யமுனா ராகவன்.
அய்ரோப்பாவில் மருத்துவராய் பணி புரிகிறார்.
அவரின் ரயில்
எப்பவோ பார்த்த ஒரு விஜய் படத்தில பிடிச்ச ஒரு டயலாக் யோசிச்சுப்பார்க்கிறேன். பிடிக்கலைன்னா ஆயிரம் காரணம் சொல்லலாம், பிடிச்சிருக்குன்னா என்ன காரணம் சொல்றது... பிடிச்சிருக்கு அவ்வளவு தான். இப்பவும் அதை தான் சொல்ல தோணுது. என்னோட இத்தனை வருஷத்தில எல்லா வாகனத்திலேயும் பயணப்பட்டு பார்த்துட்டேன், ஏனோ ரயில் தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
பிடிக்காததுகளை பட்டியல் போடறேன், கடைசியா பிடிச்சதை பத்தி சொல்றேன். எனக்கு சைக்கிள் ரிக்ஷா பிடிக்காம போனதுக்கு காரணம், எங்கள சின்ன வயசுல பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போன ஆறுமுகம் அண்ணாவால. அவர பார்த்தாலே பயமா இருக்கும். குள்ளமா சின்ன மீசை வைச்சிக்கிட்டு, சிவந்த கண்ணோட கொஞ்சமா மிரட்டுராப்புல பேசுறது அவரோட ஸ்டைல். ரொம்ப மெதுவா போவாரு. ஒரு சமயம் எங்க வாராவதி பிரிட்ஜ் தாண்டும் போது எதிருல வந்த இன்னொரு ரிக்ஷால மோதி ஒரமா இருந்த என்னை, பக்கத்தில இருந்த ஒரு அழுக்கு கால்வாய்ல விழ வைச்சி, கைகால் சிராய்ச்சு ரத்தம் வர, சேறும் சகதியுமா நின்னதில, என்னை எல்லாரும் கிண்டல் செய்ததில இருந்து ரிக்ஷா கொஞ்சம் கூட பிடிக்கல.
அப்புறம் சைக்கிள்... எங்க தொடங்க அதை பத்தி. அண்ணாவோட சைக்கிள் கேரீயர்ல உட்கார்ந்து போனதும், ஏண்டி இத்தனை கனமா இருக்கேன்னு ஒரு ஒரு மேடு ஏறும்போதும் திட்டு வாங்கினதும், தனியா சைக்கிள் ஓட்டுவேன்னு சொல்லி ஓட்டி பல தடவை பாவாடை, தாவணி, துப்பட்டா மாறி மாறி மாட்டி சிக்கி கீழ விழுந்தது புதையல் எடுத்ததும், மிச்ச மீதி ஒட்டிட்டு இருந்த தைரியம் வர வழச்சிக்கிட்டு ஓட்டினாலும் தாவணி சரியா இருக்கான்னு இல்ல ஏதாவது தெரியுதோன்னு சரி செய்துக்கிட்டே இருக்க வேண்டியதாலயும், வேணும்னே பக்கத்தில வந்து இடிக்கிறாப்புல எப்பவும் ஒட்டுனா மீசை முளைச்ச முளைக்காத பயலுகளால சைக்கிளும் பிடிக்காம போச்சு.
இங்க இருந்து சேய்ஷல்ஸ் தீவுக்கு வேலையா போனதும், அங்க இருந்த ரெண்டாவது பெரிய தீவு ப்ராலின்ல வேலை செஞ்சதும், ஏதாவது வேணும்னா தலைநகர தீவு மாஹேக்கு போட்ல ஒரு 1 மணிநேரம் கடல்வழிய வாராவாரம் போனதில படகு சவாரி பிடிக்காம போச்சுங்க. சும்மா கார்ல போனாலே கண்ண கட்டிக்கிட்டு வரும், எங்கம்மா வண்டி ஏறும் முன்னமே மாத்திரைய குடுத்து முழுங்குன்னு சொல்லுவாங்க, அத்தோட விடாம குதிரைக்கு முகத்தில வைக்கோல் போட்டு ஒரு பை மாட்டுவாங்களே அது மாதிரி ஒரு பாலிதீன் பையை முகத்தில மாட்டி விட்டுறுவாங்க. இதுல படகு கேட்கவா வேணும். இந்து மகாசமுத்திரத்தை ஒரு படகுல உட்காந்து பார்க்கிறது, அது மாறும் கலர்களை பாக்கவும், தங்கமா ஜொலிக்கிற தண்ணியில சூரியன் எழும்பறதும் மறையற அழகும், அப்பப்ப பார்க்கிற டால்பின் மீன்களும் அழகு தாங்க.. ஆனா நடுக்கடலுல மழை வரும் போது எப்படி படகு ஆடும் தெரியுமா... எத்தா பெரிய அலை வரும் தெரியுமா. இந்த ரோலர் கோஸ்டர் ரைட் போல இருக்கும். எனக்கு எப்படி தலை சுத்தி, வயிறு வலிக்க குமட்டிட்டு வரும் சொல்லுங்க... அதனால படகும் பிடிக்காம போச்சுங்க...
அப்புறம் இந்த பஸ்....யப்பா... ஒரு 2 மாசம் பெரம்பூர் அயனாவரத்தில இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு போய்வந்தேங்க. காலைல 7.45 மணிக்கு போய் ராத்திரி ஒரு 7 மணிப்பக்கம் திரும்புவேன். 7 மணிக்கே அந்த பஸ்ல அப்படி ஒரு கூட்டம் இருக்கும். ஒத்த காலை குத்தி நிக்க தான் எடம் இருக்கும். யாரு எந்த பக்கம் இருந்து இடிக்கிறாங்கன்னே தெரியாது... அந்த காலைல அழகா நீட்டா பஸ்ல ஏறி கசங்கி கந்தலா எறங்குவேன். எப்ப பஸ்ல போனாலும் எனக்கு தோணுறது, ஒரு துணி எப்படி வாஷிங் மெஷின்ல எல்லா பக்கமும் இடிப்படுமோ அது போல தான். அதுக்கும் மேல நம்ம இடிமன்னர்கள்.. இப்ப யோசிச்சா பெருசா தோணலைன்னாலும், இடிபடும்போது அவமானமா தான் இருந்தது... அதுக்கும் மேல ஒரே எடத்தில உட்காரணும், நடக்க முடியாது, இப்படி நிறைய அதனால பஸ் பிடிக்கலை.
சரி நம்ம விமானங்களை பத்தி யோசிச்சா... என்ன அது மேல பறக்குது. அவ்வளவு தானே தவிர, அதுவும் ஒரு சொகுஸு பஸ் போல தான். பக்கத்தில யார் உட்காருவாங்களோ, கையை காலை நீட்டமுடியாது, எழுந்து ஜாஸ்தி நடக்க முடியாது, எப்ப ஏறினாலும் பத்திரமா போய் சேருவோமா அப்படிங்கற சின்ன ஒதைப்பு இப்படி நிறைய. ஏனோ அதனால விமானமும் விமானநிலையங்களும் பிடிக்கலை.
எனக்கு ரொம்ப நாளைக்கு மோட்டர்பைக் ரொம்ப பிடிச்சிருந்ததுங்க. வண்டி ஓட்டினாலும், பின்னால உட்காந்து போனாலும் முகத்தை அறையும் காத்து, அதோட கம்பீரம், சுலபமா பிரயாணம், இப்படி நிறைய விஷயத்தால பிடிச்சது. சில வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஏப்ரல் மூன்று அப்ப, எங்க காலேஜ்ல இருந்து எஞ்சினியரிங் காலேஜ்க்கு மருத்துவ எக்ஸிபிஷன் வைக்க போயிருந்தோம். நான் கமிட்டி மெம்பர்ங்கறதால என்னோட வேலை நிறைய. மதியம் போல எங்க அண்ணா வந்து கிளம்பு போகணும் ஊர்க்குன்னு சொன்னான். எனக்கு ஒரே கோவம். கொஞ்சம் பந்தா காட்டிக்கிட்டு இருக்குற நேரத்தில எல்லார் முன்னாடியும் கடுகடுன்னு பேசுது பாருன்னு திட்டிட்டே வந்து விஷயம் கேட்டேன். அப்பாக்கு ஒடம்பு சரியில்லையாம், கிளம்பலாம் அப்படின்னு சொல்லவே, எனக்கு ஒண்ணும் புரியலை. நேத்து தானே ராத்திரி பேசினேண்டா அப்படின்னு சொல்லிட்டே இருக்கும் போது, சீக்கிரம் கிளம்பலாம், Daddy is no moreனு சொல்றாங்கடின்னான். எங்க காலேஜ்ல ஏப்ரல் முட்டாள் ஆக்க அடிக்கடி இது போல போன் வரும். அப்படி ஒரு விஷயம்னு சொல்லிட்டே கிளம்பினோம். சிதம்பரம் to அரக்கோணம். ஒரு 6 மணிநேரம் இருட்டுல பைக்ல நானும் அண்ணாவும் ஒரு வார்த்தை பேசாம முழுநிலவை பாத்துட்டே, வழில இருந்த கோயிலை எல்லாம் பாத்து வேண்டிட்டே ஒரு 12 மணி ராத்திரிக்கு வீடு போய் சேரும் போது, வாசல கட்டியிருந்த ஷாமியானா பார்த்துட்டு, அத்தனை நேரம் கழிச்சு அண்ணா சொன்ன மொத வார்த்தை `` ஐயயோ ப்ரியா``... அப்பா இல்லை... எங்க எல்லார் வாழ்க்கையையும் பொறட்டி போட்ட அந்த ராத்திரியை மறக்கவே முடியலை. என்னால அதுக்கப்புறம் எங்க அண்ணாவோட பைக்ல ஏறவே முடியலை. பல வருஷம் ஆகிப்போச்சு... இன்னமும் எனக்கு பைக் பிடிக்கலைங்க.
எல்லாம் போச்சு. ரயில் எனக்கு என்னைத்தான் நினைவுப்படுத்தும். அந்த ரயில் ஜன்னலோரம் சாயும்போது எப்பவும் எங்கிட்ட சொல்றது `` இதுவும் கடந்து போகும்``. என் வாழ்க்கையும் ரயில் போலத்தான். தனியாவே ஓடிட்டு இருக்கு. யார் ஏறினாலும் எறங்கினாலும் அலட்டிக்காம. ரயிலில ஏனோ ஒரு தனித்தன்மை இருக்கு. பக்கம் பக்கம் நெரிசலா நின்னாலும், உட்கார எடம் அடுத்த ஸ்டேஷன்ல எங்கயாவது கெடச்சிரும்னு தைரியம் தரும். பிடிக்கலைன்னா ஏன் பிடிக்கலைன்னு காரணம் சொல்லமுடியுங்க ஆனா பிடிச்சதுக்கு சொல்ல தெரியலை இது எல்லாம் மீறி சொல்லணும்னா காரணம் பெருசா இல்லாட்டியும் எனக்கு ரயில் தாங்க பிடிச்சிருக்கு..
யமுனா ராகவன்
April 4, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
