ப்ளூ பென்சில் துகள்களை காகிதத்தில் தேய்த்து
கடலுக்கு நிறம் கொடுத்த தொடக்ககால வரைபடத்திலும்
காவிரியையும் கங்கையையும் மாற்றிப் பாயவிட்டாலும்
நீ போன ஊரை மட்டும் சரியாகக் குறித்து இருக்கிறேன்.
பெருத்த இந்தியாவின் நான்கு முனைகளிலும்
நீ இடம் மாறிக் கொண்டே இருந்தாய்.
உன் அப்பா காலில் சக்கரத்தோடு
பிறந்ததற்கு வருத்தப்பட்டவன் நான்.
நீ போன ஒவ்வொரு ஊரையும்
வரைபடத்தில் குறித்து வைப்பதும்
அவ்விடம் சென்று சேரும் ரயில்களின்
நேரப் பட்டியலை சேகரிப்பதும்
அவ்வூர்களின் std குறிப்பு எண்களை
மனனம் செய்வதும்
ரயில்வே கவுண்டரில் பயணச்சீட்டிற்கான
பணத்தை மட்டும் கேட்டு விட்டு திரும்புவதும்
ஆக
கழிந்தது என் எல்லா பயணங்களும்,
வழியில் தலைப்பட்ட நதியெல்லாம் கிழித்து
வரைப்படச் சாலைகளின் வழி
நீண்ட என் பென்சில் கோடுகளில்.
எல்லாப் பயணங்களும் நிலையத்தை அடைந்து தானே தீரவேண்டும்.
ஒரு வருடம்மாய் என்னிடம் ஒரு வரைபடம்
முதன் முதலாய் உன் ஊர் குறிக்கப்படாமலேயே கிடக்கிறது.
....
நீயும் நானும் சொற்ப காலம் சேர்ந்திருந்த
ஊர் மட்டும் இந்த வரைபடத்திலும் இல்லை.
குக்கிராமங்களை பெருத்த தேசத்தின்
வரைபடங்கள் கணக்கில் எடுத்துக்
கொள்வதில்லை தானே.
ராம்.
March 23, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
