வணக்கம் தோழர்களே,
ப்ளாக்கர்ஸ் கவனத்திற்கு என்ற கடந்த இடுகையை, நான் எங்கள் காட்சி வலைப்பூவிற்கு வந்த பின்னூட்டங்களுக்கான எதிர் வினையாக சிலர் விளங்கிக் கொண்டார்கள். ஆனால் நான் அவ்விடுகையை எழுதியது திரு.மணிஜீ வலைப்பூக் காரர்களின் ஒரு சந்திப்பிற்குவரும் சனிக்கிழமை ஏற்படு செய்திருப்பதாய் சொன்னதின் விளைவே. அச்சந்திப்பில் வலைப்பூ உலகத்தைக் குறித்து உரையாட தரவுகளைச் சேகரிக்கவே அவ்விடுகை.அவ்விடுகை: http://kaattchi.blogspot.com/2010/03/bloggers.html
வலைப்பூவினால் நடந்த தாக்கங்களை யாரேனும் பின்னூட்டம் இடுவார்களா என்று எதிர் பார்த்தேன். அப்படிப் பட்ட பின்னூட்டங்கள் வரவில்லை.தமிழிலில் இல்லை என்றாலும் மற்ற மொழி வலைப்பூவினால் நடந்த தாக்கங்களைக் குறித்து பின்னூட்டம் வரும்மா என எதிர்பார்த்தேன். வரவில்லை.
நமக்குள் நடந்த உரையாடல்கள்,எனக்கு வந்த மின்னஞ்சல்கள்,
கைப்பேசி அழைப்புகள் எனக்குச் சொன்னதை அல்லது காட்சி
படுத்தியதை நான் பட்டியல் இடுகிறேன்.
1.ஏனைய கலைத்துறையைப் போலவே வலைப்பூஎழுத்தாளர்களுக்கும், பின்னூட்டம் இடுபவர்களுக்கும் சமூக பொறுப்புணர்வு நிறைய இருக்கிறது. அப்பொறுப்புணர்வினால் ஒரு சமூக வெளிப்பாடாகவே தங்கள் படைப்பை பதிவு செய்கின்றனர். அதற்கு பின்னூட்டமும் இடுகின்றனர். ஏனைக் கலைத்துறைப் போலவே பொழுது போக்கு அம்சமும் படைப்பிலும் பின்னூட்டத்திலும் இருக்கிறது. மற்ற கலைஞர் களைப் போலவே தனக்கான அங்கீகாரம் தேவை என்ற மனப்போக்கும் இருப்பது இயற்கையே.வலைப்பூவின் வழி நட்பும் கருத்து பகிர்தலும் நடக்கிறது.
2. ஆரம்ப நிலை எழுத்தாளர் தொடங்கி தேர்ந்த எழுத்தாளர்கள் வரை இயங்குவதால் ஆரம்ப நிலை வாசகர் முதற் கொண்டு தேர்ந்த வாசகர்கள் வரை இதற்குள் இயங்குகிறார்கள்.
3. ஏனைக் கலைத் துறைப் போலவே இதிலும் போட்டியும்,பொறாமைகளும் இருக்கின்றன.
விமர்சனம் குறித்த வலைப்பூ உலகத்தின் பொதுப் பார்வை
1. எழுத்து எழுத்தாளரின் அகப் பார்வையை அல்லது அவருடையக் கருத்தைச் சொல்வது என்றப் பார்வை நிறைய இருக்கிறது.
2. அவ்வெழுத்து தன்னை எப்படி பாதித்தது என்று எழுதுவதே விமர்சனம் என்ற பார்வை.
3. எழுத்தின் மையத்தை உணராமல் சில கூறுகளை மட்டும் விவாதிப்பது
4.. தனக்குத் தெரிந்ததை தான் சரியாக நினைப்பதை சொல்வது விமர்சனம் என்ற பார்வை.
5. தானும் படித்தேன் என்ற பதிவை இட்டுச் செல்வதற்காய் எழுதிச் செல்வது விமர்சனம்.
6. ஒரு எழுத்தை முறியடிப்பது என்பதே விமர்சனம்.
7. வாசகர் கடிதங்களே விமர்சனம்
8. தன்க்கு புரியாதது யாருக்கும் புரியாது என்று சொல்வதும் விமர்சனம்.
9. படைப்பாளியின் கருத்தை புறந்தள்ளுவதும் நையாண்டி செய்வதும் விமர்சனம்.
விமர்சனம் என்பது தன் பார்வை அல்ல. பார்வையை பதிவு செய்பவன் பார்வையாளன். நன்றாய் இருக்கிறது என்று மட்டும் சொல்வது ரசனை சார்ந்தது.அவன் ரசனையாளன். ஆனால் விமர்சனம் செய்வதற்கு மெனக்கெட வேண்டி இருக்கும். விமர்சனம் என்பது தற் சார்பு அற்றது. விமர்சனம் என்பது விஞ்ஞானத்திற்கு உட்பட்டது. உண்மைகளை நிறுவுவது. சான்றுகளின் வழியும் கலைக் கோட்பாடுகளின் வழியும். விமர்சனம் ஒரு படைப்பையும் படைப்பாளியையும் உயர்த்தும் மெருகூட்டும் அப்படைப்பாளியின் கலை குணத்தை அதிகரிக்கும். ரசனை அப்படைப்பாளியை ஊக்கப் படுத்தும். தன் பார்வையிலிருந்து மட்டும் பதிவு செய்யும் போது அப்பார்வை அப்படைப்பின் மட்டத்திலிருந்து மேலோ கீழோ இருக்குமாயின் அப்படைப்பையும் அப்படைப்பாளியின் மனதையும் அது புண் படுத்தும். சில சமயம் அப்பார்வை படைப்பில்இருந்து அகண்டு படைப்பாளியைப் பற்றியதாய் ஆகும் போது படைப்பில் இருந்து முற்றிலும் விலகி படைப்பை மட்டும் அல்ல ரசிகனையும், விமர்சகனையும் பாதிக்கும்.
வலைப்பூக்களில் பதிக்கப்படுவதும் கலையே என்ற என் நம்பிக்கை காரணம்மாகவும் வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் பின்னூட்டம் இடுபவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது இருக்கும் என்ற என் நம்பிக்கை காரணம்மாகவும் பின்னூட்டங்கள் எழுதும் போது மேற் சொன்ன உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன்.
வலைப்பூ எழுத்தாளர்களும் வாசகர்களும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதும் என் எண்ணம். வலைப்பூ எழுத்தாளர்களுக்கான பல்துறைப் பட்டறைகளை(work shops) தங்களுக்கு நடத்தி கொள்ள வேண்டும் என்பதும் என் ஆசை. வலைப்பூ எழுத்தாளர்கள் சமூப் பொறுப்புணர்வை வலையில் மட்டும் அல்லாமல் நேரடியாய் சமூகத்தின் முன்பும் ஒரு குழுவாய் ஒருமித்தக் குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கனவு.நேரில் வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்றால் சமூகம் எதிர் கொள்ளும் ப்ரச்சனை ஒன்றைக் குறித்து ஒரே நாளில் அனைவரும் தங்கள் வலையில் பதிவதன் மூலம் தங்கள் இருப்பை சமூகத்திற்கு வெளிப்படுத்த முடியும். வலைப்பூ எழுத்தாளர்கள் தமிழ் நவீன இலக்கியங்களையும் அவற்றின் போக்கையும் ஊன்றி கவனித்து தன்னை ஒப்பிட்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் எழுத்தாளர்களாய் இடம் பெற வேண்டும் என்பது என் கோரிக்கை.
மணிஜீ நாளை சனிக்கிழமை மாலை நீங்கள் சந்திக்கும் போது என் பக்கத்தில் இருந்து சொல்ல நினைப்பதை இயன்ற அளவிற்கு நான் இங்கு பகிர்ந்திருக்கிறேன் என நம்புகிறேன்.
நன்றி
ராம்.
(கீழ் இணைத்திருக்கும் பின்னூட்டங்களின் தொகுப்பை படித்து உங்களுக்கு உருவாகும் கருத்தை பதிவு செய்தால் நலம் நண்பர்களே)
நாளை வலைப்பூ எழுத்தாளர்கள் சந்திக்கும் நேரம் : மாலை 6 மணி, டிஸ்கவரி புக் பேலஸ், மஹாவீர் காம்ப்ளெக்ஸ்,(பாண்டிச் சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்), மேற்கு கே.கே.நகர்,சென்னை. மேலதிக தகவல்களுக்கு www.thandora.in கைப்பேசி : 93400 89989 மின்னஞ்சல் : nilachitthiram@gmail.com
பின்னினைப்பு
பின்னூட்டங்களின் தொகுப்பு
1. பிரியமுடன்...வசந்த் said...:ஒரு வாசகனாய் இதை நீங்களே திரும்ப படித்துப்பாருங்கள்.....
2. Veliyoorkaran said...நீங்க வேணா அடிமையா இருக்கலாம்...நான் இல்ல..! விமர்சனகளை தாங்கிக்கொள்ள முடியாதவர்களையும் உருவாக்கி இருப்பதுதான் மிக பரிதாபம்..!! நேர விரயம் யாருக்குன்னு கேட்டு சொல்லுங்க...!!//// இவ்ளோ குழந்தைதனமாய் நீங்கல்லாம் எழுத வேண்டாம்...போயிருங்க...!!
3. ஜெட்லி said...உங்கள் எண்ணம் புரிகிறது....உங்களுக்கு யார் மேல் கோபம் அண்ணே.... template பின்னூட்டம் போடுபவர்கள் மேலா??இல்லை எதிர்வினை போடுபவர்கள் மேலா?? எப்பவமே எல்லோரும் சீரியஸ்ஆன விஷயத்தை மட்டுமே விவாதிக்க வேண்டுமா??
4. பாலா said...எனக்கும் பின்னூட்டம் மீதான நம்பிக்கையின்மையும் , வெறுப்பும் உண்டு ராம் . நீங்க கேட்டுடீங்க !!!!!!
5. Rathi said... ராம் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒருவேளை நீங்கள் எடுக்கும் ஓர் தமிழ் சினிமாவை பார்த்து சனம் காசையும் நேரத்தையும் விரயமாக்குகிறதா அல்லது அதைப்பார்க்காமல் மிச்சப்படுத்துகிறதா ஏற்று கேட்டால் உங்கள் பதில் என்ன? ரசிகர்களின் விமர்சனங்கள் தேவையற்றதா?
6. சுரேஷ் கண்ணன் said...”தானை” வெளிப்படுத்தவா பின்னூட்டம்?பிரிய ராம், அவ்வளவுதான் மேட்டர். சற்று பிரபலங்கள் என்றால் அவர்களின் கவனத்தைக் கவர தன்னை முன்நிறுத்திக் கொள்ள வேண்டுமேன்றே குரோத்தத்துடன் உரையாட .. இணையத்தில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இங்கே நேராக முகம் பார்த்து உரையாட வேண்டிய அவசியமில்லாத செளகரியம் காரணமாக தேவையற்ற பின்னூட்டங்களையும் எதிர்கொள்ள நேரிடும். இணையத்தின் சில பலவீனங்களில் இதுவொன்று. இதையெல்லாம் கடந்துதான் நீங்கள் உலவ வேண்டியிருக்கும். இணையத்தைப் புறக்கணிப்பதால் இழப்பு உங்களுக்காகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் போல இதுவுமோர் ஊடகம். கட்டற்ற சுதந்திரம் (சைபர் கிரைமிற்குப் போகாத வரைக்கும்) இதன் பலம்.
7. சுக்கு - மாணிக்கம் said..மிஸ்டர் ராம் ,உம்முடய உணர்வுகளை, கருத்துக்களை பொதுமை படுத்தாதீர். நீர் எழுதியே தீர வேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்த வில்லை என்று நம்புகிறோம். இங்கு எழத திராணி உள்ளவனுக்கு, பின்னூட்டம் எனப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தெம்பும் வேண்டும். வெறும் தொட்டால் சினிங்கிகள் இங்கு எடுபடாது.அது என்ன "இயக்குனர் " ராம்! சினிமா காரர்கள் என்றால் கொம்பா இருக்கிறது தலையில்.!?வேறு வேலை இருந்தால் பார்க்கலாமே .
8. கென்:வலைப்பூக்கள் வெறும் பொழுது போக்குவதற்கான கூடாரமாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. நிதர்சனம் அதுதான். எவனையும் கேள்வி கேட்கலாம் என்னைத்தவிர என்கிற மனநிலை மாறிடாத வரைக்கும் இந்த நிலைதான் .
9. மணிஜீ...... said...கவனிக்க வேண்டும் என்ற விழைவு எல்லோருக்கும் இருக்கிறது ராம். குழந்தை அழுவது போல.சுரேஷ் கண்ணன் சொன்னது போல்... குட்டலோ, தட்டலோ எல்லா கற்றல்களிலும் நம்மை செம்மைபடுத்தலாம். அல்லது சின்ன மயக்கத்தை அருளலாம். விரும்பாதார் மிகக் குறைவு. வாசிப்பவன் கருத்தை எதிர்பார்க்காமல் யாரும் எழுதுவதில்லை.
அதற்கு சுவரின் முன் நின்று ஒப்பித்து விட்டு போகலாம்.
10. மணிஜீ...... said...வலைப்பூக்கள் எழுத விரும்புபவர்களுக்கு புதிய வாசல்களை திறக்கிறது. எல்லோரும் அவரவர் அவதானிப்பின்படியும், அனுபவங்களை சார்ந்தும் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவது அல்லது முயற்சிப்பது அறிவு ஜீவிகளுக்காக அல்ல.அறிவு ஜீவிகளின் வாசித்தலே அலாதி. சமூகத்தை புரட்டிப் போடும் நெம்புகோலாக எல்லோரின் எழுத்தும் எப்படி இருக்க முடியும்?
11. கென்:வலைப்பூக்கள் சமூகம் மாதிரிதான் ராம், எனக்கு பண நெருக்கடியின் போது எந்த பின்புல பாதுகாப்புமின்றி ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த நட்பும் இங்கேயிருக்கிறார். ஆனால் பின்னூட்டம் விமர்சனமாகவோ /படைப்பின் குறை நோக்கியோ இருக்கிற பட்சத்தில் அதை ஒப்புக்கொள்வதற்கான மனம் எழுதுபவர்க்கு இல்லை பெரும்பாலும் . மிக அருமை, சூப்பர், கலக்கீட்டீங்க என்பதை தாண்டி வேற எதையும் மனம் ஏற்பதில்லை. நிறைய பின்னூட்டங்கள் நல்ல படைப்புக்கான அளவீடாக எதுவும் இல்லை. பின்னூட்டங்களே இல்லாத மிக நல்ல படைப்புகளை சிறிது தேடினால் நீங்கள் கண்டடைவீர்கள். எந்த திரட்டி பின்னூட்ட பதில்கள் கும்பல்கள் இல்லாத எழுத்தை . ஆக எழுதுபவன் இதையெல்லாம் புறம் தள்ளி போகிறான். படைப்பு மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும் முன்னிறுத்தப்படவேண்டும் என்கிற மனநிலை வெகு சொற்பம்தான்.
12. கென்.: நாம் குறைகளையோ விமர்சனத்தையோ சரியான முறையில் ஏற்றுக்கொள்வதில்லை. முதலில் தன்முனைப்பின் வேகம்தான் பதிலாய் வரும். என்னை நான் சொன்னதை எழுதியதை தவறென்றாயா என்கிற மனநிலை மாறிடாத வரைக்கும் இது தொடர்கதைதான். எழுத்தில் சமூக மாற்றத்தை தேடவோ ஏற்படுத்தவோ வலைப்பூவில் எழுதுபவர்கள் என்று ஒரு சதவீதத்தினரைக்கூட கண்டறிவது கடினம்தான்.பெரும்பாலும் அன்றைய பொழுதை போக்க / தன்னை முன்னிறுத்த மட்டுமான எழுத்துக்கள் தான் பதிவிடப்படுகிறது. ஆக கேள்விகள் எதையும் நான் எனக்குள் கேட்காத வரைக்கும் நான் மாற மாட்டேன்.
13. என்.ஆர்.சிபி said...என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்! சான்றெல்லாம் கேட்டா ஆட்டோதான் அனுப்புவேன்! படைப்பாளியின் கோணத்தில் முதலில், பின்னூட்டம் என்பது நம் படைப்பு வாசகனுக்குள் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து அடுத்தடுத்த படைப்புகளை மெருகூட்டிக் கொள்ள உதவும் . ஒரு சாளரம்! ஒரு படைப்பு வரும்போது அதற்கான கருத்து (அது நேர்மறை/எதிர்மறை/பொதுமறை எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்) வரும்போதுதான் படைப்பாளிக்கு ஒரு உற்சாகம் கிடைக்கிறது! இப்ப வாசகனின் கோணத்தில். நாம் ஒரு படைப்பை(கதை/கவிதை/கட்டுரை...)படிக்கும்போது ஒரு பாதிப்பை எனக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் அந்த படைப்பாளியிடம் எதிர்பார்க்கிறோம்! (அப்புறம் மெனக்கெட்டு படிக்கிறம்ல) அப்படி ஏற்படுத்தும் நேரங்களில் எங்களில் உணர்வுகளை அங்கே பிரதிபலிக்கிறோம்! குறைந்த பட்சம் "ரைட்டு", "ரிப்பீட்டு", "அருமை", :) இப்படிப்பட்ட பின்னூட்டங்களையாவது போடுறோம்!அவற்றை ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டமா கருதி நிராகரிக்கக் கூடாது! கிடைக்கும் சொற்ப நேரத்தில் ஒரு வாசகன் நிறைய வலைப்பூக்கள் படிக்க வேண்டியிருக்கிறது! படிக்கும் எல்லா இடங்களிலும் நீண்ட பின்னூட்டத்தை இடமுடிவதில்லை!
அதன் விளைவுதான் இந்த ஒற்றைச் சொல் பின்னூட்டங்கள்!ஆனா எதிர்மறையான கருத்துக்கள் இருந்தா நேரமின்மை காரணத்தால சொல்லாம போயிடுறோம்! ஏன்னா அது விவாதமா மாறக்கூடும்!அப்படியும் ஒரு சில இடங்களில் விவாதிக்கிறோம் என்றால் அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்திய இடுகைகளில் மட்டுமே அவ்வாறு நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்!
14. ரெட்டைவால் ' ஸ் said...ராம் ! சில பின்னூட்டங்கள் உங்களை எரிச்சல் படுத்தியதாலேயே இதை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன். பின்னூட்டங்கள் போதை , புதிதாக எழுதுபவர்களுக்கு. ஆனால் என் பார்வையில் சினிமா இயக்குநரான உங்களுக்கு பாராட்டுதல்கள் சலித்திருக்கும்; விமர்சனங்கள் பழகியிருக்கும். எல்லோருக்கும் அப்படி அல்லவே! யாரோ நம் எழுத்தைப் படித்துவிட்டு சில மணித்துளிகள் கம்ப்யூட்டரில் நமக்காக செலவிட்டு இரண்டு வரி எழுதிவிட்டுப் போயிருக்கிறானே என்ற பரவசம் தருவது பின்னூட்டங்கள். பெரும்பாலான பின்னூட்டங்கள் ஃபார்மல் வகை. சில வக்கிரமானவை. சில செக்ஸியானவை.
சில சாட் ரூம் போல. செக்ஸியானவகளை ரசிக்கவும் , வக்கிரமானவைகளை உதைக்கவும் ஃபார்மாலிட்டிகளைக் கடந்து போகவும் எல்லோருக்கும் உரிமை உண்டா இல்லையா? 'காட்சியை' களம் என்று விளித்தபின் மட்டுறுத்தல் எதற்கு? காட்சியின் பதிவுகள் சலனப் படுத்துவதாலேயே இங்கு வருகிறோம். கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவும் களத்தில் பங்கெடுக்கவும் விருப்பம் இருக்கத்தானே செய்யும்.கடைசியாக...இந்த இடுகைக்கான பின்னூட்டம் இந்த இடுகையின் பின்னூட்டங்களிலும் உரக்கப் பேசியிருக்கிறார்கள்.. உறைக்கப் பேசவில்லை!காட்சியின் நிழல் இனியும் ஆசுவாசப் படுத்தும் என்கிற நம்பிக்கையுடன்.
15. வெண்ணிற இரவுகள்....! said...ராம் இங்கே ஈழம் பற்றி யோசிக்காமல் மட்டை பந்து பார்கிறாயே என்று கேட்டால் பின்னூட்டத்தில் அடிக்க வருகிறார்கள் .....சச்சின் பற்றி விமர்சனம் செய்தேன் என்னை கிழித்து தொங்க விட்டார்கள் ......... சரி விதுர்பா விடயம் எழுதினேன் யாரும் படிப்பதாய் தெரியவில்லை ...அதை விளம்பரம் செய்ய மேலும் இரண்டு பதிவுகள் தேவை படுகிறது
.இங்கே பதிவுலகத்தில் குழுமமாய் இருக்க வேண்டும்...பிடிக்கிறதோ பிடக்கலையோ நீங்கள் அருமை என்று பாராட்டி வாக்கு அளித்தால் தான் வாக்களிப்பார்கள் ...... இது 1000 ருபாய் வாங்கி வாக்கு வாங்குவதை விட கொடூரமானது , இதை எல்லாம் பண்ணவில்லை என்றால்
16. நேசமித்ரன் said...மணிஜீ...... said...”ஹிட் கவுண்டரை எடுத்து விடுங்கள். பின்னூட்ட பெட்டியை அடைத்து விடுங்கள். தமிழ்மணத்தில் இணைக்காதீர்கள். உங்கள் நேரத்தை எழுத்து களவாடுவதை தவிர்க்க இதை விட சிறந்த வழியில்லை.”நேசமித்ரன் said...ரொம்பச் சரி
17. ..:: Mãstän ::.. said...ம்ம்ம்ம்ம்....இதையும் வித்தியாசமா யோசுச்சுருக்கீங்க...
பொதுவா பின்னூட்டம், நாம் பார்த்தை ஊக்குவிப்பதற்காகவும் நமது எண்ணத்தை தெரியபடுத்துவதற்காவும் போடப்படுவது...<<< என்னிடம் என் நண்பர் சொன்னார், வலைப்பூவெல்லாம் நேர விரையம் என்று. >>> தப்பான வாதம்... எதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது... சிலபேர் ரஞ்சினாதந்தா விடியோவை தேடி பார்த்துவிட்டு வலைப்பூவில் எதுவுமே இல்லை என்றால் அவருக்கு தேவையானதை அடைந்துவிட்டார் என்றுதானே பொருள்.<<<கட்டுப்பாடு அற்ற சுதந்திர குற்றவாளிகளையே உருவாக்கும், மனிதனை அல்ல என்ற அகில் உலக அரசு இயந்திரங்களின் தத்துவத்தை நாம் நீருபிக்கப் போகிறோமா என்ன? அல்லது நிருபீத்துக் கொண்டிருக்கிறோமா என்ன? >>> உண்மைதான்!<<< copy and paste செய்து அதை நானும் சொல்கிறேன் எனக் கட்சிப் பிரிப்பதா பின்னூட்டம்?>>>:)
18. மணிஜீ...... said...”உம்” கொட்டி கதை கேட்க தொடங்கியதிலிருந்து வாழ்க்கை பின்னூட்டங்களால் ஆகியது.
19. ராம்ஜி_யாஹூ said...all fingers will not be the same.I stopped reading charu & es ramakrishnan's blogs only because they have blocked the comments option. Its upto you whether to have or block the comments options.There are many writers who allow comments:example: maalan, gnaani, jeyamohan,nakkeran gopal, Natraj IPS, Cricketers Badrinath, Laksmipathi balaji, Sivaramakrishnan, actress madhubala, singer chinmayi, directors shankar, shanmuga priyan
20. ராஜ நடராஜன் said... சிரவணன் கருத்தில் பொருள் இருந்தாலும் உங்கள் இடுகைகளை உங்களுக்கான மன ஓட்டம் என்ற அளவிலே மட்டும் இருந்தால் பின்னூட்டங்கள் தேவையில்லை. ஆனால் கருத்துப்பரிமாறல்களுகளுக்கான தளம் என நீங்கள் கருதினால் பின்னூட்டங்களை அனுமதிப்பதி அவசியம்.பின்னூட்ட மட்டுறுத்தல் போன்றவைகள் இருப்பதால் எதிர்மறை விவாதங்களையும் உள்வாங்கி கொள்வதும்,மறுப்பதும் உங்கள் உரிமை. எலிகள் உங்களை கடிக்காது என்ற நம்பிக்கையில்
.
21. கக்கு - மாணிக்கம் said...அய்யா வலை உலக ஜாம்பவான்களே ஒன்றை சரியாக புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி,உங்கள் படைப்புகளின் தன்மை பிறரின் கோணங்களில் எப்படி உள்ளது என்ற விசாலமான பார்வையை தருவது அதற்க்கான பின்னூட்டமே. தோன்றுவதை எழுதி விட்டு பின்னர் அதற்கான நல்ல அல்லது எதிரான கருத்துக்களை நேர்கொள்ள நெஞ்சில் உரம் இல்லை இல்லை என்றால் நீங்கள் எழுதி கிழிக்க போவது ஒன்றுமில்லை .எவனோ ஒரு சில "பன்னாடை அறிவுஜீவிகள்' தங்களின் கருத்து பெட்டியை மூடிவைத்து வீட்டு பாவ்லா செய்வதால் மற்றவர்களும் அதனை 'ஆட்டுக்கூட்டமாக " பின்பற்ற வேண்டியது என்ன அவசியம்? அதற்க்கு மேல் 'அறிவு ஜீவிகளுன் "இஷ்டம்.
22. நீச்சல்காரன் said...கலை, இலக்கியம், திரைப்படம், அரசியல் சுற்றுச் சூழல் எனபல் துறைக்குறித்து நம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சரியானவற்றை அங்கீகரிக்கவும் அடையாளம் காட்டவும் அவசியப்பட்டால் கடுமையாக சாடவும், /// என்று உங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் கருத்துப்பரிமாற்றத்தை விரும்புகிறேர்கள் என நம்புகிறேன். மாற்றுக்கருத்துக்கள் கட்டாயம் வேண்டும் அதன்மூலம் நீங்களும் உங்கள் கருத்தை சீர்படுத்த உதவும். இணையத்தில் எந்த தணிக்கையுமில்லாததால் சிராவணன் கூறியது போல சொற்பிரயோகத்தில் நாகரீகம் மீறப்படும். அத்தகைய மன உளைச்சல்களை தவிர்க்க எண்ணினால், நீங்கள் கருத்துப் பெட்டி வைத்து உங்களுக்கு வரும் கருத்துக்களை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் யார் கருத்தையும் வெளியிடவேண்டாம்.
23.மின்னஞ்சலில்:சிரவணன்:தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கையை விட, அவற்றை வாசிப்போரின் எண்ணிக்கை சுமார் 50 மடங்கு அதிகம் என்பது என் கணிப்பு. பொதுவாக, பின்னூட்டம் என்பது சக வலைப்பதிவாளர்களாலேயே இடப்படுகிறது. வாசிப்பவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே பின்னூட்டமிடுகின்றனர். அப்படியிருக்க, பின்னூட்டங்களை வைத்து, பதிவுகளை மதிப்பிடுதல் என்பது தவறு. நம் தமிழ் வலைப்பதிவாளர்களில் பலருக்கும் எழுத்தாற்றல் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், நீண்ட காலம் பதிவு எழுதி வரும் பலரிடமும் தாம் கூறுகின்ற கருத்துகள் தான் 'இறுதி'யானது என்ற நிலைப்பாடு மிகுதியாக இருக்கிறது. அத்துடன், பின்னூட்டத்தில் எதிர்வாதங்களை வைப்பதன் மூலம் தன்னுடைய மேதமைத்தனத்தைப் பதிவு செய்துகொள்ளவும் அவர்கள் முனைப்புடன் செயல்படுவர். புதிதாக பதிவு எழுதுபவர்களுக்கு பின்னூட்டமிடவும் தயங்குவர். அதேபோல், ஆங்கில பதிவுலகச் சூழலில் நேர்மையான முறையில் பின்னூட்டமிடம் பாங்கு அதிகம் காணப்படுகிறது. எனவே தான் அவர்களால் எளிதாக வலையுலகில் இயங்க முடிகிறது.
24. மின்னஞ்சலில் இளவேனில்:காப்பி பேஸ்ட் செய்து செய்து ஒருவித வெறுமை வந்துவிட்டது. என் அடிமை ஏவலில் வாழ்கையே காப்பி பேஸ்ட் வாழக்கையகிவிட்டது. ராமின் எழுத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டம் எழுத விருப்பமில்லை. இருக்கின்ற அத்துணை பின்னூட்டங்ககளையும் படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.நாமும் ஏதாவது எழுதலாமென்று படித்தேன். இறுதியாக இரண்டு மட்டுமே விளங்கியது. ஒன்று கட்டுரைக்கு அதரவான கட்டுரைக்கு என்பதிக் காட்டிலும் ராமிற்கு ஆதரவான, அல்லது எதிர்ப்பான பின்னூட்டங்கள். பிராபகர் சொல்லுவதைப்போல் "சத்யம் தியேட்டர்க்குள்ள இருகிறவன் சத்யம் தியேட்டர்க்கு வெளியே இருகிறவன்". மனித மனம் தன்னை ஏதோ ஒரு இடத்தில நிலைநிறுத்தவே போராடுகின்றது ஒன்று மையத்தில் அல்லது விளிம்பில். நான் கட்டுரையைக் காட்டிலும் அதனின் பின்னூட்டங்கள் மேல் காதல் கொள்கிறேன். ராமேக் கூட மனித மனங்களின் புரிதலின் ஒரு முயற்சியாய் எழுதி இருக்கலாம் . ராம் சொன்னதில் என்ன தவறு இருக்கின்றது அதற்க்கு இத்துணை எதிர்ப்புகள்...பின்னூட்டங்கள் மேல் ராமின் கோபம் என்ன...கோபம் காரணமாய் எழுதினாரா இல்லை வேறெதேனும் காரணமா..வாசகன் பிரதியை வேறுவிதமாய் புரிய வாய்ப்பிருக்கிறது...ஆசிரியன் எழுத்து நோக்கம் வேறு விதமாய் இருக்கலாம்.. சக அடிமைகளுக்கு எழுதும் ஒரு அடிமைக்கு மகிழ்ச்சியோ வருத்தமோ இல்லாத போது, பின்னூட்டங்கள் பெரிதாய் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தா. கண்டிப்பாய் ராம் கூறியது உண்மையே வாழ்கையின் இன்பம், துயர் அனைத்தும் சமுக உருவாக்கமே, அவற்றின் அடிமைகள் நாம். எதற்காய் எழுதுகின்றோம் என்பதைக் காட்டிலும் ஏன் எழுதுகின்றோம் என்ற வினாவே எழுகின்றது எனக்குள்...நாம் எழுதுதல் நம்மை பறைச்சாற்ற, இருதலை பதிவு செய்ய.
25. இரு கைப்பேசி அழைப்புகள்: ப்ளாக்கருக்குள்ளும் அரசியல் இருக்கிறது. ஒரு குழுவாய் இயங்கி தங்கள் குழுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்கிறார்கள். குழுவில் இல்லாத எழுத்தாளரின் இடுகைகள் குறிப்பிடும் படியாய் இருந்தாலும் அதனை புறக்கணிக்கிறார்கள்.தங்களை முன்னிறுத்துவதும் விளம்பரப்படுத்துவதும்மே பலரின் முனைப்பாய் இருக்கிறது.
குறிப்பு:அனைத்துப் பார்வைகளையும் பதிவு செய்யும் விதத்தில் பின்னூட்டங்களை மேலே தொகுத்திருக்கிறேன். கூறியதையே திரும்பக் கூறியதை தவிர்த்திருக்கிறேன்.இவ்விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
