கைப்பேசியை காதில் சொருகி
வண்டி ஒட்டியவாரே
பேசிய போது
லேப் டாப் வேண்டும்
என்று கேட்டாள் மகள்.
சிக்னல் மேலான கவனத்தில்
சரி என்று சொல்லி வைத்தேன்.
பச்சை விழுந்த போதே
அவள் கேட்டதும் நான் சொன்னதும்
மறந்து போனது.
இப்படி சிலநாள் அவள் அழைப்பதும்
பணிகள் துரத்திய நாளில்
நான் சரி எனச் சொல்லி
பேசியைத் துண்டிப்பதுமாய் போனது.
அவள் பள்ளித் தோழர்கள்
ஆசிரியர்கள்
பக்கத்து வீட்டுக் கூட்டாளிகள்
செல்ல நாய் டோனி வரை
தனக்கு லேப் டாப் வருவதை
சொல்லிச் சிரிக்கிறாள்.
லேப் டாப் வராது என்றால்
வீட்டுப்பாடம் செய்கிறாள்.
லேப் டாப் வராது என்றால்
தொலைக்காட்சிப் பார்க்காமல்
படுத்ததும் உறங்குகிறாள்.
இப்படி நான் ஒரு பேச்சுக்கு
சொன்னது அவள்
மூச்சான நிஜத்தை
என்னிடம் சொன்னார்கள் வீட்டில்.
பேசியில் சொல்லும் சரிகள்
அழைப்பைத் துண்டிக்கத்தான்
என்று அறியக்கூடிய வயது
அவளுக்கில்லையோ
இல்லை நான் சொல்லும் சரிகள்
எதுவும் சரிகள் இல்லா
வாழ்வானதோ எனக்கு
அப்பாவிடம் லேப் டாப் வாங்க
இப்போது பணம் இல்லை.என்றேன்.
எப்ப வரும் என்றாள்.
தெரியலையே என்றேன்
வரும் வரை நீ என்ன பண்ணுவாய்
என்றாள்
கஷ்டம் தான் என்றேன்.
அப்ப இப்ப லேப் டாப் வாங்க
வேண்டாம் பா என்றாள்.
சமாளித்த திருப்தியில் கைப்பேசியை வைத்தேன்.
ஒருமணி நேரம் கழித்து மகளிடம் இருந்து அழைப்பு.
அப்பா என்கிட்ட 1450 ரூபா 50 காசு இருக்கு
நான் உனக்கு அனுப்பி வைக்கட்டா?
இல்லை அப்பா பாத்துக்கறேன்.
எனக்கு செலவே இல்லப்பா
நீ வச்சுக்கோப்பா என்கிறாள்.
ஏதேதோ சமாளித்து வைத்தேன் கைப்பேசியை.
கடல் தெரியும் சன்னலுக்கு அருகில்
என் லேப் டாப்பில் இதை அடிக்கும் போது
தொலைதூர மலை ஊரில்
தன் மண் உண்டியலை உடைத்து
ஸ்ட்ராபெரி கலர் வீடு வாங்கப் போகிறேன் என
ஆசைஆசையாய் சேர்த்த சில்லரை காசுகளை
ஒரு மணி நேரம் எண்ணி 1450 ரூபாய் 50 காசு
என மதிப்பிடும் என் ஏழு வயது மகளின்
முகம் கண் முன்னே.
-ராம்.
March 28, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
