பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 23, 2010

மாட்டை முட்டுபவர்கள் - இயக்குநர் ராம்

உள்ளங்கை வேர்த்து கொண்டே இருக்கிறது.
முடிந்தது என்று நினைத்த கனவுகள்
பகலில் திரும்பவும் நினைவில் வருகிறது.
விடாமல் சிகரெட் பிடிக்கச் சொல்லி
சதா இம்சிக்கிறது இரத்தம்.
குளிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன்.
இன்று காலை குளியல் அறையில் குளிக்காமல் ஐந்து நிமிடம்
நின்று விட்டு வெளியில் வந்தேன்.

சிதறியக் கண்ணாடித்துகள்கள் காலைப் பதம் பார்த்தும்
பாதி உடைந்த கண்ணாடி பொம்மையை இன்னமும்
மேசையிலேயே வைத்திருக்கிறேன்.

கழுத்தை நெறிக்கும் வலிக்கு விரல்களும் முளைத்து விட்டது.
நரம்புகளின் வழி அது பாதம் வரை பற்றி இழுக்கிறது.

நடை போலாம் என அறை இறங்கியவன்
இரு சக்கர வாகனத்தைக் கிளப்புகிறேன்.
பெட்ரோல் பங்க் அறையை விட அருகில் இருந்தும்
நின்ற வண்டியை அறைக்கே தள்ளி வருகிறேன்.

ஓயாமல் பலரை அழை பேசியில் அழைத்து அழைத்து
அழைப்பை துண்டிக்கிறேன்.

எல்லோரிடமும் பேசியும் பேசாமலே இருக்கிறேன்.

என்னை நேர் செய்யும் மந்திரம் யாரிடம் இருக்கிறது
என அறியாமல் கடக்கும் முகங்களின் அசைவுகள்
அனைத்தையும் பார்த்தவாறு போக
எதிரில் வந்த மாட்டில் முட்டுகிறேன்.

”ம்மா”எனப் பெருங் குரல் எடுத்துக் கத்துகிறது.


(இன்று காலையில் வடபழனி பஸ்ஸாடாண்ட் அருகே மாட்டை
முட்டி,பின் அதை வெகு நேரம் தடவிக் கொடுத்த 50 வயது
மதிக்கத்தக்க பெயர் தெரியாத மனிதருக்கு)

ராம்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com