மார்ச் 17
இரவு: 12:20
மீண்டும் ஒரு கோடைக்கால இரவு.கொசுவைத் தவிர எவரையும் அனுமதிக்காத சிகரெட் புகை நிறைந்த அறை. வேர்வை உள்துணியாய் விரிகிறது.நேற்றைப் போலவே நாளையும் வேலை இல்லை.எதற்காய் விடிகிறது என்று தெரியாத பகலைக் கூட சமாளிப்பதற்கு நமக்குத் துணையாய் நாலு வெட்டிப் பயலாவது இருப்பார்கள். கழியாமல் நீள்கிற இரவைத் தாண்டுவதுதான் சித்ரவதை. பொருள் வயிற் பிரிந்த தலைவனின் இரவுகளைப் பற்றி ஏன் சங்கப்பாடல் எதுவும் பாடப்படவில்லை?.
என்ன செய்வது எனத் தெரியாமல் கிளம்புகிறேன் என் இரு சக்கர வண்டியில். இரவு நகர் வலம். பார்க்க என்னக் கிடைக்கும்? காட்சியாய் என்ன விரியும்? காவல் துறையினரின் வசவுகள் இல்லாமல் ரா வலம் அமைய சாலி கிராமத்து எல்லை மாரியம்மன் துணை.
சாலிகிராமத்துச் சந்துகளின் வழி போரூர். மஞ்சள் வெளிச்சத்தில் மரங்களின் பச்சையும் மாறி இருக்க, ஏழைத் தேசத்தில் கார்களுக்கு ஒய்வெடுக்க இடமில்லாததால் சந்துகள் தோறும் விதவிதம்மான கார்கள் குறுக்கும் நெடுக்கும்மாய் நின்றிருந்தன. ஏதோ ஒரு வீட்டினுள் விஜய் ஆடும் சப்தம் ஒரு சந்தின் முனையில் ஆடிக் கொண்டிருந்தது. நாய்கள் புறக்கணித்த சந்து ஒன்றில் bpo வண்டி ஒரு இளம் பெண்ணை இறக்கிவிட்டவாறு போனது. விருகம்பாக்கம் சாலை ஒன்றில் குல்பிக்காரர் மணியடித்தவாறு போய்க்கொண்டிருந்தார். காற்றில்லா இரவில் என் வண்டி எனக்கான காற்றை அதன் வேகத்தோடு எனக்குத் தந்தது.
போரூர் முக்கில் இரண்டு தள்ளு வண்டிக்கடைகள் இருட்டில் நின்றன. ”புரோட்டா, இட்லி இருக்கு, பார்சல் மட்டும் தான், இங்க சாப்பிடக்கூடாது, போலிஸ் வந்தால் சிக்கல்”, கடைக்காரர். வீட்டிற்குப் போகாதவர்களுக்கு உணவு தேவையில்லை என்ற போலிஸ்ஸின் சட்டப்படி எனக்கு உணவு இல்லை ஆதலால் வாங்காமல் பூந்தமல்லி திரும்பினேன். ஏரிக்கு முன் உள்ளக் கைவிடப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண்மணி. அழுக்கே நிறம்மான ஒரு நைந்த சுடிதாரில் பரட்டை முடியோடு வானத்தையேப் பார்த்தவாறு இருந்தாள். மனம் பிசகிய ஜீவன்.
இவளுக்கான உணவு குறித்து காவல் துறையினரிடம் என்ன சட்டம் இருக்கும்மோ தெரியவில்லை.
தேசிய நெடுஞ்சாலை. வாகன வெளிச்சம் தவிர எதுவும் அற்ற இருள். வயல், ஏரி, ஊர் என எதுவும் வித்தியாசம் இல்லாமல் எல்லாம் ஒன்று போலவே இருந்தது. நெடுஞ்சாலைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிடுகின்றன. அடையாளங்களை தற்சிறப்புகளை அழிக்கும் இருள் நெடுஞ்சாலைகள் அல்லது எல்லா நிறத்தையும் தன்னுள்ளே அடக்கிய வெண்மை நெடுஞ்சாலை. நெடுஞ்சாலையை வண்ணப்படம் எடுத்தாலும் கறுப்பு வெள்ளையாகவே காட்சி தரும் எனத் தோன்றியது. பூந்தமல்லியைத் தாண்டிய பின் சென்னையைக் கைவிட்டப் பனி கொட்டியது. ராட்சத வண்டிகள் தொடராய் நீண்டு கொண்டிருக்க என வண்டி சாலையின் விளிம்பில் ஓடத் தொடங்கியது.
சாலை திரும்ப எதிர் புறத்தில் நீண்ட வண்டி சாலையின் குறுக்காய் புரண்டு கிடந்தது. வண்டிகள் பின்னால் வரிசையாய் நின்றன. வண்டியின் முகப்பை உடைத்து ஓட்டுனரை வெளியில் கொண்டு வந்தார்கள். சிவப்பான இரத்தத் துளிகள் சாலையில் கொட்டிய வண்ணம் இருந்தது. ஆள் போயிட்டாரு என யாரோ யாருக்கோ சொன்னார்கள். ”இந்த முக்கு எமன் முக்குப்பா” யாரோ மண்ணைத்தூவி எறிந்தார்கள். என் புறத்து வண்டிகள் கிளம்பின. ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாய் வண்டிகள் எதிர் புறத்தில் நின்றவாறு இருந்தன.அவற்றின் நிலை கொள்ளாத ஊதல்கள் ஒலித்த வண்ணம் இருக்க என் வண்டி ஓடிய அச்சாலை முழுதும் சதைத் துணுக்குகள் கொட்டி இருப்பதாய்த் தோன்றியது. ஆம்புலன்ஸ் என்னைத் தாண்டி சிவப்பு வெளிச்சத்தை உமிழ்ந்தவாறு போனது. கறுப்பு வெள்ளையாய் மட்டும் அல்ல சிவப்பாயும் தெரியும் நெடுஞ்சாலை என என் அவதானிப்பை மாற்றிக் கொண்டேன்.
30 நிமிடப் பயணத்திற்குப் பின் ஒரு தேநீர்க்கடைத் தட்டுப்பட்டது. யாருமற்ற அக்கடையில் உறங்கிக் கொண்டிருந்தார் கடைக்காரர். அவருக்காவது வாய்த்ததே என எழுப்பாமல் கிளம்பினேன். பனியும் லாரிகளின் இரைச்சலும் கொட்ட போய்க்கொண்டே இருந்தேன். கடைசியாய் ஒரு கடை கண்ணில் பட்டது. தெருக்கடை அல்ல. தேநீர்க்கடை அல்ல. வாகனங்கள் நின்று உண்டு போகும் உணவுக் கடையும் அல்ல. கண்ணில் பட்டது “ coffee day". ஸ்ரீபெரும்புதூருக்கு சற்று முன் ராஜீவ் காந்திப் பல்கலைக் கழகத்திற்கு முன் மின்சார வெளிச்சத்தில் “ coffee day “. நவீன இருக்கைகளும் குளிர் சாதன வசதியோடும் சென்னையின் “ coffee day". க்கு சற்றும் குறையாமல் இரவு 2:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில். சிக்கன் பர்கரும் காப்பச்சினோவும் வயிற்றை நிறைத்தது. ”பெங்களூரு ரூட்ல சார், அதான் விடிய விடிய திறந்து இருக்கும்” கடைப்பையன் சொன்னான் தமிழில்தான். ”போலிஸ் தொல்லை ஒன்னும் இல்லையா”, இது நான். ”மத்த கடைங்கல்லாம் அலோவ் பண்ணலை சார், இங்க டீசண்டானவங்கதான் வருவாங்கங்கறது நால பெர்மிசன் கொடுத்துட்டாங்க”. மற்றக் கடைகளுக்கு வருபவர்கள் எல்லாரும் பொறுக்கிகள் என்ற இன்னொரு போலிஸ் சட்டத்தையும் அறிந்து கொண்டு என்னை டீசண்டானவானக மாற்றியதற்கும் சேர்த்தி 175 ரூபாய்க் கொடுத்து வெளியேறினேன்.
உறக்கம் வருவது போலிருந்தது. படுப்பதற்கு இடம் இருக்குமா எனப் பார்த்தவாறு வெகு குறைவான வேகத்தில் வண்டியைச் செலுத்தினேன். நெடுஞ்சாலை வருவதற்கு முன் இருந்த கல் மண்டபங்கள் மரத்தடிகள் எல்லாம் queen amusement park ஆகாவும் quality inn ஆகவும் மாறி இருந்தன. எப்படியும் ஒரு ராத்தங்கலுக்கு 1000க்கு மேல் புடுங்கி விடுவார்கள் என்பதால் மாற்றுஇடத்தை தேடியவாறு போனேன்.
ராஜீவ் காந்தி படுகொலைச் செய்யப்பட்ட இடத்திற்குச் சற்று முன்னால் சாலையின் இறக்கத்தில் பகலில் இளநீர் விற்ற சுவடுகளுடன் சிறு குடிசை நின்றிருந்தது. வண்டியை இறக்கினேன். நான் வருவேன் என்று யூகித்ததைப் போல் ஒரு துடப்பத்தையும் விட்டுச் சென்றிருந்தார்கள். மண் பறக்கத் தூர்த்தேன். வண்டி முன்பையில் சொருகியிருந்த பெட்சீட்டை மண்ணிண் மேல் இட்டு உறக்கத்திற்காய் காத்து நின்றேன். கொஞ்சம் கொசு. பூனை ஒன்று சிறிது நேரத்திற்கெல்லாம் என் தலை மாட்டில் என்னைப் பார்த்தவாரே பம்மிப் போனது. நாயொன்று கொஞ்சம் குறைத்து இடத்தைக் காலி செய் என்றது, அதன் பதிவான இரவு இடம்மாய் இருக்கலாம். என் புறக்கணிப்புத் தாளாமல் ஓடிப்போனது. தூக்கம் வந்த பாடில்லை. ஒரு வேளை ராஜீவ் காந்திப் பேய் வந்தாலும் வரலாம். வந்தால் என்ன கேட்கலாம் என யோசிக்கத் தொடங்கினேன். உங்களைப் பிரபாகரன் கொன்றது நியாயம்தானே? எனக் கேள்விகள் தொடங்க தொடங்க கறுப்பும் வெள்ளையும்மாய் ஆன அச்சாலையில் வாகனங்கள் தடதடக்கப் போனன சிவப்பு வண்ணத்தின் சப்தத்தோடு..
மணி 4
அதிகாலை
போகவே பிடிக்காத சென்னைக்குப் போய்த்தான் ஆகனும்.
ராப்பயணங்கள் தொடரும்.
ராம்
March 17, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
