பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 23, 2010

சுமதி கவிதைகள் 15


சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.

1.

மகளின் விளையாட்டு

”அம்மா ஊருக்குப் போறேன்”
என விடுமுறை காலங்களில்
பையோடு கிளம்பி வாசல் வரை
செல்லும் விளையாட்டொன்றை
ஆடுகிறாள் என் மகள்.

வீட்டின் முன் ஆளிருக்கும் போது
அவளின் பையைத் தயார் செய்து
கொடுக்கிறேன்.

யாரும் இல்லாத போது
நானும் அவள் விளையாட்டில்
சேர்ந்து கொள்கிறேன்.

அம்மாக்களும் மகள்கள் தானே.

2.

அம்மா ஊர்

யாம் இருந்தோம்
நகரப் புழுதி பூசியிரா
கிராமத்து அழகொன்றில்

எம் பால்யமும் இருந்தது
பால் வெண்ணை தயிரோடு

உடைந்து கிடந்த
பானைச்சிப்பங்களை
வைரமென
விரைந்தெடுத்ததுண்டு
எம் பிஞ்சு விரல்கள்.

டால்டா தகரம் தட்டி
பறவை ஓட்டிய காடுகள்
வந்து போகின்றன
இன்னும் கனவுகளில்.

சாணி வாசத்து முற்றங்களை
குஞ்சுகளுடன் சென்று
முற்றுகையிட்ட கோழிகளை
தாயுடன் சென்று விரட்டி மகிழ்ந்தோம்.

.
எப்ப நம்ம வீட்டுக்குப் போவோம்
போரடிக்குதும்மா
என்று கோபிக்கிற
என் மகளுக்கு
காட்டுவதற்கு இன்று எதுவுமில்லை.

மூப்பெய்திப்போன என்
நோயாளி அம்மாவையும்
காங்க்ரீட் விடுகளையும் தவிர 

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com