பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 25, 2010

ரயில் - பாரத தேவி

                                    அறிமுகம்

தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகளிடம் ரயில் பற்றியான அவர்களுடைய அனுபவ பகிர்வுகளை கேட்டிருந்தோம். அந்த வரிசையில் எழுத்தாளர் பாரத தேவியின் அனுபவ பகிர்வு.
எழுத்தாளர் பாரத தேவி(வயது 61) தமிழில் முக்கிய வட்டார வழக்கு படைப்பாளிகளில் ஒருவர். இவர் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுறத்தில் வசித்து வருகிறார். இவருடைய நூல்கள்: சுமைதாங்கிக் கதைகள், நாட்டுப்புற சொல் கதைகள், சந்தர்பம் நாவல், பெண்மனம் இரண்டு தொகுதிகள்  எழுத்தாளர் கி.ராஜநாரயணனுடன் சேர்ந்து தொகுத்தது , காதில் விழுந்த கதைகள், நாட்டுப்புற கதைகள், அவள் ஏன் அழுதாள்(நாவல்), கரிசல்காட்டுக் காதல் கதைகள்,
இவரது நிலாக்கள் தூர தூரமாக புத்தகம் தமிழில் மிகச்சிறந்த குழந்தைப்பருவ சுயசரிதையாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறது.  


ரயில் - என் முதல் அனுபவம்

எனக்கு பத்துவயதாக இருக்கும் போது எனது அம்மா என்னையும், எனது இரண்டு தம்பிகளையும் கூட்டிக்கொண்டு மெட்ராசுக்குப் போய் அக்காவைப் பார்க்கப் போறோம் என்று நடு மத்தியானமே சொல்லிவிட்டாள். எனக்கு சந்தோசமென்றால் தாங்க முடியவில்லை அதற்கு முன் ரயிலைப் பார்த்ததே இல்லை. என் அக்கா சென்னையிலிருந்து வரும் போதெல்லாம் நாங்கள் கேட்போம். “எக்கா ரயிலு எப்படி இருக்கும்?” அக்கா சொல்வாள் ”அது நீட்டா, ரொம்ப நீட்டா இருக்கும்” நானும் என் தம்பிகளும் இரண்டு கையையும் விறைப்பாய் நீட்டிக் கொண்டு ஒரு கையை ஒருவர் தொட்டவாறு ”இவ்வளவு நீட்டா இருக்குமா?” என்று கேட்கும்போது அக்கா சிரிப்பாள்.



“என்னக்கா சிரிக்கே?”
“ஏன்னா நீங்க வீட்டுக்குள்ளேயே கையை நீட்டி ரயிலை காமிச்சிட்டீக, ஆனா ரயிலு ரொம்ப பெருசா இருக்கும்”
“எவ்வளவு பெருசுன்னு சொல்லேன்?”
“அது நம்ம வீட்டுல இருந்து மொட்டமலை வரைக்கும்” என்றதும் நாங்கள் ’ஆ’ வென்று வாயைப்பிளந்தவாறு ஆச்சரியத்துடன் அக்காவைப் பார்த்தோம். ஏனென்றால் ‘மொட்டமலை’ என்பது எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தூரமிருக்கும்.

அக்கா எங்கள் வீட்டிலிருந்து போன பிறகும் நானும், தம்பிகளும் ரயிலைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம். எப்படியாவது ரயிலில் ஏறிப்போய் அக்காவைப் பார்த்துவிடவேண்டுமென்று ஆசையோடு இருக்கும் அம்மாவே அக்காவைப் பார்க்க  மெட்ராசுக்கு போறோம் என்று சொன்னால் எங்கள் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்?

எங்கள் ஊரிலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் ‘சஞ்சீவி மலை’ அருகில் தான் ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. அந்த மலைக்கு நான் அடிக்கடி சாமி கும்பிட போயிருக்கிறேன். அனுமார் ராமருக்காக ‘சஞ்சீவி மலையை’ தூக்கிக் கொண்டு வரும்போது கொஞ்சம் உடைந்து இங்கே விழுந்துவிட்டதாம் அதனால் இந்த மலைக்கும் ‘சஞ்சீவிமலை’ என்று பெயர் என்று பெரியவர்கள் சொன்னார்கள்.
நான் பிளாட்பாரத்தில் தம்பிகளோடு இங்கும், அங்கும் ஓடிக் கொண்டும், ரயில் எந்தப் பக்கமாய் வரும் என்று என் அம்மாவிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தோம். ரயிலை எப்போது பார்ப்போம் அதில் எப்போது ஏறி உட்காருவோம் என்று ஆசையாயிருந்தது.

நான் தம்பியிடம் சொன்னேன். ”நான் முதல்ல ஏறி உனக்கு எடம் பிடிச்சிருதேன் பெறகு நீ வா” என்றதும் அவன் ”நாந்தேன் முதல்ல ஏறுவேன்” என்றான். நாங்கள் சண்டைப்பிடிப்பதைப் பார்த்து விட்டு என் அம்மா அதட்டினாள்.

”இந்தா நானு சொல்லத நல்லாக் கேட்டுக்கோங்க முதல்ல நானு ஏறுவேன், நீ ஏறுவேன்னு ரயில்ல ஏறுனீகளோ கால ஒடிச்சிப்போடுவேன். நானு முதல்ல ஏறிகிடுதேன் பெறவு நீங்க நானு ஏறுத பெட்டியில ஏறுத ஆளுகள இடிச்சிதள்ளிட்டு விருட்டுன்னு ஏறிரணும் அங்கிட்டு இங்கிட்டு பெறாக்கு பாத்துக்கிட்டு இருந்தீகளோ கொன்னு போடுவேன்” என்றாள்.

உடனே எனக்கு ரயிலைப் பார்க்கும் ஆர்வம் குறைந்து அம்மா பின்னால எப்படி ஏறப்போறோம்? என்ற பயமும், எப்படியும் ஏறிரணும் என்ற ஆர்வமும் வந்துவிட்டது. தூரத்தில் கருப்பாய் ரயில் முகம் தெரிந்ததுதான் அம்மா என் கடைசி தம்பியை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு இரண்டு பைகளையும் தூக்கிக்கொண்டு ஓடியாங்க, ஓடியாங்க என்று ரயில் வரும் திசையை நோக்கி ஓடினாள். நானும் ரயிலைப்பார்க்கவில்லை என் தம்பி ராஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு என் அம்மாவின் வெள்ளைப்புடவையை அடையாளம் வைத்துக்கொண்டு ஓடினேன். அந்நேரம் வரையில் கூட்டமே இல்லாமல் இருந்த ரயிலடியில் இப்போது நிறைய கூட்டம் வந்துவிட நான் அவர்களை  விலக்கிக்கொண்டு ஓட முடியாமல் ஓடினேன். கடைசியாய் என் அம்மா ஒரு பெட்டியில் பொட்டணத்தோடும், சின்னத்தம்பியோடும் ஏறிக்கொண்டே அந்த பெட்டியோரம் நின்ற எங்களைப் பார்த்து “சீக்கிரம் ஏறுங்க” என்று சொல்லிக்கொண்டே உள்ளே ரெண்டெட்டு வைத்தாள். நாங்கள் ஏறப்போவோம் பெரிய ஆட்கள் எங்களை தள்ளி விட்டு ஏறிவிடுவார்கள் பிறகும் நாங்கள் முண்டிக்கொண்டு  ஏறிப்போக முயற்சி செய்வோம். ஆனாலும் கூட்டநெரிசல் வந்து எங்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு ஏறிவிடுவார்கள். என் அம்மா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டு ஏறுங்க ஏறுங்க என்றாள். ஆனால் எங்களால் ஏறமுடியவில்லை. நாங்கள் அந்த கூட்டத்தில் ரயிலில் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருக்க ரயில் போயே போய்விட்டது. என் அம்மா எங்களை விட்டு விட்டுப் போன பயத்தில் நான் ரயிலைப்பார்க்க மறந்து போய் அழுதுகொண்டு நின்றேன்.
அதன்பிறகு ரயிலைப்பற்றி மறந்தே போனேன்.

எனக்கு பன்னிரண்டு வயது. புரட்டாசி(செப்டம்பர், அக்டோபர்) மாதம் பிறந்துவிட்டால் போதும். எங்கள் ஊரில் இருக்கும் குமரிப்பெண்களெல்லாம் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருக்கும் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை சனிக்கிழமை என்று ஐந்து சனிக்கிழமையும் விடிந்தும் விடியாமலும் புறப்பட்டுவிடுவார்கள். நானும் அவர்களுடன் புறப்பட்டுவிடுவேன். அப்போது பஸ் இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊர்க்காரர்கள் ‘மொட்டைமலை’ப் பாதையாக நடந்தேதான் போவோம். எல்லோரும் பித்தளை தூக்குப்போனி அல்லது ஈயத்தூக்குப்போனியில் இட்லியும், தோசையை நிறைத்துக் கொண்டு பாட்டும், கதையுமாக புறப்பட்டுவிடுவோம் சோலயங்குளம் வயக்காட்டுப் பாதையே போய் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சேர்ந்து விடுவோம். ஒருமுறை பெரிய மழை பெய்துவிட்டதால் வன்னியம்பட்டி வழியாகப்போனோம். நாங்கள் போனதற்கும் சரியாக இருந்தது. அன்று தான் ரயிலை முதன் முதலாக கண்கள் விரியப்பார்த்தேன். பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆச்சரியமும், பிரமிப்புமாய் கண்ணைக்கூட சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றேன்.

என்னுடன் வந்த எங்கள் ஊர்க்காரர்களும் அதுவரை ரயிலைப் பார்த்ததில்லை. அவர்களும் ரயிலைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதில் திருக்கம்மா என்பவர் ”இதென்னடி யாத்தா ‘இருட்டு வீட்டுக்குள்ள முரட்டுச்சிங்கமின்னு’ அளிப்பாங்கதை(விடுகதை) போட்ட மாதிரி ஒரு அர்ச்சவமாவில்ல இருக்கு. எம்புட்டு நீளம்! எம்புட்டு பெருசு! பாக்க, பாக்க நம்ம கண்ணையுமில்ல அந்த ரயிலு கவ்விக்கிட்டுப் போவுது” என்றார். இன்னொரு அக்கா “இந்த ரயில்ல ஏறிகிட்டு போவனுமின்னா பணக்காரகளா இருக்கனுமோ, என்னமோ” என்றார். நான் உடனே “எங்கம்மா ஒரு நா ஏறிப்போனா” என்றேன் “அப்ப எல்லாரும் போவலாம் போலுக்கோ” என்றார். அன்றையதினம் நாங்கள் திருவண்ணாமலையிலிருக்கும் கோவிந்தனை மறந்து ரயிலின் கடைசிபெட்டி போன பிறகும் அந்த திக்கமே பார்த்துக்கொண்டு நின்றோம். எனக்கு அவ்வளவு பெரிய ரயிலை முதன் முதலில் பார்த்த ஆச்சரியத்தைவிட பயத்தில் உறைந்து போய் நின்றேன்.

பிறகு என்னுடன் வந்தவர்கள் ’ரயிலில் எப்படியாவது ஏறி ஏதாவது ஒரு கோயிலுக்கோ, குளத்துக்கோ போய்விட்டு வரவேண்டும் அப்படி போகாவிட்டால் நாம் பூமியில் பிறந்து புண்ணியமே இல்லை!’ என்று சொல்ல, நானும் எப்படியாவது அவர்களுடன் போய்விடவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அன்று ஊருக்குள் இதே பேச்சுத்தான். ’ரயில் அப்படி இருந்தது, இப்படி இருந்தது’ என்று வர்ணனை, வர்ணனையாய் அளக்க மறுநாள் என் தம்பி இன்னும் நிறையப் பேர் அந்த ரயிலைப் பார்த்துவிட வேண்டுமென்று வன்னியம்பட்டிக்கு கிளம்பிவிட்டார்கள் அரிவாளோடு! அரிவாள் எதற்கு என்றால் ரயிலைப் பார்த்துவிட்டு வரும்போது மாட்டுக்குப் புல் அறுத்துக் கொண்டு வருவதற்காகத்தான்.
பத்து இருபது பேர் வரையில் வடக்கு நோக்கி திமு திமுவென்று புறப்பட்டவர்களை எனது ஒன்று விட்ட மாமாதான் தடுத்து நிறுத்தினார். அவர் பட்டாளத்தில் இருந்ததோடு அடிக்கடி ரயிலிலும் போய் வந்தவர். “ஏத்தா ரயிலப் பாக்கணுமின்னா வன்னியம்பட்டிக்கு எதுக்குப் போறீக? எங்கூட வாங்க ராசபாளையத்தில ரயிலு நிக்கும் உங்களுக்கு நானு காட்டுதேன்” என்றார். பிறகு எல்லோரும் நானும், என் தம்பியும் கூட அவருடன் போய் மீண்டும் ரயிலைப் பார்த்துவிட்டு வந்தோம். எத்தனை நீளம், எம்புட்டு உசரம்! என்று கண் அசங்காமல் அன்றும் ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு வந்தேன்.
மாசிமாதம்(மார்ச்) தென்காசி பக்கமிருக்கும் ’திருவட்டப்போத்தி’ என்ற கோயிலுக்கு எங்கள் ஊர்க்காரர் போய்  கும்பிட்டு வருவது வருசத்திற்கு வருசம் வழக்கமாகயிருந்தது. எப்போதும் பஸ்ஸில் போகிறவர்கள் இந்த தடவை ரயிலில் ஏறி போக வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் இவர்களின் ஆசைக்கு ஏற்றது போல் என் மாமாவும் “ தென்காசி வரை ராஜபாளையத்திலிருந்து ரயில் போகும் நாம் அதில் போய் தென்காசியில் இறங்கி பிறகு பஸ்ஸில் போகலாம்” என்றார். அவ்வளவுதான் எல்லோருக்கும் சந்தோசமென்றால் அப்படி ஒரு சந்தோசம் வேலை செய்யும் இடங்களில்  எல்லாம் ரயிலில் போகப்போவதே பேச்சாயிருந்தது.

ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது “ஏத்தா நீ வாரயா கோயிலுக்கு? இந்த வருசம் நாங்க ரயில் ஏறில்ல கோயிலுக்குப் போறோம்” என்று கேட்டு, கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த மாதிரி விஷயங்கள் என்றால் நான் முதல் ஆளாகத்தான் நிற்பேன். ரயிலை வேறு பார்த்துவிட்டதால் எல்லோரிடமும் வித விதமாய் ரயிலைப் பற்றி சொல்லிக் கொண்டு என்னைக்கு ரயில் ஏறப்போகிறோம்? என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டு இருந்தான்.
கோவிலுக்குப் போகும் நாளும் வந்துவிட்டது ரயிலில் ஏறும் ஆசையால் ஊருக்குள் பாதிபேர் வரை புறப்பட்டுவிட்டோம். ரயிலடிக்குப் போன போது மாமா ”இப்ப ரயிலு வந்துரும் வந்து கொஞ்ச நேரந்தேன் இங்கு நிக்கும் அதனால நீங்க பாட்டுக்கு ஒரே பெட்டியில கூட்டமா நின்னு ஏறாம ஆள் ஆளுக்கு உங்களுக்கு எதிர இருக்கப் பெட்டியில ஏறிக்கோங்க ரயிலுக்குள்ள ஏறுன உடனே நீள நீளமா உக்கார்ரதுக்கு சீரா பெஞ்சு கணக்கா போட்டிருக்கும் அதில படக்கின்னு உக்காந்துக்கோங்க பக்கத்தில இருக்கவகளயும் உக்கார வச்சிக்கோங்க மெனாக்கெட்டாப்புல(சுறு சுறுப்பு இல்லாமல்) இருக்காதீக என்றார்.

உடனே ஒரு பெரியம்மா ”ஆமாதாயீ நாங்க பாட்டு ஒவ்வொரு  பொட்டியா ஏறுனா பெறவு எப்பிடி ஒன்னு சேருவோம்?” என்று கேட்க மாமாவும் ”நான் உள்ளே வந்தப் பெறவு ஒன்னு சேத்து விடுவேன்” என்றார். நாங்களும் ’ஒன், டூ, த்ரி’ சொல்வதற்காக காத்திருப்பதுபோல் காத்திருந்தோம். அதேபோல் ரயில் திகு, திகு என்று இரைந்து கொண்டு வந்து நின்றது. முந்தைய மாதிரி நம்மை யாரும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்ற வேகத்தில் நான் முதல் ஆளாக ஏறிவிட்டேன். மாமா சொன்னது போல் நீண்ட பெஞ்சுகள் கிடக்க நான் சன்னலோரம் போய் உக்கார்ந்து கொண்டேன் என் தம்பி முதல் கொண்டு எல்லோரும் ஏறிவிட்டார்கள். ஒரு அத்தை ஏறும் அவசரத்தில் தான் கொண்டு வந்த கட்டு சோத்தை வெளியே போட்டு விட்டார். இதற்குள் திடுக்கென்று நம்மை ஒரு ஆள் பிடித்து தள்ளியதுபோல் தள்ளிவிட்டு ரயில் புறப்பட்டுவிட்டது. கட்டுச்சோத்தை தவறவிட்ட அந்த அத்தை மாமாவைப்பார்த்து “எய்யா இந்த வண்டிய செத்தோடம் நிறுத்தச் சொல்றீகளா அந்த கட்டுச்சோத்தை எடுத்துகிட்டு ஓடியாந்துடுதேன்” என்று கேட்க மாமா ”அது சரி” என்று விட்டு சிரித்தார்.

ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த நான் வெளியே எட்டிப்பார்த்தேன் உடனே மாமா வெளியே எட்டிப் பார்க்கக்கூடாது கண்ணூல தூசியும், கரியும் விழுந்திரும் என்றார் (அப்போதெல்லாம் ரயில்கள் நிலக்கரியில் ஓடியதாம்). மாமா சொன்னதில் எனக்கு வருத்தம்தான் ஆனாலும் நான் வெளியே பாத்துக்கொண்டுதான் வந்தேன்.

ரயில் போவதே தெரியவில்லை வெறும் தடக், தடக்கென்ற சத்தம்தான் கேட்டது. ஆனால் வயல்களூம், மரங்களும், மாடுகளும், மனிதர்களும், தந்தி கம்பங்கள் மட்டுமல்ல, பார்க்கின்ற எல்லாமே விருட், விருட்டென்று பறந்து மாயம் காட்டின. தந்தி கம்பங்கள் நாம் பார்க்கும் போதே கீழே வளைவது போல் வளைந்து பிறகு விருட்டென்று மேலேறி காணாமல் போனது. வயல்கள் எல்லாம் சதுரம் வாங்கி மறைந்தன. எவ்வளவு உற்று பார்த்தாலும் ரயிலுக்கு வெளியே உள்ள மனிதமுகங்கள் அடையாளம் தெரியாமலே பறந்து மறைந்தார்கள்.

ரயிலுக்குள் நிறைய கூட்டமாயிருந்ததால் மாமா ஒரு ஓரமாக நின்றவாறு எல்லோரிடமும் பேசிக்கொண்டே வந்தார். அப்படி பேசிக்கொண்டே “இந்தா சீலுத்தூரு வந்திருச்சு” என்றார். அவர் சொன்னதும் எனக்கு பொசுக்கென்றது. ’உக்காந்த மாயம் தெரியல அதுக்குள்ள சீலுத்தூரு வந்துருச்சே அப்ப நம்ம போவப் போற கோயிலும் சீக்கிரம் வந்துருமோ? என்று என் மனம் பதற கடவுளே நாங்க போற கோயிலு சீக்கிரம் வரக்கூடாது என்று மனதிற்குள்ளேயே சாமியை கும்பிட்டுக்கொண்டேன்.

ரயில் போய்கொண்டே இருந்தது. நான் கண்கள் விரிய ரயிலுக்கு வெளியே தெரிந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். ரயிலுக்கு வெளியே மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து கையை ஆட்ட நானும் அவர்களுக்கு கையாட்டினேன். களை வெட்டியவர்கள், பருத்தி எடுத்துக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் வேலையைவிட்டு, விட்டு எங்களைப் பார்க்கும் போது எனக்கு பெருமையாய் இருந்தது. நாமும் இனிமேல் ரயில் போகும் பக்கத்துகாட்டிற்குத்தான் வேலைக்குப் போக வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

ரயில் போய்கொண்டு இருக்கும் போதே ஒரு பெரியம்மா மாமாவிடம் “எய்யா கொஞ்சம் ஒதுங்கனும் எங்கிட்டுப் போவ?” என்று கேட்க மாமாவும் அந்தப் பக்கமா போங்க என்று கையை காட்டியவர் ஒன்னுக்கு, ரெண்டுக்குப் போறவக எல்லாம் இவுககூட போங்க என்றார். எனக்கும் போக வேண்டும் என்றிருந்தது. ஆனாலும் ’என் இடம் போய் விடுமோ?’ என்று பயமாகவுமிருந்தது உடனே நான் மாமாவிடம் ”மாமா நானு பெரியம்மா கூட போய்ட்டு வாரேன் நானு வரதண்டியும் யாரும் இங்கன உக்காந்திரக்கூடாது என்றேன். அவரும் உக்கார மாண்டாக போய்ட்டு வா” என்றார்.
பெரியம்மா முன்னால் நடக்க நாங்கள் நாலைந்து பேர் அவர் பின்னால் போனோம். எங்கே பார்த்தாலும் ஆட்கள் உட்கார்ந்துகொண்டும், நின்று கொண்டும் ஒரே கூட்டமாயிருந்தது. பெரியம்மாவிலிருந்து யாருமே அதுநாள் வரையிலும் ‘கக்கூஸை’ப் பார்த்தது கிடையாது. மாமா கைகாட்டிய திக்கம் போனோம் அங்கேயும் ஆட்கள் நிறைய இருந்தார்கள். பெரியம்மா அங்கிருந்த ஒருவரிடம் ”தாயீ ‘கக்கூசு’ எங்கிட்டு இருக்கு என்றார். உடனே அவர்கள் ‘நயி நயி’ என்றார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியம்மா ”இதென்ன கொடும’ கக்கூசக்கேட்டா சண்டைக்கு வரான் என்று சொல்லிக்கொண்டு திரும்பி வந்தார் நாங்களும் அவர் கூடவே வந்தோம்.

மாமாவிடம் வந்த பெரியம்மா என்னப்பா நாங்க நீ காட்டுன  திக்கமா போயி அங்கன இருக்கவக கிட்ட கக்கூசக் கேட்டா ‘நயி நயி’ன்னு முடுக்குதான் என்றார். பெரியம்மா சொன்னதைக் கேட்டதும் மாமாவுக்கு சிரிப்பு அள்ளியது. ”‘நஹின்னா’ இங்க ‘கக்கூசு’ இல்லன்னு அர்த்தம் அவுக எல்லாம் இந்திக்காரக அப்படித்தேன் பேசுவாக  வாங்க நானு உங்களை கூட்டிட்டுப் போறேன் என்று எங்களை கூட்டிப் போனார். மாமாவின் பின்னால் போகும் போதே எனக்கொரு ஆசை இருந்தது. ’அவ்வளவு பெரிய ரயிலில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் உக்காந்து வெளியப்பாத்துட்டு வாரோம். எல்லா எடத்தையும் பாத்தா எப்படி இருக்கும்? மாமா கிட்ட கேட்டு இம்புட்டு பெரிய ரயிலையும் பாத்துரணும் என்று நினைத்து கொண்டே போனேன்.

மாமாவுடன் போய்விட்டு நான் திரும்பி வரும்போது என் இடத்தில் என் சேத்திக்காரியான வசந்தா உக்காந்திருந்தாள் எனக்கு கோபம் என்றால் அப்படி ஒரு கோபம். வேகமாய் அவளிடம் போய் ”இது என் எடம் எந்திரி” என்றேன். அவள் ”இதுல உன்னிடமின்னு எழுதியா இருக்கு? நான் எந்திரிக்க மாண்டேன்” என்றாள்.

”இப்ப எந்திரிக்கப்போறியா? இல்லையா?” என்று கோபத்தோடு கேட்க பக்கத்தில் உக்காந்திருந்த அத்தை ”நீதேன் இம்புட்டுத்தேரம் உக்காந்திருந்தேல்ல இன்னி சத்தோடம் அவ உக்காந்திருக்கட்டும்” என்றார். எனக்கு கோபமும், அழுகையுமாய் வந்தது. பெரியவர்கள் என்ன சொன்னாலும் எதுத்துப் பேசக் கூடாது என்பது என் அம்மாவின் கட்டளை. நான் என்ன செய்வது என்று தெரியாமல் மாமா வரட்டும் அவர்கிட்ட சொல்லிட்டு இங்கன உக்காந்துக்கிடுவோம் என்று மாமாவைப் பார்த்தேன். அவர் எங்களை விட்டு. விட்டு பிறகு கொஞ்சப் பேரை ‘கக்கூசிற்கு’ கூட்டிக்கொண்டு போவதும், வருவதுமாயிருந்தார், கடைசியாய் அவர் வர நான் அவரைக் கூப்பிடுமுன்பே நம்ம போவ வேண்டிய ஊரு வந்துருச்சி எல்லாரும் எறங்கணும் ”என் பின்னாலேயே வாங்கான்றவாறு முன்னால் நடக்க நான் என் இடத்தை! ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே அவர் பின்னால் நடந்தேன்.






பாரததேவி பற்றி எழுத்தாளர் கி.ராஜநாரயணன்
பெண் பிள்ளைகள் தமிழ் உரைநடை இலக்கியத்துக்கு நிறைய வரவேண்டும், வருவார்கள். நாட்டுப்புறப் பட்டிதொட்டிகளிலிருந்து வருவது அருந்தல். அதுவும் எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த பெண்கள் எழுதவருவது அருந்தலிலும் அருந்தல். மகள் பாரததேவி அப்படி வந்தவள்தான். நாட்டார் கதைகள் கேட்டுக் கேட்டு வளர்ந்தவள். அவள் படித்த பள்ளிக்கூடமே அதுதான். பள்ளிப்படிப்பை மேலும் படிக்க வேண்டும் என்கிற அவளுடைய சிறிய வயசு ஆசை கருகிப் போனது. மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று ஆக்கப்பட்டாள்.

‘தந்தையோடு கல்வி போம்’  என்று ‘கல்வி’  அவளை விட்டுப் போய்விட்டது. போய்விட்டது என்று சொல்வதைவிட அவளிடமிருந்து பறிக்கப்பட்டது என்று சொல்லுவதே பொருத்தம்.
எனது பள்ளிநாட்களில் (1929லிருந்து  1939வரை) நான் படித்த போது எனது வகுப்பு பிராமணவாத்திகள் எங்களுக்குப் படிப்பில் மந்தம் ஏற்படும்போதெல்லாம் அவர்கள் எங்களைப் பார்த்து ஆங்காரத்தோடு சொல்லும் வார்த்தைகள் “பேசாம மாடு மேக்கப் போங்களேண்டா” என்பதுதான். இன்னும் “ஆடு மேய்க்க” “கழுதெ மேய்க்க”, “பன்னி மேய்க்க” என்ற்ல்லாம் அவரவர் சாதிகளை மனதில் வைத்து சொல்வதும் உண்டு. பிள்ளைகளின் மனசு புண்படுமே என்றெல்லாம் அந்தச் சாதிமேட்டிமை கொண்ட வாத்தியான்களுக்குத் தெரியாது; தெரிந்தாலும் கவலைகொள்ள மாட்டார்கள்.

‘பாரத தேவி’ என்ற பெயர் இவளுக்கு வந்ததன் காரணம் காந்தி இறந்த அன்று இவள் பிறந்ததினால் என்று சொன்னாள்.

ஆக, சுதந்திர நாட்டில் பிறந்த ஒரு பெண்பிள்ளை படிக்க முடியாமல் மேய்க்கப் போனாள். பெற்ற தாயே இவளுக்கு மாற்றாஅந்தாய்போல ஆனதுக்குக் காரணம் வாழ்க்கையை மெல்லும் வறுமைதான்.

இவளுடைய பால்ய கால வாழ்க்கை ஒரு கவித்துவம் கொண்டதாக அமைந்திருக்கிறது. அவைகளை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறாள். இந்த எழுத்தில், ஒரு இந்தியச் சிறுமி தனது பிழைப்புக்காக தனது குடும்பத்துககாக சிறிய வயசில் காடுகளில்  மாடு மேய்த்துக் கொண்டு தனது பட்டறிவினால் வாழ்வியலைக் கண்டு கேட்டு அறிந்து கொண்டாள் என்பதோடு அதை தனது எழுத்தில் எவ்வளவு  அழகாகப் பதிவு செய்திருக்கிறாள் என்று பார்க்கவேண்டும். இந்த எழுத்துப் பிரதி, ஒரு இதழில் வெளிவர கொஞ்சநாள் சென்னைக்குப் போய் தபசு இருந்தது. தோற்று வந்தது. அதன்பிறகு இரண்டு பதிப்பகங்களுக்குப் போய் புத்தகமாக முடியாமல் தோற்று திரும்பி வந்தது. கடேசியில் கலைவாணியின் அருளால் (வேற எப்படிச் சொல்ல!) சு.வேணுகோபால், வசந்தகுமாரின் கண்களில் பட்டு இப்போது புத்தகமாகிவிட்டது.

சிறந்த புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களுக்கும் ஒரே விருது பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் முதல் பரிசைத் தட்டி செல்வது தமிழினியாகத்தான் இருக்கும்

மிகுந்த பாராட்டுக்களுடன்.

கி.ரா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com