பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 25, 2010

blogger கவனத்திற்கு-திரு. சிரவணனின் மின்னஞ்சல் பின்னூட்டம்

மதிப்பிற்குரிய ராம்,

தமிழ் வலைப்பதிவு துவக்கி, எழுதி வருவதற்கு தமிழ் இணைய வாசகன் என்ற முறையில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அண்மைப் பதிவை (http://kaattchi.blogspot.com/2010/03/bloggers.html) கண்டேன். அதில் நியாயங்கள் இருந்தன.



தமிழ் இணையச் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதால் இங்கே சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கையை விட, அவற்றை வாசிப்போரின் எண்ணிக்கை சுமார் 50 மடங்கு அதிகம் என்பது என் கணிப்பு.

பொதுவாக, பின்னூட்டம் என்பது சக வலைப்பதிவாளர்களாலேயே இடப்படுகிறது. வாசிப்பவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே பின்னூட்டமிடுகின்றனர்.

அப்படியிருக்க, பின்னூட்டங்களை வைத்து, பதிவுகளை மதிப்பிடுதல் என்பது தவறு.

நம் தமிழ் வலைப்பதிவாளர்களில் பலருக்கும் எழுத்தாற்றல் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், நீண்ட காலம் பதிவு எழுதி வரும் பலரிடமும் தாம் கூறுகின்ற கருத்துகள் தான் 'இறுதி'யானது என்ற நிலைப்பாடு மிகுதியாக இருக்கிறது. அத்துடன், பின்னூட்டத்தில் எதிர்வாதங்களை வைப்பதன் மூலம் தன்னுடைய மேதமைத்தனத்தைப் பதிவு செய்துகொள்ளவும் அவர்கள் முனைப்புடன் செயல்படுவர். புதிதாக பதிவு எழுதுபவர்களுக்கு பின்னூட்டமிடவும் தயங்குவர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, எழுத்துலகிலோ அல்லது சினிமா போன்ற படைப்புலகிலோ இருக்கின்ற சிற்சில குறைபாடுகளை பெரிதுபடுத்தி எழுதி, தனது புத்திசாலித்தனத்தை பதிவு செய்துகொள்வதும் அவர்களது இயல்பாகிவிட்டது. இதற்கு உதாரணம்... சுடச் சுட வெளிவருகின்ற சினிமா விமர்சனங்கள்.

சினிமா விமர்சனங்களுக்கென்று இருக்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல், கண்டபடி கருத்துகளைக் கக்குவது இவர்களில் பலருக்கும் உள்ள இயல்பு.

இதன் மூலம் அவர்கள் அதிகபட்சமாக பெறுவது 'கவன ஈர்ப்பு' மட்டுமே. இவர்களில் பலருக்கும் அட்டேன்ஷன் சீக்கிங் மட்டுமே முழுமுதற் நோக்கமாக இருப்பது கவலைக்குரியது. மேலும், சிலர் ஒன்றிணைந்து குழுவாக இயங்குவதும் பாதகமான அம்சம்.

இந்தச் சூழலில் பிரபலம் என கருதப்படும் ஒருவரது எழுத்துகளுக்கு எதிர்வினையாற்றும் போது, அங்கே தன்னை முன்னிறுத்திக் கொண்டு கவனத்தை ஈர்க்க இவர்கள் முற்படுவார்கள் என்பது உங்களது வலைப்பதிவு அனுபவம் மூலம் எனக்கும் தெரிய வந்திருக்கிறது.

இந்த வகை பின்னூட்டங்களால், நீங்கள் வலையுலகத்தை விட்டுச் செல்லும் வாய்ப்பும், இல்லை அபாயமும் அதிகம்.

சினிமா ஆர்வலர்கள் மத்தியில் நீங்கள் பிரபலம் என்பது உண்மை. எனினும், வலைப்பதிவில் சக பதிவர்களைப் போலவே எண்ணத்தை இந்தக் களத்தில் பதிவு செய்துகொள்ள விரும்பியே வந்திருக்கிறீர்கள். ஆனால், தமிழ் வலைப்பதிவுலகச் சூழல் உங்களுக்கு ஏற்புடையதாக இப்போதைக்கு இருக்காது.

ஆங்கிலத்தில் அமீர்கான், அமிதாப் போன்ற பிரபலங்கள்... ஏன், இயக்குனர் ஷங்கர் கூட வலைப்பதிவு வைத்துள்ளார். இதையெல்லாம் மாடரேட் செய்வதற்கும், பின்னூட்டங்களைக் கவனித்து வெளியிடுவதற்கும் அவர்கள் ஆட்களை நியமித்து இயங்குகின்றனர்.

அதேபோல், ஆங்கில பதிவுலகச் சூழலில் நேர்மையான முறையில் பின்னூட்டமிடம் பாங்கு அதிகம் காணப்படுகிறது. எனவே தான் அவர்களால் எளிதாக வலையுலகில் இயங்க முடிகிறது.

*

இந்தப் பகிர்வின் மூலம் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்று மட்டுமே.

உங்கள் வலைப்பதிவில் எவருடைய பின்னூட்டத்தையும் அனுமதிக்காதீர்கள். பின்னூட்டப் பகுதியைத் தூக்கிவிடுங்கள். கருத்து கூற விரும்புபவர்கள் உங்களது மின்னஞ்சல் முகவிரிக்கு அனுப்பிக் கொள்ளட்டும்.

பின்னூட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் தான், இணையச் சூழலில் பிரபலங்களாக இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் http://www.sramakrishnan.com, சாரு நிவேதிதா http://www.charuonline.com ஆகியோர் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை.
உங்கள் எண்ணத்தைப் பதிந்து, பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாக மட்டுமே வலைப்பதிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ் வலைப்பதிவுலகச் சூழலில் முதிர்ச்சி நிலை வரும்போது, பின்னூட்டப் பகுதியை திறந்து வைத்துக் கொள்ளலாம்.

அதுவரை, உங்களுக்கு மெயிலில் வரும் பின்னூட்டங்களைத் தொகுத்து அவ்வப்போது தனிப் பதிவாக இட்டுக் கொள்ளலாம், இவரைப் போல... www.tamizachi.com

*

உடனடியாக பின்னூட்டக் கதவை அடைக்கும் போது, துரித முறையில் ஒரு பத்து பதினைந்து பதிவுகள் உங்களைத் தாக்கி வரக் கூடும். அவர்கள் குறைத்து பின்னர் அடங்கிவிடுவர்.

*

தமிழ் இணைய வாசகர்களுக்கு உங்களைப் போன்றோரின் எழுத்தும் தேவை என்பதால் தான் இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.

நன்றி.

- சிரவணன்.
siravanan.wordpress.com



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com