1.
படியில்லா காட்டு மலை ஏறும்போது
விட்ட செறுப்புகள் இறங்கும் போது
விட்ட இடத்தில் இருப்பதில்லை.
(600ரூபாய் பேட்டா செருப்பைத்
தவறவிட்ட சாம்ராஜ்க்கும் கும்மி மலைக்கும்)
2.
கொக்குகள் இன்னமும் இருக்கின்றன.
அதுவும் இன்னமும் வெண்மையாய் இருக்கின்றன
இதற்கெல்லாம் மேலாய் அவை பறக்கவும் செய்கின்றன.
(மாநகர் சென்னைக்கு)
3.
இன்னமும் கோலி சோடா இருக்கிறது.
சூரிய ஒளியை அந்தப் பச்சை பாட்டில்
ஒவியமாக்குகிறது.
கோலியை தட்டுவதற்கு மரத்தால் ஆன திறப்பான்
இன்னமும் இருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாய் அதை
விற்கவும் வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்
(கோக் பெப்ஸிக் காரர்களுக்கு)
4..
இன்னமும் சாலை ஓரங்களில் மரங்கள் இருக்கின்றன.
அவற்றிற்கு கிளையும் இலையும் கூட இருக்கின்றன.
பறவைகளின் கூடும் கூட இருக்கின்றது.
இதற்கெல்லாம் மேலாய்
அவை நிழலும் தருகின்றன.
(சாலை யோர மரம் வெட்டும்
ராஜாத்தி கருணாநிதி அம்மையாருக்கு)
5.
தொலைதூர கிராமத்து வீடு
நவீன அடர் சிவப்பு வர்ணத்தில்
நிற்கிறது,
லேக்மீ லிப்ஸ்டிக்கில் நனைந்த
உதடையுடைய பழங்குடிப் பெண்ணாய்.
6.
நல்ல புகைப்படங்கள் எடுப்பதற்கு
புகைப்படக்கருவி தேவையில்லை
அழகான மரம் ஒன்று போதும் என்கிறார்
முதல் முறை கேமிரா பிடிக்கும் நண்பர்.
7.
மலைக்கூட்டங்களுக்கு நடுவே
தனித்து விடப்பட்ட சிற்சிறு
மலைகள் தான் எப்போதும்
என்னை அழைக்கின்றன.
8.
எல்லாப் பாதைகளும் அழகான பாதைகளே
யார் போகிறார் யார் வருகிறார் என்பதைப்
பொருத்தே எல்லாம் மாறும்.
சூரியனின் நிழலாட்டத்தைப் போல.
9.
பெரிய மாடவீதி என்று சொல்லலாம்.
வளைத்து வளைத்து மச்சு வீடுகள்
முன் கதவிலிருந்து பின் கதவுகள் வரை
பற்பல புகைப்படச் சட்டங்கள் தரும்
எண்ணற்ற கதவுககள் நேர் அடுக்கில்
கொல்லை,கிணறு இத்யாதி
மூன்றாள் உயரத்திற்குக் கூரை
ஒற்றையாள் ஏறும் அளவிற்கு
மரப்படிக்கட்டு
நீள் வாக்கில் கம்பிகள் பதித்த
பெரும் சாளரங்கள்.
வெண்கல மான் தலைகள்
அரையாள் உயர கட்டில்கள்.
தாமரைத் தடத்தள அறைகள்.
என எல்லாம் எல்லாவற்றோடும்
விட்டுவிட்டுப் போய் இருக்கிறார்கள்
தலா ஒரு வீட்டிற்கு
ஒரு தாத்தா ஒரு ஆச்சி என்ற விகிதத்தில்.
( இலஞ்சி , தெற்குத்தெருவிற்கு)
10.
ஆறுமுகஞ் செட்டியார் வளவு வீடு
எங்கிருக்கிறது என்று கேட்டேன்,
வழியில் அகப்பட்ட பன்பொழில்
கிராமத்து பூட்டத்தாத்தாவிடம்.
”அப்படி ரைட்ல போங்க”
என பொக்க வாய் திறந்தார்.
எல்லாரையும் ரைட்டாய்த்தான்
விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.
11.
பரவாயில்லை,இன்னமும்
ஆசிரியருக்குத் தெரியாமல்
புத்தகங்களுக்குத் தெரியாமல்
குழந்தைகள் சிரிக்கிறார்கள்
பள்ளிக்கூடங்களில்.
12.
மாமரத்தின் நெருங்கிய இலைகளின் சன்ன இடைவெளியில்
நிலத்தில் முளைவிட்டிருந்த பச்சை வண்ண சிற்சிறுவிலும்சிற்சிறு
இலைகள் சொன்னது இடைவெளியின் அழகையும் அவசியத்தையும்.
ராம்.
March 26, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
