பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 31, 2010

உத்திர காண்டம் - இயக்குநர் ராம்.

தான் இரைத்த தானியத்தைக் கொத்தியவாறு மேலே எம்பிய காகத்தோடு தன் பார்வையை அவிழ்த்துவிட்டாள். அது சிறுசெடி, வேம்புமரம் என அசோகமரத்து உச்சிவரை அழைத்துப் போய் வானில் விட்டது. மேகம். எங்கும் மேகம். மேற்குத் திசையிலிருந்து வீசிய காற்றில் மேகங்களின் நிறம் அவன் மேனியின் கருநீல வண்ணத்தை அவளின் ஞாபகப் பரப்பில் தெளித்துப் போனது. மனம் சுணங்கி கால்களால் தானியங்களை அழுந்தத் தேய்த்தாள். அவை மிதிபடும் நரநரவென்ற சப்தத்திற்கிடையே வெடிச்சிரிப்பு. வெறுப்பின் உச்சத்தில் தோலுரித்த நிஜத்தைக் கண்டு விட்ட சிரிப்பு. மேனி அதிர அவளிடமிருந்து பட்டறையில் சீர்பார்க்கப்படும் பெருத்தக் கத்தியின் உலோக ஓசையாய் வெளிக்கிளம்பியது.


சிறுகுருவி ஒன்று பெருவிரலில் பஞ்சாய் அமர்ந்த போது சிரிப்பு ஒய்ந்தது. நகஇடுக்கில் சொருகித் தெரிந்த தானியத்தை திருகிக் கொள்ளவா என தலை திருப்பி அவள் கண்களைப் பார்த்தது. நம்பிக்கை வீசிய அப்புள்ளி விழிகளால் பரவசம் கொண்டாள். கன்னக் கதுப்புகளில் அதுவரை இல்லாத வனப்பு ஒளிவிட்டது. மெல்லப் பட்சியைக் கையிலேந்தி அரைபட்ட தானியத்தை அதன் அலகில் புகட்டி பறித்த மலரை செடியில் பொருத்தும் பாவத்துடன் பறக்க உயர்த்தினாள். ‘இதுபோன்ற நம்பும் விழிகளைக் கண்டு எத்தனை நாளாயிற்று?’, என அயர்ந்தவாறே தன்னுடைய சிரிப்பின் எச்சங்கள் இலைகளின் நரம்பைப் பீடித்து சலசலப்பதை உற்றுக் கேட்டாள். சிரிப்பின் மத்தியில் எண்திசையினையும் அவன் வந்து விடக்கூடாதா? என மொளனம் கொண்டாள்.

வந்தால் என் செய்வாய்?
இதுவரை சொல்லாதவையெல்லாம் வாய் திறக்குமா?
அவன் விழிகளைக் கொய்து தானியத்தை தேய்த்தவாறு தேய்ப்பாயா?
அவன் கருநீல வண்ணத்தில் காத்திருக்கிற கசடுகளை காட்டிக் கொடுக்கிற வார்த்தைகளை உச்சரிக்க உனக்குத் தெரியுமா? நச்சுத் தெரிக்கும் கேள்விகள். அனல் கொட்டிக் கிடக்கிற பாலைவெளியில் உடைமையாளன் விட்டுப் போன வயோதிகக் குதிரையாய் உணர்ந்தாள். நா உலர்ந்து எச்சில் மிடற்றினாள். ‘போ எழுந்து போ, விளையாடப் போன லவ, குசா வந்து விடுவார்கள், பண்டம் தயார் செய், நடப்பதை நினை’, கட்டளைப் போட்டது மனம். அக்கட்டளைகள் அவனுடைய எக்கு குரல்களால்
இன்னமும் போதிக்கப்பட்டு வருவதைக் கண்டு அஞ்சினாள்.

அவள் தயார் இல்லை. கேசத்தின் நடுவில் தொடங்கியிருந்த மண்டைச் சிரங்கை நோண்டினாள். அவனுடைய ஞாபகத்தை நோண்டி எடுப்பது போலிருந்தது. நிணமும் இரத்தமும் கலந்த திரவத்தை பிதுக்கி எடுத்து முகர்ந்து பார்த்தாள். இது அவனின் மணம். இராமனின் மணம்.
“உடையவனின் நாமம் சொல்வது தவறில்லையா?”, மீண்டும் மனம்.
இம்முறை அவனின் குரலாலேயே கட்டளைப் போடுகிறது. “கேடுகெட்ட மனமே நீ ஒரு பித்துக்குளி, ஆயிரம் முறை சொல்வேன். இது இராமனின் மணம். புழுக்கள் மகிழ்வுடன் தன் தேகத்தை சுழித்தவாறு குடி கொள்ளும் மணம். அருவருக்கத்தக்கது.
குமட்டல்களை அள்ளித்தருவது. இராமனின் மனம்” , மனதிடம் சொன்னாள்.

இராமனின் நெடியை உணருகின்ற தருணங்கள் எல்லாம் விபரீதத்தில் முடிவடைந்து
இருக்கிறது என்று எண்ணிய போது கிலி ஏற்பட்டது. ஒருமுறை லவா தலையை தூணில் இடித்துக் கொண்டான். குசாவிற்கு கடும் வயிற்றுப் போக்கு. இன்னொரு முறை மாதாந்திர உதிரப் போக்கு பதினைந்து நாளுக்கு நீடித்தது. நன்கு செழித்த மாமரம் பட்டுப் போனது. அவள் உடல் நடுங்கத் தொடங்கி அச்சத்தின் சாயலை நிழல் அடைந்த போது அவலசப்தத்தோடு முதுகுக்குப் பின்னே விழுந்த பறவை திரும்பச் செய்தது. அம்பு தைத்து உதிரம் சொட்ட வெள்ளைப் பறவை. பதமாய் தூக்கியவள் சிரிப்பு பீடித்திருந்த இலைகளை மசித்து மருந்து வைத்தாள். அனுசரனையாய் தடவினாள். தானே தன் கைகளின் இதத்திற்குள் சுருண்டு கொண்டது போலிருந்தது.

“வேடனிடம் தோற்றுப் போனாயோ? மரவுரி தரித்திருந்திருப்பானே? கானக நிழல் இருளில் அடையாளம் காண இயலா மாய நிறத்தை உடையவனாய் இருந்திருப்பானே?”, அசதியில் பறவை உறங்கிப் போயிருந்தது. “நல்ல தூக்கம்தான் போ, ராஜகுமாரர்கள் வேட்டைக்கு வந்தால் அறிந்து கொள்ளலாம். கொட்டு முழங்க, படை சூழ, நிழலிலும் ஒளிவிடும் பட்டாடைகளுடனும் இரத்தினம் பதித்த ஆரத்துடனும்
‘பறவைகளே, மிருகங்களே உம்மைக் கொல்ல வந்தோம்’ என தங்களுக்குள் படுத்துக் கிடக்கும் கொலை சுருதியை மீட்டியவாறு வருபவர்கள் ஆயிற்றே அவர்கள். அவர்களிடம் தோற்றாலும் தோற்றுப் போவோம் என்று தெரிந்து தோற்போம். ஆனால்
மரவுரி தரித்த மாயநிற வேடர்கள் வேஷதாரிகள்.” என்கிறாள் பறவையிடம். பறவை உடலை அசைத்துக் கொண்டது. மிருதுவான இதயம் துடிப்பது கேட்டது. நன்றி தேக்கி விளியுயர்த்தியது.மெல்ல அதன் செவி அணுகி கேட்டாள் ‘என்னைத் தெரியுமா?’. அலகை ஆட்டியது. ‘இராமனின் மனைவி சீதையைத் தெரியாமல் முடியுமா?’, வாய் திறந்தது. ‘ஆனால் உனக்கு சீதையைத் தெரியாதல்லவா?’. குழம்பிப்பார்த்தது. ‘அம்பு தைக்கையில் எந்தக் கிளையில் இருந்தாய்?’. ‘புளிய மரத்தின் ஆறாவது கிளையில்’.

‘நான் எட்டாவது அடுக்கில் இருந்தேன். சனகனின் மாளிகை. வில் வளைக்க ஏக கூட்டம். மகதநாட்டு இளவரசன், சோமநாட்டு இளவரசன், மருதநாட்டு இளவரசன். எல்லாரும் பட்டு உடுத்தி, நுனி வளைந்த மிதியடி பூண்டு ஒளிமயமாய் வந்தார்கள். முகம் மறைக்கிற கவசம். பொய்யாய் பட்டது. பகட்டு மாப்பிளைகள். அழைத்துப் போய் துணி மடிக்க வைத்து விடுவார்கள் என நினைத்தேன். அவர்கள் உடுப்பை கழைந்து மடிக்க என் ஆயுள் போதாது என்று தோன்றியது. கடைசியில் அவன் மரவுரி தரித்து எளிமையாய். முகத்தை மறைக்கிற கவசமில்லை. பிடித்துப் போனது. கண்ட மயக்கத்தில் சன்னல் திரை நீக்கினேன். விழிகளைப் பார்த்தான். அடிவயிறை ஏதோ ஒன்று கவ்விப்பிடிக்க ஆடை நெகிழ பஞ்சணையில் சரிந்தேன்.’ அப்புறம் என்றுக் கேட்டது பறவை.

‘அப்புறம் நாண் பூட்ட வில் முறிந்தது. மணம் முடிந்தது. அன்றைய இரவு மறக்க முடியாதது. மாளிகையின் நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தான். சதையை கொத்துகிற அலகினையுடைய மாருதம். வாசனை மிக்க திரவியங்களின் நெடி. ஊர் முழுக்க சந்தனமும் அகிலும் வெண் துணியாய் பரந்து விரிந்திருக்கிறது. அவன் கண்களை சந்திக்க முடியவில்லை. கழண்டு விழவே விழாத கைஅணியை விழுந்துவிடுமோ என அஞ்சி திருத்திய வண்ணம் இருந்தேன். அவன் அறையின் இடது மூலையினின்று வலது மூலைக்கு நடக்க ஆரம்பித்தான். பூனையின் பாதத்தைப் பெற்றவனைப் போல் சப்தமில்லாமல் நடந்தான். அவனிடமிருந்து எழும்பும் ஓசைக்காக என் செவிகள் காத்துக் கிடந்தன. அகில் புகை என் நாசியை வருடிய சமயத்தில் முதன் முதலாக அவனின் குரலைக் கேட்டேன். ‘உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்’, சாதுவின் குரலையொத்திருந்தது. ‘என்ன?’, என்றேன். பதிலில்லை. ஆடையின் நுனியை திருகியவாறே ‘என் பெயரா?’. ‘தெரியும்’, என்றான். ‘என் தோழியின் பெயரா?’. ‘எனக்கெதற்கு?’. என் மூளை நின்றுவிட்டது. அதற்கு மேல் என்ன கேட்பது. யோசித்து தயங்கி ‘எனக்கு உங்களைப் பிடித்தது என்றா?.’ பதிலில்லை. ஒருவேளை. வெட்கம் நிரம்பியது. உடல் முழுக்க சூடு பறந்தது. மயிர்க்கால்கள் விரைத்துக் கொண்டன. ‘முத்தமா?’ என நான் கேட்டு முடிக்க நிறைய நாழிகைப் பிடித்தது. இம்முறையும் பதிலில்லை. ஆனால் அவன் நடக்கும் ஓசை மிகுந்தது. என்னருகில் வருவதும் விலகுவதுமாய் இருந்தான். தாழ்த்திய இமையில் அவன் பாதங்கள் தெரிந்தன. உயர்த்தினேன். என்னையே நோக்கிய வண்ணம் இருந்தான். நெய்விளக்கினின்று வெளிப்பட்ட வெளிச்சம் கண்ணிடுக்கில் இருள் குச்சிகளைச் சொருகியிருந்தது. அந்த விழிகள் கொடூரமானவை. வேசியைப் பார்க்கிற பார்வை. வேசியிடம் விரும்பிப் போகிறவனின் பார்வையும் அல்ல அது. மலத்தை நுகரும் நாசியின் சாயலை ஒத்த பார்வை. கீழ் சாய்த்துக்கொண்டேன். பாதங்கள் நகர்ந்தன. கதவு திறக்கப்படும் ஓசை. நடுநிசியில் மரப்படிகளில் கொடூரமான வேகத்தோடு எனை மிதித்தவாறு இறங்கிப் போனான். நீர் ஓடும் முகத்தோடு ஆடியில் தெரிந்த பிம்பம் கலங்கியிருந்தது.’

பறவை அவள் தோளுக்கு நகர்ந்திருந்தது. அவள் காதிடுக்கில் அலகு செலுத்தி ‘அவன் ஆசைப்பட்ட கேள்வி எது?’, என்றது. சன்னமான அதன் காலைப் பிடித்தவாறே சொன்னாள், ‘வில் வளைக்க வந்தவர்களின் விழிகளோடு என்னுடைய விழிகள் எத்தனை முறை கலந்தது என்பதுதான்’. ‘அவன் கேட்டானா?’. ‘கேட்கவில்லை. கேட்க மாட்டான். அவன் சாது ஆயிற்றே. மரவுரி தரித்தவனாயிற்றே. இராமன் ஆயிற்றே’, சிறு தானியத்தை கையிலேந்தி நீட்டினாள். பறவை தலைத் திருப்பிக் கொண்டது. அவள் கழுத்தோடு தன் முகவாயை ஒட்டிக் கொண்டது. உப்புத்தட்டிய வேர்வைத் துளிகளை தன் நாவால் நக்கத் தலைப்பட்டது. இதமான ஆறுதல். நல்ல பறவை என நினைத்துக் கொண்டாள்.


‘அப்புறம்?’, என்றது பறவை. ‘அப்புறம் என்ன அப்புறம். கணவன் மனைவி என்றால் முயங்கத்தானே வேண்டும். முயங்காமல் இருக்க அவன் என்ன கல்லா?. வேசியிடம் போகலாம். ஆனால் நாமம் என்னாவது?. அரண்மனையிலும் சரி, கானகத்திலும் சரி அவன் விழிகள் கூர்மையானவை. என்னைச் சுற்றி ஒரு பெரிய வட்டம். நான் யானையைப் பார்த்தால் அது ஆண் யானையா? என்று பார்ப்பான். விவஸ்தைக் கெட்டவன். எனக்குள் அவன் கண்கள் வலம் வந்து தொல்லை கொள்ளும். எல்லாம் அவன் கட்டளைப் படி. வான் நோக்கின் வானே. தரை நோக்கின் தரையே. என் கண்களை அவன் கொய்திருந்தால் கூட மகிழ்வுடன் இருந்திருக்கலாம். கருணை மிக்கவன் அல்லவா. அதனால் தான் இராவணன் அள்ளிப் போன பிறகும் அனலில் காட்டி மீண்டும் வைத்துக் கொண்டான். என்னால் அவன் நாமம் மீண்டும் மீண்டும் ஓயாத அலையாய் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியது.’

‘ கைதேர்ந்த கயவன் தன்னுடைய கயமைத்தனத்திற்கு தக்க காரணத்தை தேடுவது போலிருந்தது அவனது செய்கை. என்னுடைய தேகத்தை மலத்தை நோக்கும் பாவத்துடன் நோக்கியவாறு இருந்தான். அவனுடைய எக்கு குரல் சதா என் காதில் ஒலிக்கும், ‘ உள் அறையின் சன்னலை ஏன் திறந்தாய்?. கதவிடுக்கின் வழி உன் நிழல் நீள்கிறதே?, தாழ்ந்து பேசு, சாளரம் தாண்டுகிறது உன் குரல். காலைக் குளியலுக்கு இத்தனை நாழியா?. சூரியனின் செவ்விரல்கள் உன் நாசி தொடுகிறது, அறையை இருளாக்கு.’ ஒரே பொருள் பொதிந்த பல கேள்விகள். நான் கட்டளைகளால் கட்டப்பட்ட மனையில் சிறைப்பட்டேன். அவன் காரணத்தை தேடி காக்க ஆரம்பித்தான். ஏறக்குறைய தவம் இருந்தான். வண்ணானின் சொல் தவத்தின் பயனானது. கிளம்பு, போ, தொலை, ஒழி என்ற தோரனையுடன் என்னை தேரில் ஏற்றினான். கிளம்பும் முன் கடைசியாய் ஒன்று சொன்னான், ‘உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்’, என்று. ‘என்ன?’, என்றேன். ‘இராவணன் என்னுடைய வேடம் தரித்து உன்னை மயக்க முயன்ற போது நான் அல்ல என நீ எவ்வாறு அறிந்தாய்?’, எனக்கேட்டான். நான் பதில் சொல்லவில்லை. முகத்தை தேர்தட்டு நோக்கி நிமிர்த்துக் கொண்டேன். தேர் கிளம்பியது.

‘எதாவது நீ சொல்லியிருக்கலாம்’, பறவை.
‘விட்டு விட்டேன். அவன் வரவிற்காய் காத்திருக்கிறேன். வந்ததும் சொல்ல வேண்டும். அவனை தூக்கியெறியுமாறு சொல்லவேண்டும். அக்னியில் போட்டெடுத்த வார்த்தைகளால் அவனை கட்ட வேண்டும்.’
‘வராமல் போனால்?’
‘நீ போ பறவையே, எனக்காக தூது போ.’
‘போய் என்ன சொல்ல வேண்டும்’
‘நான் ஒரு ஆண் பறவை, பசும் நரம்புகள் குழைந்தாடும் மினுமினுக்கும் மேல் தோலையுடைய காமனின் கண்கள் மேயும் சீதையின் தோள்களில் இருந்து கிளம்பி வருகிறேன். அவள் சொல்லச் சொன்னது இது ‘ உலகம் மெச்சும் புகழ் ஓங்கிய தூய கீர்த்தியுடைய தலைவனே, உம்முடைய காலிடுக்கில் இல்லாதது இராவணனிடம் இருந்தது’, என்று சொல்லி நிறுத்திவிடு.’
‘ஏன்?’, பறவை.
‘அவன் விக்கித்துப் போவான். காலில் இல்லாததைப் பற்றி அஞ்சி பதறி வார்த்தையின்றி கழண்டு போவான். கேட்பதற்கு நடுங்கி ‘என்ன?’, எனக் கேட்டு முடிப்பான்.’
‘அப்புறம் என்ன சொல்ல?’
‘பிறகு நீ சொல் மீண்டும் ஒரு முறை, ‘நான் ஒரு ஆண் பறவை. முன்பு கூறியதை விட அதிக விவரணைக் கொள்ளத்தக்க சீதையின் தோள்களில் இருந்து கிளம்பி வருகிறேன். இராவணின் கெண்டைக் காலிடுக்கில் உங்கள் நிறத்தில் ஒரு மச்சம் இருந்தது’, என்று’.
‘இது போதுமா?’
‘போதும்’
‘நான் கிளம்பலாமா?’
‘கிளம்பு, ஆனால், ‘நான் ஒரு ஆண் பறவை’ என்ற வரியை மறந்து விடாதே.’

அவள் சிரித்தாள். இலைகளின் நரம்பில் மீதமிருந்த சிரிப்பும் சேர்ந்து கொண்டது. பெருத்த வெடிச்சிரிப்பு. இராமனின் கருநீல வண்ணத்தை அரைத்துத் துப்புகிற வெண்பற்களின் சிரிப்பு. அப்பற்களின் நிறமேயான அப்பறவை தன் கூர்மையான அலகால் கருநீல மேகத்தை துளைத்துப் பறந்து போனது.

ராம்

சென்னைக் கிறித்துவக் கல்லூரி 98ம் வருடத்து ஆண்டு மலரில் பேசியது.






தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com