப்போது நான் பதறிகொண்டு ஓடியிருக்க கூடாது. அந்த முழு கரி சூழ்ந்த சமயலறைக்குள் நான் போனபோது அசிங்கமான அருவருப்பான ஒரு சிரிப்புடன் அவள் என்னை பார்த்தது என் உடம்பில் பெயர் தெரியாத பூச்சிகள் ஊர்வதை போல இருந்தது. அவள் எதற்கு அலறினால் என்று நான் ஊகிப்பதற்குள் அவளின் தடித்த கரங்களால் என்னை இறுக்கி அனைத்து அவளின் பெருத்த மார்புகளை என் மீது வைத்து அழுத்தி அருவருப்பான அவள் உதடுகளால் என்னை முத்தமிட எத்தனித்தபோது நான் கத்தி கூச்சலிட்டு அவளை வேகமாய் தள்ளி விட்டிருக்க கூடாது ஆனால் அவள் உடல் முழுவதும் உடலிலிருந்து வந்த  வியர்வையிலும் கதிரேசனின் வாசனை அடிக்கும் போது அவளை பலமாய் நான் தள்ளிவிட்டது சரிதான். அவள் ஒரு பித்தளை பானையின் மீது போய் விழுந்தாள். அவளின் இடுப்பில் பலமாக அடிபட்டிருக்க வேண்டும். இப்போது அவள் ஒரு ராட்சஸியியாய் மாறியிருந்தாள் சரியாக சொல்லவேண்டுமென்றால் அந்த பரமசிவனையே காலின் கீழ் போட்டு மிதித்து அவன் தலை மயிர் அறுக்க முற்பட்ட அட்டகாளி போல் மாறியிருந்தாள். அவள் கண்களால் என்னை எரித்து விடுபவளை போல பார்த்தாள். என் சட்டையை பிடித்து “ஏண்டா உனக்கு என்னை பிடிக்கலையா” என்று கேட்டபோது ஒரு கனம் கூட தாமதிக்காமல் அவள் முகத்தில் காரி நான் உமிழ்ந்ததுதான் தாமதம் ”டேய் நீயும் உங்க அண்ணன  மாதிரி இடுப்புக்கு கீழ உடுக்கு இல்லாம தான் திரியிறீயா, ஆம்பிளையா இல்லாத உங்களுக்கு எதுக்குடா கல்யாணம் பொண்டாட்டி. உங்க அம்மா பண்ணாத தப்பையாடா நான் பண்ணிட்டேன்” என்று கத்திகொண்டே போனாள். வெளியே ஓட நினைத்த என் சட்டையை பிடித்து வைத்துக்கொண்டாள்.
என் கண்முன்னே அவளின் ஜாக்கெட்டை அவளே கிழித்து எறிந்து தன் பெருத்த மார்புகளை தன் கைகளில் தூக்கி என்னை பார்த்து சொன்னாள் “இங்க பாரு கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆகி போச்சு இன்னும் அப்படியே இருக்கு பார் ,பொட்ட பயலுவளா என் மேல காரி துப்புறீங்களா” என்று என் மீது காரி உமிழ்ந்தால் அது என் மூக்கின் மேலிருந்து என் வாய் நோக்கி வடிய ஓடி வந்தேன் ஆளில்லா அந்த ஆத்தங்கரை காட்டுக்கு. என் உடல் முழுவதும் பற்றி எரிவது போலிருந்தது. என் உடைகளை கிழித்தெறிந்தேன் முழு நிர்வாணமாய் அந்த சுடு மணலில் கிடந்தேன். பகிரங்கமாய் குற்றம் சாட்டப்பட்ட என் ஆண்குறியை அறுத்து எறிந்துவிடலாம் போலிருந்தது. இரவு வரும்வரை அப்படியே கிடந்தேன். முழு இரவில் ஊருக்குள் போனேன்.எனக்காய் குமாரும் என் ஓவியங்களும் காத்திருந்தார்கள்.
என் ஓவியங்களை பார்க்கவோ அதனுடன் பேசவோ எனக்கு துளியும் தைரியமில்லை கண்டிப்பாய் அது என் முகத்தை பார்த்தால் கண்டுபிடித்துவிடும் என் அருவருப்பான அவமானங்களை…..இன்று குமாரும் நானும் மது அருந்தினோம். குமார் என் ஓவியங்களுக்கு அடிமை.இரண்டாவது கோப்பையிலே நான் உளற தொடங்கிவிட்டேன். போதை ஏற ஏற என்னை என்னால் என் கோபத்தில் இருந்து கட்டுபடுத்த முடியாமல் கத்தினேன் அவளை திட்டிதீர்த்தேன் . என் வேஷ்டியை தூக்கி குமாரின் முன் என் ஆண் குறியை பிடித்து காட்டி” டேய் குமார் நான் ஆம்பிளை இல்லையாடா” என்று கேட்டப்போது குமார் பயந்தேபோனான். ஒரு நிமிடம் தாமதிக்காமல் அவனின் சைக்கிளில் என்னை தூக்கி வைத்து எங்கோ கொண்டுபோனான்.
நாங்கள் ஒரு புளியமரத்தின் அடியில்தான் அவளை பார்த்தோம். அவளை பார்த்ததும் முதலில் குமார் பயந்தே போனான் பேயோ பிசாசோ என்று. அவளும் அப்படிதான் இருந்தாள் . மிகவும் கிழிந்து போன உடைகளை உடுத்திருந்தாள். காய்ந்து போன வாழைதடைகளை போல இருந்தது அவளின் தலை மயிர். நன்கு உற்று கவனிக்கும் போதுதான் தெரிந்தது அவள் இரண்டு கண்களும் பூத்திருந்தது அவளால் எங்களை சரியாக பார்க்கமுடியவில்லை என்று. ஆனால் அவள் பெண் ஆம் நான் என் ஆண்மையை நிருப்பிக்க தேவையான எல்லாம் அவளிடம் இருந்தன. எனது போதைக்கும் கோபத்திற்கும் எனக்கே நான் பொட்டை இல்லை என்று நிருபிக்கவும் ஒரு பெண் தேவை இன்னும் சரியாக சொன்னால் எந்த எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இல்லாத பெண் தேவை.. அவளை நெருங்கும்போது எனக்கு அவளின் உடலில் இருந்து கதிரேசனின் வாசனை வரவில்லை மாற்றாக பல கொடிய மிருகங்களின் நாற்றம் வந்தது எனக்கு. அவள் கழுத்தில் நிறைய சாமி டாலர்கள் அணிந்திருந்தாள், அவளின் எல்லா உறுப்புகளிலும் சிகரெட்டால் சுடப்பட்ட புண்கள் ஏராளம் இருந்தது. அவளின் மார்பகங்கள் மிகவும் சிறுத்து போயிருந்தது அதிலும் நிறைய புண்களும் வடுக்களும் இருந்தது.
அவள் எந்த கத்தலும் கூச்சலும் இடக்கூட சக்தியில்லாமல் இருந்திருப்பாள் போல மாறாக தன் பலம் முழுவதையும் திரட்டி என் தலையையும் தலை மயிறையும் கடித்தாள். அவளிடம் வந்த நாற்றம் என்ன குமட்ட செய்தது அவள் தன் பற்களை தானே நறு நறு வென கடித்துக்கொண்டாள். என் மீது அவள் காரி துப்ப முயன்றாள். ஆனாலும் நான் என் ஆண்மையை அவளிடமும் என்னிடமும் நிருபித்து திருப்தியுற்று ஒரு ஆணாய் தன் இரையை வேட்டையாடிய விலங்காய் மெதுவாய் அந்த மணற்பரப்பில் சாய்ந்தேன்.இப்போது குமார் அவளுக்கு அருகில் நின்றிருந்தான் அவளின் மீது ஏறி அமர்ந்து அவன் விளையாடுவதைபோல இருந்தது எனக்கு.
மறுநாள் அதே வேப்பமரத்தின் அடியில் ஈக்கள் மொய்க்க உறங்கிகொண்டிருந்த என்னை “ ஒரு குருட்டு பைத்தியகார பெண்ணை கற்பழித்து கிணற்றில் வீசி கொன்றதற்காய்”  கைது செய்தார்கள். அம்மா தலைவிரிகோலமாய்  தரையில் மோதி மோதி அழுதாள். கதிரேசன் அவளை அவன் பத்தினி பொண்டாட்டியை நான் பார்க்காதவாறு மறைத்து அவன் முகத்தையும் திருப்பிகொண்டு நின்றான். ஒட்டுமொத்த ஊரும்  சுவரில் இருந்த எதுவுமறியா என் ஓவியங்களின் மீது காரி உமிழ்ந்தது.
செத்து நான்கு நாட்கள் ஆகி அழுகி புழு தின்றுகொண்டிருக்கும் ஒரு பன்னியை பார்ப்பது போல என்னை பார்த்த நீதிபதி அவர்கள் தன் மேஜை டம்ளரில் காரி துப்பி எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்து இதோ இங்கே என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்.
இத்தனை நாட்களில் என்னை பார்க்க வந்த ஒரே உறவு அவன் தான். அவனை பார்த்ததும் நான் கதறி அழுதுவிட்டேன் அவனாளையும் என்னை பார்த்து கதறி அழாமல் இருக்க முடியவில்லை. சத்தமாய் கதறி அழுதான். எங்கள் இருவரையும் யாரும் பொருட்படுத்தவில்லை.குமார் என் கைகளை பிடித்துகொண்டு சொன்னான் “ அண்ணே மன்னிச்சுருன அன்னைக்கு எனக்கு தூக்கமே வரல காலையில நேரத்தோட அந்த இடத்திற்கு போனேன் இரத்தம் கசிந்தபடி என்னன்னமோ முனங்கியபடி அதே இடத்தில அந்த பொண்னு கிடந்தா எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு’’ இல்லை இதற்கு மேல் குமார் சொன்னதை நான் உங்களிடம் சொல்லப்போவதில்லை
சுதந்திரமானவர்களே. சந்தர்பத்தின் கொடூர வாய்லிருந்து தப்பித்துக்கொண்டவர்களே, எல்லா உணர்வுகளையும் ரகசியமாய் பாதுகாத்து அதை அனுபவிக்க தெரிந்தவர்களே, எல்லாம் தெரிந்தும் ஊமையாகவும் செவிடாகவும் வாழும் நல்ல மனிதர்களே…..நான் அவளை கொல்லவில்லை அவளை கொல்லும் அளவிற்கு நான் தைரியமானவனுமில்லை..அவள் பல மிருகங்களால் ஏற்கனவே வேட்டையாடபட்டவள் என்னையும் இந்த சின்ன மிருகத்தையும் அவளால் தாங்கிகொள்ள முடிந்திருக்கும்.  ஒரு குருட்டு பைத்தியகார பெண்ணிடம் என் ஆண்மையை நான் நிருபித்ததற்காய் என்னை வெட்ட வெளியில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்லுங்கள் ஆனால் அந்த பலகீனமானவளை நான் கிணற்றில் வீசி கொன்றேன் என்று என்னை அடைத்து வைத்து புறக்கணிப்பதின் கொடுமையை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை என்னையே என்னால் கொலை செய்யவும் எனக்கு தைரியமில்லாமல் இரெவெல்லாம் அலறி துடித்துக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் குமார் கூறியதை என்றும் நான் உங்களிடம் சொல்லப்போவதில்லை.
ஒருநாள் ஏதோ ஒரு செய்தித்தாளில் கைதி சிறையில் தற்கொலை என என்னைப்பற்றி நீங்கள் படிப்பீர்கள். அப்போதும் குமார் உங்கள் உலகத்தில் என் ஒவியங்களை வரைந்து கொண்டிருப்பான் என்பதே எனக்கான ஆறுதல் அல்லது உங்களை நான் வென்றதன் சாட்சி.
மாரிசெல்வராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com