பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 12, 2010

கிறித்துவக்கல்லூரி வனமும் ஒரு கவிதையும்-இயக்குநர் ராம்

கயிறுகள்

நழுவுகிற இலையின் நளினத்தில்
தரமான மகிழ்வு தரிப்பதாய்
யோசனைப் படுபவர்கள்
என்னையும் அப்படியே யோசிப்பீராக

ஆனால்
இலைகளை பீடித்திருக்கும்
காற்றைத் தாண்டிய பலத்தை
கயிறுகள் என்மேல் கொண்டிருக்கின்றன.

நாட்டு மாடுகளுக்கு கொம்புகள்
அனுமதிக்கப்படுவதைப் போல்
கயிறுகள் எல்லாவற்றையும் அனுமதிக்கின்றது.

ஆடலாம், பாடலாம், குதிக்கலாம்
லாடங்களில் பொருந்தியிருக்கும்
நல்ல சப்தத்துடன்.

“மேல் பாலத்தின் விளிம்பில் நின்றவாறு
கயிறுகளை கடாசிவிடலாம்” என்றுத் தோன்றியது.

“ஆற்றில் விழுந்தவன் ஆற்றைப் பருகி
எழ நினைத்ததைப் போல்”
கயிறுகள் குசுகுசுத்தன.

கயிறுகளுக்குத் தெரியாமல்
என்னதான் செய்யலாம்?
வேண்டுமானால் கவிதை எழுதலாம்
ரயிலின் ஊதலை மிஞ்ச எத்தனித்த
நாயின் ஓலத்தைப் போல.

ஆகஸ்ட் 97
கணையாழி


96 அக்டோபர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு
பயிலும் போது எழுதியது. “வனம்” என்றொரு அமைப்பு. கவிதை, கதைகளை
கூட்டமாய் வெள்ளிக்கிழமை மாலை வழக்கமான மரத்தடியில் வாசிப்பதும் விவாதிப்பதும் அதன் செயல்பாடு. அதை தோற்றுவித்தவர் பாரதிபுத்திரன் என்று இலக்கியவுலகில் அறியப்பட்ட பேராசிரியர் பாலுசாமி. வனத்தின் ஆசானும் அன்பும் அவரே. பாசங்கற்ற ஒரு கவிதை அவர். அவ்வனத்தில் இக்கவிதையை வாசித்ததும் அவர் “beautiful” என்று சொல்லிய போது அடைந்த திருப்தி மகிழ்வு பூரணமானது. இப்போது இக்கவிதையை வாசிக்கையில் இதுவும் கவிதையல்ல என்றே தோன்றுகிறது. அன்றைய அந்த பாராட்டு அவருடைய பெருந்தன்மையையும் ஒரு ஆசானாய் மாணாக்கரை ஊக்கப்படுத்திய விதத்தையும் உணர வைக்கிறது. அந்த ஊக்கத்தில் கல்பனா, கல்யாணராமன் என்று நல்ல கவிஞர்கள் வெளிவந்தார்கள்.

இன்று அவர்கள் கவிதை எழுதுவதாய் தெரியவில்லை.
கிறித்துவக் கல்லூரியில் சுயநிதி மாலைக் கல்லூரி
தொடங்கப்பட்டதன் விளைவாய் “வனம்” நடப்பதும்
நின்று போய் விட்டது.

அதன் நினைவாய் அந்த மரமும், பேராசிரியர் பாரதிபுத்திரனும்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இன்றும் இருக்கிறார்கள்.

எழுதப்படாமல் வாசிக்கப்படாமல் இருக்கிற கலையையும்
நல் ஆசான்களயும் கொன்று புதைத்து இன்றைய நவீன வணிகக்கல்வி.

இயக்குநர் ராம்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com