பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 17, 2010

நான் வசிப்பதாய் நினைக்கிற வீடொன்று

இந்தத் தெருவில் நான் பெரும்பாலும்
அகால இரவில் தான் வந்து போகிறேன்.
மாநகரத்தின் பெரும்பாலம் ஒன்றின் கீழ்
யார் கண்ணிலும் எளிதில் அகப்படாமல்
இது கிடக்கிறது.



தலைக்கு மேலாக லாரிகளின் பெரும் ஊதல்கள்
அடித்தூண்களின் ராட்சத நிழல்கள்
மூக்கைத் துளைக்கும் மூத்திர வாடை
இரு்ளில் காலில் இடறும் ரம் பாட்டில்கள்
இத்யாதி எனை பயமுறுத்தினாலும்

பாலத்தின் தொடக்கத்தில்
1934 எனப் பொறித்த
வசிக்காமல் கைவிடப்பட்ட
புதர் மண்டிய மஞ்சள் நிற வீடு ஒன்று,
(நிறைய மெனக்கெடலுக்குப் பின்
நான் கண்டு பிடித்த வீடு)
இத்தெருவிற்கு எப்போதும்
எனை அழைத்தவாறு இருந்தது.

அதன் முன்திண்டில் அமர்ந்து புகைக்கையில்
அவ்வீட்டில் நான் வசிப்பதாய்
அந்த வீடு நினைத்திருக்கக் கூடும்.

பத்திரப்படுத்திய ஒற்றை
சிகரெட்டுடன் இன்றும் வருகிறேன்.
வீடு இருந்த இடம் தரை மட்டம்மாய் இருக்கிறது.
ஒரு பகலில் எல்லாம் முடிந்து விட்டது.

நான் வசிப்பதாய் நினைக்கிற வீடொன்றை
மீண்டும் கண்டுபிடிக்க முடி்யும்மோ இம்மாநகரில்?
எந்த பாலத்தின் அடியில் நான் தேர்ந்தெடுக்கத்
தெரு ஒன்று மிச்சம் இருக்கும்?

ராம்


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com