எழுத்தாளர் பாரத தேவி காட்சிக்கு தன்னுடைய ரயில் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். http://kaattchi.blogspot.com/search/label/பாரத%20தேவி. அதன் வரிசையில் அவர்களுடனான உரையாடல் வருமாறு...
பத்து வயது முதல் காடுகளில் தான் அலைந்து திரிந்தேன். வெயில், மழை, காற்று, இடி, மின்னல், அனைத்தினூடாகவும், இரவென்றும், பகலென்றும் இல்லாமல் நான் காடுகளில் மாடு மேய்த்துக்கொண்டும், வேலை செய்துகொண்டும் அலைந்தேன். இரவு சாப்பாடு மட்டும் தான் வீட்டில். காலை சாப்பாடும், மதியான சாப்பாடும், மரத்துநிழலிலும், கினற்று ஓரங்களிலும்தான். நான் மட்டும் அல்ல, என் வயது பிள்ளைகளும் காடுகளில் தான் அலைவார்கள். பித்தளைத்தூக்கு போணியில் புளித்த வாடையோடு சோளச்சோறும், கூழும் எங்கள் கைகளிலோ மரத்துக்கொப்புகளிலோ பசி போக்க காத்திருக்கும். சில சமயங்களில் தூக்குப்போணியில் இருக்கும் கஞ்சிக்காக காக்கைகளோடு போட்டி நடக்கும். அவை செயித்து விட்டால் அன்று நாங்கள் பட்டினி அல்லது எங்களுக்கு “ உணவுப்பொறை ” சாப்பாடு தான். எஞ்சிய கஞ்சியைப் பகிர்ந்து குடிப்போம்.
ஐந்தாவது வரை படித்த எனக்கு அடுத்து படிப்பதற்கு வாய்ப்பில்லை. போலீஸாக இருந்த எனது அப்பா இறந்துபோனதால் எங்கள் வீடு வறுமையில் வீழ்ந்தது. பகல் முழுக்க மாடு மேய்ப்பது, சாமம் வரை விளையாடுவது, களவு புல்லுக்காக போவது என்று எனக்கும் இரண்டொரு சேத்திக்காரர்களுக்கும் ராப்பகல் வித்தியாசமே தெரியாமல் போனது.
தூரத்து மழைகளில் விறகுக்காக, வேலைக்காக, புளியம் பூவிற்காக, திருவிழாக்களுக்காக நடு சாமத்தில் நிலாவுடன் நடந்த போது உறங்க மறந்து போனது. பேய்களும், பிசாசுகளும் எங்களை கண்டு அஞ்சி ஒதுங்கின. நாங்களே இரவு முழுக்கப் பேய்களாக அலைந்தோம். இன்றும் நினைவில் பசுமையாக இருக்கும் அந்த அனுபவங்களை நூலாக்கியதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.
பதினேழு வயதில் எனக்கு திருமணம் நடந்தது. பிறகு எனக்குள் இருந்த படிக்கும் ஆசையை, ஏக்கத்தை புரிந்து கொண்ட என் கணவர் என்னை ஹிந்தி படிக்க வைத்தார். வாழ்க்கை மாறிப்போன சூழ்நிலையில் என்னால் படிக்கமுடியவில்லை. பிறகு தமிழாசிரியராக்கி விட வேண்டுமென்று தமிழ் படிக்க வைத்தார். இலக்கணங்கள் எனக்கு ஒவ்வவில்லை. ஆக படிப்பு என்பது எனக்கு கிட்டாமலே போனது.
எனது மகன் பிறந்தபோது நான் படிக்காத படிப்பை எல்லாம் அவன் படிக்க வேண்டுமென்று விரும்பினேன். என் ஒரே மகன் அருண் சதீஷ் குமார் தற்சமயம் கலிஃபோர்னியாவில் வேதிப்பொறியியலில் பி.அச்.டி படித்து கொண்டிருக்கிறான். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயாக எனது அன்பு மகனுக்கு இந்த நூலை பரிசளிக்கிறேன்.
என்னை எழுத்துலகில் வளர வைத்து என் இளமைக்கால நிகழ்வுகளை எழுதுமாறு ஊக்குவித்த அப்பாவிற்கு ( திரு.கி.ராஜநாராயணன் ) எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
