பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 6, 2010

உதித்தவை 7 - இயக்குநர் ராம்

1.
என்னதான் மனம் குறுக்கும் நெடுக்கும்மாய் அலைந்தாலும் இதே 247 எழுத்துக்களில் நேரகாத்தானே கட்ட வேண்டி இருக்கிறது வார்த்தைகளை. வார்த்தைகள் அற்று எழுதுவதை படிக்காமலேயே புரிந்து கொள்வதற்கான மனங்கள் அற்றுப் போனதால் தான் பிறந்ததோ எழுத்துருவும் வார்த்தைகளும். எனக்கும் உங்களுக்கும் ஆன இடைவெளியின் தூரத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன மொழிகள்.

2.
பி்றப்பின் அதிர்ஷடம் தமிழனாய் பிறந்தது. பிறப்பின் சாபம் தமிழனாய் பிறந்ததை அதிர்ஷடமாய் நினைப்பது

3.
மூன்று மாதம் மழிக்காமல் இருந்த் தாடியை மழிக்கச் சொன்னேன். மூன்று முறை கேட்டார் கண்டிப்பாய் மழிக்கனும்மா? என சலூன் காரார். அவருக்கு மட்டும் தான் தெரி்கிறது தாடியை மழிப்பதில் உள்ள பெரும் சோகம்

4.
நிர்வாணப் பொழுதுகளில் மொழி அவசியப்படாமல் போகும் போது தோன்றுகிறது மொழியற்ற முன் உலகத்தில் ரகசியங்கள் இல்லாமல் இருந்திருக்கக் கூடும்.

5.
படகில் போய் பறவைகளை பிடிப்பவர்கள் இங்கே இருக்கிறீர்களா?

6.
நமக்குத் தெரியாமல் நாம் கொன்றவர்களின் ஆவிகள் நம் உடன் உரையாடினால் தெரியும் ஒவ்வொரு நொடியும் நாம் குறைந்த பட்சம் ஒருவரையாவது கொல்கிறோம் என்று.

7.
இரண்டு வருடங்களுக்கு முன் பூக்கள் எல்லாம் ஊருக்குப் போன தன் அப்பாவைத் தேடி அழுததாகவும்,அப்பா சீக்கிரம் வந்து விடுவார் என தான் ஆறுதல் சொன்னதாகவும் மறைமுகம்மாய் என்னிடம் என்னைத்தேடுவதைச் சொல்லி்ச் சிரித்த என்மகளிடம் இன்று வரை எனக்கும் அவளைத்தேடுகிறது என்பதை எப்படிச் சொல்ல என முழிக்கும் நான் என்ன எழுத்தாளன்? அல்லது என்ன அப்பா?

இயக்குநர் ராம்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com