பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 28, 2010

ரயில்-ஸ்டாலின் பெலிக்ஸ்

"காட்சி" க்கு ரயில் அனுபவங்களை எழுத்தாளர்களிடமும் உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தோம். எழுத்தாளர் பாரதிதேவி அவர்களின் அனுபவம் பதியப்பெற்றது. (http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_25.html)
அவ்வரிசையில் காட்சியின் உறுப்பினர் திரு.ஸ்டாலின் பெலிக்ஸ் அவர்களின் அனுபவம் இங்கே இடம் பெறுகிறது.சிறந்த படைப்புகளை புத்தகம்மாய் ரயில் என்ற தலைப்பில் பிரசுரிக்கலாம் என் இருக்கிறோம்.உங்கள் படைப்புகளையும் எங்கள் மின்னஞலுக்கு அனுப்பலாம். நன்றி. காட்சி.kaattchi@gmail.com
திரு.ஸ்டாலின் பெலிக்ஸ் குறித்த அறிமுகம் அவரின் எழுத்து வழியே

நான் காலப்பறவை .... பெற்றோர் சூட்டிய பெயர் ஸ்டாலின் பெலிக்ஸ்.. தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தில் இருந்து காலச்சூறாவளியால் தற்போது கரை ஒதுங்கி இருக்கும் இடம் தமிழகத்தின் தலை நகரம்...

கணிப்பொறியாளனாய் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன்.. கவிதைகளும், கதைகளும் அத்தனை பிரியம் எனக்கு.நல்ல ஒரு படைப்பாளி ஆவதும்,சமூக சேவையும் விருப்பம் .இருபதற்கும் மேற்பட்ட தடவை நான் செய்த ரத்த தானமே, இந்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவியாக கருதுகிறேன்..முக்கியமாக என்னை உருவாக்கிய மண்ணிற்கும், மண்ணின் மைந்தர்களுக்கும் நான் நிறைய கடமை பட்டுள்ளேன்...
என் வலைப்பூ : http://stalinfelix.blogspot.com/

ரயில் ஒரு வசீகரம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு கவிதை... ரயிலோடு மனிதர்கள் கொள்ளும் சிநேகம் மொழிகளற்ற ஒரு இலக்கியம்... சிறு வயதில் ரயில் நிற்கும் ஊரில் வாழ்பவர்கள் பேறுபெற்றவர்கள்... நான் அந்த வகையில் பாக்கியவான்.. ஆம் எங்கள் ஊரிலும் ரயில் நிலையம் உண்டு.... என் பால்யத்தில் ரயிலோடு கொண்ட நெருக்கம் மிகவும் மிரட்சியானது.....

கிராமங்களில் கடிகாரங்கள் அறிமுகமாகாத நாள் பொழுதுகளில் ரயிலின் ஓசையே நேரத்தை கணிப்பதற்கு உதவியது. "லே ஏழே முக்காலுக்கு உள்ள ரயிலு போயச்சுல... இன்னும் பள்ளிக்கு போவேலியா" - என அம்மா சப்தமிடுவது இன்றும் பசுமரத்தாணி போல் மனதில் உள்ளது..

தனியாக கோவிலுக்கு செல்ல துவங்கிய என் பால்ய பருவத்தில் ரயில் ஒரு அடக்கமுடியாத ராட்சஷனை போல் காட்சியளித்தது. பெரும்பாலான அந்த மாலை வேளைகளில் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் எங்கள் ஊரில் நிற்பதில்லை. எங்கள் ஊரில் நிற்காமல் தேவையில்லாமல் ஓசை எழுப்பி ஊரின் ஓரமான இடத்தை பிடித்து கொண்டு ஓடும் ரயிலின் மேல் என் வயதை ஒத்த அத்தனை சிறுவர்களுக்கும் வன்மம் இருந்தது.அந்த நாட்களில் கிளம்பிய கோபத்தை அதன் மேல் கல்லெறிந்து தணித்தோம்.

அப்போது ரயில் தண்டவாளத்திற்கும் நாங்கள் நிற்கின்ற இடத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்தது. எனவே நாங்கள் எறியும் கற்கள் ரயிலின் மேல் விழும் சாத்தியம் அற்று போனது... இருப்பினும் குறையாத கோபத்துடன் நாங்கள் எறிந்து கொண்டு இருந்தோம்.

நாட்கள் செல்ல செல்ல நாம் வளருவோம் தானே...ஆம் இப்போது ஏறக்குறைய ரயிலின் மேல் விழும் அளவிற்கு கல்லெறிய பழகி இருந்தோம்...

அன்று ஒரு மாலை பொழுது.. வழக்கமாய் வேகமாய் செல்லும் ரயில் அன்று மெதுவாய் நகர்ந்து வந்தது. ஏன் என யோசிக்கும் நேரமில்லை கற்கள் ஏவுகணை போல் அந்த ராட்சஷனை தாக்கியது...சொல்லி வைத்தாற்போல் நான் எறிய, ரயில் நிற்க வாசல் ஓரமாய் இறங்குவதற்கு வசதியாய் நின்று கொண்டிருந்த ஒரு பாட்டியின் மோர் பானை உடைந்தது....

நான் மட்டும் அல்ல, என்னோடு நின்று கொண்டிருந்த எல்லா சிறுவர்களும் பதட்டம் அடைந்தோம். எனக்கு நாவு தளதளத்தது, கண்கள் இருண்டது, கால்கள் நடுங்கியது...ஒரே விநாடி...... ஓட துவங்கினோம்..... இலக்குகள் அற்று சிதறி ஓட துவங்கினோம்...எனது பின்னால் யாரோ துரத்துவது போல மனம் உணர கண், மண் தெரியாமல் ஓடி ஒரு வாழை தோப்பில் மூர்ச்சையாகி விழுந்தேன்..

வெகு நேரம் கழித்து எழுந்த போது யாரையும் காணவில்லை, எங்கே இருக்கிறேன் என்பதும் புரியவில்லை. மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன். மனதுக்குள் ஏதேதோ நினைவுகள் வந்து போனது.

"ஐயோ எறிந்து விட்டோமே, கல் அந்த பாட்டியின் தலையில் பட்டிருக்குமா, பட்டிருந்தால் செத்திருப்பாளே... செத்தால் போலீஸ் வருமே...போலீஸ் வந்தால் ஜெயிலுக்கு கொண்டு போவார்களே, ஜெயிலுக்கு கொண்டு போனால் அடித்து பின் துப்பாக்கியினால் சுட்டு கொன்று விடுவார்களே" - என அடக்க முடியாத முரட்டு குதிரையை போல என் நினைவுகள் திமிறி எங்கெங்கோ ஓடி கொண்டிருந்தது...

"எங்கேயாவது ஓடி விடுவோமா?? பாட்டி வீட்டுக்கு போனால் சோறு தருவாள்....ஆனால் எப்படி போவது ??? இருட்டி விட்டதே... தனியா போவதற்கு கூட வழி தெரியாதே...பிள்ளை பிடிகாரன் எல்லாம் உண்டே, ஐயோ என்ன செய்ய ??? பேசாம செத்து போயிரலாமா ???"

"லே மக்களே, இங்க என்னல செய்ய?" திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன் பெரியப்பா நின்று கொண்டிருந்தார்..
"ஒண்ணும் இல்ல பெரியப்பா, கோவிலுக்கு வந்துட்டு பயிலுவ கூட விளையாடிட்டு நின்னேன்" - விறைத்து விறைத்து பதில் சொன்னேன்..
"சரி விளையாடினது எல்லாம் போதும்... வா வீட்டுக்கு போவோம் " - என்று அவர் அழைக்க பேச இயலாமல் பின் தொடர்ந்தேன்... போகின்ற வழியில் ஒரு ஏத்தன் பழமும், சர்பத்தும், இரண்டு சவ்வு மிட்டாயும் வாங்கி தந்தார்.. பசி ஒரு புறம் வாட்டி எடுத்தாலும், பயத்தோடு அத்தனையும் சாப்பிட்டேன்...

வீட்டின் அருகாமையில் வந்ததும் "போ கொம்ம தேடிட்டு இருப்பா" என சொல்லி விட்டு கிளம்பி விட்டார்..

பூனையை விட மெதுவாக அடியெடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தேன்... அம்மா அடுப்படியில் சமைத்து கொண்டிருந்தாள்.. மெதுவாக பின் பக்கம் சென்று குட்டுவத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து குளிக்க துவங்கினேன்.... அம்மா மெதுவாய் எட்டி பார்த்து விட்டு "நீ கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சா" என்றாள்... நான் 'ஆமாம்' மட்டும் போட்டு விட்டு குளிக்க துவங்கினேன்.

பின் அம்மா சொல்லாமலே பாட புத்தகத்தை எடுத்து படிக்க துவங்கினேன்.அம்மா ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்... அன்று சுட்ட அதிரசத்தில் மூன்றை என் முன்னால் வைத்து விட்டு போய் விட்டாள். அம்மாவுக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை எனபது அவருடைய பாவனையிலேயே தெரிந்தது........ அப்பா!!!!!

வெளியில் சைக்கிள் சத்தம் கேட்டது... அப்பா வந்துவிட்டார் ... நான் பயத்தில் உரக்க கத்தி படிக்க துவங்கினேன்... நான் படிக்கும் போது என்னிடம் எதுவுமே பேச மாட்டார்.. இருப்பினும் அவர் என்னை கடந்த போது மெதுவாய் தலையை உயர்த்தி பார்த்தேன், முறைத்தபடி சென்றார்... படிப்பதை நிறுத்தினால் எதாவது கேட்டு விடுவரோ என்று பயந்து இன்னும் சத்தமாக படித்தேன்.. பயத்தில் ஒன்றுக்கும், ரெண்டுக்கும் சேர்ந்து வந்தது...

அப்பா குளிக்க துவங்கி இருந்தார்... நான் இது தான் தருணம் என்று கழிவறைக்குள் போய் பயத்தால் வந்த உபாதையை வெளியேற்றி கொண்டிருந்தேன்.. எல்லாம் முடிந்து வெளியே வந்த போது அப்பா அம்மாவிடம் ஏதோ பேசி கொண்டிருந்தார்...என்னவென்று மெதுவாய் ஒட்டு கேட்டேன்..


"இன்னைக்கு வாற நேரத்துல ஸ்டேசன் மாஸ்டரை பாத்தென்டியே... அவரு 'ஊர்ல உள்ள பொடி பயலுவ எல்லாம் சேர்ந்து ரையில்ல வந்த ஒரு மோருகாரிக்க பானைய உடச்சி போட்டானுவ.. உம்ம மொவனும் அந்த கூட்டத்துல உண்டாம்..... வெலக்கி வையும்' இன்னு சொன்னாரு....இவனுட்ட கேக்கணும்"
நான் உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன்...

"ம்ம்...க்கும்... ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னாராம்... இவரு கேக்க போறாராம் !!!! நம்ம மொவன் அப்படி ஒண்ணும் செய்ய மாட்டான். ஒழுங்கா படிக்கிய பிள்ளைய படிக்க விடுங்க" --- அம்மா அப்பாவை அதட்டி கொண்டிருந்தாள்...


நான் \ நாங்கள் அதன் பின் கல்லெறியவே இல்லை.......

-

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com